Monday, December 14, 2020

 ஒரு கணம்
ஏதுமற்று
இப்பெருங்காலையை மட்டும்
அறிவோம்

ஒரு கணம்
எல்லாம் உதிர்த்து
நம்மை நாம்
நோக்கிக்கொள்வோம்

ஒரு கணம்
கண்கள் மூடி
ஆழச்சுனையில்
நீராடும் சிறுமலரின்
மென் மணம்
உணர்வோம்

ஒரு கணம்
அநாதி காலம்
முடிவிலியின் கண் இமைப்பு

 ஆவினம் செவி சாய்த்தன


புற்பெருவெளி அலையாடிற்று

மலைகள் மௌனம் சூடின

ஏரி அலைபரப்பிற்று

நதி அமைதிபெருக்கானது

குழந்தை அமுதென பருகிற்று

பெண்டிர் லயித்தனர்

நாகங்கள் சிலைத்திருந்தன

ஆன்றோர் மெய் உணர்ந்தனர்

அவ்விசையில்

கால்தடமறியா தூரத்து
நிலமொன்றில்
ஆதியந்தமிலா மலரொன்று
மீட்டிய இசையில்

Thursday, November 19, 2020

 மொட்டை மாடி

கைப்பிடிச்சுவற்றில்
வரிசை கட்டின
ஒரு குருவிக் கூட்டம்

ஒன்று சிறகுலைத்தது

மற்றொன்று அலகு திருப்பிற்று

அவை சொல்லின

"பூமி பெரியது"

"வானம் பார் ஆகப்‌பெரியது"

"காற்றைப்‌ பார் எங்குமுள்ளது"

"நம் உடல் ஆகச் சிறியது"

"பறத்தலொன்றே செய்வதற்குரியது"

Monday, September 28, 2020

மலருலகு

மலருலகு 1

அந்த சிறுமலருக்குள்
ஆயிரம்
பறவைகள்
சிறகு கொண்டன

மலருலகு 2

ஒரு நதி
ஓடி க் கொண்டிருந்தது
ஆயிரம்
உயிர்கள்
திளைத்தன
மலரிதழ் நுனி
விண்துளி பகர்ந்தது
ஆழத்திற்கு

மலருலகு 3

ஆயிரம் மலர்கள்
எதற்கு?
உன் இல்லத்தின்
வாசலில்
சாலையோரமாகக்
காத்திருக்கிறது
ஒரு பிரபஞ்ச
ரகசியம்

மலருலகு 4

நீ
ஏந்திக்கொள்
ஒரு மலரை
நிறைவாகட்டும்
ஒரு கவிதை

மலருலகு 5

வாடும் பொழுதுகளில்
உளம் அழியாதே
வேறு மலர்
சூல் கொண்டுள்ளது
நாமறியா ஆழத்தில்
உதிர்ந்ததும்
மலர்வதும்
வேறல்ல

மலருலகு 6

புலரியின் ஆயிரம்
வண்ணங்கள்
அந்தியின் கோடி
மாயங்கள்
ஒரு மலரை
காண்கையில்
புன்னகைக்கிறாள்
மலர்

மலருலகு 7

செடி தன்
தியானத்தில்
காண்கிறது
மலராகிறது
அமிர்தம்

மலருலகு 8

உன் இல்லத்தில் அருகில்
நீ செல்லும் சாலையில்
நீ செல்லாத
மலைகளில்
காணாத நதியோரங்களில்
நீரற்ற சமவெளிகளில்
வாய்திறந்த பள்ளத்தாக்குளில்
கடலின் ஆழத்தில்
உள்ளது
மலர்

மலருலகு 9

முதல் இசை
மலரின் மென்மை

முதல் ஓவியம்
மலரின் அலையாடல்

முதல் கவிதை
மலரின் சொல்

முதல் காவியம்
மலரின் ஒரு வாழ்க்கை

முதல் மழை
ஒரு மலரின் துளி

முதல்‌‌ உயிர்
ஒரு மலர்

மலருலகு 10

மானுடத்
தடமற்ற
தூரத்துப் பிரபஞ்சத்தில்
மலர்ந்து
உதிர்ந்து
வாழ்கின்றன
மலர்கள்

மலருலகு 11

காதலை சொல்ல
மலரைக் கைக்கொண்டவன்
அறிந்திருக்கிறான்
உலகின் நீர்மையை

மலருலகு 12

நிலவொளி
கதிரொளி
இரு மலர்களிடையே
ஏகாந்தமாய்
சுழல்கிறது
உலகம்

மலருலகு 13

வெடித்தபின்
விரிகிறது
பிரபஞ்சம்
இல்லை மலர்கிறதா?

மலருலகு 14

ஒன்பது
கிரகங்களும்
கோடி சூரியன்களும்
நாமறியா தூரங்களும்
ஒளியாண்டு ஆழங்களும்
இன்னும் இன்னும்
எல்லாம் எல்லாம்
ஒரு மலருக்குள்

மலருலகு 15

மலர்வதுக்கும்
உதிர்வதுக்குமான
தூரம்
ஒரு வாழ்க்கை
எனப்படுகிறது

மலருலகு 16

தியானி த் திரு க்கும்
மலர்கள்
மானுடரைக்
காண்பதில்லை

மலருலகு 17

நதியனைத்தையும்
கடல் அனைத்தையும்
மலை அனைத்தையும்
நிலமனைத்தையும்
எக்கோணத்தில்
கண்டால்
அது மலரென
புலனாகும்?

மலருலகு 18
வான்
மண்
நீர்
ஒளி
உயிர்
விதை
செடி
இலை
பின் அறியாமல்
ஒரு மலர்

ஒரு வாழ்க்கை
அலையாடிற்று
காற்றில்

பின்
அறியாமல்
உதிர்ந்தது







































Sunday, September 27, 2020

வெளி

இந்தச் சிறுவானின் கீழ்
சிற்றில்லத்தில்
நமக்காக நாம்
சிருஷ்டித்த
உலகு
சிறியது
மிகச் சிறியது
மிக மிகச் சிறியது
உலகளெவே
சிறியது
இப்பெருநீலத் திமிங்கிலம்
மிதக்கிறது
ஏந்தியுள்ளது
கடல்

கடல்
மிதக்கிறது
ஏந்தியுள்ளது
மற்றொரு
கடல்

Tuesday, September 22, 2020

என் செல்லப்பெயரை
உனக்கு இட்டேன்

உன் செல்லப் பெயரை

எனக்கு இட்டாய்

உன்னை அழைக்கையில்
என்னையும்

என்னை அழைக்கையில்
உன்னையும்
நாம்
சொல்லிக்கொண்டிருந்தோம்

பின் இரண்டும் கலந்து
பிறந்தது
பெயரொன்று
அதற்கு நிழலில்லை
வெறும்
ஒளி
 மரங்களை வேரிழுத்து
விழுங்கும்
நெடுஞ்சாலையில்
அதிவேக
வாகனங்களை
மட்டுப்படுத்தி
குறுக்காக
கடக்கிறது
எருதுகளின் நிரை
கருஞ்சாலையில்
பசுமையாய் சாணம்
ஒரு நிமிட
அமைதிக்குப்பின்
முழங்கிற்று
சாலை பெருந்தூரமாய்
 உலகம் யாவும்
ஆழ்ந்தடங்கி உறங்குகையில்
வானம் விழித்துக்கொண்டது
மின்னல் துடித்து விழ
கண்டது விண்
மண் பேருயிரை
சிறு துகலெனக் கிடந்த
கண் வழி அறிந்தது
மண்
விண் எனும் விரிவை
மாமழை வந்தும்
அலையும் காற்றுக்கும்
உயிர் எரிகிறது
பெருமரமொன்றின்
வேரணைப்பில்
சிறு சுடர்
கசப்பின்
முதல் துளி
சென்று தொடுகிறது
பரிசுத்தமான ஒன்றை

அக்கணம் முதல்
அது கசப்பென்றும்
அறியப்பட்டது

Saturday, July 25, 2020

அகநில மார்க்கம் (மொழிபெயர்ப்பு)

பயணமே வாழ்வாய்

பாஷோ ஜென் கவிஞர். வாழ்நாளின் பெரும்பான்மையை பயணத்திலேயே கழித்தவர். தன் மரணம் ஒரு பயணத்திலேயே நிகழ வேண்டும் என ஆசை கொண்டவர். அவரது பயணக் குறிப்பு "Narrow Road to the interiors" என்ற பெயரில் Sam Hill என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பயணக் குறிப்பு என்பதே சரியான பெயராக அமையும், பயண நூல் அல்ல. இக்காலத்தில் நாம் வாசிக்கும் பயண நூல்கள், பயணக் கட்டுரைகள் போன்றதல்ல இந்நூல். செல்லும் இடத்தின் சிறப்பு, விரிவான் வரலாறு போன்றவை அரவே கிடையாது. கவிதைக்கு நெருக்கமான ஒரு நூல் இது. பயணத்தின் வழி பாஷோ கவிதைகளையே கண்டடைந்துள்ளார் அல்லது பயணம் அவரில் கவிதையாக மலர்ந்தது எனலாம். சிறு சிறு குறிப்புகளாக செல்லும் இந்நூலின் ஒவொரு குறிப்பும் ஒரு கவிதையுடன் முடிவடைகிறது. இப்பயணக் குறிப்புகளை ஒரு இலக்கிய வடிவமாகக் கொள்ளலாம். குறிப்புகளிலேயே கவித்துவமான வரிகள் இருக்கின்றன. மனம் ஓயாமல் அழகில் திளைத்தபடி கவிதையின் துடிப்புகளை ஓயாமல் பின் தொடர்ந்தன் விளைவே இக்குறிப்புகள். இக்குறிப்புகளின் வழி நாம் அடையப்போவது ஜப்பான் நிலவமைப்பு பற்றிய அறிவோ, அதன் முக்கிய இடங்கள் பற்றிய அறிவோ அல்ல. மாறாக நாம் அடைவது கவிதைகளையே. கவிதையின் வழி ஒரு ஜப்பானை அறிகிறோம்.
இதன் ஒவ்வொரு குறிப்பாய் மொழிபெயர்க்கலாம் என்றிருக்கிறேன்

1

நிலவும் சூரியனும் நித்யபயணத்தில் உள்ளன. காலங்கள் அலைந்து திரிகின்றன. ஒரு வாழ்காலம் சிறு படகில், முதுமை களைத்த குதிரையை வருடங்களுக்குள் இட்டுச் செல்கிறது, ஒவ்வொரு நாளும் யாத்திரை, பயணமே இல்லம். பழங்காலம் தொட்டு பயணத்தின் போதே உயிர் நீத்தவர்கள் இருந்து வருகிறார்கள். இருந்தும் காற்று அலைக்கும் மேகங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நாடோடியாகும் கனவுக்குள் என்னை   சேர்க்கிறது.கடற்கரை ஒட்டிய நடை பயணம் முடித்து சென்ற இலையுதிர் காலத்தில் இல் திரும்பினேன், Sumida நதிக்கரையில் அமைந்த என் குடிலின் சிலந்தி வலைகளை சுத்தம் செய்தேன். வசந்தம் பனிமூட்டத்திலிருந்து எழுந்த போது Shirakawa Barrier கடந்து வடக்கே செல்ல ஏங்கினேன். அலைந்து திரியும் அகம் என்னை எச்செயலிலும் மனம் செலுத்த விடவில்லை. என் ஆடைகளை சரி செய்த படி, தொப்பியை தைத்தபடி கனவில் திளைத்தேன். கால்களை உறுதிப்படுத்த தைலம் இட்டபடி, மட்ஸுஷிமா மலைகளின் மீது நிலவெழுவதை கனவு கண்டேன். ஆக என் இல்லத்தை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு, பயணத்திற்கு தயாராக என் புரவலரின் கோடை இல்லம் சென்றேன். என் இல்லத்தின் கதவுகளில் சில வரிகளை விட்டுச்சென்றேன்:

இந்த புற்குடில்கூட 
கொலு அமைந்த வீடாக  
மாறக்கூடும்

(Hina Matsuri என்பது ஒரு பண்டிகை. நாம் கொலு வைப்பது போல் பொம்மைகள் அழகாக அமைக்கப்பட்டு பெண்பிள்ளைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற வேண்டுதலுடன் கொண்டடப்படுகிறது. Doll's house என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பயணம் கிளம்பும் பாஷோ இல்லம் எனக் குறிப்பது தன் அகத்தையே  என்பது என் வாசிப்பு. )


2

மூன்றாம் நிலவின் இருபத்து ஏழாம் காலை, புலரி,  மேகங்களிடையே சற்றே தெரியும் நிலவு, Fuji மலை வெறும் நிழலாக, செர்ரி  மலர்களின் மலர்தலுக்கிடையே நான் கிளம்பினேன். மீண்டும் அவற்றை எப்போது காண்பேன? சில பழைய நண்பர்கள வழியனுப்ப இந்த புலரியில் வந்திருந்தார்கள். படகில் சற்று தூரம் உடன் வந்து இரக்கிவிட்டார்கள். படகிலிருந்த்து இரங்கியபோது மூவாயிரம் மைல்கள்என் இதயத்தில் ஓடிக்கடந்தது, மொத்த உலகும் ஒரு கனவாக. வழியனுப்புதலின் கண்ணீரூடே அதை நான் கண்டேன்.

