Friday, August 24, 2018

வார்த்தைகளுக்கு அப்பால்


"காட்டுயிர்களைப் பாருங்கள் அவை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் , காற்றின் நாற்றம் சொல்லிக் கொடுக்கும், பூமியுடன் பேசுங்கள் அது சொல்லிக் கொடுக்கும், கடலின் மீன்கள் சொல்லிக் கொடுக்கும்"- இந்த பைபிள் வரிகளுடன் துவங்குகிறது கார்ல் சபீனாவின் "Beyond words" புத்தகம். கவிதை வார்த்தைகளைக் கொண்டு வார்த்தைகளைக் கடந்த உணர்வுகளை சொல்கிறது. அப்படித்தான் எவ்வொரு கலைவடிவமும். நம் அறிவின் எல்லையைத் தாண்டி நம் ஆழ்மனதை மீட்டும் ஒவ்வொன்றும் வார்த்தைகளைக் கடந்தவைதான். மலை, கடல், அள்ளி அணைக்கும் காற்றுப் பெருங்கைகள், பெரு மழை, நதி இப்படி எத்தனையோ. வரைபடத்தில் உள்ள நதிகள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் நம் உடல் நரம்புகளை நினைவுருத்தியிருக்கும். ஆம் பூமியின் நரம்புகள் அவை. பிரபஞ்சம் அறியமுடியாத விரிவை கொண்டிருப்பது போல் தான் அணுவும். நம் நரம்புகளும், நதிகளும் சிருஷ்டி எனும் ஒரு புள்ளியில் பேதமற்று ஒன்றாகிறது. "ஒரு புல்லின் நுனியில் காட்டைக் காண்கிறேன்" எனும் தேவதேவன் வரிகள் நினைவுக்கு வருகிறது. புடவியின் விரிவை அதன் அழகை வியப்பை ஒரு நுண்ணியிரில் கண்டுவிடத்தான் முடியும். எந்த ஒரு உயிரை அறிய முற்பட்டாலும் நாம் தத்துவார்த்த அறிதல் விரிவடைதாக நான் உணர்கிறேன். அப்படியான ஒரு விரிவடைதலையும், சமகாலத்தில் மக்களுக்கு தேவையான மனமாற்றத்தையும், பல கவித்துவான உணர்வுகளையும் தரக்கூடியது "beyond words".

மூன்று பகுதிகள்- ஒன்று யானைகள்,இரண்டு ஓநாய்கள், மூன்று Killer whales(டால்பின் வகை). ஆசிரியர் இவ்வுயிர்களின் இயற்கை வாழ்விடங்களில் சென்று திரட்டிய நேரடி அனுபவங்களால் ஆனது இந்நூல்.

யானைகள் - இன்றும் மணிச்சப்தம் அனைவரையும் வாசலுக்கு இழுக்க வல்லது. கோயிலகளில் யானைக்கென தனிக்கூட்டம் நிற்பதுண்டு. ஆனால் இப்படி நம்மிடம் அடிமைப்பட்டு கிடக்கும் இப்பேருயிர்களின் கதையென்ன? மனிதன் பூமியில் தோன்றுவதற்கு பல்லாண்டு முன் தோன்றியவை யானைகள். 'ஈஸோவாஸ்யம் இதம் ஸர்வம்" என்றால் நம்க்கு முன்னரே ஈசன் குடிகொண்டது இவ்வுயிர்களில்‌. எத்தனைப் பேருரு, எத்தனை சக்தி. உங்கள் சக நண்பனைத் தூக்கி உங்கள் தோளில் அமர்த்த முயலுங்கள்...பின் உணர முடியும் மானுடரை எந்த சிரமுமில்லாமல் தூக்கிச் செல்லும் அதன் பேராற்றல். எவ்வுயிரைப் போலவும் இன்னும் எத்தனையோ ஆச்சர்யங்கள் அடங்கியது இவ்வுயிரும். அவற்றைத் தொட்டுத்திறக்கிறது புத்தகத்தின் முதல் பகுதி.

புத்தகம் மானுட மைய நோக்கை (Anthropocentric view) மறுப்பதுடன் துவங்குகிறது. மானுடனை நோக்கி சுருங்கும் தோறும் காலத்தின் சிறு துணுக்கைமட்டும் ஆக்ரமித்திருக்கும் ஒரு உயிரை மட்டும் அறிபவர் ஆகிறோம். கொட்டிக் கிடக்கும் கோடி ஆச்சர்யங்களை இழக்கிறோம். யானைகளின் வாழ்வை நமக்கு அறிமுகப்படுத்தும்தோறும் யானை எனும் உயிர் இயற்கையில் புடவியில் மானுடனுக்கு இணையான ஒரு இடத்தைக் கொள்வதை நாம் உணர்கிறோம். எந்த விதத்திலும் மனிதன் மேலானவன் அல்ல...

யானைகள் குடும்பங்களாக வாழ்கின்றன. பிடியே (பெண் யானை) குடும்பத்தை வழிநடத்துகிறது. மரபணுக்கள் வழி கடத்தப்படும் பாரம்பரிய அறிவு அவற்றிற்கு உண்டு - எங்கு நீர் கிடைக்கும், எக்காலத்தில் எங்கு புலம் பெயர வெண்டும் போன்றவை. நாற்பது வயதை கடந்த ஒரு பிடி தலைமை கொள்கிறது. ஒரு நாளுக்கு 50 கிலோமீட்டருக்கும் மேலாக நடக்கின்றன. வரட்சி காலங்களில் சுமார் 650 மைலுக்கும் மேலாக புலம்பெயர்கின்றன. ஒரு ஆண்டின் வெவ்வேறு காலங்களில் களிற்றிற்கு (ஆண் யானை) இனச்சேர்க்கை காலம் வருகிறது. அப்பொழுது அவற்றின் நெற்றியிலிருந்து மஸ்து எனும் திரவம் வடிகிறது. அவை அக்காலத்தில் உக்கிரம்‌ கொள்கின்றன. அவை ஒவ்வொரு யானைக் குடும்பங்களாகச் சென்று 'estrus' பிடிக்களை தேடுகின்றன. 'Estrus'- கருமுட்டை தயாராக இருக்கும் நான்கு நாட்களைக் குறிக்கும். அப்படியான பிடிக்கள் மஸ்து வடியும் யானையை வரவேற்கின்றன. கர்ப காலம் 24 மாதம். அன்னையாக 24 மாதம். குட்டி பிறந்தவுடன் நிற்க சிரமப்படுகிறது. அன்னை தன் துதிக்கையால் உதவுகிறது. மனிதரைப் போலவே குறைந்த பட்ச மூளை செயல்பாட்டுடன் யானைக்கன்றுகள் பிறக்கின்றன. இவை போன்ற தகவல்கள் புத்தகத்தின் பிரதான நோக்கத்துடன் பின்னப்பட்டுள்ளது. பிரதான நோக்கம்? மிருகங்களின் வாழ்க்கையை மனித வாழ்க்கை யுடன் ஒப்பிடுவதோ, மனிதவாழ்க்கையை மிருக வாழ்க்கையுடன் ஒப்பிடுவதோ அல்ல.. மிருகங்களின் வாழ்க்கையை அப்படியே கண்கானிப்பது. அதன் வழி அவற்றின் உணர்வுகள் - அவற்றிடையான உரையாடல் -மிருக வாழ்க்கையை வெறுமனே மிருக வாழ்க்கையாக காண்பதே நோக்கம். ஆனால் மிருகங்களை அறியும் தோறும் நம்மைப்பற்றி நாம் மேலும் அறிவதை தவிர்க்க முடியவில்லை.

