Friday, December 31, 2021

நடனம்

புற்களைப் போல்
இலைகளைப்போல்
இலை சூடிய விருட்சம் போல்
பட்டாம்பூச்சி போல்
மண்புழு போல்
பறவைகள் போல்
பெருங்கடல்‌வாழ்
மீன்களைப்போல்
வால் குழைக்கும்
நாய்களைப்போல்
பெருங்காது உலற்றும்
யானைகளைப்போல்
தினம் தினம்‌
கணம்‌கணம்
மலரும் மலர்களைப்போல்
இச்சிறுடலுக்கு
எது சாத்தியமோ
எந்த அசைவுகள்
நடனமாகிறதோ
அவற்றைக் கொண்டு
நடனமிடுவதன்றி
செய்வதற்கு
ஏதொன்றுமில்லை

அணிதலும்‌ கலைதலும்

 உன் கொலொசொலிதான்
பூமியை ஆக்கியது
ஜீவராசிகளின் மூச்சாகியது
மானுடரின் கண்ணீரும்
நகையும்
முரண்களும்
பாவங்களும்
சலனங்களும்
எல்லாம்
எல்லாம்
உன் கொலுசொலியாய் கேட்கிறது
இப்பூமியின்
கடைசி மூச்சு
உன் கொலுசைக்கலைந்து
உன் மேஜையில்
சரித்து வைப்பதான
கடைசி ஒலி

கைவிடுதல்

இந்தக் காலையில்
இதன் ஒளிக்காக
இதன் மௌனத்துக்காக
இதன் பறவைகளுக்காக
இந்த உலகம் சற்றெ சூடியிருக்கும்
பொருமைக்காக
வாசல் தெளித்தலின்
நீர்‌ஒலிக்காக
வளைத்து நெளித்து
பார்க்கும் ஒவ்வொரு தரமும்
வியப்பில் ஆழ்த்தும்
கோலமிடும் பல்லாயிரம்
கரங்களுக்காக
தூக்கம் களையாத
சிசுக்களின் கனவுச் சிறுநகைக்காக
பனியில் உடல் உதறும்
நாய் க் குட்டி க்காக
ஆயிரம் ஆயிரமாயிரமாண்டுகளாக
இப்பூமியை அறியும்
ஜீவராசிகளுக்காக

கைவிடுகிறேன்
இன்பம் என்றாகாத
ஒவ்வொன்றையும்

Sunday, December 5, 2021

க்ருஹபங்கா

 நாவல் எனும் வடிவம் பல சாத்தியங்ககளை உடையது. ஒரு குடும்பத்தை அதன் நிகழ்வுகளை ஒரு வீட்டிற்குள் சொல்லிவிடும் நாவல்களுண்டு. ஒரு ஊரின் கதையாக ஒரு நிலத்தின் தேசத்தின் கதையாக விரியும் நாவல்களுண்டு. ஒரு சிறு காலத்தை பக்கங்களுக்கு விரித்துச் செல்லும் நாவல்களுண்டு. வரலாற்றின் குறுஞ்ச்சித்திரமாக தன்னை புனைந்துகொள்ளும் நாவல்களுண்டு. கவிதை நாடகம் சிறுகதை கட்டுரை என பல உள்ளடக்கங்களை தன்னுள் சுமக்கும் விரிவு நாவல் எனும் இலக்கிய வடிவுக்கு உண்டு.


நிகழ்வுகளின் அடுக்கில் வாசகனின் எதிர்பார்ப்பை பொய்ப்பித்து எதிர்பாராத ஒன்றை நிகழ்வளவில் மட்டும் நிகழ்த்திக் காட்டுவதும் நாவலே. வெறும் கேளிக்கை என்ற அளவில் நின்றுவிடுபவை அவை. வாழ்க்கை பற்றிய ஒரு சித்திரத்தை புனைய முயன்று முழுமை கூடாமல் செயற்கையாக சோகம் மரணம் என நின்றுவிடும் படைப்புகளுண்டு. ஒரு இலக்கியத் தரமான ஆக்கம் ஒரு தரிசனத்தை முன்வைப்பது. உயிர்வாழ்தல் எனும் செயலும் அதனில் நாம் அறிபவையும் அறியும் மனமும் அளப்பரிய நுண்மையுடையது, அளப்பரியது. ஆக முழுவாழ்க்கையையும் ஒற்றை தரிசனமாக முன்வைப்பது சாத்தியமல்ல. வாழ்க்கையின் ஒரு கூறு அல்லது ஒரு பரிமாணம் பற்றிய தரிசனமே சாத்தியம் என்பது என் பார்வை. இப்படி ஒரு தரிசனத்தை சுமந்து வரவே மேற்சொன்ன வடிவங்கள் எல்லாம். 

