Monday, July 24, 2017

உயிர்ப்பிலிருந்து உயிர்ப்பின்மைக்கு (சூல் வாசிப்பனுபவம்)


வழக்கத்திலிருந்து மாறுபடுபவை தனியாகத் தெரிகின்றன. என் வாசிப்பில் நான் முதலில் கண்ட புதுமை ஜே ஜே சில குறிப்புகள். பின் ஸீரோ டிகிரி. இவையிரண்டும் முக்கியமாக வடிவ அளவில் ஒரு சிதறலான கதை கூறல் முறையால் மாறுபட்டவை. அடுத்து  கொற்றவை, விஷ்ணுபுரம், ஆழி சூல் உலகு, கொற்கை - இவற்றில் உள்ள மாறுபட்ட அம்சம் அதன் உள்ளடக்கம். ஒரு பெறும் கால, இடப் பரப்பை நம்முள் விரித்துச் செல்கிறது இப்படைப்புகள். ஒரு மையக் கதாப்பாத்திரம் அல்லது கதாபாத்திரங்கள், அதன் உளவியல் என நின்றுவிடாமல், ஒரு சமூகம் சார்ந்த ஒட்டு மொத்த வரைபடத்தை அளிப்பவை. சொல்லி வைத்தாற்போல் எல்லாம் 700 பக்கங்கள் தாண்டுபவை. எப்படியும் ஒரு வாரகாலமாகும் வாசிக்க. இந்த ஒரு வார காலத்திற்குள் கனவுலகை உருவாக்கி அதனுள் நம்மை சஞ்சரிக்கச் செய்துவிடும். இந்த வரிசையில் சோ.தர்மனின் சூல் நாவலைச் சேர்க்கலாம்.

நாவலை வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஆழி சூல் உலகின் ஆமந்துறை நினைவுக்கு வந்தது. அதன் மக்களின் வழி ஆமந்துறை மெல்ல ஒரு தனி மாபெரும் கதாப்பாத்திரமாவதை உணரலாம். அப்படியே உருளைக்குடியும். மெல்ல மெல்ல நம்முள் சூல் கொண்டு உயிர்த்தெழுகிறது உருளைக்குடி.

ஒரு கண்மாயை உள்ளடக்கிய கிராமம் உருளைக்குடி. கண்மாய் பறவைகளையும் மனிதர்களையும் உருப்புக்களாய்க் கொண்ட  ஒரு மாபெரும் உயிராக நம்முள் விரிகிறது. கோடையில் வரண்ட கண்மாயும், மழையில் நிரம்பி வழியும் கண்மாயும்,  மடைக் குடும்பனும், நீர்ப்பாய்ச்சியும்,  கண்மாய் சூல் கொண்டு பிரசவிக்கும் நெல்லுமென ஒரு பேரியக்கம் சித்தரிக்கப்படுகிறது.... இயற்கையின் இயங்கு முறை பற்றிய ஆச்சர்யத்தை விதைக்கிறது நம்முள். நாவலில் இடைவிடாது மனிதருக்கும் இயற்கைக்குமான இயைபு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கண்மாயைப் பற்றிப் பேசும் தோறும் இயல்பான நடை மாறி கவித்துவம் நுழைகிறது. வார்த்தைக்குள் அடங்காத ஒன்றை, பிரம்மாண்டத்தை வேறு எப்படி சொல்வது!

இந்த பிரம்மாண்டத்திற்கு நேரெதிராக மிக எளிமையானவர்கள் உருளைக்குடியின் மக்கள். பிச்சையாசாரி,எலியன்,கோனக்கண்ணன்,சப்பான்,மூக்கன்,மொன்னையன்,கொப்புளாயி, மடைக்குடும்பன், நீர்ப்பாய்ச்சி, குப்பாண்டி... இப்படி வெகுளியும், எளிமையும், அலட்டலுமில்லாத கதாப்பாத்திரங்களால் ஆனது உருளைக்குடி.  விண்ணையும் மண்ணையும் விதையையும் ஒன்றாக்கி உயிர் விளைவிக்கும் மக்கள் செய்யும் தொழிலே விளையாட்டாக உள்ளது. வெறுப்பு சலிப்பில்லாத இன்பம் காண்கிறார்கள் தொழிலில். லாடம் கட்டும் ஆசாரி, சக்கிலியர்கள், இரும்பு  கொல்லன், விவசாயம் செய்யும் சம்சாரிகள் என ஒரு கிராமத்தின் இயங்கு முறையை லகுவாக, ஆவணப்படுத்துவதற்கான எந்தவித தடையமும் இன்றி நமக்கு காட்டிச் செல்கிறது நாவல்