யானைக் கன்றுகளை ஒரு யானைக்குடும்பத்தின் பல யானையள் பேணுகின்றன. ஒரு தாய் தன் குழந்தைமீது கொண்டிருப்பது எதுவாயினும் அதுவே யானைகளுக்கும் பொறுந்தும். யானைகளிடையே உரையாடல்கள் நிகழ்கின்றன. ஓயாத பிலிறல், கணக்கும் ஒலிகள், விளையாட்டு, மலையிருவத்து பேருயிரை அணுகி அறியும் வாய்ப்பை புத்தகம் தருகிறது.

ஓநாய்களும் நம்மைப்போலவே. ஒரு ஆல்பா ஆண் ஒரு ஆல்பா பெண் அவை ஈனும் குட்டிகள்..இது ஒரு ஓநாய்க் குடும்பம். தன்னிலும் இரண்டு மடங்கு எடை கொண்ட உயிர்களை ஓநாய்கள் வேட்டையாடுகின்றன. தனி ஒரு ஓநாயால் இது முடியாது. அவை குழு வேட்டையில் ஈடுபடுகின்றன. ஆல்பா ஆண் தலைமை வகிக்கிறது. பெரும்பாலும் முடிவுகள் ஆல்பா பெண் ஓநாயுடையது. பல தலைமை ஓநாய்களைப் பற்றி புத்தகம் சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட ஓநாய் வீரன். ஆனால் எந்த வேற்று குடும்பத்து ஓநாயையும் கொன்றதில்லை என்பதால் பெருவீரனாகிறது. அவற்றிற்கு பிரிவு உணடு. உக்கிரமான மோதல்கள் உண்டு. இவற்றை நீண்ட கால கண்கானிப்ப்பின் அடிப்படையில் நமக்கு காட்சியாக்குகிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் வெகு முக்கியமான பகுதியாக நான் நினைப்பதை சுருங்கச் சொல்ல முயல்கிறேன். பல்லாயிரம் ஆண்டு முன் ஓநாய்கள் மனித இருப்புகளை நெருங்குகின்றன. ஒரு சில ஓநாய்கள் மெல்ல மனிதன் தரும் வேட்டை மீதத்தை உண்டு வாழத்துவங்கின்றன. நாளடைவில் முழுமையாக மனிதனுடன் வாழப்பழகி காட்டு ஓநாய்களிலிருந்து விலகி விடுகின்றன. இப்படி மனிதனிடன் ஒன்றிய ஓநாய்களிடை இனப்பெருக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் தொடரவும் வந்தவையே நாய்கள். ஓநாய்களுக்கும் நாய்களுக்கும் 'செரட்டோனின்' எனும் ஹார்மோன் சுரப்பில் வித்தியாசமுண்டு. ஒரு உயிரின் மென்மையை கூட்டுவிக்கும் இந்த ஹார்மோன் நாய்களில் அதிகமாக உண்டு. இதே வித்தியாசம் எந்த ஒரு காட்டுயிருக்கும் வீட்டுயிருக்கும் பொருந்தும். நிற்க.

ஆப்ரிக்காவில் காங்கோ நதி உருவானபோது ஒரு குறிப்பிட்ட சிம்பன்ஸிக்கள் அதன் தெற்கே ஒதுங்கிவிடுகின்றன. இந்த சிம்பஸிக்கள் பரிணாம வளர்ச்சி கொண்டு 'போனப்போஸ்' எனும் குரங்கினமாகிறது. சிம்பன்ஸிக்கள் ஓப்பீட்டளவில் வன்மையானவை. இரு ஆண் சிம்பன்ஸி சந்தித்தால் போர்தான்...சில நேரம் சாகும் வரை. ஆனால் போனபோக்கள் அப்படி இல்லை. அவற்றில் சண்டையே இல்லை. முழுதும் நட்புதான். நட்பு சில நேரம் நீண்டு, இரு போனபோ குடுமபங்கள் சந்திக்கும் போது கூட்டுக்களவி வரை செல்கிறது. மொத்தத்தில் மகிழ்ச்சியானவை. நிற்க.

மேல்சொன்ன ஓநாய்-  நாய். சிம்பன்ஸி- போனபோ. சுருங்கச்சொன்னால் காட்டுயிர் - வீட்டுயிர் பலவற்றிற்கும், 'செரட்டோனின்' எனும் ஹார்மோன் சுரப்பில் வித்தியாசமுள்ளதைக் கண்டோம். இன்னொரு வித்தியாசமுண்டு - உருவத்தில். தொய்ந்த காதுகள், உருளை முகம் என மென்மையை தோற்றத்திலும் கொள்கின்றன வீட்டுயிர்கள். ஆச்சர்யம் என்னவென்றால் 'செரட்டோனின் சுரக்க எந்த ஜீன் காரணமோ, அதே ஜீன்தான் இந்த மென்மை தோற்றத்திற்கும் காரணமாகிறது. மேலும் காட்டுயிர்களின் மூளை அளவை விடவும் பதினைந்து சதவிகிதம் சிறிய மூளையை உடையவை இந்த வீட்டுயிர்கள்.