எஸ்.எல். பைரப்பாவால் 1972ல் எழுதப்பட்ட கன்னட நாவலான "கிருஹபங்கா"- தமிழில் "ஒரு குடும்பம் சிதைகிறது" - ஒரு அடிப்படையான எளிமையான வடிவத்தை உடையது. நேர்கோட்டுக் கதை. உணர்வுப் பெருக்கெழும் வரிகளொ கவித்துவமோ அற்ற நடை. நான் பார்த்த வாழ்வை சொல்லப்போகிறேன் அவ்வளவே எனும் தொனி எழுத்தாளரிடம். எங்கும் குவியாமல் மேலதிக அழுத்தத்தை எப்பாத்திரத்துக்கும் எந்நிகழ்வுக்கும் கொடுக்காமல் ஒரு மின்விசிறியின் சீரான வேகத்தோடு வாழ்வை கடக்கிறது நாவல். வாழ்வை காட்டுவதன் வழி தரிசனத்தை வாசகனை கண்டடையச் செய்வது இலக்கியப் படைப்பு. அதையே செய்கிறது கிருஹபங்கா.

கதையின் நிகழ்களம் கன்னடநிலம். பெங்களூர் மங்களூர் நெடுஞ்சாலையில் இன்றளவும் அதே பெயருடன் அக்கிராமங்க்கள் உள்ளன. ராமசந்ரா, நாகலபுரா, சன்னராயபட்னா, ஷ்ரவன பெலகோலா, டிப்தூர் டாலுக், தும்கூர் டிஸ்டிரிக்ட், ஹொலெநரசிபுரா -  கதை பெரும்பாலும் நிகழ்வது ராமசந்ரா மற்றும் நாகலபுராவில்.இரண்டும் பாசனம் செய்யப்படாத கிராமங்கள். விசும்பின் சித்தம் விளைச்சல்.

ராமசந்த்ரா கிராமத்தின் ஷனுபோகர் (கணக்குப்பிள்ளை) இறந்தபின் - எனும் சாதாரணமான வரிகளுடன் துவங்குகிறது நாவல். அவர் மனைவி கௌரம்மா- குணம்கெட்ட பெண்மணி - உருப்படாத பிள்ளைகள் சன்னிகராயா அப்பனையாவுடன் தனித்து வாழ்ந்து வாழ்வை நாசம் செய்து கொள்கிறாள். இக்குடும்பத்தின் சிதைவுதான் கதை.சன்னிகராயருக்கு நாகலபுராவைச் சேர்ந்த கண்டிஜோயின் மகள் நஞ்சம்மா மணம்முடிக்கப்படுகிறாள். பெண்களை தகாத வார்த்தைகளில் மட்டும் பேசுவதையும் வரம்பில்லாத குரூரங்கக்ளை கட்டவிழ்க்கவும் பழகிய குடும்பத்திற்குள் வருகிறாள் நஞ்சம்மா. ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பொறுமையுடன், சாமர்த்தியத்துடன் வாழ்வை எதிர்கொள்கிறாள் நஞ்சம்மா. குழந்தைகள் ராமப்பா (தாத்தாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது), இரண்டாவது பெண் பார்வதி, கடைக்குட்டி விஷ்வா.இதுவிட்டு கிராமவாசிகளாக வரும் பல பாத்திரங்களுண்டு -  ஷிவலிங்க்கே கௌடா, ஷிவன்னா, அப்பன்னஜோய்ஸ்,அய்யன்சாஸ்த்ரி, மாதேவன்னவரு.

நிகழ்வடுக்களாக வேகமாக செல்லும் நாவலை வாசிக்கையில் நாவல் லௌகீகமான பிரச்சனைகளையே சொல்லிச் செல்வதாக தோன்றுவிடுகிறது.அதுவே உண்மையும் கூட. சுயநலம் காழ்ப்பு பொறாமையென மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்கிறார்கள்,சாபமிடுகிறார்கள். ஆனவரை கசப்புடன் சுயநலத்தை விடாமல் இருக்கிறார்கள். அதிலும் கௌரம்மா தீமையின் தேஜஸ்ஸுடன் நின்று எரிகிறாள். ஒரு தராசு நிறுத்தப்படுவது போல ஒரு பக்கம் இத்தகையவரகள் எனில் மறுபக்கம் நஞ்சம்மா அவள் பிள்ளைகள், குண்டேகௌடர், மகாதெவன்னவரு போன்றவர்கள் தன்னியல்பால் ஒளிமிக்கவர்களாகத் திகழ்கிறார்கள் (இயற்கையிலேயே இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக நம்பிக்கையுண்டு எனக்கு). வாசிக்கையில் - குறிப்பாக கௌரம்மா - ஏனிப்படி மனிதர்கள் தன் தலையில் தானே மண்வாரிக்கொள்வது போல் நடந்துகொள்கிறார்கள் எனும் கேள்வி எழாமல் இல்லை. நாவலில் பதிலிருப்பதாகவே தோன்றுகிறது. அவரவர் இயல்பு அது. ஒவ்வொரு உயிரும் அதனதன் இயல்புடன் உள்ளது என்பதே பதில். ஆனால் இவ்விருபாற்பட்ட பாத்திரங்களையும் சிறு தொனி மாற்றமுமின்றி ஒரே சீராக கடந்து செல்கிறது ஆசிரியரின் குரல். லௌகீக வாழ்வே - மனித மனித உறவுகளால் கட்டமைக்கப்படும் இந்த கமூக வாழ்வே -  நம் கட்டுக்குள்ளின்றி பெருகும் தன்மையுடையதெனும் எண்ணம் எழுந்துவிடுகிறது.

