Thursday, December 12, 2024

அது

 1

சிட்டுக்குருவிக்கு
நீர் வைத்தேன்
சிறு கின்னத்தில்
எந்நீர் எழுந்து
இம்மேகமானது?
இம்மேகத்தை இழுத்து
வந்தது எக்காற்று?
ஆயிரமாயிரம்
மழைப்பறவை
விழுந்தது சிறுகின்னத்தில்

பறவையை நீராக்கும்
மாயத்தை நிகழ்த்துவது
அது
...............

2

அறியா நிலம்நோக்கிய
பயணம் காத்திருந்தது
கடல் நோக்கிய
கடலோடி கண்டான்
அறியா நிலம்நோக்கி
மிதக்கும் கடலை
................

3

மலர் சொன்னது
வண்டின் முரழ்வில்
வானத்தின் லயம்
த்வனிப்பதாகவும்
தேன் திரட்டி அளிப்பது
வானத்திற்கே என்றும்

..................

4

திமிறி எழுந்து விழுந்த
பேருடல் மச்சத்தின்
வாலரைவில்
கடலின் துளி சென்று
வலசைப்புள் சிறகமர்ந்தது
இப்படித்தான்
கடல் பனிக்காடுகளுக்குச்
சென்றது
................

5

அணு‌ வெடித்துத்தான்
இச்சிறு பிரளயம்
அணுவுள்ளுரைந்து
அணுக்களுக்குள் பரவி
பிரளயமானது
அது
................

6

அணுவைப்
பிளக்கும்
முன்னும்
அணுவுள்ளரைந்தது அது
................

7

உன் நாமத்தின்
கதவுகளை தாழிட்ட நாளில்
தூணிலில்லை
துரும்பிலில்லை
விண்ணில்
மண்ணில்
என்னில் இல்லை
நின் நாமத்தின்
சிறுவாயிலுக்கப்பால்
உள்ளது
என்னையும்
அடக்கிப்பெருகிய
தனிப்பெருங்கடலொன்று
................

8

துளியொன்றுப்பெருகி
கடலானது
துளியின் ஆன்மம்
உரைகிறது
இக்கடலெங்கும்
.................

9

எண்ணமிட்டதும்
எண்ணமும்
அதுவெனில்
என்‌ சுழிப்புகளும்
இருள் எழும் நஞ்சும்
இருளும்
அம்மூன்றும்கூட
அதுவல்லவா?
................

10

பெருக்கிவிட்டுள்ளாய்
சுமந்து அலைகிறேன்
என்றுணர்வது
நீயுமாய்
நானுமாய்
உருக்கொண்ட ஆதியை
...................

11

விண்ணின் தீ
ஆக்கியது
உயிர்ப்பெருக்கை
சுடலைத் தீ
கொண்டது ஒவ்வொன்றாய்
இருதகைக்கொல்லியில்
உரைகிறது
அது
...................

12

அதனால்
ஆதியில்
கார்வை மட்டுமிருந்தது
அதனினின்று பிறந்தது
ஒலி
அகமெல்லாம் விரவிய
ஒழுங்கு
ஒலியை இசையாக்கியது
பின் இசை
ஓயா இசைப்பெருநடனமானது
....................

13

முதலில் எழுந்தது
விடம்
பின் வந்தது
அமிர்தம்
விடமலர்
என்பதா உன்னை?
....................

14

ப்ரியங்களற்ற
சூன்யவெளி
நின்னதென்றறிந்தேன்
இருட்புள்ளிகளை
கோத்தெடுத்து
மலராக்கினேன்
உன்னில் நான் வந்து
என்னில் சொல் வந்தது
சூன்யத்தை மலர்வெளியாக்கவே
....................

15

இருள்வெளியில்
ஒளிப்புள்ளியா?
ஒளிப்பெருக்கில்
இருட்புள்ளியா?
தோன்றா அழியா
உன் இருப்பு
எங்ஙனம்?
அந்தியின் ஒளிப்பிழம்பில்
நிழலுருவாய் விருட்சம்
இருட்புற்கூட்டம் கலைந்தெழுந்து
அமைகிறது
.....................