வெகு சில கதாபாத்திரங்களே பெரும்பான்மை நாவலுக்கு நீள்கின்றன. ஒரு அத்யாயத்திற்குள் முடிந்துவிடும் பாத்திரங்கள் பல. இந்த எளிமையான மக்களின் வழி மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுவது  அடிப்படையான அறம். சிறு வயதில் இயற்கையிடம் அமைப்பெற்ற பாவங்களை தண்டிப்பதற்கான சக்தியின் மீது அசையாத நம்பிக்கைக் கொண்டிருந்தேன். பின்நாட்களில் அனுபவம் நம்பிக்கையை சிதைத்தது. நாவல் இந்த இயற்கையின் அறம் சார் இயங்குமுறை மீது மீண்டும் நம்பிக்கையை கொணர்கிறது. படப்பு அடுக்குவதில் வந்த பங்காளிப் பகையால் சித்தாண்டி இரவோடு இரவாக, வன்மம் கண்மறைக்க கண்மாயை உடைத்து ஒட்டு மொத்த கிராமத்தின் வயலையும் நாசம் செய்கிறான். இது அறிந்து நிறைமாத மனைவி பிரிகிறாள். கண்மாயின் வாயை திறந்த பாவத்தினால், பிறக்கும் குழந்தை ஊமையாகப் பிறக்கிறது. பின்நாளில் கணவனும் மனைவியும் ஊர்முழுதும் மரம் நட்டு பரிகாரம் தேடுகிறார்கள். பன்னிமாடன், ஏற்பட்ட அவமானத்தால் புலமாடனின் மகனை கட்டுவரியன் தீண்டும்படி சதி செய்கிறான். அவனுக்குப் பிறக்கும் பிள்ளை கட்டுவிரியன் தோலோடு பிறக்கிறது. கீழூரைச் சேர்ந்த பயனா ரெட்டியார் போரில் குண்டடி பட்டு செத்ததுக்கும், அவர் வெள்ளாமையை மேய்ந்த ஆட்டுக் குட்டியை சுட்டதும் இணைக்கப்படுகிறது. இந்த அறத்தின் இயங்கு முறை எவ்வளவு அழகானது. எவ்வளவு வசதியானது!

ஒரு பக்கம் பாவம் செய்து பரிகாரம் தேடுவோர். மறுபக்கம் சிலர் வாழ்க்கை அறத்தால் அர்த்தப்படுகிறது. கொப்புளாயி மலடி. எறுமைகளை தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறாள். அவள் வீட்டில் எப்போது சென்றாலும் பாலும், தயிரும் கிடைக்கும். அம்மன் கோயிலுக்கு உருளைக்குடி வழி செல்லும் மக்கள் இளைப்பாற ஒரு நந்தவனத்தையே உருவாக்குகிறாள் கொப்புளாயி.  பட்னம் சென்று வந்த காட்டுப்பூச்சி கொப்புளாயியிடம் அவளை பெரும் உளைச்சலுக்கு ஆளாக்கிய விஷயத்தை சொல்கிறான். பட்னத்தில் காசுக்கு சோறு போடுகிறார்கள் என்பதே அது. (கதை 18ஆம் நூற்றாண்டு வாக்கில் நடக்கிறது. உருளைக்குடியில் வெறும் பண்டமாற்றுதான்).மீண்டும் மீண்டும் உண்மையா எனக் கேட்கிறாள். வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லி மாஞ்சு போகிறாள். பூமிலேந்து கெடைக்கிற சோத்த காசுக்கு கொடுக்குறது எம்புட்டு
பாவம் என்பது அவள் வாதம். அடுத்து, 'மடைக்குடும்பன் கருப்பன்' ஊர் கண்மாய் அடைத்துக் கொள்ள, ஊர் இவனை தூற்ற, மூச்சடக்கி அடைப்பெடுத்து உயிரைவிடுகிறான். பின் அய்யானார் அருகிலேயே கருப்பன் சிலையாகிறான். இப்படி தன்  அறத்தின் வழி வாழ்வை அர்த்தமாக்கிக்கொள்ளுதல்  ஒரு பக்கம் காட்சியாகிறது.