காட்டுயிர்கள் ' domestication'க்கு உள்ளாகி வீட்டுயிர்களாக ஆகியுள்ளன. அல்லது வாழ்விட மாற்றம் உருவாக்கிய புதிய புறச்சூழலுக்கு இணங்க அவற்றின் வாழ்க்கை, உடல், தன்மை மாறியுள்ளன எனலாம். ஆசிரியர் சொல்கிறார் மனிதன் 'self- domestication' க்கு உள்ளகியிருக்கிறான் என.  வேட்டைச்சமூகமாக இருந்த மனிதன் விவசாயம் செய்ய சேர்ந்து வாழ்கின்றான். அங்கு துவங்குகிறது மாற்றம். அவனது புறச்சூழல் ஒன்றி வாழ அவனை நிர்பந்தப்படுத்துகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் மனிதனின் செரட்டோடின் அதிகமாக சுரக்கத் துவங்குகிறது. நியன்டர்தால்களின் மூளை 1500 கிராம். மனிதனின் மூளை 1350 கிராம். தோராயமாக 15சதவிகித குறைவு. ஓநாய் நாயானது போல், சிம்பன்ஸி போனலோ ஆனது போல், வேட்டை மனிதன் அறச்சார்புடையவனாய் , வன்முறையை (கூட்டு வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒன்று) வெறுப்பவனாய்  உருவாகிறான். வரலாறு நெடுக கொடுங்கோலர்கள் அகற்றப்படுகிறார்கள், கொலை கற்பழிப்பில் ஈடுவடுபவர்கள் அரசு எனும் நிறுவனத்தால் தண்டிக்கப்படுகிறார்கள்.மனிதன் இன்னும்‌பரிணாம வளர்ச்சி கொள்கிறான். இப்பகுதியின் வழி அறம் எனும் சொல் மேலும் துலக்கம் கொள்வதாக நான் உணர்கிறேன்.

புத்தக்த்தில் கவித்துமான பகுதிகள் இருப்பதாக சொன்னேன். அப்படியான ஒன்று... ஒரு ஆராய்ச்சியாளர் தென்னாப்ரிக்காவில் கடற்கறையோரக் குன்றில் நிற்கிறார். அவர் முன் கடலில் ஒரு திமிங்கிலம் அலைகிறது. அதனை கண்காணித்து நிற்கிறார். திமிங்கிலத்தில் ஒலியை கண்காணிக்கும் அவருக்கு தன் பின்னே ஒரு பிளிறல் கேட்டு திரும்புகிறார். அங்கு நிற்பது ஒரு பிடி. 50 வயது கடந்த மூதாட்டி. 'கின்ஸா' வகை யானைகளின் கடைசி உயிர்வாழ் யானை அது. அதன் பிளிறலை கேட்டு நிற்கிறார் அவர். திடிரென கடலில் திமிங்கிலத்தின் குரல் பின் யானையின் குரல். அவருக்கு தெளிவாகிறது. மனிதனுக்கு பல மில்லியன் ஆண்டு முன் தோன்றிய இனம் இவையிரண்டும். ஒரு மாபெரும் மரபணுச் சங்கிலியில் தோன்றிய இரு பேருயிர்கள். அவை பேசிக்கொள்கின்றன். இங்கு வெறும் மனிதப்பயலுக்கு என்ன வேலை என அவ்விடம் நீங்கி விடுகிறார்.

புத்தகம் மூன்று பார்வைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது- ஒன்று, மானுட மையநோக்கின் அபத்தம். மனிதனின் கூட்டு ஆணவம் உடன் வாழ் உயிர்களை போதாமைகளுடன் கூடியதாக பார்க்கச் செய்கிறது. முரண்நகை என்னவெனில் மனிதன் தோன்றும் முன் பல மில்லியன் ஆண்டு முன் தோன்றி வாழ்ந்து வருபவை அவை. மனிதனால் செய்ய முடியும் காரியங்களை செய்ய முடிவதே அறிவிற்கான அளவுகோலாக வைப்பது அபத்தம். மனிதனால் செய்ய முடிந்தவற்றை மிருகங்களால் செய்ய முடியாது. மிருகங்களுக்கு சாத்தியமான (எந்த உதவியும் இல்லாமல் கண்டம் கண்டம் புலம்பெயரும் பறவைகள்) பல மனிதனால் முடியாது. அதனதன் வாழ்க்கை சூழலில் அவையவை நிறைவுடன்.

இரண்டு, மிருகங்களைப் பற்றிய நம் அறிவு. நாம் அறிந்திருப்பது ரொம்பவும் குறைவே. ஆராய்ச்சிகள் முன்வைக்கும் அபத்தமான பல முடிவுகளை ஆசிரியர் மறுக்கிறார். உதாரணமாக மிருகங்களிடையான உரையாடலை நாம் இதுவரை சரிவர அறிய முற்படவில்லை. யானைகளின் வாழ்க்கை ஒலிகளால் ஆனவை. கில்லர் வகை திமிங்கிலங்கள் தனக்கான "SIGNATURE" ஒலிகளை உடையவை - நமக்கு பெயர் இருப்பது போல. குரங்குகளுக்கு சமீபமாகத்தான் ஒரு LEXICON உருவாக்கப்பட்டுள்ளது - 66 ஒலிகளின் அர்த்தங்கள். அவற்றின் உரையாடலுக்கு போதிய கவனம் தராதது போலவே அவற்றின் உணர்வுகளுக்கும்,  எண்ணங்களுக்கும். மிருகங்களிடையே காணக்கிடைக்கும் கருணையின் கணங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. பன்னிரண்டு யானைகளை வேட்டையாடப்படுவதிலிருந்து மீட்டு அதனுடனேயே காட்டில் வாழும் ஆராய்ச்சியாளர் இறக்கிறார். அன்றிரவே அத்தனை யானைகளும் அவ்வீட்டின் முன் கூடிவிடுகின்றன. killer whale டால்பிங்களை ஒரு படகிலிருந்து கண்கானிக்கிறார் ஆராய்ச்சியாளர். அவை வேட்டையாடுகின்றன. திடீரெனெ படகை சுற்றிக் கொள்கின்றன. காரணம் அப்படகில் ஒருவர் இறந்திருக்கிறார். படகில் இருந்தவர்களுக்கே தெரியவில்லை. அவர்கள் கறை சேரும் வரை முற்றுகையை களைக்கவில்லை அவை. கடலில் வழிதொலைந்தவர்களுக்கு டால்பின்கள் வழிகாட்டிய சம்பவங்கள் பல உள்ளன. மனித உயிரின் நோக்கம் இணப்பெருக்கம் மட்டுமா? அன்பு காதல் எல்லாம் அப்புள்ளியை நோக்கித்தானா? ஆம் என்றால் மிருகங்களுக்கும் அப்படியே. இல்லை என்றால் அதுவும் அப்படியே மிருகங்களுக்கு. 

