ஞாயிறு, 20 ஜூலை, 2025

சிருஷ்டியின் போக்கு



அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும் உண்டு எனப்படுகிறது. நிகழும் கொலைகளும், வன்முறைகளும் பற்றிய எந்தவித கணக்கெடுப்புகளும் அவை காட்டும் எந்த எண்ணிக்கையும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதாகத்தான் இருக்கும்.‌ இத்தனை வன்முறை கொண்ட மனநிலையும் கூட இச்சமூகத்திலிருந்துதான் உருவாகி வருகிறது அல்லவா?. நம்மை பதைக்கச் செய்யும் செய்திகள் ஒரு கலைமனத்தையும் பாதிக்கத்தான் செய்கிறது. 'தூக்குமேடைக்கு அழைத்துச்செல்லப்படும் இரு சிறுமிகள்' எனும் மனுஷின் கவிதை நினைவிலெழுகிறது. 'வரலாறு ஆண் குறிகளால் எழுதப்படுகிறது. என் ஆண் குறியை அறுத்து அதன் குருதியை அப்பிஞ்சுப்பாதங்களில் பூசுகிறேன்' என முடியும் அக்கவிதை. ஆசை வக்கிரமானதன் குறியீடு ஆண்குறி அல்லவா?. 

நாம் அன்றாடம் போலவே ஏழாம்  உலகமும் ஆசையால் அலைக்கழிக்கபடும் மனிதர்களால் ஆனது. என்ன, அவர்கள் இயங்கும் தளம் வேறு என்பதுதான்  வித்தியாசம். தமிழ் இலக்கியத்துக்கே முற்றிலும் புதியது நாவல் காட்டும் பிச்சைக்காரர்களின் உலகம். அந்த உலகிற்குள் வியாபாரம், விலை நிர்ணயம், லாபம் நஷ்டம் எல்லாமுண்டு. ஆனால் இப்படியொரு உலகம் உருவாகி வந்துள்ளது. யாரும் திட்டமிட்டு உருவாக்கியதல்ல, மனிதனின் ஆழத்தில் உரையும் குரூரம் அதற்கான ஒரு உலகை சிருஷ்டித்துள்ளது.

மனிதனை எப்பேர்பட்ட குரூரத்திற்கு மத்தியில் விட்டாலும் அது அவனுக்கு அன்றாடமாகிப்போகும். நாளடைவில் அவனுக்கு  அங்கு உறவுகள், மகிழ்ச்சி, துன்பம், அறம், ஆன்மீகம் எல்லாமும் முளைத்து வரும். நாவலின் அதீத தன்மையுடைய புனைவுக்களம் தாண்டி, அப்புனைக்களம் சூடி நிற்கும் நம்மால் சகித்துக்கொள்ள முடியாத குரூரத்தைத் தாண்டி நாவலை பார்க்கையில் அக்கதாபாத்திரங்களின் இயல்பான வாழ்வும் இயல்பான வாழ்வுக்கே உரிய அல்லல்களும் துயரங்களும் உணர்வுப்பெருக்குகளும் காணக்கிடைக்கும்.

ஏக்கியம்மை சொல்கிறாள் 'நாம யாருக்கு என்ன பாவம் செய்தோம்'.  ஆம், பாவம்தான் கணம் கணமும் நிகழ்ந்தேறுகிறது. நாவல் சித்தரிக்கும் புறச்சூழல் குமட்டச்செய்வத்தான், ஆனால் அப்பாத்திரங்கள் அச்சூழலுக்குப் பழகியவை. அதேபோல் அவர்களின் அகம் பாவத்திற்கு பழகியது. சிலுவையில் அரைபவர்களை 'அறியாமல் பாவம் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்' என்கிறார். அந்த மன்னிப்பின் எல்லைக்குள் வரவேண்டிய அறியாமல் பாவம் செய்பவர்கள்தானா பண்டாரமும், சகாவும்?. ஆசை கண்மறைக்க அறியாமல் பாவம் செய்வர்களை மன்னியுமென வசனத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மாங்காண்டி சாமி பேரம் பேசப்படும் இடத்தில் அத்தனை எளிதாய், அறியமுடியாத ஒரு பிணைப்பினை இரண்டாம் பட்சமாக்கிக் கடக்கிறார் பண்டாரம்.  அனுதினமும் இப்படி எத்தனை வீழ்ச்சிகள் நடக்கிறது உலகில்? நம் அறத்தின் எல்லைகளை ஆசை விஞ்சுவதுதான் பாவம் என்பதா?

