ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
சனி, 16 மே, 2026
வெள்ளி, 15 மே, 2026
வியாழன், 14 மே, 2026
புதன், 13 மே, 2026
இனிமைப் பட்டாவளி
காலை இனிமையானது
உணவு இனிமை
உடலில் இனிமை
மனிதர்களில் இனிமை
காமம் இனிமையுடைத்து
உழைப்பு இனிமை
சிறு ஆசைகள் இனிமை
ஆசைகள் பிறப்பிக்கும்
பேரங்கள் இனிமை
விலகுதலில் இனிமை
சேர்தலில் இனிமை
உன் குதிங்கால் வெண்மை
அரற்றும் கொலுசுக்கு
திரும்புதல் இனிமை
வான்சுடர் அணையும் பொழுது
இனிமை
இல்லத்தை மென்போர்வையாய்
அணைக்கும் அகல்சுடரொளி
இனிமை
மாலையை நீண்ட ஒரு கோடாக்கிக்
கடக்கும்கிளிச்சத்தம் இனிமை
இருத்தல் இ னி மை
இச்சொல்லின் ஒவ்வொரு
பதத்தையும் அறிந்துதான்
சொல்கிறோம் யாம்
பேரினிமையின் பெருங்கடலாய்
ததும்பும் பெருங்காலமருளிய
இச்சிறுவாழ்வு இனிமையுடைத்து
செவ்வாய், 12 மே, 2026
நான் யார் - 10
துளியிலும்
கடலிலும்
துகளிலும்
மலையிலும்
நிறைந்து கிடக்கும்
பேரின்பம்
திங்கள், 11 மே, 2026
ஞாயிறு, 10 மே, 2026
நான் யார் - 2
துளி ஆக்கினால் சில ஆயிரம்
துமி ஆக்கினால் சில கோடி
மற்றபடி
நான் என்பது
உள்ளங்கை அளவு நீர்தான்
பெரிய அன்றாடங்கள்
நிகழ்வதுதான்
ஆனால் நாளை
இவை நிகழெந்தே ஆகவேடுமென்று
எந்த நிபந்தனையுமில்லை
மேலும் நடந்தே ஆகவேண்டுமென்பதுமில்லை
மலர்தல்
இன்னுமொரு கவிதையை
நாளை மறுநாளுக்கு
எழுதியவற்றையெல்லாம் காலத்திடம்
சமர்ப்பித்திபின் எஞ்சியது
கவிதை பிறந்ததன் குளிர்
கடல் மேல் நிலவொளிரக் காண்கையில்
அகம் தளும்பும் அதே குளிர்
பேரம்
உன் கிரணத்தின் சுடர்நீராடல்
கண்ட கணம்
நீரின் கடும் ஆழம் நோக்கி
இழுத்துச்செல்லப்படுகிறேன்
கனிந்து நோக்கும்போது
மும்முரமமாய் அதன் மூடிய கண்களை
வரைந்துகொண்டிருக்கிறேன்
கோப்பையை
கைவிடுகிறேன்
சுட்டும் விரலை எட்டிப்பிடிக்கிறேன்
ஆழம் சுட்டும் அத்தனை சாதனங்களையும்
திரட்டி வருகிறேன்
பெருலாபத்தின் கனவுகளுடன்
வணிகனாய்
என் பேரங்களை துவங்கிவிட்டிருக்கிறேன்
சனி, 9 மே, 2026
நிகழாத நாள்
கண்ணீரோ
ஒரு தொடுகையோ
நிகழாத நாள்
மலரைக் காணுதலோ
மழையில் பூரித்தலோ
நிகழாத நாள்
இந்நாளை
ஒரு நிகழாத நாளாக
ஆக்கமுடியாது
அதன் நிகழ்வுகளை
மாற்றவும் முடியாது
காலத்தை அவ்விதமாக
இந்நாளில் நம் ஒரு நாள்
சந்திக்கையில்
ஒரு பாறையைப்போல்
கிடக்கும் நாளில்
வெறுமனே வருகைக் கையெழுத்திட்டு
இல்லம் திரும்புங்கள்
பேரேடு
நிகழும் நாளுக்கான கையெழுத்தையும்
நிகழா நாளுக்கான கையெழுத்தையும்
ஒன்றே போல் ஏந்தியுள்ளதை
நம் மனம் ஒரு போதும்
ஏற்கப்போவதில்லை
அறியா அருள்
