Friday, August 24, 2018

வார்த்தைகளுக்கு அப்பால்


"காட்டுயிர்களைப் பாருங்கள் அவை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் , காற்றின் நாற்றம் சொல்லிக் கொடுக்கும், பூமியுடன் பேசுங்கள் அது சொல்லிக் கொடுக்கும், கடலின் மீன்கள் சொல்லிக் கொடுக்கும்"- இந்த பைபிள் வரிகளுடன் துவங்குகிறது கார்ல் சபீனாவின் "Beyond words" புத்தகம். கவிதை வார்த்தைகளைக் கொண்டு வார்த்தைகளைக் கடந்த உணர்வுகளை சொல்கிறது. அப்படித்தான் எவ்வொரு கலைவடிவமும். நம் அறிவின் எல்லையைத் தாண்டி நம் ஆழ்மனதை மீட்டும் ஒவ்வொன்றும் வார்த்தைகளைக் கடந்தவைதான். மலை, கடல், அள்ளி அணைக்கும் காற்றுப் பெருங்கைகள், பெரு மழை, நதி இப்படி எத்தனையோ. வரைபடத்தில் உள்ள நதிகள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் நம் உடல் நரம்புகளை நினைவுருத்தியிருக்கும். ஆம் பூமியின் நரம்புகள் அவை. பிரபஞ்சம் அறியமுடியாத விரிவை கொண்டிருப்பது போல் தான் அணுவும். நம் நரம்புகளும், நதிகளும் சிருஷ்டி எனும் ஒரு புள்ளியில் பேதமற்று ஒன்றாகிறது. "ஒரு புல்லின் நுனியில் காட்டைக் காண்கிறேன்" எனும் தேவதேவன் வரிகள் நினைவுக்கு வருகிறது. புடவியின் விரிவை அதன் அழகை வியப்பை ஒரு நுண்ணியிரில் கண்டுவிடத்தான் முடியும். எந்த ஒரு உயிரை அறிய முற்பட்டாலும் நாம் தத்துவார்த்த அறிதல் விரிவடைதாக நான் உணர்கிறேன். அப்படியான ஒரு விரிவடைதலையும், சமகாலத்தில் மக்களுக்கு தேவையான மனமாற்றத்தையும், பல கவித்துவான உணர்வுகளையும் தரக்கூடியது "beyond words".

மூன்று பகுதிகள்- ஒன்று யானைகள்,இரண்டு ஓநாய்கள், மூன்று Killer whales(டால்பின் வகை). ஆசிரியர் இவ்வுயிர்களின் இயற்கை வாழ்விடங்களில் சென்று திரட்டிய நேரடி அனுபவங்களால் ஆனது இந்நூல்.

யானைகள் - இன்றும் மணிச்சப்தம் அனைவரையும் வாசலுக்கு இழுக்க வல்லது. கோயிலகளில் யானைக்கென தனிக்கூட்டம் நிற்பதுண்டு. ஆனால் இப்படி நம்மிடம் அடிமைப்பட்டு கிடக்கும் இப்பேருயிர்களின் கதையென்ன? மனிதன் பூமியில் தோன்றுவதற்கு பல்லாண்டு முன் தோன்றியவை யானைகள். 'ஈஸோவாஸ்யம் இதம் ஸர்வம்" என்றால் நம்க்கு முன்னரே ஈசன் குடிகொண்டது இவ்வுயிர்களில்‌. எத்தனைப் பேருரு, எத்தனை சக்தி. உங்கள் சக நண்பனைத் தூக்கி உங்கள் தோளில் அமர்த்த முயலுங்கள்...பின் உணர முடியும் மானுடரை எந்த சிரமுமில்லாமல் தூக்கிச் செல்லும் அதன் பேராற்றல். எவ்வுயிரைப் போலவும் இன்னும் எத்தனையோ ஆச்சர்யங்கள் அடங்கியது இவ்வுயிரும். அவற்றைத் தொட்டுத்திறக்கிறது புத்தகத்தின் முதல் பகுதி.