ஆரம்பத்தில் நடந்தேறுவது லௌகீக நாடகம் மட்டும்தான் - மக்கள் தீமையினால் பாழ்செய்கிறார்கள் வாழ்வை சிலர் தன் நன்மையால சாமர்த்தியத்தால் கருணையுடன் வாழ்வை தூக்கி நிறுத்திகிறார்கள்.  ஆனால் மானுட எல்லைக்குள் வராத மானுடத்தை மீறிய நிகழ்வுகள் நாவலில் மெல்ல நுழைகிறது. ஊருக்குள் வயலில் எலிகள் செத்து விழும் செய்திவருகிறது, ஊருக்குள் மாரம்மா (நோயின் மரணத்தின் தெய்வம்) நுழைந்துவிட்டதாக தண்டோரா போடப்படுகிறது. மூன்று ப்ளேக் அலைகள் நாவலில் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு அலைக்கும் ஊரை காலி செய்து ஊருக்கு புறத்தே வயலில் கொட்டகையிட்டு தங்குகிறார்கள். பின் ப்ளேக் ஓய்ந்தபின் - ஊருக்கு ஆறேழு பேர் ப்ளேகுக்கு பலியானபின்- மீண்டும் ஊருக்குள் வந்து மீண்டும் வாழ்க்கை தொடர்கிறது. ஒரு பஞ்சமும் நாவலில் சொல்லப்பட்டுள்ளது. வித்தியாசமற்ற தொனியில் சித்தரிக்கப்பட்டாலும் உலுக்கவதாக் இருக்கிறது பஞ்சத்தின் ப்ளேக்கின் பகுதிகள்.

நஞ்சம்மா ஆன திறமையுடன் வெறும் தீமையும் சுயநலமுமாய் அலையும் மனிதர்களை சுற்றி வைத்துக்கொண்டு வாழ்வை நேயத்துடன் முன்னெடுகிறாள். ஆனால் ப்ளேக்கின் முன் விக்கித்துப் போகிறாள். அவள் பிள்ளைகள் பார்வதி மற்றும் ராமப்பா ஒருவர் பின் ஒருவராக ப்ளெக்கில் இறந்து போகிறார்கள். நாவலின் மரண சித்தரிப்பு மறக்கமுடியாததாக மனதில் பதிந்துவிடுபவை.  மரணத்தின் வருகையை உணர்ந்துவிடும் ஒருவர் கடைசிவரை உணராமல் நிகழ்ந்துவிட்டதெனும் நிதர்சனம் முன் சிலைத்து நிற்கும் ஒருவர், மரணம் தரும் வெறுமையை சொல்லின்றி கடக்க்கும் இடங்கள், என துக்கத்திற்குள் வெகு வேகமாக இட்டுச் சென்றுவிடுகிறது நாவல். அதையும் மெல்லக் கடக்கிறாள் நஞ்சம்மா தன் கடைக்குட்டி விஷ்வாவிற்காக தன்னை திரட்டிக்கொள்கிறாள். தனக்கென ஒரு இல்லத்தை கட்டி முடிக்கிறாள். ஆனால் மீண்டும் ஒரு ப்ளேக் அலை. நஞ்சம்மா இறக்கிறாள். பெரும் வெறுமைக்குள் தள்ளிவிடுகிறது நாவல். மரணப்படுக்கையில் இருந்தபடி "எனக்கு ஏன் இப்படி ஆக வேண்டும்? ஆனவரை நன்மையை மட்டுமே ஒட்டி வாழ்வ்தவள்தானே நான்?" எனக் கேட்கிறாள். இகேள்வி எழுமிடம் நாவலின் உச்சம். மானுட நன்மை தீமை வரைஅயறைகளுக்குள் நின்றபடி மானுடம் மீறிய ஒன்றினைக் கண்டதால் எழும் கேள்வி. லௌகீக துக்கத்திலிருந்துதான் ஞானம் நோக்கிய முதல் கேள்வி பிறக்கிறது. 