மூன்றாவதான ஒன்றே புத்தகம் வாசகனுக்கு கடத்த முற்படும் முதன்மையான ஒன்று. மிருகங்களை மிருகங்களாக தனி உயிர்களாக பரிணாம ஏணியில் சம பயணியாக, பூமி எனும் பேரில்லத்தில் உடனுறைபவையாக  பார்க்கும் நோக்கு. அவற்றின் வாழ்வை நேரில் அவதானிக்கையில் பல ஆச்சர்யங்கள் காணக்கிடைக்கின்றன. ஆனால் நாம் கான முற்பட்டது காலம் கடந்து. "கில்லர் வேல்ஸ்" (மிகப்பெரிய டால்பின் வகை- 25 அடி நீளம், 12000 பவுன்ட் எடை) குடும்பங்களாக வாழ்கின்றன. பெண்ணே தலைமை வகிக்கிறது. யானைகளில் போல் யாரும் இனப்பெருக்கத்தோடு குடும்பத்தை பிடிந்துவிடுவதில்லை. இலப்பெருக்கத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் தாயிடம் மீள்கின்றனர். ஒரு குடும்பத்திற்கு என ஒரு அடையாள ஒலி உண்டு. பல குடும்பங்கள் சேர்ந்தால் ஒரு "பாட்"(POD). இதற்கும் ஒரு அடையாள ஒலி உண்டு. பல "பாட்"கள் சேர்ந்தால் "க்ளான்"(CLAN). பல க்ளான்கள் சேர்ந்தால் "கம்யூனிட்டி". இதற்கும் அடையாள ஒலி உண்டு. வட அமெரிக்க கண்டத்தின் மேற்கில் வடக்கு, தெற்கு என பிரிந்து இரண்டு கம்யூட்டிகள் வாழ்கின்றன. இந்த இரண்டு கம்யூனிட்டிக்கும் மரபணு அளவில் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் இவை கலப்பதிலை. வெறும் 100 யார்ட் தூரத்தில் இருந்தாலும் இரண்டு கம்யூனிட்டியும் களவியில் ஈடுபடுவதில்லை. மனிதர்களை நினைவு படுத்துகின்றனவா? இப்படி பல ஆச்சர்யங்கள். போனபோக்களைப் பற்றி முன்னரே சொல்லீருந்தேன் - சண்டையே இடாத பகிர்ந்துண்டு வாழும் அவற்றின் வாழ்வை பார்க்கையில் நம் மானுட சமூகத்தின் பெருங்கனவை வாழவதாகத்தான் தோன்றுகிறது.

அழிவின் சித்திரமொன்றும் நூலில் இடம்பெறுகிறது. லட்சக்கணக்கில் இருந்த ஆப்ரிக்க யானைகள் இன்று ஆயிரக்கணக்கில். யானைகள் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகின்றன. ஒரு ஐம்பது வயதை நெருங்கிய பெண் யானைக்கு 10அடி வரை நீளமுள்ள தந்தம் இருக்கும். ஒரு பெண் யானை (குடும்பத் தலைவி) வேட்டையாடப்பட்டால் ஒரு குடும்பமே சிதைந்துவிடும்.  காரணம் அந்த யானைக்கே புல் இருக்கும் இடம், வறட்சி காலங்களில் செல்ல வேண்டிய புலம்பெயர் இடங்கள் ஆகியவை தெரியும். அராய்ச்சி முடிவுகள் குடும்பத்தலைவி கொல்லப்படவும் குடும்பம் பெரும்பாலும் சிதைந்துவிடுவதாகக் கூறுகின்றன. அதே போல் "KILLER WHALE". சால்மன் மீன்பிடிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டன. ஐஸ்லான்ட் தேசம் அமெரிக்காவின் உதவி கோற, அமரிக்க கடற்படை சுமார் ஆறாயிரம் திமிங்கிலங்களை கொன்று குவித்தன. அத்தனைக்கும் அவற்றின் வாழ்வு பற்றி ஒன்றுமே தெரியாது. அவை கொடூரமான மீன்களாக கருதப்பட்டன. மனிதனை முழுவதுமாக முழுங்கிவிடும் கதையெல்லாம் உலவின. ஆனால் கடலில் வாழும் KILLER WHALE ஒரு மனிதனைக் கூட கொன்றது கிடையாது.எவ்வளவு அறிவீனம்? ஓநாய்கள் முழுவதுமாக வேட்டையாடப்பட்டு கனடா, யுனைட்டட் ஸ்டேட்ஸ் போன்ற தேசங்களில் துடைத்தெடுக்கப்பட்டுவிட்டன. பின் ஓநாய்கள் உண்ணும் "எல்க்"கின் எண்ணிக்கை கட்டுங்கடங்காமல் பெறுகவும் மீண்டும் ஓநாய்கள் இவ்விடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒரு மனிதனாக நம் வாழ்வு எவ்வளவுக்கு நம்மை சுற்றி உள்ளவர்களை சார்ந்தது? அப்படித்தான் மிருகங்களும். ஒட்டுமொத்த சென்னையிலும் வெறும் எண்பது பேர்தான் என்றால் என்ன ஆகும்? பல ஆயிரம் ஆண்டுகளாக சார்ந்து வாழப்பழகிய நாம் என்ன செய்வது? அது போலத்தான் என்டெஞ்சர்ட் உயிரினங்களின் வாழ்வும். ஆயிரக்கணக்கில் இருந்த KILLER WHALES இன்று வெறும் எண்பத்தொன்றுதான் எஞ்சியுள்ளது. யோசித்துப்பார்த்தால் மனிதர்களிடம் மேன்மை அளவுக்கே கீழ்மைகளும், அறிவொளி அளவிற்கே அறிவின்மையின் இருளும் உள்ளது

ஒரு புதிய பார்வைக் கோணத்தை தருவதும், இதுவரை நமகிருந்த பார்வையை உடைத்து மாற்றுவதும் ஒரு நல்ல நூலுக்கான அடையாளம் எனில் "beyond words" அப்படியான ஒன்று. (என் வரையில்) இதுவரை பரீட்சயமில்லாத ஒரு அறிவுத்துறையுடனான உரையாடலை துவக்கியுள்ளது. அறிவியலின் பகுத்தாய்வு நோக்கை முன் வைக்கும் ஒரு நூலில் அன்பும் கருணையும் விரவியுள்ளது. இத்தனை நாள் நாம் பார்ககத் தவறிய, நம்மை பற்றி நமக்கே சொல்லித்தரக் கூடிய, அழகான ஒன்றை காட்சியாக்கும் சாளரத்தை புத்தகம் திறந்துள்ளது. வார்த்தைகளற்ற வெளி இச்சாளரத்தின் வழி நமக்கு காட்சியாகட்டும்.