இந்நாளில்
நான் அதிகம் நடந்தேன்
பெரும் மரங்களை
அதன் கிளை அமைப்பை
பட்டைகளின் வெடிப்புமுறையை
பார்த்தேன்
யானைக்கூட்டமொன்றுடன்
சற்று தூரம் உடன் சென்றேன்
வானத்தின் நிறமாற்றங்களை
துள்ளியமாய் அவதானித்தேன்
ஒரு மலரை அதன் ரேகையோட்டத்தை
அதன் நிற ஒழுக்கை
வடிவ வழிவுகளை
முழுமையாய் உள்வாங்கினேன்
பதினாறு பட்டாம்பூச்சிகளை நாளின்
வெவ்வேறு பொழுதுகளில்
பின்தொடர்ந்து வழி தொலைந்தேன்
ஓடையின் ஒலியை
உடலெல்லாம் நிறையவிட்டேன்
இருபத்தியிரண்டு
சிலந்தி வலைகளை நகலெடுத்துக்கொண்டேன்
அந்தி வானின்
மிக மெல்லிய தழலாட்டத்தை
கண்டு கண்டு அறிந்தேன்
மீளக்குடிலடைந்து சிற்றகல் ஏற்றி
சுடரால் அகம் நிறைத்தமர்ந்தேன்
இருள்சூழ்பெருங்கானகத்தில்
சுடராடும் இவ்வகம்
காத்திருக்கும்
உன் சித்தம் என்னவானாலும்
வெள்ளி, 8 மே, 2026
வெண்மை போதுமானது
மேகம் செய்ய
கருமை போதுமானது
இரவை கவியச் செய்ய
பச்சை நிறம் போதுமானது
வனத்திற்கு
எப்படியோ அருவியையும்
விழும் நீரின் புகைப்பெருக்கையும்
பிறக்கச்செய்தேன்
கித்தானில்
நீ படைத்ததை
பார்த்துப் பார்த்துச் செய்கிறேன்
தூரத்து அந்தி வானில்
சிறு புள்ளை
ஒற்றைக் கரும் புள்ளியில்
சிறகடிக்கச் செய்தேன்
உன் அதிகாலைக் குருவிகளிடம்
என் அந்தியின் பறவை
ஒரு சொல்
பேசிவிடுமல்லவா
உடைந்து சிதறிக் கிடக்கிறது
இலையசைந்தால்
நிலவு அசையும் மாயம்
நிகழ்கிறது
இந்த இரவின் ஆன்மம்
பறவைக்குரலில் ஏறி வந்தது
எங்ஙனம்?
எதன் தனிமை இங்கு
கிடப்பது
எதன் முழுமை இங்கு
பெருகிக்கொண்டிருக்கிறது
கடல் மேலும்
மலை மேலும்
இச்சிறு இலைமேலும்
கிடக்கும் நிலவே
யாரும் தொடாத
பள்ளத்தாக்கின் ஆழத்தை
நீ மட்டும் தீண்டுகிறாய்
எதன் தனிமையின் மீது
விழுகிறது முழுமை
எதன் ஆழத்தில்
மிதக்கிறது வான்
நிலவு ஒளியை வீசி
கட்டியிழுத்துச் செல்கிறது
பூமியை
கலங்கரை விளக்கின் ஒளி
எக்கடலின் மீது விழுகிறது?
மேற்கில் நெருப்பின்
பிழம்பாய் கொதித்ததையும்
வரிசைக்கட்டி வானில் நடந்த
பறவைகளையும்
யாரும் பார்க்கவில்லை
சொல்லாமல் கொல்லாமல்
கண்வழி உள் நுழைந்த
இம்மாலையை
வாவென்று சொல்ல நாவெழாமல்
நின்றிருந்தேன்
விடைபெற்றபோது
மேற்கும் அறியாமல்
புள்ளும் அறியாமல்
ஏன் மஞ்சளும் கூட அறியாமல்
துளி எடுத்து
சிற்றகலில்
என் சிற்றில்லில்
சுடராய் வரைந்துகொண்டேன்
வியாழன், 7 மே, 2026
தாகூர் ஜெயந்தி
இன்று 07.05.2026 தாகூரின் பிறந்தநாள். கீதாஞ்சலி என் மனதுக்கு ப்ரியமான நூல். இமயத்தைக் கண்டு உளம் நெகிழ நமக்கு மொழி தேவையில்லை. கவிதையின் ஆன்மத்துக்கும் அது பொருந்தும்.