நாவலிம் பெரும்பான்மை ஒரு இகாலிட்டேரியன் சமூகமாக உருளைக்குடி நம்முன் நிற்கிறது. பணப்புழக்கம் இல்லை. பண்டமாற்றுதான். அனைவரும் உழைக்கிறார்கள் பங்கிட்டுக்கொள்கிறார்கள். தன்னிறைவான கிராமம். தனக்கு தேவையான அவ்வளவும் கை எட்டும் தூரத்தில். தனக்கன முடிவுகள் அறிவியலாலும் அதிகாரிகளாலும் எடுக்கபடவில்லை. மாறாக காலம் காலமாக ஊரிவிட்ட
சம்பிரதாயங்களால் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முடிவிலும் காலமும் அதனூடே வாழ்ந்த முன்னோரின் அறிவும் கணிந்துள்ளது. மன்னரின் அதிகாரம் காலகாலமா உருளைக்குடி தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட சமநிலையை குலைப்பதாக இல்லை.  இந்த சமநிலையிலிருந்து சுதந்திரம் வந்த பின்பான சமநிலைக் குலைவே நாவல் நமக்கு காட்டுவிப்பது. சுந்தந்திரத்துக்குப் பின் வரும் ஆட்சிமுறையும் அதிகாரமும் சமநிலையைக் குலைக்கிறது. கண்ணுக்கு தெரியாத அதிகார மையம், எந்தவித அறமும் இல்லாத அம்மையத்தின் கரங்களாக அதிகாரிகள். தொழிலோடு வாழ்வோடு பிணைந்து உள்ள நம்பிக்கைகளிலிருந்து  இவர்கள் தப்பிக்க  பகுத்தறிவு உதவுகிறது. பரம்பரை நீர்ப்பாய்ச்சியிடமிருந்து கண்மாயை காக்கும் உரிமை பரிக்கப்படுகிறது. கோழிப்பண்ணை அமைக்க மரங்கள் வெட்டப்படுகிறது. தாத்தா வைத்த மரத்தை பேரன் வெட்டிச் சாய்க்கிறான். நாவல் முழுவதும் செழுமையின் வளமையின் உயிர்ப்பின் குறியீடாக வரும் கண்மாய் வற்றிப் போகிறது. வெள்ளாமைக் குறைகிறது. வண்டி வண்டியாக இளைஞர்கள் நகர் நோக்கி செல்கிறார்கள்.மக்கள் முதன்முறையாக கூலிக்கு கருவேலம் வெட்டுகிறார்கள். உயிர்ப்பில்லாமலாகிறது உருளைக்குடி. உயிர்ப்பிலிருந்து உயிர்ப்பின்மைக்கு காலத்தினூடே ஒரு பயணத்தை நிகழ்த்துகிறது சூல்.

நாவலின் மற்றொரு முக்கிய அம்சமாக நான் எண்ணுவது அதன் எளிமை. எளிமைதான் நாவலுக்கு பேரழைச் சேர்க்கிறது. எளிமையான அறம், எளிமையான உணர்வுகள், எளிமையான மக்கள், எளிமையான ஊரின் இயக்கம், எளிமையான கூறல் முறை. நாவல் முன்வைக்கும் எளிமையான நம்பிக்கைகள் யாவும் அந்த எளிமையான மக்களுடையவை. மூட நம்பிக்கை என நவீன மனம் ஒதுக்கிவிடும் விஷயங்கள் வழி அடிப்படை அறம் முன் வைக்கப்படுகிறது. அந்த எளிமையான நம்பிக்கைகளின் ஊற்றுக்கண் அந்த எளிமையான மக்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பிச்சையாசாரி, எலியன், கோணக்கண்ணன் நடத்தும் புதையல் கூத்து வெகுளியின் அழகு.