வசந்தம் கடக்கிறது
பறவைகளின் ஏக்கக்குரல்
கண்ணீர்
மீன் கண்களில்

இவ்வரிகளுடன் என் பயணத்தை துவங்கினேன். பின் இருந்தவர்கள் பயணியின் நிழல் மெல்ல சென்று மறைவதைக் கண்டிருந்தனர்.


3

Genrokuவின் இரண்டாம் ஆண்டு. கருமையும் வெண்மையுமான மேகங்களின் கீழ் அமைந்திருக்கும் வடக்குப் பிரதேசங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிக்கிறேன். என் தலை நரைத்துவிடக்கூடும் நான் திரும்புகையில், திரும்பாமலேக்கூட போகலாம். இரவு கவிகிறது, Soka வந்தடைந்தோம், எலும்பு துருத்திய தோள்கள் பயணப்பையின் கணத்தால் சோர்ந்திருந்தன, கதக்தப்பான போர்வைக்கு நன்றியுடையவனாவேன், எழுது கருவி, மை, அத்யாவசங்கள். நண்பர்களின் வழியனுப்புதலின் பரிசுகளால் கணத்துவிட்டது பயணப்பை . என்னால் அவற்றை விட்டுச் செல்ல முடியாது.

4

மூன்றாம் நிலவின் கடைசி இரவு, Nikko மலையின் அடிவாரத்தில் ஒரு விடுதி. விடுதி காப்பாளர் ஜோ புத்தா (Joe Buddha) என்றழைக்கப்படுகிறார். அவர் நேர்மை அவருக்கு இப்பயரை ஈட்டித்தந்ததாக சொல்லி  விடுதியை தன் இல்லம்போல் நினைக்கவேண்டும் என்றார். ஒரு பயணிக்கு உதவ கருணாமூர்த்தியான புத்தன் ஒரு சாதாரண மனிதனாக தோன்றியிருப்பது , அவர் எளிமை ஒரு பெரும் வரம், அவர் கடமையுணர்வு சலனமற்றது. கன்ஃயூஸிய நெறியின் மாதிரி. நான் இன்று போதிசத்வரின் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்.

5
மூன்றாம் நிலவின் கடைசி இரவு, Nikko மலையின் அடிவாரத்தில் ஒரு விடுதி. விடுதி காப்பாளர் ஜோ புத்தா (Joe Buddha) என்றழைக்கப்படுகிறார். அவர் நேர்மை அவருக்கு இப்பயரை ஈட்டித்தந்ததாக சொல்லி  விடுதியை தன் இல்லம்போல் நினைக்கவேண்டும் என்றார். ஒரு பயணிக்கு உதவ கருணாமூர்த்தியான புத்தன் ஒரு சாதாரண மனிதனாக தோன்றியிருப்பது , அவர் எளிமை ஒரு பெரும் வரம், அவர் கடமையுணர்வு சலனமற்றது. கன்ஃயூஸிய நெறியின் மாதிரி. நான் இன்று போதிசத்வரின் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்.

6
kurokami மலை இன்னும் பனி மூடியதாய், பனித்திரையில் தெளிவில்லா உருவாய் நிற்க, சோரா எழுதினான்:

தலை மழிக்கப்பட்டு
கரு முடி மலையில்
நாங்கள் கோடை ஆடைகளுக்கு
மாறிக்கொண்டோம்

சோராவின் (Sora) உண்மையான பெயர் Kawai Sogoro. சோரா என்பது புனைப்பெயர். என் பழைய குடிலில் அவன் நீரும் விறகும் சேகரித்தான். மட்ஸுஷிமா மற்றும் கிஸகாட்டாவைக் காணும் இன்ப விருப்பில் நாங்கள் ஒன்றாக பயணிக்க, பயணத்தின் இன்ப துன்பங்களை ஒன்றென பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தோம். நாங்கள் பயணத்தை துவங்கிய காலையில், புத்த துறவாடை உடுத்தினான், தலை மழித்துக்கொண்டான், தன் பெயரையும் ஸோகோ (மோட்சமடைந்தவன்) என மாற்றிக்கொண்டான். ஆக அவன் கவிதைகளில் வரும் "ஆடை மாற்றுதல்" எனபது அழுத்தமான அர்த்தமுடையதாகும்.

மலைமேல் நூறு மீட்டர் ஏறியபின், ஒரு நீர்வீழ்ச்சி நூறு அடி உயரத்திலிருந்து ஒரு பெரும் குகையிலிருந்து, ஆயிரம் கற்களாலான புலமொன்றில் வீழ்ந்தது. நீர்விழ்ச்சிக்கு உட்பக்கமாய் அமைந்த குகையில் அமர்ந்து நோக்கிய போது புரிந்தது ஏன் அதனை "Urami no Taki"(அருவியின் நோக்கு) என்கிறார்கள் என்று.

சற்று நின்றோம்
நீர்வீழ்ச்சியின் உட்பக்கம்
கோடை பின்வாங்கத் துவங்கிற்று.

7

Kurobaneல் ஒரு நண்பர் வசிக்கிறார். குறுக்காக செல்லும் எளிய வழியொன்றை முயன்றோம், ஆனால் சாயும் காலத்திற்கு முன்பே மழை பெய்யத் துவங்கிவிட்டது. ஆக கிராமத்துக் குடிலொன்றில் இரவைக் கழித்துவிட்டு, புலரியில் கிளம்பினோம். வயல்வெளியில் ஒரு குதிரை, புல்லருக்கும் ஒரு மனிதன். அவரிடம் நான் வழி கேட்டேன். யோசித்துவிட்டு தன்மையாக கூறினார் "குறுக்கும் நெடுக்குமான பல சாலைகளாலானது இவ்வழி. வழி தவறுவது எளிது. இந்த வயதான குதிரையை அழைத்துச்செல்லுங்கள். இவன் இப்பாதைகளை அறிந்தவன். இவன் நிற்கும் இடத்தில் இரங்கிக் கொள்ளுங்கள், அவன் தனியாக திரும்பிவிடுவான்".
நாங்கள் புறப்பட்டோம், இரு குழந்தைகள் நடனமிட்டபடி வழியனுப்பின, ஒரு குழந்தையின் பெயர் Kasane - பிங்க் நிற மலரின் பெயர். சோரா எழுதினான்:

kasane - இப்பெயருடன்
மேலும் வண்ணமாகிறாள்
பொருத்தமான பெயர்

8

kurobane சென்றடைந்த பிறகு, ஜோபோஜி சாமுராயை சென்று சந்தித்தேன், ஒரு ஜில்லாவின் மேற்பார்பையாளர். என் வருகையால் இன்ப அதிர்ச்சியுற்று  பல இரவுகளும் பகலும் என்னுடன் பேசியவண்ணமிருந்தார், பெரும்பாலும் அவர் தமையன் இல்லத்தில் அமர்ந்து. நாங்கள் சொந்தங்களையும் நண்பர்களையும் சென்று சந்தித்தோம். ஒரு நாள் நாய்கள் வேட்டை நடக்கும் இடம் சென்று பார்த்தோம். கல்லாக சமைந்து விட்ட  லேடி டொமானோவின் கல்லறை சென்று கண்டுவந்தோம். அதன் பின் Hachiman ஆலயம் சென்று வணங்கி வந்தோம். புலரியில் இல்லம் திரும்பினோம்.

Shugen Komyo கொவிலின் மலைத்துறவிகள் தங்கும் இடத்திற்கு அழைக்கப்பட்டேன்:

இந்த கோடை மலைகளில்
உயரமைந்த நீர் தேக்கங்களுக்கு வணக்கம்
இந்தப் பயணம் வாழ்த்தப்படுவதாகுக

9

Ungan கோயில் அருகே இருக்கும் மலைக் குடில், என் தம்ம குருவான புட்ச்சோ எழுதினார்:

ஐந்து அடி உயரக் குடில்
இதைக்கூட அமைத்திருக்கமாட்டேன்
இம்மழை இல்லையெனில்

அவர் இக்கவிதையை ஒரு பாறையில் கரியால் எழுதியதாய் வெகு முன்பு என்னிடம் சொன்னார். ஆர்மமுள்ள சில யுவன்கள் Ungan ஆலயம் நோக்கிய பயணத்தில் இணைந்து கொண்டனர். மும்முரமாக பேசிக்கொண்டிருந்தமையால் ஆலயம் எதிர்பாரா கணமொன்றில் தோன்றியது. நீண்ட பல்லத்தாக்கின் ஊடே, அடர்ந்த சிடார் மற்றும் பாசி பனிநீரில் சொட்டும் பைன் மரங்கள், வசந்தத்தின் குளிர் வானின் கீழ்,. தோட்டமொன்றின் வழியாக, பாலம் கடந்து, ஆலய வாயிலடைந்தோம்.

புட்ச்சோவின் குடிலை தேடி ஒரு சிறு குன்றின் மேல் ஒரு குகையருகே கண்டடைந்தேன் - Myozenji பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்த குகை போல, ஜென் மாஸ்டர் Hounன் பின்வாங்குதல்* போல.

மரங்கொத்திகக்கூட
தனிமையில் விட்டுச் சென்றது
கோடை மலையின் துறவிக் குடிலை

ஒரு சிறு கவிதை, சுருக்கமாக எழுதி, ஒரு கம்பத்தில் பதித்தேன்.

(Retreat என்பது ஜென் தியானத்தில் ஒரு வழியாக சொல்லப்படுகிற்து.  "இயல்பான நிலையே உன்னத நிலை"  என்பது ஜென் உடைய மையமான தரிசனமாகும். இங்கு RETREAT என்பது அந்நிலை நோக்கிய பயணமே,  அகங்காரத்தின் கற்பிதங்களின் வெளியிலிருந்து இயல்பான அகம் நோக்கி பின்னடைதல் என்னும் பொருள் கொள்ளலாம்)

10

கொலை கல்லினைக் - SESSHO SEKI, MURDER STONE- காண கிளம்பினோம், ஒரு குதிரையை அமர்த்திக்கொண்டோம், குதிரையோட்டி ஒரு கவிதை சொல்லுமாறு கேட்டான் "அழகான ஒரு கவிதை, தயவுசெய்து".

குதிரை கழுத்தொசித்தது
பரந்த நிலவெளியின் அப்பாலிருந்து
குயிலொன்றின் ஏக்கக்குரல்

கொலை கல் கருமையான மலைநிழலில் அமைந்துள்ளது, விஷவாயுவை வெளியிடும் ஒரு வெந்நீர் ஊற்றருகே. இறந்த தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மணல்வெளியை நிறைத்தபடி.