புத்தகம் மானுட மைய நோக்கை (Anthropocentric view) மறுப்பதுடன் துவங்குகிறது. மானுடனை நோக்கி சுருங்கும் தோறும் காலத்தின் சிறு துணுக்கைமட்டும் ஆக்ரமித்திருக்கும் ஒரு உயிரை மட்டும் அறிபவர் ஆகிறோம். கொட்டிக் கிடக்கும் கோடி ஆச்சர்யங்களை இழக்கிறோம். யானைகளின் வாழ்வை நமக்கு அறிமுகப்படுத்தும்தோறும் யானை எனும் உயிர் இயற்கையில் புடவியில் மானுடனுக்கு இணையான ஒரு இடத்தைக் கொள்வதை நாம் உணர்கிறோம். எந்த விதத்திலும் மனிதன் மேலானவன் அல்ல...

யானைகள் குடும்பங்களாக வாழ்கின்றன. பிடியே (பெண் யானை) குடும்பத்தை வழிநடத்துகிறது. மரபணுக்கள் வழி கடத்தப்படும் பாரம்பரிய அறிவு அவற்றிற்கு உண்டு - எங்கு நீர் கிடைக்கும், எக்காலத்தில் எங்கு புலம் பெயர வெண்டும் போன்றவை. நாற்பது வயதை கடந்த ஒரு பிடி தலைமை கொள்கிறது. ஒரு நாளுக்கு 50 கிலோமீட்டருக்கும் மேலாக நடக்கின்றன. வரட்சி காலங்களில் சுமார் 650 மைலுக்கும் மேலாக புலம்பெயர்கின்றன. ஒரு ஆண்டின் வெவ்வேறு காலங்களில் களிற்றிற்கு (ஆண் யானை) இனச்சேர்க்கை காலம் வருகிறது. அப்பொழுது அவற்றின் நெற்றியிலிருந்து மஸ்து எனும் திரவம் வடிகிறது. அவை அக்காலத்தில் உக்கிரம்‌ கொள்கின்றன. அவை ஒவ்வொரு யானைக் குடும்பங்களாகச் சென்று 'estrus' பிடிக்களை தேடுகின்றன. 'Estrus'- கருமுட்டை தயாராக இருக்கும் நான்கு நாட்களைக் குறிக்கும். அப்படியான பிடிக்கள் மஸ்து வடியும் யானையை வரவேற்கின்றன. கர்ப காலம் 24 மாதம். அன்னையாக 24 மாதம். குட்டி பிறந்தவுடன் நிற்க சிரமப்படுகிறது. அன்னை தன் துதிக்கையால் உதவுகிறது. மனிதரைப் போலவே குறைந்த பட்ச மூளை செயல்பாட்டுடன் யானைக்கன்றுகள் பிறக்கின்றன. இவை போன்ற தகவல்கள் புத்தகத்தின் பிரதான நோக்கத்துடன் பின்னப்பட்டுள்ளது. பிரதான நோக்கம்? மிருகங்களின் வாழ்க்கையை மனித வாழ்க்கை யுடன் ஒப்பிடுவதோ, மனிதவாழ்க்கையை மிருக வாழ்க்கையுடன் ஒப்பிடுவதோ அல்ல.. மிருகங்களின் வாழ்க்கையை அப்படியே கண்கானிப்பது. அதன் வழி அவற்றின் உணர்வுகள் - அவற்றிடையான உரையாடல் -மிருக வாழ்க்கையை வெறுமனே மிருக வாழ்க்கையாக காண்பதே நோக்கம். ஆனால் மிருகங்களை அறியும் தோறும் நம்மைப்பற்றி நாம் மேலும் அறிவதை தவிர்க்க முடியவில்லை.

யானைக் கன்றுகளை ஒரு யானைக்குடும்பத்தின் பல யானையள் பேணுகின்றன. ஒரு தாய் தன் குழந்தைமீது கொண்டிருப்பது எதுவாயினும் அதுவே யானைகளுக்கும் பொறுந்தும். யானைகளிடையே உரையாடல்கள் நிகழ்கின்றன. ஓயாத பிலிறல், கணக்கும் ஒலிகள், விளையாட்டு, மலையிருவத்து பேருயிரை அணுகி அறியும் வாய்ப்பை புத்தகம் தருகிறது.