அப்பாடலின் மொழிபெயர்ப்பு கீழ்வருவது,
பொன்னொளிர் வங்கம்
வங்கமெனும் பொன்னேஉன்னைக் காதலிக்கிறேன்
என்றும் உன் வானம்,
உன் தென்றல்
ஆன்மத்தை குழலென்றாக்கியது
வசந்தத்தில், என் அன்னையே
அலையாத்திக் காடுகளின் மணம்
வெறியெழும் இன்பத்தில் நிரைக்கிறதென்னை
இலையுதிர்க் காலத்தில், எம் அன்னையே
நெற்கொழிக்கும் வயல்களில்
கதிரெங்கும் இனிய சிரிப்பொன்று
படரக்காண்கிறேன்
ஆ, எத்தனை அழகு
என்னவொரு பிரியம்
என்னவொரு கனிவு
நதிக்கரையிலும்
ஆலமரத்தினடியிலும்
எத்தனை அழகாய் இட்டுள்ளாய்
மணற்விரிப்பை
என் அன்னையே
உம் உதட்டின் சொல்
என் காதுக்குத் தேன்
துன்பத்தின் சாயல்
உன் முகம் படிகையில்
ஓ என் அன்னையே
இதயம் கண்ணீரால் நிறைகிறது
பொன்னொளிர் வங்கமே
உன்னைக் காதலிக்கிறேன்
மென்மையாய் மிதந்து வந்து
நீர்ச்சாட்டத்துமிகளாய் தொட்டது
அசையா வேர்களில்
தியானித்திருந்தது
வான்தொட எழுந்த
பெருவிருட்சத்தில்
நடனமாய் இருந்தது
பொழுதணையும் வேளையில்
நாளெல்லாம்வெட்டிய
விறகுகளை சேர்த்துக்கட்டி
பரிசலில் நதி கடக்க
இருளில் இருளாய்
காட்சியானது வேழம்
வனமென ஆகிவந்த
துளியாய்
புதன், 6 மே, 2026
துடித்துக்கொண்டே இருந்தது
பெருஞ்சாலையெங்கும்
கிளையும்இலையும் சேறுமாய்
அடித்துச்செல்லும் வெல்லம்போல்
இறுகப்பற்றிய
மக்கள் ஊர்ந்துகொண்டிருந்தார்கள்
ஒளி மங்கிய இடங்களில்
பேரங்களும்
இருள் அடர்ந்த மூலைகளில்
இச்சைகளுமாய்
பொருள்படுவது பொருளென்று
மட்டும் ஆகிவிட்ட
இப்பெருநகரின் மேல்
அத்தனைக் கருணையுடன்
ஒரு வலசைப்புற்கூட்டம்
கடந்து செல்கிறது
நான் யார்?
சொல் சென்றோய்வது
உன்னில்
இடைப்பட்ட அச்சிறுகாலம்
அகலென ஏந்திய
சொற்சுடரொளியில்
ஆற்றுவிக்கும் கண்ணீர்த்துளியால்
கணம் வாழும்
பித்தன்
செவ்வாய், 5 மே, 2026
அக்கரம்
வானத்தில் இக்கணம்
கோடி பறவைகள்
பறக்கின்றன
நிலமெங்கும் உயிர்களால்
நிறைந்துள்ளது
அனைத்தையும் தொடுத்துக்
கோர்த்த கரமே
எவ்வுயிர்மலரை
எந்நாரில் கோர்த்துது
சரமாக்கிக்கொண்டுள்ளாய்
ஒலியுரை இறை
மலர்கள்
நதி
கடல்
மலை
குளிர்
மழை
வெயில்
புள்
யானை
மேகம்
அருவி
குழவி
புல்
இலைகள்
வேர்
அன்பு
காதல்
கருணை
சொல் சொல்
சொல் சொல்
சொற்களால்
நிறைந்துள்ளது
உலகம்
அர்த்தமேதுமற்ற
அனைத்துமுரையும்
ஒரு ஒலியில்
ஏன் நீ
குடிகொண்டுள்ளாய்
திங்கள், 4 மே, 2026
ஞாயிறு, 3 மே, 2026
திங்கள், 20 ஏப்ரல், 2026
நுன் கடல்
வழிந்து செல்லும் நீர்
மணலில் சிறுகோடுகளால்