11

Ashinoவில், Saigyoவால் "தெளிந்த ஓடையின் அருகே"எனும் கவிதையில் பாடப்பட்ட வில்லோ மரம் இன்னும் அரிசி வயல்களின் இடையே உள்ளது. ஒரு அதிகாரி எனக்கு வழிகாட்டினார், நான் அது எங்கு உள்ளது அல்லது இருக்கிறதா என வியந்தபடி சென்றேன். இன்று , இக்கணம், அதே வில்லோ மரம்:

விதைப்பு முடிந்து, அவர்கள்
கிள்மபிவிட்டார்கள்
வில்லோமர நிழலிலிருந்து
நான் தோன்றுவதற்குள்


12

ஆர்வத்துடன், Shirakawa Barrier பற்றி நாளும் யோசித்திருந்தேன். "Somehow sending word home" எனும் பழங்கவிதையை நினைத்து மனதை ஆற்றுப்படுத்திக்கொண்டேன். அடர்ந்த பசும் கோடைக் காடுகள் வழி நடந்தேன். பல கவிஞர்கள் தங்கள் கவிதை வரிகளை இங்குள்ள மூன்று எல்லைகளில் பொறித்துள்ளாகள் -  "இலையுதிர்கால காற்று" 'சிவந்த மேப்பிள் மர இலைகள்" நினைவில் எழுகின்றன. பனியாலான வயல் போல், எண்ணற்ற Unohana -வெள்ளைப் பூக்கள் கோண்ட புதர்கள்,  சாலையின் இருபுறமும். இங்குதான் Kiyosuke எழுதினார், மக்கள் சிறந்த உடைகளுடன் மலைப்பாதையைக் கடக்கிறார்கள். ஆண்கள் சின்ன கரிய நிறத் தொப்பிகளுடன் பெரும் அவைகளுக்கு செல்வதுபோல்.

Unohana
என் தலை அணியாய்
தொல் சடங்கிற்கு தயாராய் 

(சோராவின் வரிகள்)

13

பெரும் செஸ்ட்நட் மரத்தின் கீழ் நகரத்தின் எல்லையில் ஒரு துறவி தன் குடிலை அமைத்துக்கொண்டுள்ளார் உலகினின்றும் தன்னை காத்தவண்ணம் . ஆழ்ந்த மலைக்காடுகளில் செஸ்நட் சேமிப்பது பற்றியான ஸாய்கோவின் கவிதையில் வரும் இடம் அப்படியானது. சீன மொழியில் "CHESTNUT" என்றால் "மேற்கு மரம்" என்று பொருள் -  இது அமித புத்தாவை குறிக்கிறது. துறவி GYOKI, தன் வாழ்நாள் முழுவதும் செஸ்ட்நட் மரங்களையே தன் கைத்தடியாக பயன்படுத்தினார், தன் இல்லத்தின் சிறு தூண்களுக்கும் கூட.

பெரிதும்
யாரும் நோக்குவதேயில்லை
தாழ்வாரங்களின் கீழ் 
செஸ்ட்நட் மலர்களை



14

Tokyuவின் இல்லத்திலிருந்து சில மைல்கள் நடந்து, Asaka மலைகளின் அடிவாரத்தில் அமைந்த Hiwada எனும் சிறு நகரை அடைந்தோம். நகர் எல்லை சதுப்பு நிலங்களால் ஒளிர்ந்துகொண்டிருந்தது. கோடை பாதி கடந்துவிட்டது, Iris பரிக்கும் காலம். நான் Katsumi மலர்களைப் பற்றிக் கேட்டேன், ஆனால் யாருக்கும் தெரியவில்லை. ஒரு நாள் முழுவதும் தேடி அலைந்தேன் "katsumi katsumi" எனும் உச்சாடனத்துடன், மலையில் சூரியன் அமிழும் வரை.

Nihonmatasuவிலிருந்து வலது பக்க சாலையில் திரும்பி, குருகோஸா குகை அடைந்தோம்.  இரவை Fukushimaவில் கழித்தோம்.


15

விடியலில் ஷினோபுவிற்கு கிளம்பினோம், சாயத் துணிகளுக்கு பிரசித்திபெற்ற ஊர்- பெயரே கூட Shinobu zuri- ஒரு பாறையின் பெயர் இடப்பட்டிருந்தது, மலையில் பாதி புதையுண்டு கிடக்கும் அப்பாறையை கண்டோம். கிராமத்தின் குழந்தைகள் எங்களோடு சேர்ந்துகொண்டு கதை கூறின "பழங்காலத்தில், இப்பாறை மலையின் உச்சியிலிருந்ததாம், வழிப்போக்கர்கள் பயிர்களை அழித்து விவியசாயிகளுக்கு தொல்லை கொடுத்தார்களாம், அதனால் முதியவர் சிலர் அப்பாறையை உருட்டி விட்டார்கள்". பொருத்தமான கதை.

வயலில் விதைக்கின்றன
யுவதிகளின் பரபரக்கும் கரங்கள்
தொல்காலத்தின் கைகள்
சாயம் செய்தது போலவே

16

தோணியில் Tsukinowaவில் கடந்து Se-no-ue எனும் சிறு ஊரை அடைந்தோம். ஊருக்கு வெளியே மலைகளுக்கு அருகில் இன்று சிதிலமாகக் கிடக்கும் Sato-Shoji யின் இல்லத்தை காண. Izikuவாவில் Saba Moor பார்க்கும் படி அறிவுருத்தப்பட்டிருந்தோம், கடைசியாக கோட்டையின் சித்லங்கள் இருக்கும் maru hill வந்தடைந்த்தோம். பிளந்து கிடக்கும் கதவுகள், அருகில் ஒரு தொல் ஆலயம், அங்க்கிருந்த குடும்பங்களின் கல்லறைகளைக் கண்டோம், என் கண்கள் கண்ணீரின் பனித்தது. குறிப்பாக இரு விதவைகளின் சமாதியில் -  இறந்த தம் கணவர்களின் கவச உடையை அணிந்தபின் உயிர் நீத்தவர்கள். நான் என் கண்ணீரை துடைத்துக்கொண்டேன். ஆலயத்தினு உள்ளெ, தேநீரை ரசித்தபடி, YOSHITSUNEவின் வாளையும், துறவி BENKEIயின் கூடையொன்றையும் கண்டோம், இரண்டுமே பொறிக்கப்படிருந்தது:

எல்லாம் கம்பீரமாய் 
வாள், கூடை, பட்டம்
குழந்தைகள் தினமான இன்று

இன்று Satsukiயின் முதல் நாள், அரிசி விதைப்பின் மாதம்.

17

இரவை Iizukaவில் கழித்தோம், சுடுநீர் ஊற்றில் குளித்துவிட்டு வெறுந்தரையில் விரிக்கப்பட்ட பாய்களுக்கு உறங்கச் சென்றோம் -  ஒரு கிராமத்து அறை. ஒரு வெளிச்சமும் இல்லை, சிறு அகல் விளக்கொளியில்,நலுங்கும் நிழல்களோடு எங்கள் படுக்கைகளை அமைத்தோம், அயர்ந்த கண்களை மூடிக்கொண்டோம். திடீரென பேரிடியுடன் உடைந்து விழும் மழை, ஒழுகும் கூரை தூக்கம் கலைத்தது, எங்கும் கொசுக்களும் பூச்சிகளும். முதுமையின் சோர்வு என்னை இரவு முழுவதும் படுத்தியது, துயில் இல்லா இரவு.

முதல் ஒளியில், விடியலுக்கு வெகு முன்பே, எங்கள் மூட்டைகளை தயார் செய்துகொண்டு கிளம்பிவிட்டோம், சஞ்சலம், சோர்வு ஆனாலும் தொடர்ந்து முன்சென்றோம்.  உடல் பலவீனம் கவலையில் ஆழ்த்தியது, ஒரு குதிரையை kori town வரை அமர்த்திக்கொண்டோம். என் திட்டங்களைப் பற்றி நான் கவலையுற்றேன். ஒவ்வொரு யாத்திரையும் வாழ்வின் நிலையாமையை சிந்திக்கச் செய்கிறது. சாலையிலேயே பயணத்திலேயே உயிர் துறப்பதுதான் இலக்கு. அல்லது அப்படியக எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, மனம் உறுதிகொண்டபின், OKIDO BARRIERஐ கடந்தேன்.

18

குறுகிய ABUMIZURI மலைப்பாதையின் வழி SHIROSHI கோட்டையைக் கடந்து KASASHIMA மாகாணத்திற்குள் நுழைந்தோம். LORD SANEKATAவின் சமாதிக்கு வழி கேட்டோம், SEI SHONAGON எனும் பெண் கவிஞரின் நாடுகடத்தப்பட்ட கவிக் காதலர் அவர். குன்றருகே அமைந்த DOSOJIN ஆலயத்தில் மினோவா கஸஷிமா கிராமங்களைக் கடந்த பின் வலது புறம் திரும்பும் படி சொல்லப்பட்டோம். SAIGYOவின் கவிதையில் சொல்லப்பட்டது போலவே சேற்றுப் புல்லில் மறைந்த்திருந்தது. மே மாத மழை தடத்தை சேறாக்கிவிட்டிருந்தது. நாங்கள் நின்றுவிட்டோம், உடல்சோர்வில், களைத்துப்போய், தூரத்தில் பொருத்தமான பெயரிடப்பட்ட இரு கிராம்ங்களைக் கண்டபடி : மழையாடைக் கிராமம், குடைத்தீவு.

கஸஷிமா எங்கே?
மழைக்காலத்தில் தொலைந்து
சேறாகிக் கிடக்கும் சாலையில்

IWANUMAவில் இரவைக் கழித்தோம்.



19

Takekumaவில் அமைந்த பிரசித்தி பெற்ற பைன் மரங்களால் பெரிதும் கவரப்பட்டேன், அதன் இரு பிறவுற்ற தண்டுகளும் வெகு காலம் முன் போலவே இக்கணமும். கவித்துறவி Noin நினைவிலெழுந்தார். அவர் வந்து காணும் முன்பே, LORD FUJIWARANOL TAKAYOSHI ஒரு பாலம் அமைக்க இம்மரங்களை வெட்டி அகற்றினார். Noin அவ்விடம் அடைந்த போது எழுதினார் "பிரசித்தி பெற்ற அப்பைன் மரங்களின் ஒரு தடமுமில்லை". பலமுறை வெட்டப்பட்டு மீண்டும் வளர்ந்து நிற்கும் இம்மரங்கள், ஆயிரமாண்டுகளின் நினைவுச்சின்னமாக நின்றிருக்கிறது, கற்பனைக்கெட்டாத முழுமையுடன். கவிஞர் Kyohaku நான் கிளம்பும்போது ஒரு கவிதை எழுதி என்னிடம் கொடுத்தார்:

நினைவில்கொள்
என் குருவிடம் காண்பித்துவிடு
பிரசித்தமான Takekuma பைன் மரங்களை
ஓ.. வடக்கின் செர்ரி மலர்களே!

அதற்கு இப்போது நான் பதிலளிக்கிறேன்:

செர்ரி மலர்ந்த காலத்திலிருந்து
பிளந்த பைன் மரம் காண ஏக்கமுற்றேன்
மூன்று நெடும் மாதங்கள்
கடந்துவிட்டது








அணுக்களுக்கு
இடையே

அண்டங்களுக்கு
இடையே

ஏதுமில்லாததொரு
தூரம்

தூரங்களுக்கு இடையே
ஆங்காங்கே
மற்றெல்லாம்

Friday, July 24, 2020

காணாத கண்களின்
கனவுகள்
கண்டு கொண்ட
விழிகளின் நிறைவு
நிறைவின் நுனியில்
மீண்டும்
துளிர்க்கும்
கனவு
கனவின் கரையில்லாத
வெளிகள்

ஒற்றைச் சிறு உடல்

Thursday, July 23, 2020

பசுமையின் இடறலாய்
வாழ் சுழற்றி நிற்கும்
எருது
போயிற்று
ஒன்றிலிருந்து
இரு மலைக்கு
அப்பால்
அதற்குள்
ஆயிரமாண்டுகளை
சு வா சி த் து விட்டது
மலை

Wednesday, July 22, 2020

ஆயிரம் ஒளிகளை
ஆயிரம் பட்டாம்பூச்சிகளென
சுமந்து
நிற்கும்
மலர்வெளி மலையில்
மானொன்று
நீர் அருந்த
சிற்றோடை
நோக்கிச் செல்கிறது
மலையின் ஆழ் கண்கள்
கண்டுகொண்டே இருக்கிறது
தன்னில் பெருகும்
ஆயிரம்
ஆயிரம்
உயிர்நுட்பஙகளை