Monday, January 15, 2018

மலர்தலின் மௌனம்


விசுவாசமான ஏழு வருடங்களாக தன் பாஸுக்கு உழைக்கும் ஒரு மேனேஜர், அடியாள். பாஸ் தன் இளம் காதலி மீது சந்தேகமுற்று தன் அடியாளை கண்கானிக்க அனுப்புகிறார். தவறிருப்பின் இருவரையும் முடித்துவ்டும்படி கூறுகிறார். ஆனால் அடியாள் காதல் கொள்கிறான். பின் என்ன, அடி தடி... வழக்கமான ஒரு கதை "A bittersweet life" எனும் கொரியன் திரைப்படம். இது போல் பல படங்களின், நாவல்களின் கதையை ஒற்றை வரியாக சுருக்கமுடியும். சுருக்கிப்பார்த்தால் ரொம்ப சாதாரணமாத் தோன்றும். பின் எது சதாரணமான ஒன் லைனரை  நல்ல படைப்பாக மாற்றி நம்மை வெகு நாள் தொடர வைக்கிறது?

காற்றிலாடும் மூங்கில் இலைகளைக் காண்பிக்கிறது முதல் காட்சி. சீடன் குருவைக் கேட்கிறான் "அசைவது காற்றா மூங்கிலா?" என்று. சற்றும் அசையாமல் "அசைவது உன் மனமும் மூளையுமே" என்கிறார். கவித்துவமான துவக்கம். கதையை பார்த்து முடிக்கையில் மேலும் பொருள் தருவதாக மையும் இவ்வரிகள். மையக் கதாபாத்திரம் "கிம்". சற்றும் சதைப்பிடிப்பில்லாத உறுதியான உடல். தனியனாக துணிவாக தன் வாழ்வை எதிர்கொள்கிறான். சொன்னது போல் பாஸின் காதலியை கண்கானிக்கும் பணி இவனிடம் விடப்படுகிறது. பாஸ் கேட்கிறார் "யாரையாவது காதலிக்கிறாயா?" என்று. "இல்லை" எங்கிறான்."நீதான் சரியான ஆள்". 

அப்பெண்ணை சந்திக்கிறான். பாஸ் கொடுத்தனுப்பியதாக ஒரு கிப்ட். பின் அவளை கண்கானிக்கிறான். அடுத்த நாள் தன்னை இசை வகுப்புக்கு கொண்டுவிடும்படி இவனை அழைக்கிறாள் "ஹன்ஸூ" - பாஸின் காதலி பெயர். இசை வகுப்பில் விட்டுவிட்டு அவள் செல்லோ வாசிப்பதை இவன் பார்க்குமிடம் அழகானது. பின்னணியில் வயலின் இசை. மெல்ல சிரிக்கிறான். படத்தில் அவன் முதன்முதலில் சிரித்துப்பார்ப்பது இக்காட்சியில்தான். இவ்விடம் சொல்ல விரும்பும் ஒன்று வலுவான மௌனத்திற்கு விடப்பட்டுள்ளது.  அமைதியான பார்வை, அப்பெண்ணிலிருந்து கசியும் இசை..."அசைவது இலையோ காற்றோ அல்ல..உன் மனம்தான்". வெகு நிதானமான முரடனான கொலைகளுக்கு அஞ்சாத அவன் மனம் முதன் முதலில் மலர்கிறது. செம்புலப் பெயல் நீரெனும் வரிக்கு  பாலையில் விழும் மழை என்றும் அர்த்தம் சொல்கிறார்கள்.நிகழும் புரிபடாத ஒன்று நமக்கு புலனாகிறது, அவ்வளவு அமைதியாக. 

பின் ஒரு இரவில் பாஸின் காதலியை அவள் இளம் காதலுடன் காண்கிறான் கிம். கதலனை அடித்துப்போட்டுவிட்டு போனை எடுத்து எண்களை அழுத்துகிறான். அது பாஸின் எண். கட்டைவிரல் பச்சை நிற டயல் பட்டன் முன் தயங்குகிறது. அழுதுகொண்டு அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்கிறான். "அசைவது இலையோ காற்றோ அல்ல, உன் மனம்தான்". போனை அணைத்துவிடுகிறான். இனி இருவரும் சந்திக்கவே கூடாது என்று காதலனை அனுப்பிவைக்கிறான். ஹன்ஸூ அழுகிறாள்.  அவளை பிடித்து நிறுத்துகிறான்... "this is the best thing that can be done" என்கிறான். அவள் "This is not how it is" என்கிறாள். 

பின் பாஸ் அறிந்து விடுகிறார். கிம் ரனக்கொடூரமாக தாக்கப்படுகிறான்.  பேசப்படாத வார்தைகளாக்கப்படாத ஒன்றை சுற்றியும் அதனை சுட்டியும் பாஸுக்கும் கிம்மிற்கும் இடையே    நிகழும் உரையாடல் அழகானது. மரணத்தை நெருங்கிவிட்டு கிம் தப்பிக்கிறான். கடைசி வரை இதனை எதிர்கொள்ளத் தயாராகிறான். வயிரெல்லாம் கிழிக்கப்பட்டு ஒருவழியாக பாஸை கொல்கிறான் கிம். உடலெல்லாம் குண்டுக் காயம். சாகக் காத்திருக்கிறான் கிம். ஒருவன் கிம்மை சுட தயாராக நிற்கிறான். கிம் தன் போனை எடுக்கிறான். ஹன்ஸூவை அழைக்கிறான். இதற்கு முன் பலமுறை அவன் அழைப்பை ஏற்காதவள். இப்பொழுது ஏற்கிறாள். "ஹலோ" என்கிறது அவள் குரல்.போன் நழுவி விழுகிறது. அவனால் அசைய முடியவில்லை. "ஹலோ ஹலோ" மட்டும் இவனுக்கு கேட்கிறது. அசைகிறது அவன் மனம். பாலைக்கு ஒரு துளி நீரே போதும். உலகில் தன் இடத்தை வன்முறையால் மட்டுமே நிறுவுக்கொண்டிருக்கும் அவனுக்கு முழு காதலின் இனிமையை அந்த ஹலோ அவனுக்கு தருகிறது. அவளது  முகம் அவன் மனக்கண்ணில் விரிகிறது. துப்பாக்கி வெடிக்கிறது.