உருகைக்குடி நம்முள் நெய்யப்படுவது இயல்பான நடையால். வட்டாற வழக்கில் அமையும் உரையாடலும் கேளிக்கிண்டலும் வாய்விட்டு சிரிக்க வைத்தது. அவ்வப்போது, (குறிப்பாக கண்மாய் பற்றி பேச எழும் இடங்களில்) கவித்துவம் தலைக்காட்டுகிறது. வாசகனாக ஒரு போதாமையை உணர்கிறேன் இக்கவித்துவ இடங்களில். கண்மாயின் இயக்கத்தை அறியும் தோறும் இயற்கையும் மனிதனும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியாக, ஒரு அழகான படிமமாக உருவாகிறது. ஆனால் கண்பாய் பற்றி பேசும் கவித்துவமான இடங்கள் ஒரு வாசகனாக என்னை நிறைவடையச் செய்யவில்லை.

நாவல் சருக்கும் முக்கியமான மற்றொரு இடம் இது-  ஒரு பெறும் கால மாற்றம் கடைசி நூறு பக்கங்களுக்குள் ஒருவித அவசரத்தோடு சொல்லப்படுகிறது. குப்பாண்டிச்சாமி வருங்காலம் பற்றி கூறுகையில் மக்கள் இலவசம் தேடி அலைவார்கள் எனும் இடம் ஒரு துருத்தலாக செயற்கைத்தன்மையுடன் நிற்கிறது. கடைசி பக்கத்தில் ஒலிக்கும் ஆசிரியரின் நேரடிக்குரல் கண்டிப்பாக நாவலின் அழகிய போக்கிலிருந்து ஒரு பிசகு. சுருக்கமாக, கடைசி அத்யாயம் கால மாற்றத்தை காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக நேரடியாகப் பேசுவது நிறைவின்மையை அளிக்கிறது. நாவலின் இயல்பான அழகு மாறி செயற்கைத்தன்மை உள்நுழைகிறது.

'சூல்' நம்மை 18ஆம் நூற்றாண்டில் துவங்கி சுதந்திர காலகட்டம் வரை கொண்டு செல்கிறது. இதற்குள் இயற்கையும் அதுனுடன் இயைந்து போன உருளைக்குடி மக்களின் வாழ்வும் காட்சியாகிறது. உருளைக்குடி மக்களின் எளிய நம்பிக்கைகள், அடிப்படையான அறம் ஆகியவை இயற்கையையும் மனிதனையும் ஒரு சமநிலையில் வைக்கிறது. அதிகாரத்தின் கைகள் இந்த எளிய அமைப்பை சிதைப்பதே நாவலின் முடிவு. குறைகளைத் தாண்டி தமிழின் முக்கியமான நாவல்களுள் ஒன்றாக சூல் நீடிக்கும். வாசித்த ஒவ்வொருவருள்ளும் உருளைகுடி மெல்ல சூல் கொள்ளும். அதன் அழகான எளிமையும்தான்.

Tuesday, July 4, 2017

நள்ளிரவில் சுதந்திரம் (வாசிப்பனுபவம்)


ஒரு படி கூடுதலாக உண்மையை நோக்கி நம்மை உந்தும் எந்த ஒரு படைப்பும் சிறந்ததே. இப்புத்தகத்தை மெச்சுவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்று. வரலாற்றை ஒரு நாவலுக்கு நிகாராண சுவாரஸ்யத்துடன் ஆவணப்படுத்த முடியும். உதாரணம் இப்புத்தகமே. பல உணர்வுநிலைகளின் ஊடே நம்மை இழுத்துச் செல்கிறது இந்த வரலாறு. உலகின் மாபெரும் பிரிவினையை கண்முன் நிறுத்துகிறது.

