Saturday, December 21, 2024

உயர உயரப் பறக்கும்
பறவையைக் காணவும்
நரம்பொன்று
அறுந்து விழுந்தது
சுற்றிப் பெருகும்
நகரின் பதைக்கும் குரல்கள்
கேளாதானேன்
நீரில் மிதக்கும் உடலெனச்
சுழன்றேன்
நேர்கோட்டுப் பறவை
சுழன்றது
வானம் சுழன்றது
அறுபட்ட நரம்பு
உரசி மீண்டும்
மின் பற்றும்முன்
காட்சியானது
ஒரே ஒரு கணம்
வான்பெருஞ்சுழல்
நீ என்
வானமாக
இருக்கிறாய்
என் வேர்கள்
இவ்விடம்தான்
மலர் சுமக்கும்
என் பிலங்களில்
குளிர் நீர்ப்பெருகப்போவது
இங்குதான்
என் விருட்சங்களில்
புள்ளரவம் ஒலிப்பது
உன்னால்தான்
மேலும்
அணுக்களுக்கிடையே
நிரந்தரமான பிரிவு
என்பது உன்
வானத்தின் கீழ்
இல்லை‌ அல்லவா?
செல்லமுடியா
தூரமென்றில்லை
அன்பின்
கோர்த்த கைகள்
அப்படியே நீடிக்கமுடியாமை
குறித்த தர்க்கங்கள்
சதா ஒலித்துக்கொண்டே இருக்கும்
நகருக்குள்
செல்ல‌ விருப்பமில்லை
வானின் புகைக்கரம்
நீண்டு பனியாகி கவிழும்
இவ்வனத்தினுள்
நாம் வாழ
ஒரு சிற்றகல் போதும்
பூமியின் முதல்‌ அகல்
மலர்ந்ததிலிருந்தே
அகலின் நீண்ட நெடும் வரிசை
சொல்லிக்கொண்டிருக்கிறது
அன்பின் தர்க்கத்தை
இப்புலரியில்
ஒரு கோவிலிலிருந்து
கண் விழிக்கும்
இவ்வூரில்
இரவெல்லாம் தூங்காத
கனக்கும் கண்களுடன்
எதை வேட்கிறேன்
எத்தனைக் காலமாய்
இப்படி விடிகிறது
எத்தனைக் காலமாய்
நான் இப்படி அமர்ந்திருக்கிறேன்
ஊர் பதைத்து பணிக்குக்
கிளம்பும்‌முன்
ஆயிரம்‌ கால் மண்டபத்துக்
கூரையில்
உறக்கம் கொள்ளும்
வௌவால்களின் கனவில்
காலத்தின் எவ்விழை ஊடாடும்
இரவுக்குள்
பெய்யும் மழையில்
உயிர்ப்பெருகி நிற்கிறது
எவ்வொளியில்‌ காட்சியாகின்றன
விழும்‌‌ துளிகள்?
இலையின் ஒளிர்
காணக்கிடைப்பது எங்ஙனம்?
யார் கவித்தது
இம்மாபெரும் இருளை
நிலத்தின் மீது
நெஞ்சின் கூடுடைத்து
காதலின் வெளிக்குள்
பாயத் துடிக்கும்
இப்பறவையை
என்ன செய்வது?
ஜன்னல் கம்பியை
பற்றிப் படரும்
பச்சைக்கொடியே
வானம் வரைக் காட்டும்
எட்டுக் கம்பிகளில்
சுற்றி
சுற்றி
சுற்றியானபின்
எங்கு செல்வாய்?
உன் நுனியில்
அரும்பத் துடிக்கும்
உயிர்ப்பை எங்கு
பெற்றாய்?
தளிரிலையாகத் தவிக்கும்
உன் நுனி வாழும்
தெய்வம்
எக்கணத்தில்
ஆரோகணித்தது?
உன் ஒவ்வொரு அசைவுக்கும்
காலத்தின் சிற்றணு அசைகிறது
வனத்தின் மேல்
ஒரு பெருமூச்சு நடந்து செல்கிறது

Thursday, December 19, 2024

ஜோதிர்மயமான
உன்‌ இரவின்
சுடரில் விழுந்து
நான் இருளாவேன்
பின்
மெல்லத் துலங்கும்
அசைந்தாடும்
என்‌ சின்னஞ்சிறு சுடர்