நாவல் ஒட்டுமொத்தமாக ஒரு நம்பிக்கையின்மையை தொலைந்து நிற்கும் உணர்வை தருகிறது. அசராமல் நன்மையுடன் நின்றாடும் சுடரென நஞ்சம்மா இருக்கிறாள். ஆனால் எப்பயனும் இல்லையென இருள் ஒளி பாகுபாடற்ற அரூபமான காற்று கடந்து செல்கிறது. நாவலில் இறுதியில் நஞ்சம்மாவின் குழந்தையை கையில் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் துறவி மகாதெவனரு வாழ்வே துக்கவெளியாக விரிந்திருந்தாலும் நம்பிக்கையுடன் ஒளியுடன் அதனை கடப்பவராக இருக்கிறார். எத்தனை அரூபக் காற்று அடித்தாலும் எத்தனை சுடர்கள் அணைந்தாலும் மீண்டும் மீண்டும் ஏற்றப்படும் ஒரு மானுட சுடரை சுமந்து செல்பவராக இருக்கிறார். இப்படியான ஒருவரை சொல்லும் நாவலின் கடைசி பக்கம் மனைவி இறந்தபின் அவள் சம்பாதித்த பணத்தை விரையமாக செலவு செய்துகொண்டு, வயதைக் குறைத்துக் கூறி ஒரு பெண்ணை மணக்க முயன்று தோற்று, தன் தாயுடன் ஊராராக பிச்சை எடுத்து வாழும் சன்னிகராயர் மாதேவனவரு கையைப் பற்றிக்கொண்டு தன்னை கடப்பது தன் பிள்ளை என்பது கூட அறியாமல் தாம்பூலப் புகையிலையில் சொக்கியிருப்பதையும் சொல்கிறது.

Tuesday, November 23, 2021

வானத்திற்கு
ஒழுங்கேது
வரையரையற்ற விரிவு
நிறம் இன்னதென
சொல்லமுடியாத
தன்மை
பெரும்கூரைமட்டுமா
அடிநிலமுமா
ஒரு பெரும்
சதுரமா
முக்கோனமா
என்ன வடிவுக்குள்
இத்தனை
கிரகங்கள்
அண்டங்கள்
இந்த வரம்பற்ற வானத்தில்தான்
அவ்வளவு ஒழுங்காய்
ஒரு குருக்குவெட்டுக்கோடாக
அமைத்துக்கொண்டு
சிறகடிக்கிறது
ஒரு புற்கூட்டம்

Monday, November 22, 2021

இவ்வந்திக்குள்
கடல் நோக்கிச் செல்லும்
பறவை
கடல் மூழ்கும்
சூரியனின்
செம்மை சூடிற்று
அலைசரிகை
எங்கும்
செம்மையொளி
அலைத்துமிகள்
தீத்துளியென ஒளிர்ந்து
பின் நீரானது
கரை நிற்கும்
அவள் தீச்சுடரென
அம்மாலை
பற்றி எரிந்தது
ரம்மியமான செஞ்சுடரென

Sunday, November 21, 2021

விருட்சங்கள்
மண் துளைத்து
வேர் வளர்கிறது
இலைகள் வெளி துளைத்து
காலூன்றி நிற்கிறது

கடல் பெரும் கூரையென
அந்தரத்தில்
தளும்பி‌ நிற்கிறது

மீன்கள்
ஏரியின் ஆழத்திலா?
வானின் விரிவிலா?
வலசைப் பறவைகள்
வானின் மேலா
கடலின் கீழா

பூமியை விரித்து
கூரை ஓவியமென
பதித்துவிட்டிருக்கிறார்கள்
வானம் கால் எட்டா
தூரத்தில்
பெருநிலமென
விரிந்துள்ளது

மேகம் கிழித்து
கீழ்நோக்கி விழுகிறது
ஒரு தலைகீழ் உதயம்

Saturday, November 13, 2021

 ஒரு கணத்தை
என்ன செய்வது
இக்கணத்தை என்ன
செய்வது
ஒரு மலையின் விரிவுடன்
ஒரு மழைத்துளியின்
எளிய கணத்துடன்
ஒரு துளி ஒளியெனத்
தலும்பும்
ஒரு பெரும் எழும்பி
நிற்கும்‌அலையென
ஒரு மழைமேகக் கூட்டமென
மேல் கவிழும்
இக்கணத்தை
என்ன செய்ய?
ஒரு மலரை சூடிக்
காட்டுகிறாய்
அப்படியே இக்கணத்தையும்
எக்கணத்தையும்
ஒரு மலராக்கி சூட்டுவதன்
சூட்டிக்கொள்வதன்
எளிய சூட்சுமத்தையும்
 வண்ணத்துப்பூச்சிகள்
வண்ணமானது
பூக்களின் வண்ணம்
பருகி என்றாள்

