சனி, 28 டிசம்பர், 2024

விளி

 1

எத்தனை
யோசித்துவிட்டேன்
எத்தனை
குழம்பியும்விட்டேன்
எத்தனை
பின்னிழுப்புகள்
சொல்லும் முன்னரே
கவியும் அகத்தைக்
கண்டு எத்தனை
கணக்கிடல்கள்
குழப்பத்தின்
நரம்புகள்
முடிச்சிட்டு இறுகி
தெறிக்கிறது நாண்
இதோ
என் கலக்கம் துளைத்து
என் அறிவைத் துளைத்து
என் அகத்தை துளைத்து
உன் அகத்தினுட்புகுந்து
ஏழு மரம் துளைத்து
வெடிக்கும் ஒளியாய்
என் அன்பின் விளி
..........

2

நான்
உச்சரிக்கத்தான்போகிறேன்
அதே சொல்தான் எனினும்
ஆயிரமாயிரமுறை
பாடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் பாடப்போகிறேன்
யுகம் யுகமாய்
அதிகாலைக் கதிர் நோக்கி
இசைக்கிறதே
அப்புள்ளினைப்போல்
..........

3

எல்லை நின்று
இருளாய் பெருகிய
வெளி
நோக்கியானபின்
பித்தன் பாடி
வந்தான்
அந்த விளியை
..........

4

கேட்டதா
அவ்விளி
புகையிழையாய்
என் கனவில்‌ புகுந்து
மலர் மாரியாய்
உன் நிலமெல்லாம்
விழுந்ததே
அந்த விளி
........

5

மலரின் விளி
கேளாதெரெல்லாம்
பகைக்கொண்டலைந்தார்

மலரின் விளி
கேட்டவரெல்லாம்
பித்தனானார்
........

6

அத்தனைக் கனிந்த
சொல்
கனவில் தோன்றி
மறைந்துவிட்டது
அகத்தின் வனமெல்லாம்
இரவெல்லாம்
அலைந்து திரிந்தானபின்
கண்டேன்
முதல் கதிர் விளி எழ
இதழ் விரியும்
அவ்வதிசயத்தை
..........

7

எந்தத் திருப்பத்திலோ
வெறுப்புடன்
நட்பு பூண்டேன்
தோட்டமெல்லாம்
நீரின்றி
ஒளியின்றி
பெருகியது நஞ்சு
கசந்த பிண்டமாய்க்
கிடக்கும் என்
ஆதி வெளிக்குள்
நிற்கிறது
ஒளியின் தூண் ஒன்று
என்னை நான் கைவிட்டபின்
கையில் ஏந்திக்கொண்டது
உன் விளி
..........

8

அணில்தான் சொன்னது
தூரத்துப் பறவைக்குரலில்தான்
மலர் உதிர்ந்ததென
அம்மலரால்தான்
உற்றது ஏரி
சலனத்தையென
மேலும்‌ சொன்னது
அச்சலனத்தை
அசையா வான்
பார்த்ததென
..........

9

பறவைகளற்ற
ஒரு அதிகாலையில்
அத்தனை அரவமிட்டது
ஒளிதான் அல்லவா?
..........

10

காலையைக் காணவும்
களிக்கூச்சலிடும்
பறவைகளைப்போல்
அழைக்கப்போகிறேன்
நீ இதழ் மலர்வாய்
நான் அகமெல்லாம்
மலரெழச்
சரிந்து வீழ்வேன்
.........

11

ஜன்னலில்
அமர்ந்து
என் கனவுக்குள்
அகவும் குரல்
சொன்னது
மலையெல்லாம்
காற்றாய்
ஓடிக்கொண்டிருக்கும்
விளியை
.........

12

ஒளியாண்டுகள்
கடந்தோடி
வந்துள்ளன
புவியீர்ப்பு அலைகள்
இத்தனைப்பேரில்
பித்தனின் முடி சூடியவனுக்கு
மட்டும் கேட்டது
அதன் விளி
............

13

யார் விளிக்க
அலைகிறான்
பித்தன்
இத்தனை சிரிக்கும்படி
அவ்விளியில்
என்னதான் உள்ளது?
...........

14

இப்பூமியில்
இதுவரை
எத்தனை முத்தங்கள்
இடப்பட்டுள்ளன?
யாருடைய அதிகாலையில்
களிக்குச்சலிட்டன
இத்தனைப் பறவகைகள்?
...........

15

இத்தனை
இலைகள்
யாரை விளிக்கின்றன?
நிலவொளியாய்க் கிடக்கும்
அகமெல்லாம்
யார் விளி?
இப்பூமியின்
விளிதான்
விருட்சமாய் எழுந்துள்ளதா?
விளி கேளாச்
செவிக்காய்
கடல் ஏன் இத்தனை ஏக்கமுற்றது?
அசையாமல் நின்று
தொடுவான் நோக்குபவனுள்
எழும்‌ விளி யாது?
அணுச்சுழல் ரீங்காரம்
யாரை விளிக்கிறது?
அண்டங்களின்
ஒளியுரையும்
விளி எது?
அறிந்தவை
விளிப்பது எதை?
அறியாதவை
எதை விளிக்கின்றன?
புத்தனின்
தியானத்தின் விளி யாது?
சொல்லோய்ந்தபின்
எஞ்சும் மோனம்
யாரை விளித்து அழியும்?
...........