கோலமொன்று இட்டிருக்கக்
கண்டேன்
அலைசென்றபின்னான
நீர்மையில்
சிவந்த வான் தீற்றலாய்
விழக் கண்டேன்
நண்டுகளிட்ட துளையை
அலைமூடி சிறுதுளையாக்கக் கண்டேன்
நிலவின் நிறத்தில்
மகவின் உள்ளங்கையளவு நண்டொன்று
எட்டுக் காலகள்
இரண்டு கைகள்
இரண்டு கொம்புகள்
கைகளால் மணற்துகளை அள்ளி
உண்ணக் கண்டேன்
இப்படித்தான் கண்டேன்
பெரிதினும் பெரிதானவை
சிறிதினும் சிறிதாய்
ஆடல் கொள்வதை
திங்கள், 29 டிசம்பர், 2025
உதிர்ந்து செல்லும் சொல்
சுற்றி சுற்றி
உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன்
இத்தனை தனிமையான இரவில்
காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக்
கண்டபின்
முழுதும் அமைதிகொண்டுள்ளேன்
இவ்வமைதி என்னை எதை நோக்கி
இட்டுச்செல்லுமோ?
உன் இருப்புகளின் பெருவெளியில் தேவதைகள் உண்டெனில்
ஒளியை சிறகாய் கொண்டுள்ள ஒரு தேவதையை
அனுப்பி வை
என் காதுகளில் நான் கேட்க விரும்புவது எல்லாம்
நதி கூழாங்கற்களிடம் சொல்லும் அச்சொல்லைத்தான்
இருப்புகளின் பெருக்கில் இயல்பாக
உதிர்ந்து போகும் ஒரு சொல்
பார்த்தல்
உன்னை சுட்டும் சொல்
உரைபவன்
ஞாயிறு, 28 செப்டம்பர், 2025
ஜனனம் மரணம்
காண்பது எதனை?
சிறு சொட்டாய் துளிர்க்கும்
சுடரில் ஒளிரும்
கனவு எது?
திங்கள், 9 ஜூன், 2025
துளித் துளியாய்
ஒன்றாய் இரண்டாய் இருந்த
மனிதர்
பெருக்காய் பெருகத்துவங்கிவிட்டனர்
சூரியன் உரைப்பாய் விழுகிறது
சிக்னலில் முன் நிற்கும்
வண்டியில் வெப்பம் ஒளிர்கிறது
சற்றுக்கெல்லாம்
கானல் எழுந்துவிடும்
புகையாய் காற்று நெளியத் துவங்கும்
காலூன்றவும் நேரமில்லா
இப்படியான ஒரு நாளில்
தன் அறைக்குள்
மழைக்கால கானகம் ஒன்றை
வரைகிறான்
ஒரு அவசரமுமின்றி
துளித் துளியாய்
ஞாயிறு, 18 மே, 2025
ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள் - ஒரு தொகுப்பு
1
13
இன்று
ஏன் என்னை கைவிட்டாய்
இம்மாபெரும் பிரபஞ்சத்தில்
ஒரு மலர்கூடவா
இல்லை எனக்குத்தர
மலரின் சுகந்தத்தை
வீசக்கூடவா
உனக்கு மனமில்லை
நீ அளித்த
வெறுமையை அல்ல
என் அறைமுழுதும்
இருக்கும் மலர்களுக்கு
மத்தியில்
ஒரு மலரின்மையை
வைக்கிறேன்
ஜன்னல் வழி விழும்
உதயத்தின் கிரணங்கள்
மலர்கிறது மலரின்மையில்
..............................................
காலத்திற்கு
உயிரில்லை
மூச்சுண்டு
அகாலத்திற்கு
மூச்சில்லை
உயிருண்டு
.........................................
