Tuesday, December 10, 2024

இப்பிறவி

 1

ஆள் விழுங்கும்
பெரும் சதுப்பு
உயிர்ப்பசி கரந்து
நாணலை காற்றில்
அலையவிட்டு
அகோவென்றிருக்கிறது
............

2

வீடு சுத்தமானது
பரணில் ஒன்றிரண்டு
நாகம் நாமறியாமல்
ஒளிப்புகா நிலவறையில்
ஆட்கொல்லும் ஆயுதங்களின்
இருப்பு
நாமறிந்து
.............

3

முள்வேலி
தாவிக் கடக்கும்
வனமிருகம்
ஆதியில் உதித்தனவாம்
சில தாகங்கள்
..............

4

உடைமை கொள்
என்றது
ஆதி அச்சம்
அதன் கூண்டிலிருந்து
காணத் தெரிகிறது
மலை மேல் விழும்
சுடரின் நிழல்
..........

5

ஆதி அச்சங்களின்
ஆதி இச்சைகளின்
நடுவில்
இச்சிறுகாலம்
...........

6

சுடர் மேற்கில் எழுந்தது
பதைக்க பதைக்க
கிழக்கில் ஓடியது
சுடர் கிழக்கில் தோன்ற
மேற்கில் திரும்பின
பயணம்
............

7

கோடையின் இச்சைகள்
ஓய்கின்றன
அடிவாரம் சென்றாகவேண்டும்
குளிரின் இச்சைப்பெருக்கு
எலும்பின் பாய்பவை
.............

8

ஒன்றில்
அவ்வொன்று மட்டும்
ஓய்ந்திருக்கும்
கணம் வாய்க்கவேயில்லை
சாட்டையின் சொடுக்குல்
தனதல்லா பாரமிழுக்கின்றன
எருதும் குதிரையும்
கோவேறும் யானையும்
...............

9

நெஞ்சின்
அகாதப் பெருக்கில்
ஒரு இழை தவழ் ஒளி
விரல் வழி
சுடராகியுள்ளது
நம் அகமெல்லாம்
...............

10

குருதிச்சொட்டும்
குருவாட்கள்
நம்முடையது
,.............

11

புல் பறவை
விருட்சம்
பெருகும்
பல்லாயிரமுயிர் உச்சாடனம்
வனத்தை நெஞ்செலாம்
சுமந்து குடில் திரும்பி
அகல் ஏற்றினேன்
கூரை சுவரை முட்டும்
ஒரு மூலையில்
கூரையின் அதே நிறத்தில்
வால் தெரிகிறது
................

12

முரண் உழட்டுகிறது
சுடர்
இருளை
நலுங்கச்செய்கிறது
.............

13

ஓராயிரமாண்டுகளாய்
சுற்றி சுற்றி
சுழல்கிறது பாதை
எவ்வடியில் உன்னை
இடறுவேன்
எச்சுழலில்
எழுந்தருள்வாய்
நஞ்சின் மோட்சத்தை

............

14

நகுதல்
உருக்கி ஓர் அழுகை
மோனம்
மூன்றின் அலையாடலில்
இப்படகு
..............

15

விஷத்தின் அமிலம்
அரித்து விட்டது
காண்ணாடிக் குடுவையை
அள்ள அள்ளத்
தெள்ளுநீரெலாம்
நஞ்சானது
இக்குடுவை
நஞ்சினது
...............

16

வடிகட்டி
வடிகட்டி
கசடு நீக்கினேன் நீரில்
விந்தினுள் உயிரணுவென
உரைகிறது
நெளியிழை நஞ்சின் துளி
..................

17

இவ்வூஞ்சல்
என்னை அப்பால்
எறியவில்லை
பறக்கும்
காற்றின் போதம் காட்டி
மீண்டும் மீண்டும்
உழட்டுகிறது
சிறுகாலவெளிக்குள்
...................

18

மேலும் கீழும்
அலைப்புண்டேன்
எண்ணிலாக் கோடிமுறை
இது
வீழ்ச்சியின் போது
எதிர்த்து உந்தும்
சிறுகாலம்
...................

19

இப்போழ்தில்தான்
உள்ளுரைக் கண்ணொன்று
திறந்து நோக்குகிறது
நடந்தேறும் நடிப்பினை
...................

20

களையக் களைய
பெருகும் அரிதாரம்
ஆம்
இச்சிறுகாலம்
நடனத்துக்கானது
..................

21

மலங்கள் மூன்றல்ல
ஒன்று
ஒன்றேயொன்று
பொய்யெனும்
ஒன்று
...................

22

புரிந்தது
தெய்வமென்பது
ஒன்று
ஒன்றேயொன்று
மெய்யெனும்
ஒன்று
..................

23

நாதம் கேட்கவில்லை
வானில் நதியென
ஓடுவதை
காணமட்டும் முடிகிறது
அகத்தில் நாதமொன்று
முரள்கிறது
.....................

24

எத்தனை
மலர் கண்டும்
எத்தனை
மலர்ச்சொல் தொடுத்தும்
வாய்க்கவில்லை
அகமெல்லாம்
மலராடும் வெளி
....................

25

இப்பெருஞ்சதுப்பை
அடைந்துள்ளேன்
இன்னும் எத்தனை
மரண தூரம்
உன் மலர்வெளி?
..................

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...