Monday, July 20, 2020

தூரத்து மலையின்
எருதின்
தடங்கள்
மட்டும் கிடக்கும்
சரிவில்
பூத்திருக்கிறது
மலர்கள்
புலரியின் தங்கப்பறவைகளும்
அந்திப்பறவையின் ஆயிரம்
வண்ணங்களும்
காலம்காலமாய்
பறக்கிறது
மலரின்
தனிநிலத்தின் மேல்
மொத்த  மலையும்
எழுவதை
விளிம்பு நின்று
பார்த்த எருதொன்று
திரும்பிற்று
மலையின்
அன்றாடங்களுக்கு

Sunday, July 19, 2020

மலையெழுந்து
விண்ணோக்கி
சுட்டும் விரலென
மலையுச்சி மரம்
உடைந்து பிளந்து
எழுந்து விரிந்து
சரிந்து
ஆழ்ந்து
விரிந்திருக்கும்
மலைப்பெருநிலம்
திறந்த வாயெனப்
பள்ளத்தாக்குகள்
பெரு மிருகமென
பாறைகள்
யாரும் நடாத விதைகள்
ஆயிரம் ஆயிரம்
விருட்சங்களாய்
தொடுக்காத மலர்கள்
சரம் சரம் கோடிகளாய்
நிலவெழ
பூமியின் மூடிய கண்கள்
உடையாத தனிமை
அலையாத அமைதி
சலனம்
பின்
சாந்தம்
ஓம் ஓம் ஓம்



Saturday, July 18, 2020

மலையின்
ஆழுறக்கம்
கலைந்து
மெல்லக்
கண் திறக்க
ஆயிரம் பறவைகளுடன்
எழுந்தது சூரியன்
மொத்த மலைகளும்
உச்சாடன ஒளியுடன்
சலனமின்றி அசைகிறது
இருளென வழிந்த
மலைநதி
இடறி விழுந்தது
கதிரின் சுழிக்குள்
நகரும் பிரம்மாண்டங்களின்
முன்
கூப்பி நிற்க
இருப்பது
இரு கைகள் மட்டும்

Friday, July 17, 2020

இரவு
தன் கைகளால்
கடைசி ஒளியையும்
துடைக்கும்
அம்மலையில்
ஒரு கிரகமன
தனித்து
கான் மிதக்கும் கோயில்
அகல் ஏற்றி
கண் மூடி அமர்கிறார்
காற்றும் இலைகளும்
நிலவும் கானும்
மட்டுமே பேசின
அங்கு

Thursday, July 16, 2020

மழையில்
பறவையைத்
துரத்திச் சென்ற
 குழந்தை
திரும்பி வந்தது
உடலெல்லாம்
பறவையாக

Tuesday, July 14, 2020

விருட்சங்கள்
சூழ்ந்து நோக்க
காற்று
அள்ள முனைய
தூரத்து
வான் நோக்கி
சலனமறுத்து
நின்றவளின்
சொற்பெருவெளியில்
விழுந்தது
அமிர்தத்தின்
முதல் சொட்டு

Monday, July 13, 2020

பறத்தல்

தூரமே வான்


புள்ளொன்று
சிறு துளியென
சொட்டிக் கொண்டிருந்தது
கடலின்
தூரத்துள்
மழையின்
மௌனம்
ஆயிரம் காலகளில்
நிலமெங்கும்
நடக்கிறது

கோடையில் பிரவேசித்த
பசும்மழையில்
பாறைகள்
ஊறிக்கிடக்கின்றன

ஒரு சுடரை
ஏற்றி
அதனருகிலேயே
களிக்கிறேன்
இந்த முழு
மழைக்காலத்தை

Sunday, July 12, 2020

கோடிப் பாதம்பதித்து
சிகையின் இழைகள்
ஆடித்திரிய
மண்மேல்
ஆரோகணித்தது

ஆதிப்பெருவெளியின்
தீராக் கணமொன்றில்
கணம் கூடிக் கனத்த
கூரையென்றான
இலையொன்று
இளகிற்று
சிறுகூட்டின்
பறவைகளுக்கு
ஸபரிசமானது
மழை

சாலை

தடங்கள் எஞ்சும்
தூரத்தை
கடந்து
தூரமொன்று
நம்
தடங்கள் ஏதுமற்றது

Saturday, July 11, 2020

உயிரழிதல்

ஒளியற்ற
இவ்விரவில்
நீ
தீப்பெட்டியை
உரசுகிறாய்
கைகால் உதைத்து
உடல்சிலுப்பி
உன் கைகளில்
உயிர்பெறுகிறது
சிறிய காலை

உதயத்தின் மலைவிளிம்பென
மலையில் ஒளிரும்
விளக்கென
உன் மூக்குத்தி

சற்றும் அசையாதே
சற்றும் உன் கைகளை
உயர்த்தாதே
இவ்வளவுதான்
இந்த உயிர்
கடக்கும் தூரம்
கட்டிடத்தின் உச்சி முனையில்
சிறு குருவி ஒன்று
இறகு துடிக்க
கால்கள் அடிமாற
தயாராகிறது

கிரகங்கள் உலவும்
பெருவெளியில்
பாய
ஓனானைப்
போல்
ஓடி மறைகின்றன
மணற்வெளியில்
அசையும்
வரை
புலனாவதில்லை
அவற்றின் இருப்பு

Thursday, July 9, 2020

மிகை

இருப்பது
ஒரு கோப்பை
தாகம்

அருளப்பட்டது
ஒரு கோப்பை
நீர்

மற்றதெல்லாம்

Monday, July 6, 2020

அன்பின் பொருட்டு

கூத்தாடி அலைவதும்
கூடிச் சிரிப்பதும்
தோள் பற்றி அழுவதும்
கண்ணீருடன் கரம் விடுப்பதும்
மற்றவர் நினைவில் உழல்வதும்
தேடி தூரங்கள் செல்வதும்
பரிசுகள் பகிர்வதும்
முத்தங்களில் திளைப்பதும்
ஊடலின் எல்லை சோதிப்பதும்
கரம் குலுக்கிப் பிரிவதும்
காலத்தை வெறுப்பதும்
விதியை சபிப்பதும்
இறையை நினைப்பதும்
சிரிப்பதும்
அழுவதும்
காமுறுவதும்
சினப்பதும்
குமைவதும்
உழல்வதும்
கரைவதும்
திடமாவதும்
நெகிழ்வதும்
உடைதலும்
விழுதலும்
மீண்டெழுதலும்
நிறைவதும்
அழிவதும்
எல்லாம்
எல்லாம்
எல்லாம்


Saturday, July 4, 2020

மொழிபெயர்ப்பு - குளிர் மலைக் கவிதைகள்

இந்நகரத்தில்
ஒரு பெண்,

அணிந்த மென்நகைகள்
காற்றில் இசைக்கிறது

மலரொன்றில்
கிளியுடன் விளையாடுகிறாள்

நிலவொளியில்
அவள் இசைத்தவை
காலத்தில் அலையாடுகிறது

சிறு நளினத்திற்கு
பல்லாயிரம் பார்வையாளர்கள்,

இதுபோல் நீடிப்பதில்லை எதுவும்:
மலரின் அழகு முகம்
உரைபனியின் தீண்டலை
தாங்குவதில்லை

- ஹான் ஷான்

Friday, July 3, 2020

ஒளியின் கனவு

உன் காலடி
நிலத்தில்
ஊன்றவும்
துலக்கமானது
எங்கள் இருள்

மொழிபெயர்ப்பு - குளிர் மலைக்கவிதைகள்

என் கவிதைகளின் முன்-
மூட்டாள்கள்
 புரியாமையால் முகம்சுழிக்கிறார்கள்,

சாமாணியர்  யோசித்து
ஆழமாக உச்சரிக்கிறார்கள்,

ஒரு ரிஷியின்
முகமோ
புன்னகைையில் மலர்கிறது

ஆனால் மகத்தான 'யாங் ஸ்யூ'
மாயத்தைப் புரிந்துகொண்டுவிட்டார்
அவ்விளம்பெண்ணை
பார்த்த கணமே

ஹான் ஷான்

Thursday, July 2, 2020

மொழிபெயர்ப்பு - குளிர் மலைக்கவிதைகள்

எத்தனை ஆயிரம் வருடங்கள்
இந்த குளிர் மலை வாசத்தில்

சாத்தியங்களையும் மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு,
இம்மரங்களினூடே
என்னை ஒளித்துக்கொண்டேன்,

அமைந்து
நோக்கி
நிறைந்தேன்

யாருமற்ற மலைவிளிம்பில்
வெண்மேகங்கள் மட்டும்.
மென்புல்‌ படுக்கை,
நீலவான் கூரை,
தலைசாய்க்க பாறை
ஆனந்தம்
 உயிர்ப்பு.

சொர்க்கமும் பூமியும் பார்த்துக்கொள்ளட்டும்
மாற்றங்களின் ஆடலை


- ஹான் ஷான்


Tuesday, June 30, 2020

மொழிபெயர்ப்பு- குளிர் மலைக்கவிதைகள்

சிவந்த மேகங்களில் அமுது படைக்கும் ஒருவன்;
அவன் இல்லத்தில்
கூச்சல்கள் இல்லை

காலங்கள் வெவ்வேறல்ல
கோடையைப்போலவே இலையுதிரும்

இருண்ட பள்ளத்தாக்கின் நீர்த்தடம் காலத்தை அளக்கிறது

பைன் மரங்களின் பெருமூச்சு

அங்கு அரை நாள் தியானத்தில் அமர்ந்துவிடு
நீங்கி மறையும்
நூறு இலையுதிர் காலத்தின் சோகம்

- ஹான் ஷான்

Friday, June 26, 2020

ஆழம்

வான் நீந்தும்
வலசைப்
புற்கூட்டம்

உயிர் உயிர்
எனத் ததும்பும்
ஆழி

பெருநீலமும் விட்டு
விரிநீலம் தொட எழுந்த
கடலின்
பேருயிரொன்று
மீண்டும்
ஆழமைந்தது

நீலம் தோற்றம்
ஆழங்கள்
எல்லையற்றவை
என
சிறகசைத்தன
மீன்கள்

Wednesday, June 24, 2020

உச்சி மரத்தின்
நுனியில்
தளிரென
ஒரு புள்
அலகேந்திய
பழமென
நிலவு

கிரகங்களை
அலகேந்திப்
பறக்கும்
சிறகுகளின்
காற்று மோத
தாவிற்று
கிரகங்கள்
மிதக்கும் கடலில்

Sunday, June 21, 2020

நீ இல்லாத தூரம்
இப்புல்வெளியின் விரிவு
ஏரிக் கனவுகளின் தவிப்பு
மாட்டின் மணிச்சத்தம்
வெகு தூரம் உலவும் அந்தியின் மௌனம்
காற்று தவித்தலையும் ஓசை
மரங்களின் பெருமூச்சில் விழியமையும் இலைகளின் விண்நோக்கு
இருளிலாழும் மலைகளின் நிழல்
அந்தியின் இறுதி இசையாய்
புள் ஒன்று

Saturday, June 20, 2020

சொல்லின்
அர்த்தம்

சொல்லின்
கோபம்

சொல்லின்
கீழ்மை

சொல்லின்
மகிழ்வு

சொல்லின்
அழகு

சொல்லின்
எரி

சொல்லின்
ஏகாந்தம்

எல்லாமறுத்து

சொல்லின்
சலனம்

சொல்லின்
மௌனம்

சொல்லின்
சொல்லின்மை

எஞ்சியது
சொல்

Wednesday, June 17, 2020

வேர்கள்
அவ்வளவு
உறுதியாய்
நிலம் பற்றியிழுத்தும்
மலையுச்சி
மரங்கள்
விண்ணோக்கியே
கைநீட்டுகின்றன

அலையும்
காற்று அறியும்
மரநுனிவிரலின்
ஓயா
தாகத்தை

Tuesday, June 16, 2020

வேர்
கொள்ளும்
அமுதுமெல்லாம்
விண்ணோக்கியே
ஏக
தென்னை
ஏனோ
தன் பார்வையை
பூமியிலேயே
நாட்டியுள்ளது
அருகமைந்த
குளத்தில்
ஒளிர்கிறது
நட்சத்திரங்கள்

Monday, June 15, 2020

துவங்கிய
கோலத்தை
புள்ளிகளுடன்
நிறுத்திவிட்டு
உள்சென்றாய்

கோலப்புள்ளிகளும்
புல்நுனி அமர்ந்த
பனிப்புள்ளிகளும்
ஒன்றையொன்று
உசாவியறிந்தன

பின் கதைத்தன
தன்னைப்
படைத்த
கரங்களைப்பற்றி

Saturday, April 25, 2020

SHOSHA - ISSAC B SINGER


வாழ்க்கை துயரமானது அர்த்தமற்றது எனப் புலம்ப யாருக்கேனும் நியாயம் இருக்கிறதென்றால் அது ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ஷோஷா நாவலின் கதாபாத்திரங்களுக்கே. இரண்டு உலகப் போருக்கு இடையே நிகழும் கதை. போலந்தில் வாழும் யூதர்களே பெரும்பான்மை கதாபாத்திரங்கள். ஹிட்லரின் நாஜிப் படை வரப்போகிறது கொன்று குவிக்க. இதற்கிடையே கட்டற்ற உறவுகள், தற்கொலை பற்றிய சிந்தனைகள், தற்கொலை அனைத்தும் வந்து போகிறது. இவர்களுக்கு இருத்தலியல் சிக்கல் வருவதில் ஆச்சர்யமில்லைதான். இப்போது காப்காவின் 'அந்நியன்' நாவலின் பாத்திரம் பால்கனியில் அமர்ந்துகொண்டு வாழ்க்கையை வெறுப்பதும்,  என்னைக் காதலிப்பாயா என உருகும் காதலியிடம் 'அதெல்லாம் கேட்காதே உன்னோடு இருப்பேன் அவ்வளவுதான்' என்பதும் ஏன் எனும் கேள்வியை எழுப்புகிறது.