சீடன் ஓரிரவு கதறி அழுகிறான். குரு கேட்கிறார் "ஏன் அழுகிறாய்.ஏதும் கெட்ட கனவா?" என்று. "இல்லை.ஒரு இனிமையான கனவு" என்கிறான். "பின் ஏன் அழுகிறாய்?".  "அக்கனவு இவ்வாழ்வில் எனக்கு சாத்தியமில்லாதது."

நம் உறவுகள் யாவும் வார்த்தைகளற்ற ஒரு வெளியில்தான் நடந்தேறுகின்றன. வார்த்தைகள் வலுவற்றவை. ஆகவேதான் கவிதையும் கலையும் அமைதியை நாடுகிறது. ஒரு சாதாரண ஒன்லைனர் அழகான படமாக நிற்பதற்கு காரணம் அமைதியின் கணங்களை மேலும் கணமான அமைதிக்கு விட்டதால் தான்.

Sunday, January 14, 2018

முடிவிலியை நோக்கி


சமூகத்தின் இயக்கத்தை பொருளாதார சங்கிலிகளாகப் பார்ப்போம். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் மற்றொன்றுடன் தொடர்புறுகிறது. ஒவ்வொரு மனிதனும் இச்சங்கிலியில் நின்று அதன் இயக்கத்துக்கு பங்களிக்கிறான். பதிலுக்கு சமூகம் அவன் தன்னைத் தான் பேண பொருளாதார உதவி செய்கிறது. இச்சமூக இயக்கத்திற்கான பங்களிபாற்றுபார்களை மூன்றாக பிரிக்கலாம். முதல் சாரார் குமாஸ்தாக்கள். வரவு செலவு கணக்குகள் போன்ற மிக எளிதான பணிகள் இவர்களுடையவை. இரண்டாவதாக எஞ்சினியர்கள், டாக்டர்கள். மானுடத்தின் திறண்ட அறிவை அன்றாட வாழ்வை மேம்ப்படுத்த பயன்படுத்துபவர்கள். இந்த இரண்டு சாரார்தான் சமூகத்தின் பெரும்பான்மை. இவர்களுக்கு சில நடைமுறை சிக்கல்களைத் தவிர எந்த சிக்கலும் இல்லை (அதிலும் நேர்மையாக இருக்க விருபினால்). இவர்களல்லாமல் மூன்றாவது சாரார் உள்ளனர். அவர்களது பணி உடனடி நடைமுறைப் பயன் எதையும் சமூகத்துக்கு அளிப்பதில்லை. ஆனால் தங்கள் இயல்பால் தன்னறத்தால் கட்டப்பட்டு ஓயாது மொத்த மானுட அறிவின் எல்லையைக் கடந்துகொண்டிருப்பவர்கள். மானுடம் அறியாதவற்றின் மீது ஒளி பாய்ச்சுபவர்கள். இவர்கள் வழி மானுடம் மேலும் பிரபஞ்சத்தை அறிகிறது. இந்த மூன்றாம் பிரிவான படைப்பாளிகள், விஞ்ச்ஞ்சானிகளை எச்சமூகம் கொண்டாடிப் பேணூகிறதோ, அச்சமூகம் பின்னடைவை சந்திப்பதில்லை. ஜெயமோகன்  வார்த்தைகளில் இவர்கள் “சமூகத்தின் வளரும் நுணி”.

ஸ்ரீநினாஸ ராமனுஜம் 1887ல் ஈரோட்டில் பிறக்கிறார். வளர்வது கும்பகோணத்தில். வசதியான குடும்பமல்ல. அப்பா சீனிவாஸன் ஒரு புடவைக் கடையில் குமாஸ்தா. (கும்பகோனத்தில் இன்றளவும் சுதந்திரத்திற்கு முன் துவங்கிய கடைகளை அதே இடத்தில் காண முடிகிறது.) அம்மா கோமளத்தமால் பஜனைகள் செய்பவர். ராமானுஜன் வளர்ப்பில் கோமளத்த்மமாளின் பங்க்களிப்பு அதிகம். அம்மாவைப் போல் ராமானுஜன் எனலாம். கொழுக் மொழுக்கென்று குண்டுச்  சிறூவனாக படிப்பில்  பிரகாசமான மாணவன். கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் படிக்கிறார். பின் 1905ல் கும்பகோணம் காலேஜ். முதலாமாண்டில் ராமானுஜன் கைகளுக்கு,  கார் (Carr) என்பவர் எழுதிய “Synopsis” எனும் புத்தகம் கிடைக்கிறது. அதில் முளைவிடுகிறது ராமானிஜனின் விதை. போட்டித் தேர்வு புத்தகம் போன்ற அப்புத்தகம் வெறும் “பார்முலாக்கள்” மற்றும் “தியரம்களின்” கடைசி விடைகளால் மட்டும் ஆனது. அது ராமானுஜனின் படைப்புமனத்தை தூண்டுகிறது. அவற்றை நிரூபனம் செய்கிறார். பள்ளியில் அனைத்து பாடங்களிலும் குறைவின்றி திகழ்ந்த ராமானுஜத்தால் இந்தப் புத்தகம் அவர் வாழ்வில் வந்த பின் அவரால் பிற பாடங்களில் தேர்ச்சி கூட பெற முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியில் கிடைத்த ஸ்காலர்ஷிப் ரத்தாகிறது. கல்லூரி நீங்குகிறார். 1906ல் சென்னை பச்சயப்பாஸ் கல்லூரியில் சேர்கிறார். அங்கும் இதே நிலை.  ஸ்காலர்ஷிப் ரத்து. பின் கும்பகோணம். சாரங்கபாணித் தெருத்திண்ணை. இரண்டு ஆண்டு 1906 1907 “வெட்டியாக” இருக்கிறார். ஆனால் அவர் தன் முதல் “நோட்புக்கை” எழுதியது இக்காலகட்டத்தில்தான். ஒரு கணித நிபுனன் அதுவரை மானுடம் கண்டதை கற்பதோடு நிற்காமல், அறியாதவற்றின் குளிர்ப்பெருக்கில் குதித்தாக வேண்டும். ராமனுஜன் இக்காலகட்டத்தில் அதனை நிகழ்த்துகிறார். இக்காலகட்டத்தில் அவர் கண்டவை சிறந்த கணிதவியலாளரும் ராமனுஜனை உலகிற்கு அறிமுகப்படுத்ஹியவரும் ஆன ஹார்டியால் வெகுவாக வியக்கப்பட்டவை ஆகும். பொறுப்பற்று கணக்கு போடும் 22 வயது ராமானுஜனுக்கும், 9 வயது ஜானகிக்கும் 1909ல் திருமணம் செய்விக்கப்படுகிறது.