16

படைப்பின்
காருண்யம்தான்
ஆக்கியது அனைத்தையும்
................

17

படைப்பின்
அழல் பற்றி
எரிந்துருமாறியது
அனைத்தும்
.................

18

உன் மூச்சின் ஓட்டம் எது?
உன் நாளங்களில் ஓடுவது?
பூமிக்கு வெளியில்
ஆகாச வெளி
எங்கு முடிகிறது?
அண்டத்தை படைத்தது
எங்ஙனம்?
ஒரு மலரை ஆக்கியது
எப்படி?
முழநீளக் கைக்கொண்டு
முடிவிலி அளக்கநினைக்கும்
முட்டாளென்று
கூத்தாடினான் பித்தன்
....................

19

ஆனதெல்லாம்
அழிந்தது
அழிந்ததெல்லாம்
ஆனது
ஆதிக்கும் முன்னிருந்தது
எஞ்சியது
அழிவுக்கும் அப்பால்
.................

20

தியானித்தலே
இருப்பாய்
கொண்டது
அது
.................

21

ஊழ்கத்தின் வானில்
மேகம் உருமாறுகிறது
புற்கூட்டம் சிறகுவிரித்துள்ளது
ஊழ்கமின்றி உழலும்
உயிர்க்கூட்டமும்
தோன்றியழிவது
முதல்முடிவில்லா
ஊழ்கத்தில்
................

22

எல்லாம் நீ
என்றல்ல
என்னுள்
சொல் கனிந்தது
மலர் நீ
என்றுரைக்க
...............

23

ஒலி
நீ
என்றல்ல
என்னுள்
சொல் பிறந்தது
இசை நீ
என்று பாட
................

24

சூன்யம் நீ
என்றல்ல
என்னுள்
சொல் எழுந்தது
இருளில் இருளாய்
நடந்தேறும்
உன் நடனம் சுட்ட
...............

25

அன்பற்ற பிலம்
நீ
அன்பின் பெருவெள்ளம்
நீ
...............

26

மலரின்மை நீ
மலர் நீ
..............

27

உழல்தல் நீ
ஊழ்கமும் நீ
.............

28

விதை நீ
விருட்சம் நீ
மட்கியதுண்ணும்
நுண்ணியிர் நீ
.............

29

நான் நீ
நானல்லா
அனைத்தும்
நீ
............

30

பொய் உண்மை
எல்லாம் அடங்கிய
மெய்மை
நீ
..............

31

உன்னை அறிவேன்
உன்னை உணர்வேன்
உன்னைத் தொழுவேன்
...............

32

இருளிலும்
ஒளியிலும்
நீரே மழை
..............

33

அறியேன்
சூன்யத்திகிருந்து
மலர் வந்த
சூட்சுமம்
............

34

ஆறியேன்
உயிர் வந்த
சூட்சுமத்தை
.............

35

அறியேன்
விதை
வனமாகும்
சூட்சுமத்தை
............

36

அறியேன்
ஆதியை
அந்தத்தை
...........

37

அறியேன்
ஜனனம் மரணமாகும்
மரணம் ஜனனமாகும்
சூட்சுமத்தை
...........

38

அறியேன்
நட்சத்திரங்களை
அறியேன்
கிரகங்களை
அறியேன்
ஒளியாண்டு தூரங்களை
.............

39

அறியேன்
இதிலெல்லாம்
சிவமுரையும்
சூட்சுமத்தை
............

40

அறியேன்
இதுவல்ல
இதுவல்ல என்று நீக்கி
நிறைத்து எஞ்சுவதை
அறியும்
சூட்சுமத்தை
.............

41

அறியேன்
அருள்வாய்
அது
நான் ஆன
சூட்சுமத்தை
...............

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...