Wednesday, December 18, 2024

மேகங்கள் முட்டி
வனத்தின் மேல்
கவிந்துவிட்டன
இரவு பொருமிக்கொண்டு
அமர்ந்திருந்தது
இரவுக்குள் ஓடும்
நதிச்சுழிப்புகள்
வின்நீரை தாகிக்கின்றன
இருளுக்குள்
ஊடறுத்துச் செல்லும்
இப்பறவை
இப்பிறவியை முடித்துக்கொண்டு
எங்கு செல்கிறது?
இரவின் சருகுகள்
என் சிறு அசைவையும்
சப்திக்கின்றன
இரவின் மலர்களோடு
மலராய்
படம் விரித்த நெளியுடல்
நிற்கிறது
மலரின் பரிமளத்தினூடே
நஞ்சின் நெடி
வீசும் இவ்விரவில்
நான் நிசப்தமான வானை
பெருகும்‌ சுவாசமெடுத்து
நிறைத்துக்கொள்கிறேன்
பகலின் கரங்கள்தான்
சுழித்து வளைந்து
மலர்ந்து நடனபாவங்களிட்டு
கட்டிற்று
அந்தியின்
கைகள்தான்
அணிவித்தன
நிலத்தின்மேல்
பெருகியுள்ளது
இருளின்‌ மலர்கள்
இரவு
சலனமின்மையால் ஆனது
எழுந்த புகையை
காற்று நெருக்கி நிறுத்தியது
போல்
உயிரின்
சிற்றசைவுமின்றி
கிடக்கும் இவ்விரவு
என்னுள் நிரம்பியது
என் தூரிகை
அசைய மறுக்கின்றன
அதன் சொல்
ஏங்கி அழிகிறது
குரலெழவில்லை
சதுப்பின் நிலம்
மெல்ல‌‌ விம்மி மைகிறது
புலரியின் துளிபட்டு
எல்லாம் பெருகும்பொழுதில்
நான் நம்பமருக்கிறேன்
இங்குதான் இரவு
கிடந்ததென்று 
இரவுக்குள்
குளிர் பரவுவது போல்
பிரிவு என்னை
வியாபிக்கிறது
என்றோ கண்ட
அயல்நிலத்துப் பறவையை
நினைத்துக்கொள்கிறேன்
பாதத்தை குளிராய்
அணைத்து மீண்ட
அலைகளை
நினைத்துக்கொள்கிறேன்
யாரோ வீட்டின்
ஜன்னல் கண்ணாடியில்
முகம் பார்த்தது
நினைவெழுகிறது
இந்த குளிர் மிக்க
இரவில்
குளிர்காயும்
நெருப்பின் புகையைப்போல்
நினைவுகள் எழுந்து மறைகின்றன
தீயின் ஜ்வாலைகள்
அணையும்‌ நாட்களில்
பிரிவின் துணையுமின்றி
தனித்தலையும் குளிரால்
சூழப்படுவேன்
வானம்‌‌ சிகையாக
இரவை சூடி
நிற்கிறாய்
என் அகத்தை
உன் இரவின்‌ ஏரிக்குள்
வீசி எறிந்தபின்
ஏரி ஆழத்து வளைக்குள்‌‌ சென்று
பகலெல்லாம்
புதைந்துகொள்கிறேன்
அந்தியின்‌‌ கடைசிப்புள்
அழைக்கும் போது
இரவு வான் நோக்கி
ஆழம் விட்டெழும்
குமிழியாய் அகம்
உன் இரவின்
முன்
வெறும்
இச்சையின் பெருக்காய்
நிற்கிறேன்
நாகத்தின் கண் ஒளிர
என் பற்கள்
மாமிச ருசிக்கு
கூர்க்கட்டியுள்ளது
ஏரியின் சிற்றலையில்
நட்சத்திரமெல்லாம்
கலைந்துடைகிறது
பெருகிக்கிடக்கும் இரவாலும்
வளைக்க முடியா நாணலை
இவ்வனத்தில்
யார் நட்டு‌ வளர்த்தது?
நிலவின் மகுடிக்குரலுக்கு
நாகமொன்று உடல் முறிக்கிறது
ஒன்று அசைந்தாலும்
இமை நலுங்கினாலும்
என
நிச்சலனமான
இந்த வனத்தின் இரவில்
வானத்தின் கடைசித்
துளியும் மோனித்துக்கிடக்கும்
ஏரியில்
நீர்க்கோழி
ஆகாசத்தைக் கூரிட்டு வந்து
நிச்சலனம் நீர் அருந்தும் ஒளியில்
குமிழியிட்டது
நிலவு உடைந்து துண்டாகி
அலைப்பெருக்கிற்று
அண்டத்துள்
நட்டு நீரூற்றி
ஒளி பார்க்கக் கிடத்தினால்
மலர்ந்து விடுகிறது
மலர்

