Wednesday, December 11, 2024

அகம்

 1

விதையை மெல்ல
மலராக்கிக்கொண்டேன்
ஆதியிலிருந்து
வந்து செல்லும்
நாகம்
அதன் பாதையில்
முளைத்துவிட்டது குடில்
அதே பாதையில்
தினம் விழுந்தெழுகிறது
வானம்
................

2

உதிர்ந்த மலரை
ஏந்திக்கொண்டது
ஏரி வான்
வானில் கிடக்கும்
ஏரியில்
சிற்றலை கூட
எழுவதில்லை
.................

3

பெருமீன்கள் உலவும்
நடுக்கடலில்
தினம் தினம்
வானெழுந்து
விழுகிறது
பேருடல் மச்சம்
கடலின்‌ பெருங்குரல்
வானத்திற்கு
வெகுதூரம் முன்னரே
கரைந்தழிகிறது
............

4

வானம் வருட
நதிச்சுருக்கமெல்லாம்
ஒளிர் எழுந்தது
சுழிப்பின் நிழலில்
நதி நதியில் விழுகிறது
கடல் வேட்கிறது
மலைப்பிறந்து
பிலம் விழுந்து
நகரும் நதியை
..............

5

வான் கனிந்து
மண் தியானித்து
ஆக்கும்
ஒரு மலர்
அகவான் கனிந்து
அகநிலம் தியானித்து
ஆனது
ஒரு மலர்
...............

6

அக இருளில்
கோர்த்தெடுக்கிறேன்
ஒரு கணம்
புலனாகிறது உன் நடனம்
மறுகணம்
இருளானது
நின் நடனம்
..............

7

வான் கிடக்கிறது
மலை ஊழ்கிக்கிறது
காலத்தின் நதியில்
ஓசையேதுமில்லை
ஒரு சிறுமலர்
ஆனது
இருந்தது
உதிர்ந்தது
...........

8

இலை அலுங்கலில்
அலையெழலில்
விழு விண்மீனில்
தேன்சிட்டின் படபடப்பில்
வண்டின் முரழ்ச்சியில்
அகமெழும் மலரில்
காலத்தின் லயம்
............

9

நெளியுடல்
எவ்வழிப் புகுந்தது?
ஆதிதொட்டு
வாழ்கிறதா இந்நிலத்தில்?
இன்று ஏன்
மலர்வெளிநடுவில்
மலரோடு மலராக
விடம் மலர நிற்கிறது?
.............

10

நிலத்தின் நீரெலாம்
வற்றச் செய்தேன்
நாவறண்டு மறித்த கோரங்களுடன்
மலர்களும் சருகானது
வான் கிடக்கும்
நிலம்
தன்னைத் தொடுத்துக்கொள்கிறது
ஆதியில்
.............

11

காலம் மலரின் பரிமளம்
கடல் மலரிதழ்
மலை மையச் செறிவு
மலர் தாங்கவே நிலம்
மலர்வெளியின் மோனத்தினூடே
சுவாசம் ஓடிக்கொண்டிருக்கிறது
.............

12

விடம் முறிக்க
ஆகும்
மலர் பூத்த
துளி மதுரத்தால்
..............

13

கூரையில்
அதுவாகப் படர்ந்தது
ஒரு நாள்
அதுவாக மலர்ந்தது
அகத்தில் சுடர்
ஒளிர்ந்தது
அதுவாய்
.................

14

ஒரு மலரை
மலரச்செய்யாத
வானமும்‌ நிலமும்
விட்டேன்
சுடலையெங்கும்
மலர் பூத்ததறிந்து
வந்தேன் சாம்பல் வெளிக்கு
.................

15

ஒரு மலர் உதிர்வதற்கும்
மறுமலர் உதிப்பதற்கும்
இடைப்பட்ட காலங்களில்
மலரின்மையை
தியானிக்கிறது
அகம்
...............

16

மலர்தான்
கனவிலெழுந்து
சொன்னது
அகத்தை
இசைமயமாக்கென்று
................

17

அகமெழுந்த
இசைதான்
சொன்னது
மலர்கள் லயித்திருக்கும்
நாதத்தைக் கேள் என்று
...............

18

மலரிதழ் வழியும்
நாதம்தான்
கிரகம் உலவும்
வெளியெங்கும்
..............

19

வனத்தில்
ஒரு சுள்ளி உடைகையில்
சில புள் கலைந்தமைகின்றன
மற்றபடி
வனம் ஏகித்திருக்கிறது
...............

20

வனம்
உயிர்களால் பெருகியது
உயிராய்ப் பெருகியதும்
வனம்தான்
.................

21

ஒன்றுதான்
அகம் எரியும்
சுடரும்
வான் ஒளிரும்
சுடரும்
.................

22

பறவைகள் நீங்கும்
விருட்சங்கள் மட்கி அழியும்
எரியொன்று உண்டு செரிக்கும்
மலைகள் சரிந்து உடையும்
வனமெனும் எல்லாம் அழியும்
வனத்தை ஆக்கிய
அகத்திற்கு அழிவில்லை
.................

23

யாதெனின்
யாதெனின்
தேர்ந்து நீக்கியானபின்
எஞ்சுவது
வானம்
.................

24

அணையாச்சுடர்
ஒளிர்கிறது
ஒவ்வொரு
அகத்திலும்
..................

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...