Wednesday, May 1, 2019

உன் கழுத்தில்
துடிக்கும்
இதயத்தின்
மென்குமிழிகளுடன்

ஈரமான
மலரை ஒற்றியெடுப்பது
போன்ற உன்
முத்தங்களுடன்

மழையைஅஞ்சி
மழையின்றி
மழைக்கனவுகளுடன்
குகைகளின் ஆழத்திற்குள் சுருண்டுவாழும்
உயிர்களின் பிரதேசத்திற்குள்

ஏன் இவ்வளவு
உறுதியாய்
வந்து கொடிருக்கிறாய்

மேகமற்ற பாலைமண்
வெயிலிடம்  ஒப்படைத்து
நொடிகளை அலைந்துகொண்டு
காத்திருக்க்கும்
புழுதியின் நிலத்தில்
சிறுகோடெனெ
உன் உருவம்
நலுங்கிறது

உடன் நடந்து
வருகிறது
நதிப்பசுமை
'அன்னைப்பழம்'

ஒரு தர்பூஸனிப்
பழம் சாப்பிடுங்கள்

நதி
ஊற்றெடுக்கும்

அருவியாய்
ஒழுகிச்செல்லும்

உங்கள் தாடை தழைந்து
சிறு குளம்
உருவாகும்

உங்கள்
பல்லின் உறுதிக்கும்
கொஞ்சமும்
வலுவற்றது
இப்பழம்

அடித்தால் உடையாது
கத்தி வேண்டும்
கண்ணீருடன்
பிளந்துகொள்ளும்

உடைந்து உருகிப்பெருகி
இனித்து வெள்ளமாகும்
நீர் ப் பெரு க் கு

அனுமனைப்போல்
நெஞ்சைப்பிளந்து
நீர்மை காட்டி
நெக்குருகி
இப்படி தசையை
திண்ணக் கொடுத்து
தாகம் தீர்க்க
அன்னையால்
மட்டும்தான் முடியும்








நம் அறையில்
நலுங்கி
கண் சிமிட்டி
உடைந்தாடி
ஒரு தீபம்

உறங்கும்
நம் மனவெளிகளில்
ஆயிரம்
உதயத்தின் கிரணங்கள்

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...