நாவல் ஒரு காலகட்டத்தை அதன் பல சிக்கல்களைச் சொல்லிச் செல்கிறது. யூதர்களின் பழமைவாதிகளும் நவீன சிந்தனையுடன் எழும் ஒரு புது கூட்டாமுமாய் வாழும் காலம். ஹிட்லர் மெல்ல வளர்ந்து வரும் காலம், சோவியத் ரஷ்யாவில் அகோவென்றெழுந்த யுகப் புரட்சி, தன் காம்ரேடுக்களையே கொன்று குவிக்கத்துவங்கிவிட்ட காலம். இப்படியான ஒரு காலகட்டமே நாவலுக்கு இருண்மையைத் தந்துவிடுகிறது. மேலும் இருண்மையோடு கதாபாத்திரங்கள்.

"அரேல்"தான் Protagonist. அவன்தான் கதைசொல்லியும். அரேல் ஒரு மரபான  போலந்தில் வாழும் யூத குடும்பத்தைச் சார்ந்த சிறுவன். அவன் அப்பா ஒரு Rabbi (மதகுரு). இவர்கள் பக்கத்துவீட்டுப்பெண் ஷோஷா. அரேல் தன் வயது சிறூவர்களுடன் ஒட்டாமல் போகிறான், அவர்களும் இவனை சேர்த்துக்கொள்வதில்லை. அரேல் ஷோஷாவிடம் வருகிறான். அவன் கதைசொல்ல சொல்ல ஷோஷா தன் விழிகள் விரிய கேட்டுக்கொண்டிருக்கிறாள். இருவரும் நண்பர்கள். அரேலுக்கு ஷோஷாவை விட்டால் கதை சொல்லவோ, ஷோஷாவிற்கு அரேலை விட்டால் கதை கேட்கவோ ஆளில்லை. ஆனால் குடும்பங்கள் வேறு வேறு இடங்களுக்கு நகர தொடர்பற்று போகிறார்கள் அரேலும் ஷோஷாவும்.

அரேல் வார்ஷாவிலேயே வசித்திருந்தாலும் ஷோஷாவை அடுத்து ஒரு பதினைந்து வருடங்களுக்கு சந்திகவேயில்லை. இதற்கிடையில் அரேல் மரபு சார்கல்வியுடையவனாக இருப்பினும் நவீன சிந்தனைகளுடன் உருவாகிறான். எழுத்தாளனகும் முயற்சியுடன் ட்ராமாக்கள் எழுதுகிறான். அரேலின் காதல் மேலும் சில உறவுகள் என கதை நீள்கிறது. வாசிப்பின் போது சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இடமொன்று. அரேல் ஒரு நாடகம் எழுதி இயக்க பெரும்பணம் பெருகிறான். நல்ல வசிப்பிடமும் உணவுமாய் வாழ்கையில் அரேல் வாழ்க்கை பற்றிய பெருந்துயரோ, தற்கொலை உணர்வோ இல்லதவனாய் இருக்கிறான். ஆனால் நாவலின் பின்பகுதியில் கையில் காசு இல்லாமல் போகும் நேரத்தில் அரேல் தற்கொலைச் சிந்தனைகளைச் சென்றடைகிறான். ஏன் ஒருவன் வாழ்க்கையை வெறுக்கிறான் எனும் கேள்வி எழுகிறது நம்மில்.

 நாஜிப் படை வந்துகொண்டிருக்கிறது. உறவுகள் தன் வழக்கமான பாதையிலிருந்து சிதறுகின்றன. கணவனுக்குத் தெரிந்து தெரியாமலும் மனைவிக்குத் தெரிந்தும் தெரியாமலும் உடலுறவுகள். நிறைய கதாபாத்திரங்கள் தற்கொலைப் பற்றிப் பேசுகிறார்கள். மனிதவரலாற்றின் இருண்ட நிகழ்வான யூதப் படுகொலை ராட்சத மிருகமாய் மெல்ல ஊர்ந்து வருகையில் இப்பாத்திரங்கள் கொள்ளும் பிறழ்வு எல்லாமே நியாயமாகப் படுகிறது. இப்படியான ஒரு நேரத்தில் அரேல் மீண்டும் ஷோஷாவைச் சந்திக்கிறான். அதே தெருவில் வேறொரு வீட்டில் தன் அம்மவுடன் வசித்து வருகிறாள் ஷோஷா. ஷோஷா உடல் வளர்த்தி குன்றியவளாய் இன்னும் ஒரு பத்து வயதுச் சிறுமியின் தோற்றத்துடன் இருக்கிறாள். அரேல் ஷோஷாவைப் பார்த்ததுமே தன்னுள் என்றுமிருந்துவந்த அவள்மீதான காதலை உணர்ந்துகொள்கிறான். 

தினமும் ஷோஷாவைச் சந்திக்கிறான் அரேல். இதற்கிடையில் அரேலை தன்னுடன் அமெரிக்கா வந்துவிடும்படியும் தன்னை மணந்துகொள்ளும் படியும் அழைக்கிறாள் BETTY. அரேள் மறுத்துவிடுகிறான். ஷோஷாவை மணந்துகொள்கிறான். இவளை மணந்த்துகொண்டாள் உன் எழுத்துக்கனவு பாழாகும், நாடகங்கள் இயக்க முடியாது உன்னைப் பிடித்த பீடையாக இருப்பாள் இவள், மேலும் ஜெர்ன்மன் படை வருகிறது, இவளுக்காக இங்கிருந்து சாகப்போகிறாயா? இப்படியான பல கேள்விகள் அரேலுக்கு முன் வைக்கப்படுகின்றன.  ஆனால் அரேலுக்கு தான் ஷோஷாவைக் காதலிப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது,

ஷோஷா  நோய்மையால் சோர்ந்து கண் இடுங்கி நம் உள்ளங்கைகளில் ஒண்டிக்கொள்ளும் ஒரு பறவைக் குஞ்சு. ஷோஷா உடலளவில் பத்து வயது சிறுமி என்றாலும் , மனதளவில் மேலும் குழந்தை. அரேலும் ஷோஷாவும் செல்லும் ஒரு மாலை நடையில், ஷோஷா கேட்கிறாள்

"அரேல் நீ என்னை காதலிக்கிறாயா?"

"ஆம் ஷோஷா.. ரொம்பவும்"

"நீ இத்தனை நாள் இல்லாத போது இல்லாமலிருந்தாய். இப்போது நீ வந்துவிட்டாய், இனி என்னை நீங்கினால் நான் ஆயிரம் முறைச் சாவேன்"

"உன்னை நீங்கவே மாட்டேன் ஷோஷா"

"பார் அரேல், வானம் சிவப்பாக இருக்கிறது, நெருப்பைப் போல. இந்த கட்டிடங்களில் யார் வாழ்கிறார்கள் அரேல்?"

"பணக்காரர்கள்"

"யூதர்களா?"

"இல்லை"

"அரேல் எனக்கு பயமாக இருக்கிறது, என்னை வீட்டு அழைத்துச் செல்"

"பயப்படாதே. இறந்து போவதென்றானால் நாம் ஒன்றாக இறந்து போவோம்"

"ஒரு பையனையும் பெண்ணையும் ஒன்றாக புதைக்க அனுமதிப்பார்களா"

நான் பதில் சொல்லவில்லை. ஷோஷா என்  தோள்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு நடந்தாள்.

நாஜிப்படை உள்நுழைய இன்னும் ஓரிரவே இருக்கிறது. அரேல் வார்ஷாவின் கடைத்தெரு ஒன்று உயிர்ப்போடு இயங்குவதை மலைத்துப் போய் பார்க்கிறான். அவ்விடம் ஒரு பிணக்காடாக மாறயிருக்கும் இடம். நாஜிப் படை உள்நுழைந்த மறுநாள், அரேல் ஷோஷா நடந்தே ரஷ்யா நோக்கிப் புறப்படுகிறார்கள். இரண்டாவது நாளில் ஷோஷா அரேலிடம் "அரேல் என்னால் முடியவில்லை" என்றபடி தரையில் அமர்கிறாள். பின் இறந்து போகிறாள். வார் அன்ட் பீஸ் நாவலில் லிட்டில் ப்ரின்ஸஸ் எனும் பாத்திரம் குழந்தையை பிரசவித்த பின் இறந்து போகும். "நான் என்ன செய்தேன்.. ஏனிப்படி" எனும் கேள்வியாக அவள் முகம் உரைந்திருப்பதாக தல்ஸ்தோய் எழுதியிருப்பார். ஷோஷா அதே போலொரு கேள்வியை எழுப்புகிறாள்.

அரேல் ஏன் ஷோஷாவிற்காக போலாந்திலேயே இருந்தான். BETTYஐ மணந்துகொண்டு அமெரிக்கா போயிருக்கலாமே? ஏன்? வாழ்வின் இருட்பெருக்கினிடையே சிறு ஒளிக்கிற்றாக இருப்பது உறவுகள்தானா?

இத்தனை நிகழ்ந்த பின்னும் வாழ்க்கை நகர்கிறது. அரேல் ரஷ்யா சென்று பின் சீனா சென்று, அமெரிக்க ஜெனரல் ஒருவரை மணந்து கொண்டுவிட்ட bettyயின் உதவியுடன் அமெரிக்கா செல்கிறான். BETTY ஏதோ ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாளில் தற்கொலை செய்து கொண்டுவிடுகிறாள். நாவலில் இன்னும் சில பாத்திரங்கள் தற்கொலை செய்து கொண்டுவிடுகிறார்கள். தற்கொலைக்கு முன் அனைவரும் தன் அன்பானவர்களிடம் உதவிக்கு ஆதரவுக்கு கரம் நீட்டுகிறார்கள். அன்றாடத்தின் சராசரிப் பெருக்கில் அக்கரங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

அரேல் ஷோஷாவால் மீண்டுவிடுகிறான். 


திசையின்மையின் நகைப்பு


வுடி ஆலன் என்றால் நினைவில் வருவது மோனோலாக், இருத்தலியல் கேள்வி, உறவுகளின் சிக்கல், அது பற்றிய நகைப்பு, ஜாஸ் இசை, பதற்றமாக அலையும் ஹைப்போகான்ட்ரியாக், முகமூடிகளை  - உறவின் முகமூடிகள், அறிவுஜீவிகளின் முகமூடிகள் - கலைத்தபின் எழும் சிரிப்பு, மரணம். வுடி ஆலனின் படங்கள்  ஒன்றே போல் இருப்பதான தோற்றத்தை அளிப்பவை. ஏன்னெனில் அவை இருப்பு பற்றிய கேள்வி மனித உறவுகள் பற்றிய கேள்வி ஆகிய இரண்டே கேள்விகளை மையமிடுபவை. 1977ல் வெளியான ANNIE HALL இதே இரண்டு கேள்விகளையே மையமிடுகிறது.