தீரவேயில்லை
அத்தனை
எளிதா
ஒரு மலரை
ஆக்குவது?
எத்தனைத்
தேடிக் கண்டடைந்தேன்
தெரியுமா
உன் நதிச் சுழிப்புகளின்
ஒவ்வொரு வளைவையும்
பார்த்து பார்த்து
கண்டெடுத்தேன்
இப்பரிசினை
வலசைப்புள்
அழைத்திராவிட்டால்
வீடடைந்து
கைகளில்‌ ஏந்திக்
கொடுத்திருப்பேன்
இப்போதோ
மலை நுனி வரை சென்று
கடல் மேல் மிதந்து
புள்ளியாகக் கரையும்
புள்ளினை
பார்த்து நிற்கிறேன்

Monday, December 16, 2024

அகமலர்

 1

கையில்
ஒரு மலரை வைத்தபடி
ஆழ நோக்குகையில்
ஜன்னல் காட்சிகளாய்
விரைந்து மறைகிறது
இனிமைகள்
பின் இரவின் வெளிச்சத்தில்
வயலோர காழ்வாயில்
விழுந்து கிடக்கும்
நிலவுக்குள்
குமிழியடிக்கிறது
சர்ப்பம் போலொன்று

2

மலரில் கூடிய
முழுமை
ஏன் கூடவேயில்லை
அன்பில்

3

இந்த சாலையில்
தினம் தினம்
சென்று வருகிறேன்
இந்த பூமிக்குள்
பிறந்து பிறந்து
அழிகிறேன்
நதிச் சுழலில்
மலர் சிக்கியதுபோல்
வந்து கலந்தது உன் சொல்

4

மறக்கவே முடியவில்லை
கையில் ஒரு காகிதத்தை
வைத்துக்கொண்டு
வெகு நேரமாகியும்
ஒரு சொல் கூட எழாத மாலையை
முன்னிருந்த குளத்தில்
இரவின் முதல் துளி விழவும்
தாமரை ஒன்று மலர்ந்தது
நான் சொல்லற்று
இரவைக் கழித்தேன்

5

என் வாசம்
இன்னுமா
தெரியவில்லை?
மலரின் மணம்தான்
மலர்க்கூடையின்
மணமல்லவா?

6

அப்பூவை
பற்றிக்கொண்டிருக்கும்
அடர் சிவப்பைப்போல்
பற்றிக்கொண்டுள்ளாய்
நிறம் உதிர்ந்த
பின்
பூவின் நிறமென்ன?

7

அத்தனைப்பெரிய
வீட்டில்
ஒரு மலரை
ஜன்னல் ஒளியூற்றி
வளர்த்தெடுத்தது
அதன் பாடல்
அதன் பரிமளத்தைப்போல்
சிறு‌ எல்லையில்
விழுந்து கரைகிறது
அதன் ஒரு சொல்
காதில் விழுந்துவிடும் நாள்
பிரகாசிப்பதை
நான் கவனிக்காமல்
இல்லை

8

மலரினும் மெல்லிய
சுடரை
மலரச்செய்கையில்
சுடர் கண் திறக்கும்
அதே கணத்தில்
அகமொன்று
இதழ்விரிக்கிறது

9

சரிவெல்லாம்
பெருகிக்கிடந்த மலர்கள்
ஒன்றே போல் ஆடின
ஒன்றே போல் சரிந்தன
இரவின் துளி ஒளியில்
மங்கும் நிறத்தில்
ஆத்மமாய் நகைத்தன