ஓநாய்களும் நம்மைப்போலவே. ஒரு ஆல்பா ஆண் ஒரு ஆல்பா பெண் அவை ஈனும் குட்டிகள்..இது ஒரு ஓநாய்க் குடும்பம். தன்னிலும் இரண்டு மடங்கு எடை கொண்ட உயிர்களை ஓநாய்கள் வேட்டையாடுகின்றன. தனி ஒரு ஓநாயால் இது முடியாது. அவை குழு வேட்டையில் ஈடுபடுகின்றன. ஆல்பா ஆண் தலைமை வகிக்கிறது. பெரும்பாலும் முடிவுகள் ஆல்பா பெண் ஓநாயுடையது. பல தலைமை ஓநாய்களைப் பற்றி புத்தகம் சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட ஓநாய் வீரன். ஆனால் எந்த வேற்று குடும்பத்து ஓநாயையும் கொன்றதில்லை என்பதால் பெருவீரனாகிறது. அவற்றிற்கு பிரிவு உணடு. உக்கிரமான மோதல்கள் உண்டு. இவற்றை நீண்ட கால கண்கானிப்ப்பின் அடிப்படையில் நமக்கு காட்சியாக்குகிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் வெகு முக்கியமான பகுதியாக நான் நினைப்பதை சுருங்கச் சொல்ல முயல்கிறேன். பல்லாயிரம் ஆண்டு முன் ஓநாய்கள் மனித இருப்புகளை நெருங்குகின்றன. ஒரு சில ஓநாய்கள் மெல்ல மனிதன் தரும் வேட்டை மீதத்தை உண்டு வாழத்துவங்கின்றன. நாளடைவில் முழுமையாக மனிதனுடன் வாழப்பழகி காட்டு ஓநாய்களிலிருந்து விலகி விடுகின்றன. இப்படி மனிதனிடன் ஒன்றிய ஓநாய்களிடை இனப்பெருக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் தொடரவும் வந்தவையே நாய்கள். ஓநாய்களுக்கும் நாய்களுக்கும் 'செரட்டோனின்' எனும் ஹார்மோன் சுரப்பில் வித்தியாசமுண்டு. ஒரு உயிரின் மென்மையை கூட்டுவிக்கும் இந்த ஹார்மோன் நாய்களில் அதிகமாக உண்டு. இதே வித்தியாசம் எந்த ஒரு காட்டுயிருக்கும் வீட்டுயிருக்கும் பொருந்தும். நிற்க.

ஆப்ரிக்காவில் காங்கோ நதி உருவானபோது ஒரு குறிப்பிட்ட சிம்பன்ஸிக்கள் அதன் தெற்கே ஒதுங்கிவிடுகின்றன. இந்த சிம்பஸிக்கள் பரிணாம வளர்ச்சி கொண்டு 'போனப்போஸ்' எனும் குரங்கினமாகிறது. சிம்பன்ஸிக்கள் ஓப்பீட்டளவில் வன்மையானவை. இரு ஆண் சிம்பன்ஸி சந்தித்தால் போர்தான்...சில நேரம் சாகும் வரை. ஆனால் போனபோக்கள் அப்படி இல்லை. அவற்றில் சண்டையே இல்லை. முழுதும் நட்புதான். நட்பு சில நேரம் நீண்டு, இரு போனபோ குடுமபங்கள் சந்திக்கும் போது கூட்டுக்களவி வரை செல்கிறது. மொத்தத்தில் மகிழ்ச்சியானவை. நிற்க.

மேல்சொன்ன ஓநாய்-  நாய். சிம்பன்ஸி- போனபோ. சுருங்கச்சொன்னால் காட்டுயிர் - வீட்டுயிர் பலவற்றிற்கும், 'செரட்டோனின்' எனும் ஹார்மோன் சுரப்பில் வித்தியாசமுள்ளதைக் கண்டோம். இன்னொரு வித்தியாசமுண்டு - உருவத்தில். தொய்ந்த காதுகள், உருளை முகம் என மென்மையை தோற்றத்திலும் கொள்கின்றன வீட்டுயிர்கள். ஆச்சர்யம் என்னவென்றால் 'செரட்டோனின் சுரக்க எந்த ஜீன் காரணமோ, அதே ஜீன்தான் இந்த மென்மை தோற்றத்திற்கும் காரணமாகிறது. மேலும் காட்டுயிர்களின் மூளை அளவை விடவும் பதினைந்து சதவிகிதம் சிறிய மூளையை உடையவை இந்த வீட்டுயிர்கள்.