பல சரடுகளின் வழி வரலாற்றை கூறுகிறது நூல். மவுன்ட்பேட்டன் கடைசி வைசிராயாக நிர்ணயிக்க ப் படு வது ம் அதற்கான காரணிகளும். பின் மவுன்ட்பேட்டன் எதிர்கொண்ட இந்தியாவும் அதன் தலைவர்களும். ஒரு நீண்ட அத்யாயத்தில் மவுன்ட்பேட்டன் நேரு, காந்தி, பட்டேல்,ஜின்னா ஆகியோரை சந்திக்கிறார். இந்நான்கு தலைவர்கள் பற்றியும் ஒரு சிறு வரைபடம். அவர்கள் பிரதிநித்துவப் படுத்தும் அரசியல் விசைகள். கடைசியில் வேறு வழியின்றி பிரிவினை.

ஒரு அத்யாயம் முழுக்க நம் சமஸ்தான மன்னர்களின் அபத்தங்கள். வர்ஜின் வேட்டை, இன்னதென்றில்லாத செக்‌ஷுவல் பான்டஸீஸ், வடிகட்டிய சு த் தீ கரி க் கப் பட்ட  முட்டாள்தனம், அதிகமான வெட்லான்ட் பறவைகளை சுட்டு ஒரு ராஜா உலக சாதனை படைக்கிறார், ஒருவர் அதிகமான புலிகளை கொன்று குவிக்கிறார்...இப்படியான வெற்று அபத்தங்கள்  பல. இவர்களின் கையில் இந்தியா சிக்காமல் போனது ஆண்டவன் கிருபை.

இந்தியாவிற்கு சுதந்திரம் என்பது உலக அரசியலில் ஒரு திருப்புமுனை. டீகாலனியலைஸேஷனின் துவக்கப்புள்ளி. இந்தியாவை இழப்பதற்கு முழுக்க எதிரான சர்ச்சிலின் வழி தெரிகிறது, இந்தியா எவ்வளவு முக்கியமான சொத்து பிரிட்டனுக்கு என. ஆனால் அவர்களின் அட்டூழியங்களை புத்தகம் நியாயப் படுத்தவில்லை. வெகு அரிதாக பிரிட்டிஷ் ஆட்சியின் கருமை பக்ககங்கள் சுட்ட ப் படுகின்றன. ஏனெனில் புத்தகம் பேசுவது சுதந்திரம் தருவது உறுதியான பின்னான காலகட்டத்தை. இருந்த நிலமையை ஆன வரையில் சிறப்பாக மவுன்ட்பேட்டன் சமாளிதுள்ளார் என்கிறது நூல். பிரிட்டனின் நிர்வாகத்திறமை பாராட்டப்படுகிறது. ஆம், சரியென்றே படுகிறது.

இதன் முக்கியமான அம்சங்களாக நான் கருதுவது இரண்டு. ஒன்று, பிரிவினையின் போதான வெறியாட்டம். இதற்கு ஒரு முழு அத்யாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. பதற்றத்துடன் இதனை வாசித்தேன். இப்படியொரு வெறியாட்டமா? இத்தனை நாட்கள் ஒன்றாக வாழ முடிந்தவர்களை ஒரு சிலரின் சுயநலம் சார்ந்த அரசியல் பிரித்துவிட முடியுமா? கொலை, பிறப்புறுப்பை சிதைத்தல், பலாத்காராம், பிணங்களை தாங்கி வரும் ரயில்கள்....

"ஆனை வெம்போரில் குருந்தூரென" என்கிறார் மாணிக்கவாசகர். அரசியல் யானைகள் நடத்தும் போருக்கு சிறு புல் என்ன செய்யும். இயக்கப்படுகிறார்கள் மக்கள். விளைவு, எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளில் எந்தப் பங்கும்‌ இல்லாத மக்கள் வெட்டிக்கொண்டு சாகிறார்கள். மானுடம் தோற்கும் இக்கனங்கள் முழு வீரியத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்ததாக காந்தியைப்‌ பற்றிய ஒரு பரவலான சித்திரத்தை அளிக்கிறது நூல். நூலின் முக்கிய அம்சம் இது என்வரையில். "என் இறந்த உடலை கிழித்து இந்தியாவைப் பிரியுங்கள்" என்கிறார் காந்தி. யாரும் கேட்க முன் வரவில்லை. குறிப்பாக ஜின்னா. "டரக்ட் ஆக்‌ஷன் டே" என்று ஏற்கனவே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டயிற்று. ஆயினும் சொல்கிறார் காந்தி "இந்தியாவைப் பிரித்தால் இதைவிட பல உயிர்களை நாம் இழக்க வேண்டி வரும்" என்று. ஆனாலும் நடந்தது பிரிவினை.