ஏழாம் உலகின் முதலாளிகளின் உலகு ஆசையால் இயக்கப்பட்டு பணத்தின் பின் மூர்க்கமாய் ஓடுகிறது. பிச்சைக்காரர்களின் உலகு வேறொன்றாய் உள்ளது. குய்யன் பாயசம் சாப்பிட ஐம்பது ரூபாய் வரை பிறரால் கொடுக்கப்படுகிறது. பிறரின் சின்ன அபிலாஷைகளுக்கு மதிப்பும் அதனை நிறைவேற்றி நிறைவு கொள்ளும் அன்பும் உருப்படிகளின் உலகில் உள்ளது. குருவியை கேரள சகாவு வாங்கும்‌போது, ராசப்பன் தானும் வருவதாய் அழுகிறார்.  ஆனால் உருப்படிகளுக்கு குடும்பம்‌ என்ற ஒன்று இல்லை. இடைவிடாமல் கைமாற்றப்படுகிறார்கள். இன்று உடனிருக்கும் ஒருவன் நாளை கேரளாவுக்கோ கர்நாடகத்துக்கோ விற்கப்படலாம்.  ஆனாலும் அவர்களுக்கு இடையில் இழையோடும் பரிவு என்பது எது? மானுட இயல்புதான் அல்லவா? இத்தனை ஆழத்தில் அமிந்த பின்னும் ஒளிர்வதெனில் அது தன்னொளியாகத்தான் இருக்கவேண்டுமல்லவா?

பண்டாரம் மகளுக்காக நட்ட நடு ராத்திரியில் போய் வளையல் செய்வித்து கொணர்ந்து மகளுக்கு அணிவித்து அழகு பார்க்கிறார். அத்தனை அன்புடன் அவர் வளர்த்த ஒரு மகள் நகையையும் ரொக்கத்தையும் திருடிக்கொண்டு ஓடிவிடுகிறாள். உருப்படிகளை குருக்கை உடைத்து, முத்தம்மையை வருடா வருடம் கர்பம் தரிக்க ஏற்பாடு செய்து, அவளுக்கு பிறக்கும் குழந்தை குரூபியாக உள்ளதா என்பதை உறுதி செய்து, பிறந்த பின் வெயிலில் கிடத்தி அருகில்‌ ஒரு துண்டை விரித்து வசூல் பார்க்கும் பண்டாரம் மகளின் இல்லத்தின் முன் காத்துக்கிடக்கிறார். வெறும் தந்தை. மானுட வரலாற்றில் உருவாகி வந்த  குடும்பம் எனும் அமைப்பு உருவாக்கிய கனிவின் ரூபம். போத்திவேலு பண்டாரம் எனும் பாத்திரம் இந்த இரு எல்லைகளுக்கு இடையில் ஆடுகிறது. 'Love your neighbour as yourself' என்பது பைபிள் வசனம். குடும்பமும் சமூகமும் ஒரு மனிதனுக்கு வேறு வேறாகத்தான் உள்ளது. மகளுக்காக ஏங்கும் பண்டாரம்தான், முத்தம்மையின் குழந்தையைப் பிடுங்கி வெயிலில் இட்டு வசூல் பார்க்கிறான். பண்டாரமே அஞ்சி விலக்கும் ஒரு கூட்டம் நாவலில் வருகிறது. பண்டாரம் உருப்படிகளை - பிறப்பிலேயே ஊனம், உருச்சிதைவு அமையப்பெற்றவர்கள்-  வைத்துத்தான் வியாபாரம் செய்கிறார். ஆனால் இன்னொரு கூட்டம் ஊனமோ குறைபாடோ இல்லாத குழந்தைகளை திருடி வந்து, ஊனமாக்கி ஆசிட் ஊற்றி உரு சிதைத்து உருப்படி ஆக்குகிறார்கள். அக்கூட்டத்தைப் பார்த்தவுடன் ஒன்றும்‌ சொல்லாமல் விலகி விடுகிறார் பண்டாரம். எல்லா உலகிலும் அறத்திற்கு பல்வேறு படிநிலைகளுண்டு அல்லவா? ஏதோ ஒரு படுநிலையில்தான் நாமும் உள்ளோம் அல்லவா? "உங்களில் பாபிகள் அல்லாதவர் இவள் மேல் முதல் கல்லை எரியட்டும்".

