1
கையில்
ஒரு மலரை வைத்தபடி
ஆழ நோக்குகையில்
ஜன்னல் காட்சிகளாய்
விரைந்து மறைகிறது
இனிமைகள்
பின் இரவின் வெளிச்சத்தில்
வயலோர காழ்வாயில்
விழுந்து கிடக்கும்
நிலவுக்குள்
குமிழியடிக்கிறது
சர்ப்பம் போலொன்று
2
மலரில் கூடிய
முழுமை
ஏன் கூடவேயில்லை
அன்பில்
3
இந்த சாலையில்
தினம் தினம்
சென்று வருகிறேன்
இந்த பூமிக்குள்
பிறந்து பிறந்து
அழிகிறேன்
நதிச் சுழலில்
மலர் சிக்கியதுபோல்
வந்து கலந்தது உன் சொல்
4
மறக்கவே முடியவில்லை
கையில் ஒரு காகிதத்தை
வைத்துக்கொண்டு
வெகு நேரமாகியும்
ஒரு சொல் கூட எழாத மாலையை
முன்னிருந்த குளத்தில்
இரவின் முதல் துளி விழவும்
தாமரை ஒன்று மலர்ந்தது
நான் சொல்லற்று
இரவைக் கழித்தேன்
5
என் வாசம்
இன்னுமா
தெரியவில்லை?
மலரின் மணம்தான்
மலர்க்கூடையின்
மணமல்லவா?
6
அப்பூவை
பற்றிக்கொண்டிருக்கும்
அடர் சிவப்பைப்போல்
பற்றிக்கொண்டுள்ளாய்
நிறம் உதிர்ந்த
பின்
பூவின் நிறமென்ன?
7
அத்தனைப்பெரிய
வீட்டில்
ஒரு மலரை
ஜன்னல் ஒளியூற்றி
வளர்த்தெடுத்தது
அதன் பாடல்
அதன் பரிமளத்தைப்போல்
சிறு எல்லையில்
விழுந்து கரைகிறது
அதன் ஒரு சொல்
காதில் விழுந்துவிடும் நாள்
பிரகாசிப்பதை
நான் கவனிக்காமல்
இல்லை
8
மலரினும் மெல்லிய
சுடரை
மலரச்செய்கையில்
சுடர் கண் திறக்கும்
அதே கணத்தில்
அகமொன்று
இதழ்விரிக்கிறது
9
சரிவெல்லாம்
பெருகிக்கிடந்த மலர்கள்
ஒன்றே போல் ஆடின
ஒன்றே போல் சரிந்தன
இரவின் துளி ஒளியில்
மங்கும் நிறத்தில்
ஆத்மமாய் நகைத்தன
அறிந்தேன்
கூடிக்களிக்க
மானுடர் கற்றது
எங்கிருந்தென்று
10
உன் அத்தனை
ஆடைகளிலும்
ஒரு மலரின்
படமுள்ளது
மலரற்ற ஒரு
ஆடையை
அணிகையில்தான்
முட்களில்
கிழிபடுகின்றன விரல்கள்
11
மெழுகுவர்த்தி
கரைந்துகொண்டே
இருக்கிறது
காலையில்
மலர்ந்துவிட்ட
மலர்
மாலையை
நோக்கி
உதிர்ந்துகொண்டிருக்கிறது
வானத்திலிருந்து
உதிர்ந்த மலர்
மண் தொட்ட போது
நான் தயராக இருந்தேன்
12
பிரிந்து நிற்கும் நாம்
எம்மலரைக்
கண்டபின்
காதலித்தோமோ
அம்மலரின் நிலத்துக்குத்
திரும்பிச்செல்வோம்
அம்மலரை முகம்
கொண்டு நோக்குகையில்
அது சொல்லும்
அதே மாயச்சொல்லை
13
வான்நீலத்தில்
ஒரு மலர்ப்பூக்கும்
அதை
நான் உனக்குச்
சூட்டுவேன்
14
நிச்சயமாய்
ஒளி மங்கி
அணையப்போகும்
இம்மாலைக்குள்
ஒரு பெரும்பகலின்
கனம் அழுந்தும்
உடலுடன்
வந்து சேர்கிறேன்
சுடர் அணையும்முன்
அவிழும்
இரவின்
ஒரு இதழையாவது
கண்டுவிடவேண்டும்
15
கிருட்டிகளின் நாதத்தை
ஊடறுக்கும்
தவளையின் வேட்டல்
ஒலிக்கும் இவ்விரவில்
மோனத்தில் நிரம்பிய
குளமொன்றில்
காற்றின் ஒரு துளி
விழுகிறது
அத்தனை நிச்சலனத்தினூடே
மலரானது
நீர்
16
சொல் குமிழியாகி மறையும்
கடல் ஆழத்தில்
சொல்லாகும் சிறு
பிரயத்தனமுமின்றி
அவிழ்ந்தது
ஒரு மலர்
17
மலர் பெருகிக்
காடாகக் கிடக்கும்
நிலத்தில்
ஒரு சொல்லைக்கூட
எடுத்துக்கொள்ளவில்லை
கண்ணீராகாத ஒன்றை
உற்று நோக்கியபடி
பசியின் கண்ணொளிரும்
சதுப்புகளுக்குத்
திரும்பினேன்
18
உரைந்த
நிலம்
உரைந்த
மரம்
உரைந்த
கடல்
உரசிச் சேர்த்த
கைச்சூடினை
ஏந்திய முகம்
வாங்கிக்கொண்டது
முதல் பொருக்கு
நீராகிச் சொட்டியது
குளிரின் ஆன்மத்தில்
எழுந்தது
முதல் அலை
ஆழம் கடல்வழி
பார்க்கிறது வானத்தை
19
கண்ணீராகி
உடைந்தொழுகி
கடல் மண் ஈரத்தில்
கலந்திடுவேன்
என் மேலெல்லாம்
வானம் மலர்ந்து
கிடக்கும்
20
மலருடன்
உரையாடுபவர்க்குத்
தெரியும்
அதன் மோன வெளியை
எவ்வானம்
நிறைத்துள்ளதென்று
21
ஒரே செடி
ஒரே நீர்
ஒரே ஒளி
நம் தோட்டத்து
இரு வேறு மலர்கள்
ஒன்றே போலுள்ளன
ஆனால்
ஒரு மலரில்
எட்டாம் இதழில்
மூனறாம் வளைவில்
அரைக்கோணம்
மென் திருப்பத்தில்
வித்தியாசமுள்ளது
அப்படித்தான்
ஆனது இப்பெருங்காடு
22
ஸ்ருதி
சேர்ந்துவிட்டது
இனி நதியில்
வழுக்கிச் சென்று
மலர்ச்சதுப்புக்குள்
விழுவேன்
வழியெல்லாம்
பின்தொடரும்
நீர்ன் கோடாய்
23
அருகணைந்த
எரிகல்லொன்று
கடலை ஆக்கிற்று
சுடரும் எரிமலராய்
24
ஓவியங்களில்
மலரை
தீட்டிக்கொண்டேஇருந்தார்
வீணையின் தந்தியை
மலரச்செய்தார்
அந்தியை
மாபெரும் மலராக
அவர் கண் கண்டுவந்தது
உரைக்காவிடினும் கொண்டேன்
மலராதலே
அத்ம வாக்கியமென்று
No comments:
Post a Comment