தன் ஆன்மாவின் ஆணைப்படி நடக்க தன் உடலையும் மனதையும் முழுவதுமாக தயார் நிலையில் வைத்திருந்த செயல்வீரர் காந்தி. மஹாத்மாவை முடிந்த வரை எதிர்த்து, ஒன்றும் பலிக்காமல் போக கொண்றே போட்டது இந்தியா... சிலுவையில் அறைந்தது என்பதே சரி. நவ்காளியில் மதக் கலவரம் நடப்பது அறிந்து, தடுப்பதற்காக அதனை சுற்றி அமைந்திருக்கும் கிராமம் கிராமமாகப் போகிறார் காந்தி. போகிற வழியில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. க்ளாஸ் சில்லுகள் பரப்பப்படுகின்றன. அனைத்துயும் சுத்தம் செய்துவிட்டு முன் நகர்கிறார். கலகம் ஓய்கிறது. சுத்ந்திர கொண்ட்டாட்டத்திற்குப் பிறகு, பிரிவினை அறிவிக்கப்படுகிறது. கலகம் வெடிக்கும் என்று அறிந்து, மவுன்ட்பேட்டன் பஞ்சாபிற்கு 50000 சோல்ஜர்களை அனுப்புகிறார். கல்கட்டாவிற்கு காந்தி செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அன்பையும், அஹிம்சையையும் போதித்த ஒரு தனி மனிதனால் எவ்வளவு சாத்தியமாகிறது! ஆயுதமில்லாத ஒருவருக்குப் பணிந்து கல்கத்தா அமைதியாக உள்ளது.

காந்தியின் கடைசி உண்ணாவிரதம் பற்றிய நீள் பதிவு உள்ளது. காந்தியின் ஆன்மபலம் கண்டு வியப்பு உருவாகிறது. "காந்தி சாகட்டும்" என்ற மக்கள், மெல்ல முழுமையாக ஒரு மனதாக திறள்கிறது. ஒரு மனிதனின் சாவை நோக்கிய பயணம் எவ்வளவு உயிர்களைக் காத்துள்ளது.

மாஹாத்மா கடைசி நாட்கள், தோல்வியுற்ற முதல் கொலை முயற்சி, பின் வெற்றிகரமான இரண்டாவது முயற்சி ஆகியவை நுணுக்கமான விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும் உணர்ச்சி நிலைக்கு நம்மை இட்டுச் செல்வதாக "the second crucifixion" அத்யாயம் அமைந்துள்ளது. ஒரு இலக்கியப் படைப்புக்கு நிகரான உணர்வு நிலை.

போதும் நீண்டு கொண்டே போகிறது.... முடித்து விடுகிறேன். பல நூல்களும் அனுபவங்களும் வாசித்து முடித்து நாள் சென்றபின் ஒற்றைப் படிமமாக நம்முள் எஞ்சும். இப்புத்தகம் காட்டும் இத்தனை கோரங்களைத்தாண்டி நான் மீண்டும் மீண்டும் உருபோடும் ஒரு படிமம் ஒன்று. இந்நூல்  காந்தி வட்ட மேஜை மாநாட்டிற்காக மேற்கொண்ட யுரோப் பயணத்தை கூறுகையில்...."Gandhi wept at the site of the statue of christ on the cross in sistine chapel" ... இன்னும் பத்து வருடம் கழித்து, இப்புத்தகத்தை பற்றி யோசித்தால் என்முன் வந்து விழப்போகும் படிமம் இதுதான். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்த்துவின் முன் நின்று அழும் மஹாத்மா.

(பின் குறிப்பு: அமேஸான்.இன் னில் ஆங்கிலத்திலும் , தமிழ் மொழிபெயர்ப்பு உடுமலை போன்ற தளங்களிலும் கிடைக்கிறது)

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...