முன்னுரையில்‌ சொல்லப்படுகிறது, 'பிச்சைக்காரர்களின் உலகம் ஓர் எல்லை, அது நம் சமூகத்தின் அடித்தட்டின் அடித்தளம். ஆனால் அது வளைந்து வட்டப்பாதையில் நம் சமூகத்தின் உச்சியில் இருக்கும் துறவிகளை ஞானிகளை வந்தடைகிறது.' என்று. மாங்காண்டி சாமி பிச்சைக்கரராய் பிச்சைக்காரர்களுக்கு மத்தியில் இருக்கையிலேயே பாடுகிறது. மாங்காண்டி சாமியை கேரளக்காரன் கூட்டிச் சென்று ஆசிரமம் கட்டி மெத்தையில் அமர்த்தி நெய்யும் சோறும் பழமும் படைத்தால் அதனால் பாட முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிச்சைக்கரனாய் கை ஏந்துவது என்பது மாபெரும் விடுதலையின் கணம் அல்லவா? ஜைன திகம்பர சுவாமிகள் ஆடை தரிக்காதவர்கள். அம்மண கோலம் கொண்டவர்கள். ஆடையற்ற நிலை என்பது எத்தனை‌ விடுபடல்களுக்குப் பின் நிகழ்வது. அதே போல் கையை பிச்சைக்கு ஏந்தும் முன் எத்தனை விடுபடல்கள் அகமும்‌ புறமும் நிகழ வேண்டும். அந்த விடுபடலை நேர்கொள்ளும் ஆன்ம பலம் உள்ளோர் தான் விடுத்து விடுத்து பிச்சைக்கு ஏந்த முடியும். ஞானத்தின் கனியை  திருவோடுகளில் ஈகிறது இத்தேசம்.  ஜெயமோகன் யோகி ராம் சுரத் குமாரைச் சந்திக்கும் போது கேட்கிறார், 'நீங்கள் பிச்சைக்காரராய் சுதந்திரமாய் அலைந்தவர். இப்போது ஒரு மடம்‌ வைத்து இப்படி அமர்த்தியிருப்பது , ஜெயிலில் இருப்பது போலில்லையா?' என்று.

பண்டாரம் தன் பெண்டு தன் பிள்ளைக்காக  அவனுக்கே உரிய அற பாவ எல்லைகளுக்குள் சுழல்பவன். அல்லல் படுபவன். லௌகீகன். உருப்படிகளின் உலகில்தான் ஞானத் தெரிப்புகள் நிகழ்கிறது, தத்துவம் பாடலாகிறது. அத்தனை கடைக்கோடிக்கும்‌ கடைக்கோடியில் கிடக்கையிலும் அங்கு மலரும் தாய்மையும், நட்பும், பரிவும் அவை மானுட இயல்பில் உள்ளவை என்றே சொல்கிறது. ஏழாம் உலகின் உருப்படிகளின் அகத்தில் காணக்கிடைப்பவையே நாவலின் மையம். பண்டாரம் புறத்தே பூலோகத்தில் இருக்கிறார், அவர் அகத்தில் ஏழாம் உலகம் திகழ்கிறது. பிச்சைக்காரர்களிடம் காணக்கிடைக்கும் மகிழ்ச்சியும் சுதந்திரமும்‌ அவரிடமில்லை என்பது தின்னம். யானைக்கு பெரிய ஆத்மா? எறும்புக்கு சின்ன ஆத்மாவா? எல்லாம் ஆத்மாதான் அல்லவா? எல்லாம் சிருஷ்டியின் போக்கென்பதனை  நாவலின் அடிநாதமாகக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...