பின் ராமானுஜனும் பொறுப்புடன் மெட்ராஸ் வந்து அங்கங்கு ட்யூஷன் எடுக்கிறார். இதே காலகட்டத்தில் புரவலர்களை தேடத் துவங்குகிறார். ராமச்சந்திர் ராவ் என்பவர் ராமானுஜனை அடையாளம் காண்கிறார். உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டபோது, ராமானுஜம் “leisure” வேண்டும் எங்கிறார். எந்தத் தொந்தரவும் இன்றி கணித ஆய்வில்  ஈடுபடுவதற்கான நேரமே ராமானுஜன் கேட்டது. மாதம் 25 ரூபாய் ஏற்பாடாகிறது. பின் ஒரு வருடம் செல்ல “போர்ட் ட்ரஸ்ட் ஆப் மெட்ராஸில் க்ளார்க் வேலை. இக்காலங்களில் ராமானுஜன் தன் “நோட்புக்கை” பல பேராசிரியர்களிடம் காண்பிக்கிறார். யாருக்கும் புரியவில்லை. பின்னர்தான் வெளிநாடுகளுக்கு எழுதுகிறார். முதல் இருவர் பதிலுறவில்லை. மூனறாவதாக ஹார்டி பதில் கடிதம் போடுகிறார். பின் ராமானுஜன் லன்டன் சென்றதும், காசநோயால் இறந்ததும் யாவரும் அறிந்தது.

இங்கு நான் அளித்திரிப்பது ஒற்றைப்படையான சித்திரம். ஆனால் ஒருவனின் 
வாழ்வை அறிய அவன் சார்ந்திருந்த சமூகம் , அவன் வாழ்வுடன் சம்மந்தப்பட்ட மனிதர்கள் ,  அவன் வாழ்ந்த காலம் என பலவற்றை அறிய வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூலை ராபர்ட் கனிகல் காவிரி ஆறு பற்றிய விரிவான சித்திரத்துடன் ஆரம்பிக்கிறார். பின் ஐயங்கார்கள், அவர்களின் இடம் சமூகத்தில், அக்கால கும்பகோணம் பற்றிய சித்திரம் ஆகியவை பதிவாகியுள்ளன. மேலும் ஹார்டியின் வாழ்வு பற்றிய சிறிய வரலாறு உள்ளது. ராமானுஜன் 1914ல் இருந்து 1919 வரை கழித்த காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் பற்றிய மனப்பதிவை நூல் வாசிப்பவரில் உருவாக்குகிறது. ராமானுஜன் வாழ்வில் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்தையும் நூல் நிதானமாக தொட்டுத் துலக்குகிறது.

ராமானுஜன் இந்தியாவில் இருந்த வரை கணிதம் சார்ந்த நடைமுறைக் கல்வி ஏதுமில்லாதவர். ஆனால் பிறப்பில் வந்த மேதமை அவரை இக்காலகட்டத்திலேயே கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வைக்கிறது. அவை “of an elementary nature but highly ingenious character” எங்கிறார் ஹார்டி.  1914ல் ஹார்டி அவர்களின் தன்முனைப்பால் ராமானுஜன் லன்டன் செல்கிறார். சென்ற சிறிது நாட்களில்,ராமானுஜனின் ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகின்றன. ராமானுஜனின் உச்சம் ஹார்டியின் உதவியால் சாத்தியமானது.

ராமானுஜனின் கண்டுபிடிப்புகள் யாவும் உள்ளுணர்வு சார்ந்தவை. உள்ளுணர்வு என்ற வார்த்தையை கவிதைகளுடன் பொருத்தி மட்டுமே அறிந்த எனக்கு, கலையின் நேரெதிர் துருவமான கணிதத்தோடு கண்ட போது படைப்பு எனும் ஒற்றை சொல்லின் எல்லை விஸ்தாரமானது.
“Mathematics has advanced the most by those who are distinguished more for intuition than for rigorous methods of proof”. ராமானுஜனின் இயல்பான மேதமை மேற்கத்திய கணித அறிவால் மேலும் துலக்கம் பெற்றது எனலாம். இது குறித்து ஹார்டி கூறுகையில், ஓரிடத்தில் ராமனுஜன் தரமான கல்வி கிட்டியிருந்தால் , அவர் மேதமை சென்றிருக்கும் தூரம் வேறுவிதமானது என்கிறார். ஆனால் மற்றோரிடத்தில் ராமானுஜனின் இயல்பான மேதமை வெளிப்பாட்டினை கல்வி முறை என்ன செய்திருக்கும் எனும் சந்தேகத்தையும் வெளிப்படுத்துகிறார். ஆனால் ராமானுஜனின் கணிதத்தை கூர்மைப்படுத்தும் பணியை காம்ப்ரிட்ஜும், ஹார்ட்யும் செய்தனர் என்பதில் சந்தேகமில்லை. ஹார்டியைப் பற்றி “freer from the emotion of envy than any man I have ever known…free from petty meanness of human life and most generous of men” என்று குறிப்பிடப்படுகிறது.

ராமானுஜனுக்கு லன்டனில் அறிவுசார் நட்பு கிடைத்தது. ஆனால் அவர் மனம் தனியையில் உழல்கிறது. அயல் வாழ்வில் அவரால் கடைசி வரை பொருந்த முடியவில்லை. ராமானுஜன் லன்டன் சென்ற சிறிது நாட்களில் முதல் உலகப் போர் துவங்குகிறது. காம்ப்ரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியின் கட்டிடங்கள் மருத்துவமனைகளாகிறது. பல மாணவர்கள் போர்முனை செல்கிறார்கள். சுத்த சைவமாக தானே சமைத்து உண்ணும் ராமானுஜனையும் போர் மெல்ல பாதிக்கிறது. ஜர்மன் யூ போட்கள் அட்லான்டிக் கடலில் ஆதிக்கம் செலுத்தவும், உணவு இறக்குமதி குறைகிறது. காய்கறிகள் கிடைக்கவில்லை. மேலும் ஹார்டி சில ஆண்டுகள் போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அதில் தீவிரமாகிறார். ராமனுஜனின் மேதமையை பேணிய லன்டன், அவர் மனதை சமநிலையில் வைத்திருக்க முடியவில்லை. ஊரில் மாமியார் மருமகள் பிணக்கு. மனைவி எழுதும் கடிதங்களை லன்டன் அனுப்புவதேயில்லை ராமானுஜனின் அம்மா. இவர் மனைவிக்கு எழுதும் கடிதங்களும் ஜானகியிடம் செல்லாமல் காக்கப்படுகிண்றன. அதீத் தனிமை, அதீத உழைப்பு, அதீத மன உளைச்சல் – இவை ஒருவனின் உடலை எந்த நோய்க்கும் தயார்ப்படுத்தும். ராமானுஜன் காசநோயால் பாதிக்கப்பட்டார்.