16

யார் விளிக்க
பனிக்காட்டின்
முதல் துளி உருகிற்று?
யார் விளிக்க
மலர்ந்தது மலர்?
யார் விளிக்கச்
சிலம்பிற்று புள்ளினங்கள்?
யார் விளிக்க
பூமியின் கனவைச்
சுமந்து எழுந்தது புல்?
யார் விளிக்க
நதிப்‌‌‌ பெருகிற்று?
யார் விளிக்கக்
கடல் கடக்கிறது
வலசைப்புள்?
யார் விளிக்க
நீர்வழிப்பட்டது?
யார் விளிக்கப்பெருகிற்று
இக்கோலம்?
யார் விளிக்க
இசையானது அகம்?
யார் விளிக்க
கருவினுள்
எழுந்தது முதலசைவு?
.........

17

தூரநிலங்களைத்
துண்டித்துக்கொண்டு
திரும்பிவிட்டேன்
இனி விளிக்கத்தேவையில்லை
விழி‌எடுத்து நோக்கவும்
தேவையில்லை
கண்மூடு
அகத்துள்
சொட்டுக்கொண்டிருக்கிறது
என் துளிகளெல்லாம்
..........

17

ஒரே ஒரு கணம்
அகமெழுந்தாய்
சொல்லாவதற்குள்
யார் விளிக்கச்
சென்று மறைந்தாய்?
.............

18

காதலின்
அகண்ட வெளியெல்லாம்
பரவிப்பெருகும்
விளி
கேட்கவில்லையா?
.......

19

சிறு சிறு சந்துகளாய்
கிடந்தழியும்
அகம் நின்று
விளிக்கின்றேன்
வளைவுகளில் சுவர்மோதி
அழிகிறது‌‌ விளி
கண்ணீரின் விளி
கேட்குமல்லவா உனக்கு?
.........

20

எத்தனைக்‌ காலம்
சுமந்திருப்பது
போட்டுடைக்கிறேன்
குடுவையை
சிதறும் துணடங்களில்
பெருகும்‌ விளி
சிறு மீனின் குமிழ்
மூச்சாகவேனும்
உன் கடல் வந்து
சேரவில்லையா?
...........

21

இருளின் நீலம் பாவிய
கைகள் விளிக்க
என்‌ வனமெல்லாம்
பற்றி எரிந்தது?
வானத்தின் விழு நட்சத்திரம்
அழைக்க
கடல் அகமெழுந்து
கரைந்தது?
யுகம் யுகமாய்
காற்றின் விளி கேளா
பெருமலையொன்றை
காலத்தின் விளி
பேரோலமாய்
சரித்தது
யார் விளிக்க
அந்திப்பறவைகள்
பிழம்பாய்க் கிடக்கும்
தொடுவான் சிறடிக்கிறது
...........

22

இரவினுள் கிடக்கும்
ஏரி விளிக்க
வானமிரங்மி
குளிராய்
அகம் நிறைத்த
அக்கூடலில்
ஒரு அணு அசையக்காணவில்லை
பின் அசைவறுத்த
அம்முயக்கம்
நீண்டு நீண்டு சென்றது
வனமெல்லாம்
..........

23

கண்மூடி ஆழ்ந்த
அகத்தினுள்
வானின் அகண்டமெல்லாம்
எழும் ஒலி
நிறைத்தது
யார் விளித்தது
அண்டத்தை?
மோனம் சூடிய
அகமா?
............

24

யார் விளிக்கத்
துளிர்த்தது
அமிர்தத்தின் துளி?
யார் விளிக்க
அவிழ்ந்தது
நஞ்சின் நெளியுடல்?
...........

25

சொல் விளிக்கத்தான்
ஆகிப்போனேன்
ததும்பலை ஓயாமல்
பெருக்கும் கடலாய்
சொல் விளிக்கத்தான்
பிடித்திழுக்கும்
சதுப்பெல்லாம் கடந்து
கடைசியில்
வந்தசேர்ந்தேன்
இம்மலர்வெளிக்கு
..........

26

மலரும்
வண்ணத்துப்பூச்சிகளும்
விளிக்கத்தான்
அவிழ்ந்தது
அகமலர்
............

27

யார் விளிக்க
வசந்தம்
மலர் பரப்பிற்று?
யார் விளிக்க
மழைப் பெருகிற்று?
யார் விளிக்க
கதிரெழுந்தது?
யார் விளிக்க
அந்தி ஜாலங்கள்
பூண்டது?
யார் விளிக்க
இரவு அகம்
ததும்பிற்று?
யார் விளிக்க
ஏகம் அநேகமானது?
அதே விளி
நிறைந்துள்ளது
அகமகமெல்லாம்
...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...