 படம் ALVY SINGER கதாபாத்திரத்தின் மோனோலாகுடன் துவங்குகிறது 

"There is an old joke. Two elderly woman are at a catskill mountain restaurant. One of them says "the food at this place is terrible". And the other says "and such small portions." 

That's essentially how i feel about life: Full of loneliness, Misery, suffering and unhappiness.. and its all over much too quickly" 

இதே alvy singer கதாபாத்திரம் சிறுவனாக இருக்கும் போது:

ALVY : THE universe is expanding. If Universe is everything and it is expanding , someday it will break apart and that will be the end of everything. there's is no point in what we do.

Alvy's Mother :  Why is that your business ? What universe has got to do with your homework?

இப்படியாக இருப்பு பற்றிய கேள்விகளுடன், வாழ்கை துக்கமயமானது எனும் பார்வையுடன் வுடி ஆலனின் பாத்திரங்கள் உறவுகளை நோக்கிச் செல்கின்றன. ALVY singer தான் டென்னீஸ் விளையாடும் இடத்தில் Annie Hallஐ சந்திக்கிறார். இரண்டு முறை மணமுறிவு செய்துகொண்ட Alvy singerக்கும் Annie hallக்கும் இடையே காதல் மலர்கிறது. இப்போது யோசிக்கையில் புலனாகிறது, வுடி ஆலன் உருவாக்கும் பாத்திரங்கள் எல்லாம் தனியர்கள், ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித் தீவாகத் திரிகிறார்கள். மற்றோருவருக்காக எந்த சமரசத்தையும் செய்ய முடியாதவர்கள். Annie hall பாடகியாகும் வாய்ப்புக்காக லாஸ் ஏஞ்சலஸ் செல்கிறாள், Alvy Singer New York பைத்தியம். Alvy singerக்கு லாஸ் ஏஞ்ச்சலஸ் செல்லவோ Annieக்கு நியூ ஆர்க் திரும்பவோ விருப்பமில்லை.   யாரும் எதையும் சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லை. பிரிந்துவிடுகிறார்கள். 

பின் பல வருடம் கழித்து Annie நியூ ஆர்க் திரும்புகிறாள். Alvyயும் Annieயும் சந்தித்துக்கொள்கிறார்கள். உறவின் கடக்க முடியாத தூரத்தின் முன் நின்றுகொண்டு ஒரு மோனோலாக் வருகிறது..

"I thought of that Old joke. This guy goes to psychiatrist and says "Doc My brother's crazy. He thinks he is chicken." The Doctor says "Why dont you turn him in?". He replies "I would but i need the eggs" Well thats pretty much how i feel about relationships. They are totally irrational crazy and absurd. But we keep going through it coz most of us needs the eggs."

மொத்தத்தில் இப்படத்தில் தொனிப்பது ஒரு திசையின்மை. வாழ்வின் அர்த்தமின்மை குறித்த அதன் துக்கம் குறித்த தவிப்புக்கிடையே உறவுகளின் அர்த்தமற்ற ஆடல்களுக்கிடையே திசையற்றுப்போன உணர்வு. உறவுகளின் வாழ்வின் இந்த திசையின்மையை மெல்ல ஜாஸ் இசையுடன், தெரிக்கும் நகைச்சுவையுடன் சிரிக்கச் செய்து சொல்லிச்செல்வதே வுடி ஆலனின் கலை.

Sunday, April 5, 2020

திசையறிதல்


ஒரு கலை வடிவம் ஆன்மீகமான அல்லது அடிப்படை தத்துவக் கேள்விகளை கையாள்கையில் அதன் உச்சமான சாத்தியத்தை எட்டுகிறது. ஏனெனில் இக்கேள்விகளை ஒட்டியே வாழ்வின் ஒரு உச்சமான சாத்தியம் நிகழ்கிறது. ஒரு நிறைவான வாழ்விற்கு இக்கேள்விகளைக் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. 

டெரென்ஸ் மாலிக் இசையையும், வழிந்தோடும் காட்சிகளையும், தியான நிலையில் ஒலிக்கும் மோனக்குரல் நரேஷனையும் கொண்டு "நீ எங்கிருக்கிறாய்?" "இதெல்லாம் என்ன?" எனும் கேள்விக்குள் நுழைந்து விடுகிறார். 

கதை ஒரு மரணத்தில் துவங்குகிறது. தத்துவார்தமான வாழ்வின் அர்த்தம் குறித்த கேள்விகளும் மரணத்தில்தான் துவங்குகிறது. கணவன் மனைவி மூன்று பிள்ளைகள். மிஸ்டர் ஓ ப்ரயன் மிஸஸ் ஓ ப்ரயன் குடும்பம். மிஸஸ் ஓ ப்ரயனின் குரல் சொல்கிறது, இரண்டு பாதைகள் உள்ளன வாழ்வில். இயற்கையின் வழி, அருளின் வழி. இயற்கையின் வழியில் போட்டிகள் உண்டு, காயங்கள் உண்டு, வெற்றிகளும் மகிழ்வும் தோல்வியும் உளைச்சலும் உண்டு. அருளின் பாதையில் அன்பு பிரதானமாகிறது மன்னிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நம்மைச் சூழ்ந்துள்ள பெரெழிலுக்காக மனம் நன்றியால் நிறைந்துள்ளது.  மனதில் காட்சிப்படுதிக்கொள்ளுங்கள் ஏறுமுகமான பிசிரில்லாத இசையுடன், தியானிக்கும் குரலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன. அக்குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை தன் பத்தொன்பதாவது வயதில் இறந்து விடுகிறான். இசையும் நடிப்பும் பிரிவின் வலி நோக்கிச் செல்கிறது. மிஸஸ் ஓ ப்ரயனின் குரலில் "இறைவா நீ எங்கிருக்கிறாய்?" என்பதோடு சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத மாறியான ஒரு இருவது நிமிடம் வருகிறது. பிரபஞ்சத்தின் தோற்றத்தை காட்டுகிறார்,  நெருப்புப் பிழம்பாயிருந்து மெல்லக் கனிந்து பூமி உருவாகிறது, முதல் உயிர் தோன்றுகிறது, டைனோஸ்ர்கள் காண்பிக்கப்படுகின்றன, அதிலும் ஒரு டைனோஸர் அடிபட்டுக்கிடக்கும் குட்டி டைனோஸார் ஒன்றை வேட்டையாடும் நோக்குடன் வந்துவிட்டு அதன் தலையை காலால் தரையோடு இருமுறை அழுத்திவிட்டு செல்லும் காட்சி உயிரின் பரிணாமத்தோடு கருணையின் பரிணாமத்தையும் காண்பிக்கிறார். இந்த இசையுடன் கூடிய இருவது நிமிடங்கள் திகைப்பில் நம்மை ஆழ்த்திச் செல்கிறது. ஒரு மரணத்தின் பின் அது எழுப்பிய ஒரு கேள்வியிலிருந்து பிரபஞ்சத்தின் உருவாக்கம் அதன் பரிணாமம் நோக்கிச் செல்கிறார். கார்ல் ஸெகனின் "தி காஸ்மோஸ்" இவ்வரிகளுடன் துவங்குகிறது "The Universe is all that is ever was ever will be". நாமும் பிரபஞ்ச்சத்தின் துளிதான் இங்கிருக்கும் அனைத்தும் பிரபஞ்சம்தான் எனில், இவ்வேதனை மரணம் தரும் வேதனையின் வேர் என்ன, நம் உறவுகளின் அதன் சிக்கல்களின் நம் ஆணவங்களின் அது புண்படும் வலிகளின் தீர்வுதான் என்ன? 

படம் நேராக அன்றாடத்தின் சிக்கல்களுக்குள் இறங்குகிறது. மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஓ ப்ரனுயனுக்கு முதல் குழந்தை பிறக்கிறது. எத்தனை அழகான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மிஸ்டர் ப்ரயன் சிசுவின் பாதங்களை தன் கைகளுக்குள் ஏந்தியிருக்கும் காட்சி எவ்வளவு அழகானது கவித்துவமானது. 
மிஸ்டர் ப்ரயன் வாழ்வை அதன் சிக்கல்களை அதன் தோல்விகளை, புற உலகின் நிதர்சனமற்ற கோரிக்கைகளை எதிர்கொண்டு தோற்று வென்று சென்று, அவமானங்களை சுமந்து பிறருக்கு அவமானங்களை கொடுத்து.... இம்மதிரியான ஒரு வாழ்க்கைக்கு தன் பிள்ளைகளை தயார் செய்கிறார். மிஸஸ் ப்ரயன் அன்பின் பாதையை முன் வைப்பவள். அவள் சொற்களில்தான் தீர்வு இருக்கும் திசையை காட்டும் வெளிச்சம் இருக்கிறது. 

                                                      

பிரபஞ்ச உருவாக்கத்தின் வியப்பிலிருந்த்து அன்றாட சிக்கலின் தளத்திற்கு வெகு லகுவாக படம் பயணித்து வருகிறது. அக்குடும்பத்தின் மூத்த குழந்தை ஷியான் பென். ஒரு நாற்பது வயது மனிதனாய் தான் வேலை பார்க்கும் வானுயர் கட்டிடங்களிலும் அலைகழிக்கும் கேள்விகளுடன் சுற்றித்திரிகிறான்.

ஒரு பாறைக்குன்றில் ஒரு நிலை (கதவு நிலை) மட்டும் நிற்கிறது. ஒரு பெண் வழிநடத்தி முன் செல்கிறாள். அவன் அந்நிலையைக் கடக்கவும் அவன் (ஷியான் பென் கதாபாத்திரம்) ஒரு கடற்கரையில் நிற்கிறான். அங்கு மனிதர்கள் ஆசுமாசமாய் நடந்தலைகிறார்கள். அங்கு தன் இறந்த தம்பியைப் பார்க்கிறது ஷியான் பென் கதாபாத்திரம். மிஸ்டர் ப்ரயன் இருக்கிறார். மிஸஸ் ப்ரையன் இறந்த தன் குழந்தையை அள்ளி அணைத்து கண்ணீராகிறாள். எல்லோரிலும் மாறாத புன்னகை. அது அன்பின் நிலம். அந்நிலத்தில் அப்பெருங்கடல் முன் மண்டியிடுகிறது அக்கதாபாத்திரம். மிஸ்டர் ப்ரையன் தன் முதல் குழந்தையின் பாதத்தை தன் கைகளில் ஏந்தும் போது ஒரு நெகிழ்வு தோன்றூமே அப்படியான நெகிழ்வால் மட்டும் ஆன அன்பின் நிலம் அது என்பது என் பார்வை. நம் அன்றாடத்தின் அத்தனை சிக்கலுக்கும் அங்குதான் தீர்வு. 

                                   

படத்தின் முதல் காட்சியாக வருவது வெறும் கருப்புத் திரை. அதில் மெல்ல ஒரு சிவப்பு நிற ஒளிப்பிழம்பு தோன்றுகிறது. படத்தில் நான்கைந்து இடங்களிலும் படத்தின் இறுதிக் காட்சியாகவும் தோன்றும்  இச்சிவப்பு ஒளிப்பிழம்பு படைப்புச் சக்தியின் உருவகம். இதைப் பொலொரு கற்பனை திரையில் காட்டப்படுவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.

                                 

பிரபஞ்சத்தின் பரிணாமத்தை உயிர்களின் பரிணாமத்தை காட்சியாக்கி, அவற்றின் மாயத்தை சொல்லும் வகையில் படைப்புச்சக்தியை ஒரு சுடர் போன்ற சிவப்பு நிற படிமமாக்கி, அங்கிருந்து நம் அன்றாடத்தின் உறவின் சிக்கல்களுக்குள் நுழைந்து, அதற்கு அன்பினை இயற்கையை வியக்கும் ஒரு தரிசனத்தை தீர்வாக முன்வைத்து இப்படியான ஒரு பயணத்தை நிகழ்த்தும் படத்தை நான் திரையில் பார்ப்பது இதுவே முதல்முறை. திரையில் நிகழ்வதும் இதுவே முதல்முறை.