16
இதோ
உள்ளது
உள்ளபடி
வெளிப்பட்டு
கணம் கூட ஆகவில்லை
கிளையறியாமல்
இலைகூட அறியாமல்
பறத்தல் முடித்து
அமரும் சின்னப்பறவையைப்போல்
வந்துவிடுகிறது
பாவனை
இதோ
உள்ளதை
உள்ளபடி
கண்டு
ஒரு ஷணம் கூட ஆகவில்லை
நட்சத்திரம் விழுந்ததோடு
நகர்ந்துவிட்டேன்
பிரம்மாண்டங்களுக்கு
முன்னிருந்த
என் எளிய வானங்களுக்கு
.......................................
23
உலகுடன் கடைசி
பந்தமென்று
விட்டேன்
இதோ கடைசி நாணயம்
உலகுடன் கடைசி
பற்றென்று
விட்டேன்
இதோ கடைசி ஆடை
உலகுடன் கடைசி
வேடமென்று
விட்டேன்
இதோ கடைசி மூச்சு
உலகுடன் கடைசி
சொல்லென்று
விட்டேன்
இதோ கடைசிப் புத்தகம்
உலகுடன் எஞ்சிய
அறிவென்று
விட்டேன்
ஏந்தினேன் பிட்சைக்கு
பிச்சைக்காரனிடம்
கையில் கபாலமேந்திய
இலை
விரித்து
கணமும்
அசைவின்மையறுத்த
பெருவிருட்சம்
ஒன்றின் கீழ்
அசைவின்றிக்
கிடக்கிறது
காற்று உண்ணும்
பாறை
இடையே
அண்டங்களுக்கு
இடையே
ஏதுமில்லாததொரு
தூரம்
தூரங்களுக்கு இடையே
ஆங்காங்கே
மற்றெல்லாம்
ஒரு கோப்பை
தாகம்
அருளப்பட்டது
ஒரு கோப்பை
நீர்
மற்றதெல்லாம்
வானத்திற்கு
ஒழுங்கேது
வரையரையற்ற விரிவு
நிறம் இன்னதென
சொல்லமுடியாத
தன்மை
பெரும்கூரைமட்டுமா
அடிநிலமுமா
ஒரு பெரும்
சதுரமா
முக்கோனமா
என்ன வடிவுக்குள்
இத்தனை
கிரகங்கள்
அண்டங்கள்
இந்த வரம்பற்ற வானத்தில்தான்
அவ்வளவு ஒழுங்காய்
ஒரு குருக்குவெட்டுக்கோடாக
அமைத்துக்கொண்டு
சிறகடிக்கிறது
ஒரு புற்கூட்டம்
..................................................................
41
விருட்சங்கள்
மண் துளைத்து
வேர் வளர்கிறது
இலைகள் வெளி துளைத்து
காலூன்றி நிற்கிறது
கடல் பெரும் கூரையென
அந்தரத்தில்
தளும்பி நிற்கிறது
மீன்கள்
ஏரியின் ஆழத்திலா?
வானின் விரிவிலா?
வலசைப் பறவைகள்
வானின் மேலா
கடலின் கீழா
பூமியை விரித்து
கூரை ஓவியமென
பதித்துவிட்டிருக்கிறார்கள்
வானம் கால் எட்டா
தூரத்தில்
பெருநிலமென
விரிந்துள்ளது
மேகம் கிழித்து
கீழ்நோக்கி விழுகிறது
ஒரு தலைகீழ் உதயம்
.....................................................................
42
காலம்
தள்ளியிருக்கலாம்
சிலரது
சூழ்ச்சியாக்கூட இருக்கலாம்
தனித்துவமான
தனிமனிதனாகக்கூட
நான் வந்தடைந்திருக்கலாம்
தேனெடுத்து வருவதற்குள்
காடு பற்றியெறிந்ததால்
வழிதறிய
பட்டாம்பூச்சியபைப்போலும்
இருக்கலாம்
இங்கு முட்டி
அங்கு முட்டி
நீர்வழிப்படூவும் புனைபோலிருக்கலாம்
எல்லாம் வல்லது அலைக்க
அலையும் நீர் போல்
இருக்கலாம்
ஆனால்
எப்படியோ
போதும் என்று
அமர்ந்திருக்கிறேன்
இக்கணமெனும்
மாபெரும் நிகழ்வில்
....................................................
43
இம்மாபெரும்
கூண்டுக்குள்
சுற்றிச்
சுற்றி
பட்டுப்பூச்சியே
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்தமர்ந்தாய்
தூரிகை நுனியில்
இறகு வழி
ஒழுகி
இக்கணங்களுள்
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்துபரவியது
உன் வண்ணம்
நெஞ்சமெலாம்
....................................................