பின்
கூந்தல் காற்றாடத் திரும்பி
வண்ணப்பூக்கள்
வண்ணமானது
வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணம்
உண்டு
என்று சிரித்தாள்

ஆம்
வண்ணங்கள் பறப்பவை
வண்ணங்கள் மலர்பவை
வண்ணங்கள் சிரிப்பவை
வண்ணங்கள் வண்ணமயமானதன்
கதையை மட்டும்
நாம் சொல்லிக்கொண்டே இருப்போம்

 நீ அலுங்காத போது
காற்று அசைக்கிறது
கொலுசின் சிறுமணிகளை

காற்று அசையாத போது
மெலும் மென்மையாய்
அசைக்கிறது
உன் நடை

அச்சிற்றொலியின்
தூண்டில் வீச்சுக்கு
மனம்
எழுகிறது
ஆழ் கடலில்
நீண்டு தொடும்
கதிர்க்கரங்கள்
நோக்கி எழும்
கனவுக் குமிழிகளாய்

தத்வமஸி

 பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி
ஒற்றைப் புள்ளியே பிரபஞ்சம்

கடலில் ஒரு துளி
ஒற்றைத் துளியே கடல்

காட்டில்‌ஒரு மலர்
காடே ஒரு மலர்

மலையில் சிறு கூழாங்கல்
கூழாங்கல்லே ஒரு மலை

வானில் ஒரு புள்
வானமே ஒரு புள்

இச்சொல் அடுக்கில்

நான் எது
எது நான்
 சிறுமியாய்
கன்னியாய்
பெண்ணாய்
பின் முதியவளாய்
நாள் தவறாது
பூப் பரித்து
சாமிக்கு இட்டவள்
விண்ணுலக வாயில் நின்று
பூமி நோக்கினாள்
உலகை சூழ்ந்த நீர்
இதழாகவும்
நடுவில் அமைந்த
நிலம் மகரந்தச்செரிவெனவும்
ஒரு மலரைக் கண்டாள்
பின் குதிங்கால் பட்டு
கொலுசொலிக்க
உள் சென்றாள்
விண்ணுலகின்
தன் முதல்நாள்
அன்றாடங்களுக்குள்
 எட்டிப் பூப்பரிக்கும்
சிங்காரப் பெண்ணே
நுணிக்கால் பாதம்
நிலம்விட்டெழவில்லை
இறக்கைகளும்
முளைக்கவில்லை
நீண்ட உன் கைகளில்
சரிந்து மேல்விழுந்து ஒலிக்கும்
வளையலன்றி வேறு
இசையெழவுமில்லை
ஆனாலும்
விண் நுன் கைகள்
சமைத்த பூக்கள்
உன் இத்தனை அருகாமைக்கும்
கிளை நீங்காத குருவி
இலை தன் உள்ளங்கை ஏந்தி
நடன பாவனையில் உன் மேல்
உதிர்க்கும் நீர்த்துளிகள்
மேலும்‌ மேலும்
நீ
மாலைச் சிறு நடையில்
சற்று நின்றவள்
ஸ்தம்பித்துப்போய்ச்
சொன்னால்
"வானம் என
ஒன்று இல்லையல்லவா"
"ஆம்"
"நாம் காண்பது நிறம்
மட்டுமல்லவா"
"ஆம்"
"நிறம் என்பது
கண்கள் காண்பது அல்லவா"
"ஆம்"
"கண்கள் இல்லாவிடில்
இவையனைத்தும்
எவ்விதமோ
இருக்கும் அல்லவா"
"ஆம்"
"நாம் காண்பது
நம் உலகமல்லவா
நாம்‌‌ காண்பது
ஒரு உலகம் மட்டுமல்லவா"
"ஆம் கண்ணே
இல்லாத வானின்
கீழ் நாம் நம்
கால்வேண்டும்
சிறு நிலத்தில்
இச்சிறுடலோடு
இக்கண்கள் எட்டித்
தொடும் காட்சிகளோடு
பல்லாயிரம் கனவுகளோடு
காதல்கொண்டுள்ளோம்"