காட்டுயிர்கள் ' domestication'க்கு உள்ளாகி வீட்டுயிர்களாக ஆகியுள்ளன. அல்லது வாழ்விட மாற்றம் உருவாக்கிய புதிய புறச்சூழலுக்கு இணங்க அவற்றின் வாழ்க்கை, உடல், தன்மை மாறியுள்ளன எனலாம். ஆசிரியர் சொல்கிறார் மனிதன் 'self- domestication' க்கு உள்ளகியிருக்கிறான் என.  வேட்டைச்சமூகமாக இருந்த மனிதன் விவசாயம் செய்ய சேர்ந்து வாழ்கின்றான். அங்கு துவங்குகிறது மாற்றம். அவனது புறச்சூழல் ஒன்றி வாழ அவனை நிர்பந்தப்படுத்துகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் மனிதனின் செரட்டோடின் அதிகமாக சுரக்கத் துவங்குகிறது. நியன்டர்தால்களின் மூளை 1500 கிராம். மனிதனின் மூளை 1350 கிராம். தோராயமாக 15சதவிகித குறைவு. ஓநாய் நாயானது போல், சிம்பன்ஸி போனலோ ஆனது போல், வேட்டை மனிதன் அறச்சார்புடையவனாய் , வன்முறையை (கூட்டு வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒன்று) வெறுப்பவனாய்  உருவாகிறான். வரலாறு நெடுக கொடுங்கோலர்கள் அகற்றப்படுகிறார்கள், கொலை கற்பழிப்பில் ஈடுவடுபவர்கள் அரசு எனும் நிறுவனத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்.மனிதன் இன்னும்‌பரிணாம வளர்ச்சி கொள்கிறான். இப்பகுதியின் வழி அறம் எனும் சொல் மேலும் துலக்கம் கொள்வதாக நான் உணர்கிறேன்.

புத்தக்த்தில் கவித்துமான பகுதிகள் இருப்பதாக சொன்னேன். அப்படியான ஒன்று... ஒரு ஆராய்ச்சியாளர் தென்னாப்ரிக்காவில் கடற்கறையோரக் குன்றில் நிற்கிறார். அவர் முன் கடலில் ஒரு திமிங்கிலம் அலைகிறது. அதனை கண்காணித்து நிற்கிறார். திமிங்கிலத்தில் ஒலியை கண்காணிக்கும் அவருக்கு தன் பின்னே ஒரு பிளிறல் கேட்டு திரும்புகிறார். அங்கு நிற்பது ஒரு பிடி. 50 வயது கடந்த மூதாட்டி. 'கின்ஸா' வகை யானைகளின் கடைசி உயிர்வாழ் யானை அது. அதன் பிளிறலை கேட்டு நிற்கிறார் அவர். திடிரென கடலில் திமிங்கிலத்தின் குரல் பின் யானையின் குரல். அவருக்கு தெளிவாகிறது. மனிதனுக்கு பல மில்லியன் ஆண்டு முன் தோன்றிய இனம் இவையிரண்டும். ஒரு மாபெரும் மரபணுச் சங்கிலியில் தோன்றிய இரு பேருயிர்கள். அவை பேசிக்கொள்கின்றன். இங்கு வெறும் மனிதப்பயலுக்கு என்ன வேலை என அவ்விடம் நீங்கி விடுகிறார்.

புத்தகம் மூன்று பார்வைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது- ஒன்று, மானுட மையநோக்கின் அபத்தம். மனிதனின் கூட்டு ஆணவம் உடன் வாழ் உயிர்களை போதாமைகளுடன் கூடியதாக பார்க்கச் செய்கிறது. முரண்நகை என்னவெனில் மனிதன் தோன்றும் முன் பல மில்லியன் ஆண்டு முன் தோன்றி வாழ்ந்து வருபவை அவை. மனிதனால் செய்ய முடியும் காரியங்களை செய்ய முடிவதே அறிவிற்கான அளவுகோலாக வைப்பது அபத்தம். மனிதனால் செய்ய முடிந்தவற்றை மிருகங்களால் செய்ய முடியாது. மிருகங்களுக்கு சாத்தியமான (எந்த உதவியும் இல்லாமல் கண்டம் கண்டம் புலம்பெயரும் பறவைகள்) பல மனிதனால் முடியாது. அதனதன் வாழ்க்கை சூழலில் அவையவை நிறைவுடன்.