44
கிணற்றுத்துலா
துடிக்க துடிக்க
எத்தனை அடிக் கயிறு
இரக்கினேன் தெரியவில்லை
இழுக்கத் தெம்பில்லாமல்
கயிறுவிடவும் சக்தியின்றி
விட்டேன் கயிற்றினை
துலா கதறி சிலிர்த்தது
கயறு தீர்ந்து நுனி
சாட்டைச்சொடுக்குடன்
கிணறுள் குதித்தது
காதுகளை கூராகினேன்
மிக மெல்லிதாய் கேட்டது
வாலி சென்று தொட்ட
பாதரசம் தட்டிப்போன
ஆழ் உரையும்
இன்மையின் பிலம்
........................................
45
இம்மாஞாலத்தில்
காலமென்பது
எல்லாம் உள்ளடக்கி
பெருகிக்கொண்டே இருக்கும்
மகாநதி
இம்மாஞாலத்தில்
இக்கணமென்பது
சில காரணங்களாலும்
சில காரியங்களாலும் ஆன
மெல்லிய நீரொழுக்கு
...................................................
46
புன்சிரிப்பு
ஒரு அந்தியில்
அந்திக்கு
விடைகொடுப்பதைத்தவிர
செய்வதற்கொன்றுமில்லை
ஒரு இரவில்
இத்தனை இருளும்
வானத்தினதா நிலத்தினதா என
சிலாகிப்பதைக்காட்டிலும்
செய்வதற்கொன்றுமில்லை
இப்படியே
புலரி
பகல்
பொழுதுகள்
பொழுதுகள்.
தொடுவான் நோக்கி
சிறகடிக்கும் புள்
பொழுதினை காலத்தினுள்
காலத்தை அகாலங்களுக்குள்
இழுத்துச்செல்கிறது
..................................................
47
என்னை நான்
சொல்லில்
தஞ்சம்கொண்டுள்ளேன்
அதுதான்
என்னை உடைத்து
நெறுக்கி
செறிவாக்கி
தளர்த்தி
மேலும் கீழும் இழுத்து
இடம் வலம் அலைத்து
உலைத்துலைத்து
அடுக்கிக்கொள்கிறது
மெழுகால் ஆன
வீட்டைக் கட்டி
கையில் ஒரு கொல்லியைக்
கொடுக்கிறது
என்னை நான் எரித்துக்கொள்ள
,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆணை
சொல்
தீர்ந்துவிட்டது
சற்றுமுன் வரை
தாண்டமாடிற்று
உருகிற்று
உறுதிபூண்டது
நீர்மைசூடி ஓடி
காற்றென அலையெரிந்து
இசையை முயங்கி
வீர்யம் கொண்டு
எல்லாம் இழந்து
வெறுமையைப் பாடிக்கொண்டு
துன்பங்களை வருடிக்கொண்டு
இன்பத்தின் நாளங்ளில்
பெருக்கெடுத்து
சற்றுமுன் வரை இருந்து
ஓய்ந்து எஞ்சியது
சொல்லற்று
சொல் செழித்த தடம்
பின் மெல்லிதாய்
மிக மெல்லியதாய்
எழுகிறது
நித்யத்தின் ஆணைப்படி
கருவினுள் முதல் அசைவாய்
..........................................................
நான் யார் - 13
மலரல்ல மலர்விப்பது
-
சுந்துவுக்கு தலையில் அடி ஆட்டோவைக்கூப்பிடு ஆஸ்பத்திரிக்கு ஓடு தையலைப்போடு அழுது கணத்த முகத்துடன் ஒரு தூக்கத்தைப்போடு பின் முழித்துக...
-
உடலெல்லாம் காதல் வழிந்துக் கிடக்கிறது சில கதவுகளை திறந்துவிட்டிருக்கிறேன் அத்தனை களைப்பையும் நிரப்பி ஒரு புட்டிலை உடைத்து வீசினேன் எங...
-
மிகச் சிறிய ஆனால் அத்தனையும் அழகாக மிளிரும் மலரைக் கட்டி சரமாக்குவதான நடனமொன்றை நிகழ்த்திக்கொண்டிருக்கிறாய் பித்தனால் தாள முடியவில்லை ஒரு அத...
.jpeg)