Friday, April 3, 2020

பேரெழில் முன்

கடல்முன் நிற்பது எல்லோரையும்போல் எனக்கும் பிடித்த ஒன்று. நீர்ப்பெருவிரிவு மெல்ல உள்நுழைந்து ஏதோ ஒன்றை இலகச் செய்யும். மலைகளும் அப்படித்தான். பல்லத்தாக்குள், பெரும்பசுமை, பேருந்து ஜன்னல் வழி காட்சியாகும் தூரத்து அருவி எல்லாம் நம்மை திகைக்க வைக்கிறது. சங்க இலக்கியம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது இயற்கை வர்ணனைகள். கம்பன் கார்கால வருகையை ஐம்பதற்கும் மேலான பாடல்களில் சித்தரிக்கிறான். சினிமாவில் நீங்கள் பார்த்த ஏதோ ஒரு இயற்கை காட்சி உங்கள் மனம் நீங்காமல் இப்பொழுதும் இருக்கும். எதற்கு இயற்கை மீண்டும் மீண்டும் பாடப்படுகிற்து? அது நம்மை சிறியதாக்குகிறது என்பதே பதிலாகப் படுகிறது. அல்லது நம் சிறு வாழ்க்கையை மீறி நிற்கும் பிரம்மாண்டம் இயற்கை.

டெரென்ஸ் மாலிக்கின் "தி ஹிட்டட் லைப்" உண்மை நிகழ்வை ஒற்றி உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த Franz என்ற ஒரு மனிதன் மட்டும் போருக்கு செல்வதில்லை, போருக்கு நிதி உதவி செய்வதில்லை என முடிவெடுக்கிறான்.  ஊர் அவனை விலக்குகிறது. உடன் வாழும் மனைவியும் குழந்தைகளும் அம்மாவும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனாலும் உறுதியாய் நிற்கிறான் franz. தன் தொழிலான விவசாயத்தை தன் குடும்பத்துடன் செய்து கொண்டு இக்காலகட்டத்தை கடந்து விட எண்ணுகிறான். ஆனால் போருக்கு அவனை அழைத்து ஆணை வருகிறது. முதலில் தடுமாற்றம். பின் அவனாக சிறை தேடி சென்றுவிடுகிறான். "Hail Hitler" என்ற வாக்கியத்தை சொல்ல மறுக்கிறான். பின் பெர்லினில் உள்ள சிறைக்கு அனுப்பப்படுகிறான். அவனுக்கென்று அமர்த்தப்பட்ட லாயர் சொல்கிறார் " நீ போருக்குச்  செல்ல வேண்டாம். மருத்துவமனையில் வார்ட் பாயாக செயல்படு போதும்". Franz கேட்கிறான் "நான் ஹிட்லருக்கு பணிய வேண்டுமா. என் விசுவாசத்தை ஹிட்லருக்கு அளிப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டுமா?". "ஆம்" அப்படியெனில் முடியாது என மறுத்துவிடுகிறான்.

FRANZக்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது "நீ ஒருவன் இப்படி செய்வதால் போர் நின்றுவிடாது. உன்னைப்பற்றி யாருக்கும் தெரியாது. யாரும் உன்னை ஏரிட்டு நோக்கப்பபோவதில்லை" .. இப்படி ஆயிரம் சொன்னாலும் FRANZ உறுதியாய் இருந்துவிடுகிறான். ஒரு சாமனியனின் மன உறுதி அவன் நம்பிக்கை. உலகின் தீமைக்கு எதிராய் தன் எதிர்ப்பை சற்றும் தளர்த்திகொள்ள முடியாத அவன் உறுதி அவன் குடும்பத்தை பெறும் இடருக்குள்ளாக்குகிறது. ஆனாலும் மறுத்துவிடுகிறான். அவனுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீள்கிறது. சுருக்கி காட்சிகளை அடக்கினால் ஒன்றரை மணிநேரத்தில் சொல்லிவிடக்கூடிய கதைதான். அப்படியெனில் கூடுதலாக டெரென்ஸ் மாலிக் செய்வதென்ன?
இயற்கையை காட்சிப்படுத்துகிறார். முதல் 45 நிமிடங்க்கள்  ப்ரான்ஸும் அவன் குடும்பமும் அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதும் காட்சிப்படுத்தப்படுகிறது. அது ஒரு மலைக்கிராமம். இவ்வளவு எழிலுக்கு மத்தியில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. பைன்மரங்க்கள் அடர்ந்த மலைகள். ஆயிரம் நெளிவுகளுடன் ஓடும் நதி. விரிந்த்து கிடக்கும் புல்வெளி. FRANZ உம் அவன் மனைவி  FANY  உம் ஒரு காட்சியில் புல் வெளியில் அணைத்துகொண்டு படுத்திருப்பார்கள். பின்புலத்தில் மலை. அவர்கள் லேசாக சரிய கேமிரா அவர்களுடன் சரியவும் அவர்கள் கைகள் கோர்த்திருப்பது வானமும் மலையும் பின்புலமாக அமைய காட்சிப்படுதப்பட்டிருக்கும். அத்தனை அழகான காட்சி. அதே நேரம் அவர்கள் உறவின் அழகையும் ஆழத்தையும் சொல்லிவிடுகிறது.

டெரென்ஸ் மாலிக்கின் காட்சி மொழி  இசை, மொழி, காட்சி இவற்றை பினைத்து உருவாக்கும் கனவு போன்ற ஓட்டத்தை உடையது.  சினிமா என்ற கலைவடிவின் பெரும்பலம் அது மற்ற எல்லா கலைவடிவங்களையும்  பயன்படுத்திகொள்ளலாம் என்பதுதான். அதனை முழுமையாக செய்கிறார் டெரென்ஸ் மாலிக். படம் முழுவதும் தொடர் இருப்பாக் இசை ஒழுகிச்செல்கிரது. பின்னணிக்குரல்வழி உணர்வை வெளிப்படுத்தும் பாணி தொடர்ந்து டெரென்ஸ் மாலிக் பயன்படுத்துவது. கவித்துவமான வரிகள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. படம் துவங்குவதே "நான் நினைத்திருந்தேன் நம் கூட்டை ஓர் மரத்தின் உச்சியில் கட்டிக்கொள்ளலாம் என. அங்கிருந்து நாம் மலைகளை நோக்கி பறந்து செல்லலாம் என", இவ்வழகான வரிகளுடன். ஒழுகிச் செல்லும் இசை, கவித்துவமான வரிகள், இயற்கை இவையெல்லாம் பிணைந்துகொள்கையில் டெரென்ஸ் மாலிக்கின் படங்கள் க்ளாசிக் அனுபத்தை எட்டுகின்றன.

கதை, மானுடம் இருள் நோக்கிச் செல்ல அதனை எதிர்த்து நிற்கும் தனி மனித  உறுதி பற்றியது. ஆனால் இயற்கை படம் முழுதும் காட்சிப்படுத்தப்பட்டு படம் முடிவடைகையில் இவ்வளவு ஆட்டத்தினையும் மௌன சாட்சியாக இயற்கை பார்த்திருப்பதாக தோன்றிவிடுகிறது. படம் முடிவை  எட்டும் போது "எத்தனை சிறிய ஆட்டம் நம்முடையது" எனும் வரி மனதில் ஓடிகொண்டே இருந்தது. ஒட்டு மொத்த மானுடத்தின் ஆட்டத்தினை சிறியதாக்கும் இயற்கையும், மானுடத்தின் சிறு ஆட்டத்தில் ஒளியை தொடர்ந்த்து செல்லும் ஒருவனின் உறுதியும், ஒருவர் ஆழத்தை மற்றவர் புரிந்துகொண்ட அன்பும் டெரென்ஸ் மாலிக்கின் "THE HIDDEN Life"  என தொகுத்துக்கொள்கிறேன்.

(பின் குறிப்பு : இரண்டு வகை படங்கள். ஒன்று, பார்வையாளனின் எந்தப் பிரயத்தனத்தையும் கோராமல் அவனை உள்ளிழுத்துக்கொள்பவை. இரண்டு, படைப்பாளி தன் போக்கில் தான் கண்ட உண்மையை முன்வைப்பதையே நோக்கமாகக் கொண்டு பார்வையாளனை ஈர்ப்பதை இரண்டாம் பட்சமாகக் கொண்டவை. THE HIDDEN LIFE இரண்டாம் வகை. )

Saturday, February 8, 2020

சிறுபொழுது

அந்தியும்
புலரியும்
இரவும்
தன் வண்ணங்களை
பரிமாறிக்கொண்டிருக்கும்
இப்பெரும்பொழுதுகளில்
என் சிறுபொழுதினை
என் சிற்றில்லத்தில்
சிறு தோட்டம் செய்து
மலர் கொண்டு
மலர் தொடுத்து
விண்ணின் வண்ணங்களே
மலராகி வந்ததாய்
கதைத்து
மலர்கள்
கண்ணீர் விடுகையிலும்
மணம் வீசுவதை
ஒரு மகத்தான உண்மையாய்க்
கண்டு
மலர்கள் தேன் கொள்வது
மலர்களின் விழைவாலல்ல
அவை விண்ணுக்கு
ஒப்புக் கொடுத்ததன் விளைவென்று
உணர்ந்து
மலர் அசைய
மலரோடு அசைந்து
ஒரு மலராவதிலேயே
கழித்துவிடப்போகிறேன்
என் சிறுபொழுதினை

Sunday, February 2, 2020

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம். (மொழிபெயர்ப்பு)

"கொடுத்தல் பற்றி"

பின் ஒரு செல்வந்தன் கொடுத்தல் பற்றி எங்களிடம் பேசுங்கள் என்றான். அவன் பதிலுறுத்தான்:

உங்கள் உடமைகளிலிருந்த்து கொடுக்கையில் மிகக் கொஞ்சமே கொடுக்கிறீர்கள்.
எப்பொழுது உங்களையே கொடுக்குறீர்களோ அப்பொழுதே உண்மையாகக் கொடுக்கிறீர்கள்.
ஏனெனில் உங்கள் உடமையானது, நாளைக்கான தேவை பற்றிய பயத்தால் பாதுகாக்கப்படுவதன்றி பிறிதென்ன?
நாளை, நாளையானது புனித நகரத்தின் பயணிகளை பின்தொடர்ந்துகொண்டு தன் எலும்புகளை தடமற்ற வழிகளில் புதைத்துவைக்கும் அதி எச்சரிக்கை கொண்ட நாய்க்கு கொண்டுவரப்போவது என்ன?
மேலும் தேவையின் பயம் என்பதென்ன? தேவையே பயம் அல்லவா?
உங்கள் கிணறு நிறைந்திருக்கையிலும் தாகித்திருக்கிறீர்களெனில், அந்த அஞ்சத்தக்க தாகம் தணியப்போவதேயில்லை அல்லவா?
இருப்பவற்றிலிருந்து மிகக்கொஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அங்கீகாரத்திற்காகக் கொடுக்கிறார்கள், அவர்கள் கரந்திருக்கும் விழைவு அவர்கள் பரிசுகளை முழுமையற்றதாக்குகிறது.
இருப்பவை சிறிதெனினும் முழுவதையும் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்களே வாழ்வின் மீது நம்பிக்கையுடையவர்கள், வாழ்வின் புதையல், இவர்களின் கலன் குறைவதேயில்லை.
மகிழ்ச்சியாக கொடுப்பவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு மகிழ்ச்சியே வெகுமதியாகிறது.
வலியிலும் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்,அவர்களுக்கு  அவ்வலியே முழுக்காட்டு.
கொடுக்கையில் வலியறியாது , இன்பம் விழையாது, நன்மைசெய்வதான பிரக்ஞையற்று கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் பல்லத்தாக்கின் மலர்கள் தன் மணத்தை பெருவெளியில் பரப்புவது போல் கொடுக்கிறார்கள்.
இவர்களின் கரம் வழியே கடவுள் பேசுகிறார், இவர்கள் கண்களின் பின்னிருந்து அவர் பூமியின் மீது புன்னகைக்கிறார்.

கேட்கையில் கொடுத்தல் நன்று, கேட்கப்படாதபோது புரிதலால் கொடுத்தல் சிறந்தது.
கொடையாளனின் கரங்களுக்கு இரப்பவனைக் கண்டடைவதில் இன்பம், கொடுப்பதைக்காட்டிலும்.
நீங்கள் எதனையாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டுமா என்ன?
உங்களிடம் இருக்கும் அனைத்தும் ஒருநாள் கொடுக்கப்பட்டுவிடும்.
ஆக இக்கணமே கொடுங்கள், கொடையின் பருவம் உங்களுடையதாகட்டும், உங்கள் சந்ததியினருடையதாகாமல்.

நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள் "நான் கொடுப்பேன், தகுதியானவனுக்கு மட்டும்" என்று.
உங்கள் தோட்டத்தின் மலர்கள் அப்படிச் சொல்வதில்லை, உங்கள் கொட்டிலின் ஆவினங்கள் அப்படிச் சொல்வதில்லை.
அவை வாழ்வதற்காக கொடுக்கின்றன, ஏனெனில் தக்கவைத்தல் அழிவாகும்.
இரவையும் பகலையும் பெறத் தகுதியுள்ள எவ்வொருவனும் உங்களிடமிருக்கும் அனைத்திற்கும் தகுதிபடைத்தவனே.
வாழ்வெனும் கடலிலிருந்து குடிக்கும் தகுதி பெற்ற ஒருவன் உங்கள் சிற்றோடையிலிருந்துப் பருகத் தகுதிபெற்றவனே.
பெற்றுக்கொள்வதான தொண்டில் இருக்கும் தைரியத்தை தன்னம்பிக்கையைக் காட்டிலும் பெரிய விரிநிலம் உண்டா என்ன?
அவர்கள் உங்கள் முன் தங்கள் அகம் திறந்து, மானஅவமானங்களின் திரை அகற்றி நின்றிருக்க, அவர்களின் தகுதியை வெட்கமின்றி எடைபோட நீங்கள்
யார்?
முதலில் நீங்கள் கொடையாளனாக, கொடுத்தலின் கருவியாக தகுதியானவரா எனப் பாருங்கள்.
உண்மை யாதெனில், வாழ்கை வாழ்க்கைக்கு கொடுத்துக்கொள்கிறது, கொடையாளனாக கனவு கண்டுகொண்டிருக்கும் நீங்கள் வெறும் சாட்சி மட்டுமே.

பெறுவர்களே - நீங்கள் எல்லோரும் பெறுபவர்கள்தான் - நன்றியறிதலின் சிறு பலுவையும் கருதாதீர்கள், ஏனெனில் கொடையாளன் மீதும் உங்கள் மீதும் நுகத்தடியின் பலுவை சுமத்துபவராவீர்கள்.
மாறாக கொடையாளனோடு சேர்ந்து மேலெழுங்கள், பரிசுகளே சிறகுகளாக.
உங்கள் கடன்களின் மீது அதிகவனம் கொள்வதென்பது, பூமியைத் தாயாகவும் இறைவனைத் தந்தையாகவும் விரித்த கட்டற்ற மனதின் கருணையை சந்தேகிப்பதாகும்.



கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம் (மொழிபெயர்ப்பு)

"குழந்தைகள் பற்றி"

குழந்தையொன்றை தன் மார்போடு ஏந்தியிருந்த பெண் கூறினாள், எங்களிடம் குழந்தைகளைப் பற்றிப் பேசுங்கள்.
அவர் சொன்னார்:
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.
வாழ்வு தன் மீதே கொண்ட பிரியத்தின் குழந்தைகள் அவர்கள்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறர்கள். உங்களிலிருந்தல்ல.
அவர்கள் உங்களோடு இருக்கலாம், ஆனால் உங்கள் உடமையல்ல.

அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள் உங்கள் எண்ணங்களை அல்ல,
ஏனெனில் அவர்களுக்கு சுயமான எண்ணங்கள் உண்டு,
அவர்கள் உடலை குடிவைத்திருக்கலாம் ஆனால் அவர்கள் ஆன்மாவை அல்ல,
ஏனெனில் அவர்கள் ஆன்மா உங்களால் கனவிலும் அணுக முடியாத நாளையில் குடிகொண்டுள்ளது
குழந்தைகள் போலாக பிரயத்தனப்படுங்கள் ஆனால் அவர்களை உங்களைப் போலாக்கிவிடாதீர்கள்
ஏனெனில் வாழ்வின் ஒழுக்கு பின்னோக்கியதல்ல, நேற்றில் நிலைத்திருப்பதல்ல,
உங்கள் குழந்தைகள் உயிருள்ள அம்புகளாக முன்செலுத்தப்படுகின்றன, நீங்க்கள் வில்லாகிறீர்கள்
வில்லாளன் இலக்காக முடிவின்மையை நோக்குகிறான், உங்களை தன் வலிகொண்டமட்டும் வளைக்கிறான், தன் அம்புகள் வேகமாகவும் தொலைவும் செல்லட்டுமென்று
வில்லாளியின் கைகளில் வளைக்கப்படுவது இன்பமென்றாகுக
ஏனெனில் பறக்கும் அன்புகளை காதலிப்பது போலவே, நிலையான வில்லினையும் காதலிக்கிறான் அவன்

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம்

"திருமணம் பற்றி"

பின் அல்மித்ரா பேசினான், குருவே திருணம் பற்றி?

அவர் பதிலலித்தார்:

நீங்கள் ஒன்றாகவே பிறந்தீர்கள், நீங்கள் மேலும் மேலும் ஒன்றாகவே இருங்கள்.
மரணத்தின் வெண்மையான சிறகுகள் உங்கள் நாட்களை சிதறடிக்கையிலும் ஒன்றாகவே இருங்கள்.
ஆம், கடவுளின் மௌனமான நினைவிலும் ஒன்றாகவே இருபீர்களாகுக.
ஆனால் உங்களிடையே இடைவெளி இருக்கட்டும்.
அதனில் சுவர்க்கத்தின் காற்று நடனம் புரியட்டும்.

ஒருவரை ஒருவர் காதலியுங்கள், காதலால் ஒருவரை ஒருவர் பிணைத்துக்கொள்ளாதீர்கள்:
உங்கள் ஆன்மாவின் கரைகளினிடையே அசையும் கடல்  இருக்கட்டும்.
ஒருவரின் கோப்பையை மற்றோருவர் நிரப்புங்கள் ஆனால் ஒரு கோப்பையில் அருந்தாதீர்கள்.
உங்கள் பண்டங்களை ஒருவருக்கொருவர் கொடுங்கள், ஆனால் உண்ணாதிருங்கள் ஒரே பண்டத்தை.
ஒன்றாக  ஆடுங்கள் பாடுங்கள் மகிழ்ந்திருங்கள், ஆனால் விடுங்கள் ஒருவரை ஒருவர் தனிமையிலும்.
கிட்டாரின் தந்திகள் தனித்திருந்தாலும் அவை ஒரே இசையில் அதிர்கின்றன.
உங்கள் இதயத்தை கொடுங்கள், மற்றவர் பிணைத்துவைப்பதற்காக அல்ல.
ஏனெனில் வாழ்வின் கரங்கள் மட்டுமே உங்கள் இதயங்களை ஏந்தலாம்.
ஒன்றாக நில்லுங்கள், ஆனால் ரொம்பவும் நெருக்கமாக அல்ல.
ஏனெனில் கோபுரங்கள் தனித்தனியாகவே நிற்கின்றன,
மேலும் பெருவிருட்சங்கள் ஒன்றன் நிழலில் மற்றொன்று வளர்வதில்லை. 

Saturday, February 1, 2020

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம்.

"காதல் பற்றி"

பின் அல்மித்ரா கூறினான்,"எங்களிடம் காதலைப் பற்றி பேசுங்கள்."
அவன் தலையை உயர்த்தினான். மக்களை நோக்கினான். அசைவின்மை அவர்கள் மேல் படர்ந்தது. உன்னதமான குரலில் அவன் கூறினான்:

காதல் உங்களை அழைக்கையில் அவனை பின்தொடருங்கள்.
அவன் வழிகள் கடினமானதாக மேடானதாக இருப்பினும்.
அவனுடைய சிறகுகள் உங்களை அணைக்கையில் உங்களை ஒப்புக்கொடுங்கள்.
அவன் சிறகுகளில் கரந்திருக்கும் வாள் உங்களை காயப்படுத்தினாலும்.
மேலும் அவன் உங்களோடு பேசுகையில் அவனை நம்புங்கள்.
வடக்குக் காற்று தோட்டத்தை அழித்துப்போடுவது போல், அவன் குரல் உங்களை குலைத்துப்போட்டாலும்.

அவன் கிரீடம் சூட்டும் அதே neram உங்களை சிலுவையில்அரையக்கூடும். உங்களை வளர்த்துவிடும் செயலில் உங்கள் கிளைகளை கழித்துவிடக்கூடும்.

உங்கள் உயரத்திற்கு படர்ந்து சூரியனில் திளைக்கும் மென்கிளைகளை வருடக்கூடும்,
அவனே உங்கள் வேர்நோக்கி ஆழ்ந்து, மண்ணினுடான பிணைப்பை உலுக்கக்கூடும்.

சோளக்க்திர்களை திரட்டி எடுப்பது போல் அவன் உங்களை தன்னோடு திரட்டி எடுக்கிறான்.
கதிரடித்து உங்களை நிர்வானமாக்கட்டும்.
உங்களை சலித்து உங்களை உமியிலிருந்து பிரித்தெடுக்கட்டும்.
உங்களை அரைத்து மேலும் மென்மையாக்கட்டும்.
உங்களை அரைக்கட்டும், நீங்கள் வளையும் மென்மையடையும்வரை.
பின் உங்களை தன் புனித நெருப்பில் அவியாக்குவான், கடவுளின் புனித விருந்தில் புனித உணவாவீர்கள்.

இவையனைத்தையும் காதல் உங்களுக்கு செய்விக்கும். அதனால் உங்கள் இதயத்தின் இரகசியங்களை அறிவீர்கள். அதன் ஒளியில் வாழ்வின் இதயத்தில் ஒரு சிறுபகுதியாவீர்கள்.

ஆனால் பயத்தினால் காதலின் அமைதியையும் இன்பத்தையும் மட்டும் நாடுபவராக இருந்தால்,
உங்கள் நிர்வானத்தை மறைத்துக்கொண்டு கதிரடிக்கும் களத்தை விட்டு நீங்குங்கள்,
பருவங்களில்லா உலகத்துக்குள். அங்கு நீங்கள் சிரிக்கலாம் முழுமையின்றி, அழலாம் கண்ணீரின் முழுமையறியாமல்.

காதல் தன்னையன்றி பிறிதொன்றை கொடுப்பதில்லை. தன்னிடமின்றி பிறிதொன்றிடம் எடுத்துக்கொள்வதுமில்லை.
காதல் உடைமைப்படுத்துவதில்லை, உடையாக்கப்படுவதுமில்லை.
காதல் காதலால் நிறைவுறுகிறது.

நீங்கள் காதலிக்கையில் "கடவுள் என் இதயத்தில் இருக்கிறார்" என்று கூறாதீர்கள். மாறாக "நான் கடவுளின் இதயத்தில் இருக்கிறேன்" என்று உரையுங்கள்.
உங்களால் காதலின் தடத்தை மாற்றமுடியும் என்று எண்ணாதீர்கள், காதலுக்கு நீங்கள் தகுதியானவராக இருப்பின் அது உங்கள் தடத்தை நிர்னயிக்கும்.

காதல் விழைவுகளற்றது தன்னில் தான் நிறைவதைத்தவிர.
ஆனால் நீங்கள் காதலித்தால் உங்களுக்கு விழைவுகள் இருக்குமானால் அவை இவையாக இருக்கட்டும்:

உருகவும், இரவின் கீதத்தை பாடும் சிற்றோடை போலாகவும்.
அதிமென்மையின் வலியை உணரவும்.
காதல் பற்றிய உங்கள் புரிதலால் புண்படவும்.
விழைந்து சந்தோஷமாக இரத்தம் சிந்தவும்.
புலரியில் சிறகுமுளைத்த இதயத்துடன் எழுந்து, காதலால் ஆன மற்றோரு தினத்திற்கு நன்றி செலுத்தவும்..
மதியப்பொழுதில் ஓய்வெடுத்து காதலின் உன்மத்தத்தை தியானிக்கவும்.
அந்தியில் நன்றியுடன் இல்லம் திரும்பவும்.
பின் இதயத்தில் அன்பானவர்களுக்கான வேண்டுதலோடு, உதடுகளில் வாழ்த்தின் கீதத்தோடு உறங்கச்செல்லவும்.

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...