இரண்டு, மிருகங்களைப் பற்றிய நம் அறிவு. நாம் அறிந்திருப்பது ரொம்பவும் குறைவே. ஆராய்ச்சிகள் முன்வைக்கும் அபத்தமான பல முடிவுகளை ஆசிரியர் மறுக்கிறார். உதாரணமாக மிருகங்களிடையான உரையாடலை நாம் இதுவரை சரிவர அறிய முற்படவில்லை. யானைகளின் வாழ்க்கை ஒலிகளால் ஆனவை. கில்லர் வகை திமிங்கிலங்கள் தனக்கான "SIGNATURE" ஒலிகளை உடையவை - நமக்கு பெயர் இருப்பது போல. குரங்குகளுக்கு சமீபமாகத்தான் ஒரு LEXICON உருவாக்கப்பட்டுள்ளது - 66 ஒலிகளின் அர்த்தங்கள். அவற்றின் உரையாடலுக்கு போதிய கவனம் தராதது போலவே அவற்றின் உணர்வுகளுக்கும்,  எண்ணங்களுக்கும். மிருகங்களிடையே காணக்கிடைக்கும் கருணையின் கணங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. பன்னிரண்டு யானைகளை வேட்டையாடப்படுவதிலிருந்து மீட்டு அதனுடனேயே காட்டில் வாழும் ஆராய்ச்சியாளர் இறக்கிறார். அன்றிரவே அத்தனை யானைகளும் அவ்வீட்டின் முன் கூடிவிடுகின்றன. killer whale டால்பிங்களை ஒரு படகிலிருந்து கண்கானிக்கிறார் ஆராய்ச்சியாளர். அவை வேட்டையாடுகின்றன. திடீரெனெ படகை சுற்றிக் கொள்கின்றன. காரணம் அப்படகில் ஒருவர் இறந்திருக்கிறார். படகில் இருந்தவர்களுக்கே தெரியவில்லை. அவர்கள் கறை சேரும் வரை முற்றுகையை களைக்கவில்லை அவை. கடலில் வழிதொலைந்தவர்களுக்கு டால்பின்கள் வழிகாட்டிய சம்பவங்கள் பல உள்ளன. மனித உயிரின் நோக்கம் இணப்பெருக்கம் மட்டுமா? அன்பு காதல் எல்லாம் அப்புள்ளியை நோக்கித்தானா? ஆம் என்றால் மிருகங்களுக்கும் அப்படியே. இல்லை என்றால் அதுவும் அப்படியே மிருகங்களுக்கு. 

மூன்றாவதான ஒன்றே புத்தகம் வாசகனுக்கு கடத்த முற்படும் முதன்மையான ஒன்று. மிருகங்களை மிருகங்களாக தனி உயிர்களாக பரிணாம ஏணியில் சம பயணியாக, பூமி எனும் பேரில்லத்தில் உடனுறைபவையாக  பார்க்கும் நோக்கு. அவற்றின் வாழ்வை நேரில் அவதானிக்கையில் பல ஆச்சர்யங்கள் காணக்கிடைக்கின்றன. ஆனால் நாம் கான முற்பட்டது காலம் கடந்து. "கில்லர் வேல்ஸ்" (மிகப்பெரிய டால்பின் வகை- 25 அடி நீளம், 12000 பவுன்ட் எடை) குடும்பங்களாக வாழ்கின்றன. பெண்ணே தலைமை வகிக்கிறது. யானைகளில் போல் யாரும் இனப்பெருக்கத்தோடு குடும்பத்தை பிடிந்துவிடுவதில்லை. இலப்பெருக்கத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் தாயிடம் மீள்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு என ஒரு அடையாள ஒலி உண்டு. பல குடும்பங்கள் சேர்ந்தால் ஒரு "பாட்"(POD). இதற்கும் ஒரு அடையாள ஒலி உண்டு. பல "பாட்"கள் சேர்ந்தால் "க்ளான்"(CLAN). பல க்ளான்கள் சேர்ந்தால் "கம்யூனிட்டி". இதற்கும் அடையாள ஒலி உண்டு. வட அமெரிக்க கண்டத்தின் மேற்கில் வடக்கு, தெற்கு என பிரிந்து இரண்டு கம்யூட்டிகள் வாழ்கின்றன. இந்த இரண்டு கம்யூனிட்டிக்கும் மரபணு அளவில் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் இவை கலப்பதிலை. வெறும் 100 யார்ட் தூரத்தில் இருந்தாலும் இரண்டு கம்யூனிட்டியும் களவியில் ஈடுபடுவதில்லை. மனிதர்களை நினைவு படுத்துகின்றனவா? இப்படி பல ஆச்சர்யங்கள். போனபோக்களைப் பற்றி முன்னரே சொல்லீருந்தேன் - சண்டையே இடாத பகிர்ந்துண்டு வாழும் அவற்றின் வாழ்வை பார்க்கையில் நம் மானுட சமூகத்தின் பெருங்கனவை வாழவதாகத்தான் தோன்றுகிறது.