Friday, May 14, 2021

ஆயிரம்
கிளை பரப்பி
கோடி இலை
விரித்து
கணமும்
அசைவின்மையறுத்த
பெருவிருட்சம்
ஒன்றின் கீழ்
அசைவின்றிக்
கிடக்கிறது
காற்று உண்ணும்
பாறை
நதியின் கைகள்
கச்சிதமாய்
கற்களை
செதுக்குவதில்லை

சந்தோஷமான ஒரு
சிறுவனைப்போல
ஓடிக்கொண்டிருக்கிறது
நதி
மிகச்சரி சமமான
எடையுள்ள
கூழாங்கற்களை
எங்குக்‌கண்டடைவாய்?
நம் துலாபாரமுள்
நடுவில்
ஓயப்போவதேயில்லை
அன்பைக்‌ குறிக்க
ஆயிரம் சொற்களிருந்தும்
இனி அவை வேண்டாம்

எண்கள்
எண்கள்
சந்தேகமற்றவை
பசப்பிலாதவை
பொருளின் எடையை
நீரின் அளவை
தூரத்தை
காலத்தை
விசையை
வேகத்தை
மின்சாரத்தை
பொருளின் மதிப்பை
நிலத்தை
மழையை
அண்டங்களுக்கிடையான
தூரத்தை
அளந்துவிடும் எண்
அன்பினை அளந்துவிடாதா

இத்தனை மில்லி‌
அன்புக்கு
அதே அளவு
அளந்து கொடு போதும்
எண்கள்
எப்படியாவது
சிக்கல்‌களை எல்லாம்
தீர்த்துவிடும்

நம் சிக்கல்கள எல்லாம்
அன்புச்சிக்கல்கள்தானே
 நாம் ஏன்
வெவ்வேறாக
உணர்கிறோம்
எப்போது தனிப்பட்டுப்போனோம்
எப்படி தனியர்களானோம்
நம் உணர்வுகள்
மற்றவர்களால்
உணரப்பாடாமல் போவது
எங்ஙனம்
எப்படி எதிரெதிர் உணர்வுகளை
சூடி களம்‌நிற்கிறோம்
நாம் காணத்தவறுவது
நாம் அறியாமல்‌ இருப்பது
நாம் உணராமல் இருப்பது
எதை

என் கண்ணீர்
அர்த்தமற்றது என்றுவிடாதே
ஒரு துளிக் கண்ணீரை
ஆயிரம் பொருக்குகளாக்கி
ஒரு பொருக்கில்‌ உறையும்
பசப்பினை மட்டுமாவது
உணர்

நம் உணர்வுகள்
ஒன்றாகட்டும்
அதிகாலை
ஒரு மென்மொட்டுப்
புன்னகயுடன்
கண்மலரும்
குழந்தை

அதிதூரத்து
கதிரொளியில்
பூக்கும் சிறு மென்மலர்
மலரலுங்காமால் ஆடும்
பட்டுபுச்சியின் வண்ணங்கள்
வண்ணங்களைக் கண்டு
துள்ளி ஆடும்
சிறு நாய்க்குட்டி
கொக்குக்கு முது காட்டி
சேற்றில் புரளும் எறுமை
பேசிவிட்டு ஓடித்துரத்தும்
அணில்
இன்னும் மறுபக்கம்
சென்றிராத நிலவு
அதிதூரத்தில் ஒரு நட்சத்திரம்
மழைத்தேக்கத்தில் கண்ணறியா
கோடி உயிர்கள்

கணம்‌ கணமும்
ஓம் ஓம்
என எழுகிறது யாவும்

Friday, April 30, 2021

நாம் முத்தமிட்ட தருணங்கள்
களித்திருந்த காலங்கள்
ஊடி‌வெறுத்து சலித்து அலைந்து
பின்
முதற்துளி மழையென
நம்மில் நாம் பொழிந்த
பிரதேசங்கள்
கண்ணின் நீர்த்திரை
வழி மட்டும் காணக்
கிட்டும் ஓர் உலகம்
யாரும் காணா
தூரத்தில்
எத்தடமும் இன்றி
நம்மால் சிருஷ்டிக்கப்பட்டு
நம்மை சிருஷ்டித்து
நாம்
நாம்
நாம்
நாம்
எனும் ஓர் வெளி
அங்குதான் நிகழ்கிறது
மானுடம்‌ கனவெனக்
கண்ட அனைத்தும்
காற்று அலைக்கிறது
படகினை
பிணைத்திருக்கும்
முடிச்சுகள்
நெகிழ்வாலானவை
நெகிழ்வுகள்
கைவிடுகின்றன
பற்றிய அனைத்தையும்
நீர்த் தலும்பல்
மட்டும் ஒலிக்கிறது
எல்லா திசைகளிலும் 
இந்த சிறு காலம்தான்
இந்த சிறு காலம்தான்
மலர்கள்
நம்மிடம்
விடைபெற்றுச் சென்ற
இப்பருவம்
வரண்ட நிலத்தின்
வெப்ப மூச்சு
அனலாக அலையாடும்
இந்த சிறு காலம் மட்டும்தான்

