1
சித்தம் பிறழ்ந்த
இப்பறவை
ஓயாச் சிறகடிக்கிறது
வான் பெருகும் இசை
கூண்டினுள் இழைந்துவர
..............
2
விதைவிட்டு
அலரும்
முதல் இலையில்
பரவிற்று
இசை வரிகளாய்
உன் கீதம்
............
3
புள்ளினம்
கலைந்தெழுகிறது
ஏதுமற்ற வான்
கனிந்துவிட்டது
வசந்தத்தின் முதல் மலர்
அலரக் காத்துள்ளது
குழலில் இதழ் பதித்து
அண்டப் பெருமூச்சை
இசையாக்கு
................
4
விழு நட்சத்திரத்தை
மீட்டுகிறது
காற்றில் அலையாடும்
உதிர்ந்த இறகை
மீட்டுகிறது
உன்
இசை
...............
5
இசையின்
சிறு ஓடைகள்
நாதப் பெருவெள்ளமானது
இந்நிலத்தின்
நதியெல்லாம் பெருகி
கடலானது
................
6
கடலைக் கடக்கும்
வலசைப்புள்
எழுதிச் செல்கிறது
நீண்டதொரு
இசைக்குறிப்பை
.................
7
மேகத்தின்
கலைதலும் இணைதலும்
இசையாலென்றால்
மழைப் பெருவது
குழல்நாதத்தால் என்றால்
பித்தன் என்றனர்
என்னை
.................
8
வான் அளக்கும்
புள்ளினை
விழுந்துடைந்து
எழுந்தமர்ந்து
தொடர்கிறது
நிழல்
..................
9
விருட்சங்கள்
வான் நோக்கி
கைநீட்டுவது
ஏனென்றறிவாயா?
................
10
வனம்
மதுரக் கிறக்கத்தில்
மோனித்திருப்பது
ஏனென்றறிவாயா?
................
11
மேனியெல்லாம்
விரவிக் கிடந்தும்
கடலாழம் செல்ல
இயலா
நிலவொளியின்
அழல் அறிவாயா?
................
12
வண்ணமாய்ப்
பெருகினர்
மானிடர்
அவர் ஆழத்துறையும்
கண்ணீரின் தழல்
அறிவாயா?
..................
13
வானம் பெருகிச்
சாக நிற்கிறது
கடல் தன்னை
அணைத்துக்கொள்ள
வேண்டி நிற்கிறது
நிலவு
துளிக் கணணீராய்
உதிரக் காத்துள்ளது
ஏனென்றறிவாயா?
..............
14
இலையின் மேல் வரிகளாய்
அணில் முதுகின் கோடுகளாய்
சிறகின் வண்ணங்களாய்
அலகின் அடர்நிறமாய்
கழுத்தின் மயில் நிறமாய்
ஆதி இசையில் பிறந்து
காலத்தின் கிளைபிடித்து
தாவித் தாவி வருகின்றன
உன் படிமங்கள்
................
15
இலையோடும்
மேல்வரிகள் கண்டபின்
முகம் நேரிட்டு
உள்ளங்கை ரேகை
நோக்கினேன்
கண் சொருகிற்று
நாளங்களில்
வெடித்துப் பெருகிற்று
இசை
..................
16
மௌனத்திலும்
இசையுண்டு
இசையின்மை
என்ற ஒன்றில்லை
..................
17
வெளி நிறைத்திருக்கும்
உன் இசையில்
ஏன் இத்தனை
மௌனம்?
...............
18
உன் இசையில்
ஆழ்வதையே
ஊழ்கமென்றனர்
உன் இசையை
அறிவதையே
ஞானமென்றனர்
உன் இசையைப்
பாடுவதையே
கவிதை என்றனர்
உன் இசைக்கு
நடனம் புரிவதையே
கர்மம் என்றனர்
.................
19
வாழ்ந்தார்
நீத்தார்
பின் நீத்தார்
வாழ்ந்தார்
என்ன மாதிரி
இசைச்சுழலிது?
..................
20
ஒரு உயிர்நிரையின்
கடைசி
உயிர் அழிகையில்
கனிந்து நோக்குமா
உன் இசை
..................
21
காலம் காலமாய்
உதிரும்
சருகுகளுக்கு
எக்கீதம்
இசைக்கிறாய்?
.................
22
அந்தி இந்நிலத்தின் மேல்
வண்ணப்பேரலையாய்
பாய்ந்து விழுகிறது
உன் கன்றுகள்
குழல் நாதத்தில்
கண் சொருகி
நிற்கின்றன
..................
23
யாரோ ஏறறிய சுடர்
சுடர் மஞ்சள் அமர்திருக்கும்
சுடர் நீலத்தில்
நலுங்குகிறது
இசை
..................
24
வன தெய்வமொன்றின்
சுடுமண் சிற்பம்
வெறித்துப் பார்க்கிறது
இம்மண்ணின்
தர்ம அதர்மங்களுக்கு
உன் இசை
என்ன சொல்கிறது?
................
25
உன் இசையால்
இலை உதிர்ந்தது
உன் இசையால்
பசுமை துளிர்த்தது
மலர் பெருகியது
வனமாய் வெடித்தெழுந்தது
பின்
சரிந்து மட்கி அழிந்தது
உன் இசையால்
..................
26
நம் வாசல்களில்
இசை காத்துள்ளது
வெள்ளமெனப் பெருகி
அகமெல்லாம்
நிறைக்க
...................
27
வெளியெங்கும்
ஓங்காரமாய்
நின்ற இசை
மானுடப் பெருநடனத்துக்கு
வண்ணப்பேரிசையாய்
முழங்கிற்று
..................
28
இசை சொல்கிறது
மகிழ்ந்திரு
இசை சொல்கிறது
ஏகாந்திரு
இசை சொல்கிறது
உன் ஒவ்வொரு
துளியும் நானென்று
..................
29
கடலின் ஆழத்தில்
உன் இசையின் த்வனி என்ன?
பில்லியன் ஒளியாண்டுகளுக்கு
அப்பால்
உன் இசை எப்படி ஒலிக்கும்?
இதோ என் நாளங்களில்
ஓடுகிற அதே லயம் அல்லவா?
................
30
வானிலிருந்து
வழிந்த
உன் இசைதான்
இலைமேல்
வரிகளானது
அல்லவா?
..................
31
வனம்
வெண்மை சூடிற்று
குளிரில்
இசைக்கலையும்
பித்தனின் தடங்கள்
பனிக்கோளங்களில்
..............
32
ஒரு நாதம்
மற்றொன்றில்
இழைந்தது
ஒரு பட்டாம்பூச்சி
மலர் மேல்
அமர்ந்தது
...............
33
எங்கு தொடங்கிற்று
எதை நோக்கிச் செல்கிறது
இசையின் சமிக்ஞைகளை
பின் தொடர்வதன்றி
செய்வதற்கொன்றுமில்லை
..................
34
ஆயிரமாயிரமாண்டுகளாய்
ஆயிரம்முறை சொல்லியானபின்
மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்
உன் இசை ஆதியற்றது
அந்தமிலாதது
மேலும்
என்னுள்ளிருப்பதும்
அதே இசையென்றும்
...................
35
அதனால் சொல்கிறேன்
இசையற்ற ஏதுமில்லை
என்று
..................
No comments:
Post a Comment