அழிவின் சித்திரமொன்றும் நூலில் இடம்பெறுகிறது. லட்சக்கணக்கில் இருந்த ஆப்ரிக்க யானைகள் இன்று ஆயிரக்கணக்கில். யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகின்றன. ஒரு ஐம்பது வயதை நெருங்கிய பெண் யானைக்கு 10அடி வரை நீளமுள்ள தந்தம் இருக்கும். ஒரு பெண் யானை (குடும்பத் தலைவி) வேட்டையாடப்பட்டால் ஒரு குடும்பமே சிதைந்துவிடும்.  காரணம் அந்த யானைக்கே புல் இருக்கும் இடம், வறட்சி காலங்களில் செல்ல வேண்டிய புலம்பெயர் இடங்கள் ஆகியவை தெரியும். அராய்ச்சி முடிவுகள் குடும்பத்தலைவி கொல்லப்படவும் குடும்பம் பெரும்பாலும் சிதைந்துவிடுவதாகக் கூறுகின்றன. அதே போல் "KILLER WHALE". சால்மன் மீன்பிடிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டன. ஐஸ்லான்ட் தேசம் அமெரிக்காவின் உதவி கோற, அமரிக்க கடற்படை சுமார் ஆறாயிரம் திமிங்கிலங்களை கொன்று குவித்தன. அத்தனைக்கும் அவற்றின் வாழ்வு பற்றி ஒன்றுமே தெரியாது. அவை கொடூரமான மீன்களாக கருதப்பட்டன. மனிதனை முழுவதுமாக முழுங்கிவிடும் கதையெல்லாம் உலவின. ஆனால் கடலில் வாழும் KILLER WHALE ஒரு மனிதனைக் கூட கொன்றது கிடையாது.எவ்வளவு அறிவீனம்? ஓநாய்கள் முழுவதுமாக வேட்டையாடப்பட்டு கனடா, யுனைட்டட் ஸ்டேட்ஸ் போன்ற தேசங்களில் துடைத்தெடுக்கப்பட்டுவிட்டன. பின் ஓநாய்கள் உண்ணும் "எல்க்"கின் எண்ணிக்கை கட்டுங்கடங்காமல் பெறுகவும் மீண்டும் ஓநாய்கள் இவ்விடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரு மனிதனாக நம் வாழ்வு எவ்வளவுக்கு நம்மை சுற்றி உள்ளவர்களை சார்ந்தது? அப்படித்தான் மிருகங்களும். ஒட்டுமொத்த சென்னையிலும் வெறும் எண்பது பேர்தான் என்றால் என்ன ஆகும்? பல ஆயிரம் ஆண்டுகளாக சார்ந்து வாழப்பழகிய நாம் என்ன செய்வது? அது போலத்தான் என்டெஞ்சர்ட் உயிரினங்களின் வாழ்வும். ஆயிரக்கணக்கில் இருந்த KILLER WHALES இன்று வெறும் எண்பத்தொன்றுதான் எஞ்சியுள்ளது. யோசித்துப்பார்த்தால் மனிதர்களிடம் மேன்மை அளவுக்கே கீழ்மைகளும், அறிவொளி அளவிற்கே அறிவின்மையின் இருளும் உள்ளது

ஒரு புதிய பார்வைக் கோணத்தை தருவதும், இதுவரை நமகிருந்த பார்வையை உடைத்து மாற்றுவதும் ஒரு நல்ல நூலுக்கான அடையாளம் எனில் "beyond words" அப்படியான ஒன்று. (என் வரையில்) இதுவரை பரீட்சயமில்லாத ஒரு அறிவுத்துறையுடனான உரையாடலை துவக்கியுள்ளது. அறிவியலின் பகுத்தாய்வு நோக்கை முன் வைக்கும் ஒரு நூலில் அன்பும் கருணையும் விரவியுள்ளது. இத்தனை நாள் நாம் பார்ககத் தவறிய, நம்மை பற்றி நமக்கே சொல்லித்தரக் கூடிய, அழகான ஒன்றை காட்சியாக்கும் சாளரத்தை புத்தகம் திறந்துள்ளது. வார்த்தைகளற்ற வெளி இச்சாளரத்தின் வழி நமக்கு காட்சியாகட்டும்.

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...