ஒரு புலரியில்
விண்ணுளவும் புள்
காணும்
அங்கிங்கு நீர் பூப்பதை
மலர்கள் அலையாடுவதை
முத்தங்கள்
பதிந்த
ஆயிரம்‌வடுக்களை
வருடுகையில்
மெல்ல உதிக்கும்
மலரெனெ
மேலெழுகிறது
துளியாய் எஞ்சிவிட்ட
அன்பின் கனமொன்று

விழிமயக்கு

சிறு கசங்கலாக
ஒரு நாள் படிந்த
உன் ஆடையுடன்
கொலுசில்லாத
கால்களுடன்
பணி முடித்த
சோர்வழகுடன்
இல்லம் மீள்கிறாய்

உதிர்ந்து கிளைமர்ந்த
கொன்றை
காற்று
வானம்
அந்தியின் கடைசிக் கிரணம்
மற்றும் காலம்
காத்துள்ளது
நீ அறியாமல்
கடக்கப்போகும்
அதிசயத்தை நிகழ்த்த

Thursday, April 29, 2021

அறியமுடியாமையும் அழகும்

 


இதுவரை திரைப்படமெனெ எடுக்கப்பட்ட அனைத்தும் "மானுட நாடகம்" எனும் வகைமைக்குள் அடங்கிவிடும் அல்லவா? காதல் துயரம், உறவுகளின் அழகு, முறிவு, அழகு, ஆணவம், அடைதல், வெற்றி, சரிவு, கருணை, அறம், வீரம், வீழ்ச்சி  மீண்டும் மீண்டும் மானுடமும் அதன் உணர்வுகளும். வெறும் மானுடம் எனும் ஒரு வார்த்தைக்குள் அனைத்தையும் அடக்குவதில் சிறு அநீதி இருப்பதாய் தோன்றினாலும்..... மானுடத்தின் அடிப்படைக் கேள்விகள் மானுடம் மீறிய ஒன்ற்னை நோக்கியதுதான் அல்லவா? காலம், ஒட்டுமொத்தமாய் மானுடம் எனும் உயிர்த்திரளின் நோக்கம், எல்லையற்ற  வானம் நம்முள் எழுப்புவது ஒரு கேள்வியையும் தான்.

Terrence Malickக்கின் படங்கள் மானுட நாடகத்திலிருந்து பிரபஞ்ச நாடகம் நோக்கி ஊசலாடுபவை. Tree of Life அப்படியான ஒரு படம். ஒரு மரணத்திலிருந்து எழும் "God Where are you?" எனும் கேள்வியிலிருந்து திரை ஒரு பெரும் மாயவெளியாய் பிரபஞ்ச்சத்தின் தோற்றம் நோக்கிச் செல்லும். பின் மெல்ல ஒரு பறவை தரையிரங்குவது போல மீண்டும் மானுட  நாடகத்திற்குள் வரும். ஆனால் இப்போது நாம் காண்பது வெறும் மானுட நாடகமாய் இருக்காது. பிரபஞ்சத்தின் பெருந்திரை பின்புலமென  அதற்கு அமைந்து விட்டிருக்கும். இந்த ஊசலாட்டம் எந்த ஒரு கலையின் உச்சபட்ச சாத்தியம் என்றே கருதுகிறேன்.

"Voyage of Time" - பெயரே கவித்துவமானது , காலம் பயணிக்கிறது. காலத்தின் பயணத்தினூடே சிறு குமிழிகள்தான் அல்லவா கலாச்சாரங்களும் ஒட்டு மொத்த மானுட நாடகமுமே. காலம் நிகழ்த்தும் அதிபிரம்மாண்டமான ஒரு நாடகத்திற்கும், பின் நாம் மானுடர்கள் மானுட மைய நோக்கினால் காண விரும்பும் கால நாடகத்தின் சிறு தெரிப்பான மானுட நாடகத்திற்கும் ஊசலாடுகிறது Voyage of time".