ராமானுஜர் இந்தியர் என்பதைத் தவிர அவர் மேதமையைப் பேணுவதில் இந்தியாவின் பங்கென்ன ? ஏதுமில்லை.  இன்றாவது அடைந்துவிட்டோமா என்பது நம்முன் உள்ள கேள்வி. “Ramanujan’s brief life and death are symbolic of conditions in india. If life opened gates to them of food and healthy conditions of living and education, how many of these millions would me eminent scientists, writers, artists helping to build a new india and new world?” – Jawaharlal Nehru.

1920ல் நோயாளியாக ஸ்ரீநிவாஸ ராமானுஜம் FRS, BA  இந்தியா திரும்புகிறார். ராமச்சந்திர ராவ் முதற்பார்வையில் இறுதி நெருங்கிவிட்டதை உணர்கிறார். மெட்ராஸ் ப்ரெஸிடென்ஸீ கல்லூரியில் அவருக்கு பேராசிரியர் பதவி அளிக்கப்படுகிறது. உடல்நிலை காரணமாக கொடுமுடி செல்கிறார். ஹார்டியின் கடிதங்கள் ராமானுஜனுக்கு தனி மருத்துவரை ஏற்பாடு செய்கிறது. பின் கும்பகோணம். ராமனுஜன் அம்மாவுக்கும் அவர் மனைவிக்கும் சர்ச்சைகள் நிகழ்ந்த வண்ணம். கடைசி காலத்தில்தான் ராமனுஜன் தன் மனைவியுடன் இனக்கமாகிறார் “நீயும் என்னுடன் லன்டன் வந்திருந்தால் நான் நோய்ப்ப்பட்டிருக்க மாட்டேன்” என்கிறார். தலை உலர்த்தும் தன் மனைவியை ரசிக்கிறார்.

ராமானுஜனின் கடைசி நாட்கள் சென்னையில் கழிகிறது. அவர் கடைசி நாட்களில் ராமனுஜனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. இறுதி நெருங்கிவிட்டதை உணரும் மனம் தன் முழு வீர்யத்துடன் படைக்கிறது. பின் 1920 ஏப்ரலில் அவர் உயிர் பிரிகிறது.

பிரபஞ்சத்தின் இருளை போக்கி ஒளி பாய்ச்சும் எவ்வொருவனும் அவ்வளவு எளிதில் அழிவதில்லை. அவன் தொடர்ந்து நீடிக்கிறான் கண்டுபிடிப்புகளின் வழி. ராமானுஜன் இறந்து நூறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து அவர் கண்டுபிடிப்புகளில் ஆய்வுகள் நடக்கிறது. ஒரு கணிதவியலாளர் பதின்மூன்று ஆண்டுகள் ராமானுஜன் கண்டுபிடிப்புகளோடு செலவிடுகிறார். இன்று particle physics, statistics, cryptology, space travel, cancer treatment என பல துறைகளில் ராமானுஜனின் கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன. ஆனால் இதெல்லாம் நோக்கமல்ல படைபாளிக்கு. நோக்கமற்று தன் தன்னறத்தில் நிற்க நிர்பந்திக்கப்பட்டவன் அவன். எந்த சமூகமும் சூழலும் அவனை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ஒரு சமூகமாக மானுடம் மேலும் ஒருபடி முன் செல்ல காரணமானவர்களை பேணுகிறோமா என்ற கேள்வி நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டியது.

ஹார்டி தன் வாழ்வின் ராமானுஜனுடனான காலகட்டத்தை “the most romantic experience of my life” என்கிறார். இந்நூல் துருதுருவென பகடியின், செயலின் ஒளிச்சிதறும் பெரிய கண்களுடைய ஒரு இளைஞனின், பின் காசநோயால் சோர்வுற்று ஓய்ந்த மேதையின் சித்திரத்தை நம்முள் விட்டுச் செல்கிறது.  ஒரு கணித மேதையின் வாழ்க்கையை பேசுவதோடு நிற்கவில்லை இந்நூல். படைப்பில் உள்ளுணர்வின் பங்கு, தன் தன்னறத்தில் நிற்பவன் எதிர் கொள்ளும் சிக்கல்கள், என படைப்புச் செயல்பாட்டில் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சுவார்ஸ்யமான வாசிப்பை அளிக்க வல்லது. ராமானுஜனின் கணித பங்களிப்பு குறித்த விளக்கங்கள் இருந்தாலும் படைப்பு எனும் பொதுமையில் நிறுத்தி ராமானுஜனின் பங்களிப்பை ஆய்கிறது நூல். மேலும் ராமானுஜனின் ஆய்வுகள் "infinite series" பற்றியவை. ஒவ்வொரு எண்ணும் தனித்து நின்றாலும், அவை ஒவ்வொன்றும் முடிவிலியுடன் தொடர்புள்ளவை. சிற்றுயிரானாலும் பிரபஞ்சம் தான் அல்லவா நாம் எல்லாம்? இப்படி வாசிக்கும் நம்மை தத்துவ எழுச்சிக்கு உள்ளாக்கும் இடங்கள் நூலில் உண்டு. ராமானுஜனின் வாரித்தைகள் பின் வருவன "an equation has no meaning to me unless it expresses a thought of god". நான் வாசிக்கும் மூன்றாவது அபுனைவான "The man who knew infinity" ஒரு பன்முகப்பட்ட நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்துள்ளது.

எவ்வளவு கண்டுகொள்ளப்படாவிட்டாலும், அவமதிக்கப்படாலும் உலகின் ஏதோ ஒரு மூலையில் புடவியின் கைகள் தன் வீரியமான விதைகளை விதைத்துக் கொண்டே இருக்கிறது. அவையும் நீரில்லாமல் வெளிச்சமில்லாமல் தன்னில்தான் ஆழ்ந்து தன்னைத் தானே அழித்துக்கொண்டு கனிகளை சொரிந்த வண்ணம் உள்ளது. ஆனால் அவற்றிற்கு நீரும் வெளிச்சமும் அளித்துப் பேணுவது சமூகத்தின் கடமை. நாம் இட்டு நிரப்ப வேண்டிய ஒரு வெற்றிடத்தை சுட்டி நிற்கிறது இந்நூல்.

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...