எண்ணற்ற இதுவரை நாம் கண்டிராத உயிர்கள், பல கலாச்சரங்களினூடாக எடுத்துக் கோர்க்கப்பட்ட துணுக்குகள், திகைக்கச் செய்யும் அழகுடன் இயற்கை, ஆதி மானுடர் கொண்டு சிறு மானுட நாடகம், இசை என ஒரு மாயமான நிகழ்வை விட்டுச் செல்கிறது Voyage of Time.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமானது, குறிப்பாக நிலம் சார்ந்த இயற்கைக் காட்சிகளும், விண்வெளிக் காட்சிகளும். பின்னணியில் வரும் பெண் குரல் சொல்கிறது ஒரு இடத்தில் "We know nothing". ஆம் ஏதுமறியவில்லை நாம் ஏதும் அறியப்போவதுமில்லை. ஆனால் இயற்கை நம்முடன் தொடர்புருத்தும் ஒரு மொழி உள்ளது - அழகு. இந்த பிரம்மாண்ட காட்சிகள் அறியமுடியாமையின் திகைப்பை விட்டுச்செல்லும் அதே கணம் அழகென நம்முன் எழுகிறது. தோன்றுகிறது, அர்த்தத்தை அறியமுடியாது, அழகை உணர்ந்துகொள்ளலாம். 

Voyage of Time அடிப்படையான கேள்வியை மையமிட்டுக்கொண்டு நம்முன் இயற்கையென விண் என விரிந்திருக்கும் பிரம்மாணடத்தின் முன் நாம் உணரும் அறியமுடியாமையை, அது கணமும் காட்டிச்செல்லும் அழகை பேசும் ஒரு Classic படைப்பு.

Friday, March 5, 2021

தூரத்து நீரில்
ஓங்கில்கள்
ஏக்கமுற ஒலிக்கிறது
கடலின் பல்லாயிரமாண்டுத்
தலும்பலை

பெருமீனொன்று
கடலுக்குள்
குமிழியடிக்கிறது

ஒரு கடலிலிருந்து
மற்றொரு கடலுக்குச் செல்லும்
படகொன்றின்
நுனியில்
சிறு கையளவுப் பறவையொன்று
விண்ணோக்கிச் சிறகெழுகிறது

கடலோரம்
கால் நனைய
நீ நடந்து
செல்கிறாய்
ஆகப்பெரும் சூரியன்
ஆகச்சிறிய உன் காதணியமைந்த
சிறு கல்லில்
ஒளிர்ந்தமைகிறது

Monday, March 1, 2021

இருளாய்
ஒளியாய்
அருவியென
விழுந்து வழிகிறது
வானம்

பூமி 
அருவியில்
வீழும்
சிறு கல்லாய்

Sunday, February 7, 2021

மலர்மொழி

மலர்கள் சூரியனோடு
பேசிக்கொண்டிருக்கின்றன

உதயத்தின் மலர்கள்
ஒளியை சுவாசமெனக் கொண்டு
உச்சாடனத்தை
துவங்கிற்று

அந்தியின் மலர்கள்
அலையோய்ந்து
கிளையமைந்து
மோனத்தில்
தன்னைத்தான்
மீட்டின

அடிமுடியற்ற
வான்
கண்டது
இரு மலர்களின்
உரையாடலை

இருளும் ஒளியுமாய்
நீளும்
சிறு இல்லின்
மலராடலை

விண்ணோக்கி
எழும்
பூமியின்
சொல்பெருவெளியை

Tuesday, January 19, 2021

காவியம்

மழுங்கிய வாட்களால்
நாம் ஆடும்
இந்நீள் யுத்தத்தில்
கழுத்துகள் அறுந்தோடவில்லை
குருதி பெறுக்கெடுக்கவில்லை

கொல்லும்‌துணிவின்றி
வாளுதறி இருகப்புல்லும்
அன்பின் முழுமையின்றி
நீள்கிறது
நீள்கிறது
போர்

எல்லாம் கூர்கொண்டு
முழுதமைந்து
முழுக்குருதியும்
அன்பின் முழுக்கண்ணீரும் சிந்தப்பட்டதெல்லாம்
யாரோ ஒருவன்
தீட்டிய
அம்மாபெரும் ஓவியத்தில்
மட்டும்

Tuesday, January 12, 2021

 நீரின்றி
வற்றிய நிலத்தின்
வெடிப்புப் பிளவுகள்
உடலெல்லாம் பரப்பி
இலையுதிர்த்து
நிற்கும்
தனி மரம்

ஆயிரம் காற்றுகளில்

பல்லாயிரம் பெருங்காலங்ளில்

மணலுரசும் நெருடலென
நொடிகளில்

இயற்றி நிற்கின்றது

தவத்தை

இருத்தலை

இருப்பெனும் தவத்தை

Monday, January 11, 2021

யுகத்திற்குப் பின் ஒரு விடியல்

 இருளாழம் நோக்கி
இருளைத் திறந்து
இருளுக்குள்
செல்லும் உன்னை
ஆராதிக்கிறது
இருள்
ஒரு சுடரென

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...