அறிந்தேன்
கூடிக்களிக்க
மானுடர் கற்றது
எங்கிருந்தென்று

10

உன் அத்தனை
ஆடைகளிலும்
ஒரு மலரின்
படமுள்ளது

மலரற்ற ஒரு
ஆடையை
அணிகையில்தான்
முட்களில்
கிழிபடுகின்றன விரல்கள்

11

மெழுகுவர்த்தி
கரைந்துகொண்டே
இருக்கிறது

காலையில்
மலர்ந்துவிட்ட
மலர்
மாலையை
நோக்கி
உதிர்ந்துகொண்டிருக்கிறது

வானத்திலிருந்து
உதிர்ந்த மலர்
மண் தொட்ட போது
நான் தயராக இருந்தேன்

12

பிரிந்து நிற்கும் நாம்
எம்மலரைக்
கண்டபின்
காதலித்தோமோ
அம்மலரின் நிலத்துக்குத்
திரும்பிச்செல்வோம்
அம்மலரை முகம்
கொண்டு நோக்குகையில்
அது சொல்லும்
அதே மாயச்சொல்லை

13

வான்நீலத்தில்
ஒரு மலர்ப்பூக்கும்
அதை
நான் உனக்குச்
சூட்டுவேன்

14

நிச்சயமாய்
ஒளி மங்கி
அணையப்போகும்
இம்மாலைக்குள்
ஒரு பெரும்பகலின்
கனம் அழுந்தும்
உடலுடன்
வந்து சேர்கிறேன்
சுடர் அணையும்முன்
அவிழும்
இரவின்
ஒரு இதழையாவது
கண்டுவிடவேண்டும்

15

கிருட்டிகளின்‌ நாதத்தை
ஊடறுக்கும்
தவளையின் வேட்டல்
ஒலிக்கும் இவ்விரவில்
மோனத்தில் நிரம்பிய
குளமொன்றில்
காற்றின் ஒரு துளி
விழுகிறது
அத்தனை நிச்சலனத்தினூடே
மலரானது
நீர்

16

சொல் குமிழியாகி மறையும்
கடல் ஆழத்தில்
சொல்லாகும் சிறு
பிரயத்தனமுமின்றி
அவிழ்ந்தது
ஒரு மலர்

17

மலர் பெருகிக்
காடாகக் கிடக்கும்
நிலத்தில்
ஒரு சொல்லைக்கூட
எடுத்துக்கொள்ளவில்லை
கண்ணீராகாத ஒன்றை
உற்று நோக்கியபடி
பசியின் கண்ணொளிரும்
சதுப்புகளுக்குத்
திரும்பினேன்

18

உரைந்த
நிலம்
உரைந்த
மரம்
உரைந்த
கடல்
உரசிச் சேர்த்த
கைச்சூடினை
ஏந்திய முகம்
வாங்கிக்கொண்டது
முதல் பொருக்கு
நீராகிச் சொட்டியது
குளிரின் ஆன்மத்தில்
எழுந்தது
முதல் அலை
ஆழம் கடல்வழி
பார்க்கிறது வானத்தை

19

கண்ணீராகி
உடைந்தொழுகி
கடல் மண் ஈரத்தில்
கலந்திடுவேன்
என் மேலெல்லாம்
வானம் மலர்ந்து
கிடக்கும்

20

மலருடன்
உரையாடுபவர்க்குத்
தெரியும்
அதன் மோன வெளியை
எவ்வானம்
நிறைத்துள்ளதென்று

21

ஒரே செடி
ஒரே நீர்
ஒரே ஒளி
நம் தோட்டத்து
இரு‌ வேறு மலர்கள்
ஒன்றே போலுள்ளன
ஆனால்
ஒரு மலரில்
எட்டாம் இதழில்
மூனறாம் வளைவில்
அரைக்கோணம்
மென் திருப்பத்தில்
வித்தியாசமுள்ளது

அப்படித்தான்
ஆனது இப்பெருங்காடு

22

ஸ்ருதி
சேர்ந்துவிட்டது
இனி நதியில்
வழுக்கிச் சென்று
மலர்ச்சதுப்புக்குள்
விழுவேன்

வழியெல்லாம்
பின்தொடரும்
நீர்ன்‌ கோடாய்

23

அருகணைந்த
எரிகல்லொன்று
கடலை ஆக்கிற்று
சுடரும் எரிமலராய்

24

ஓவியங்களில்
மலரை
தீட்டிக்கொண்டேஇருந்தார்
வீணையின்‌ தந்தியை
மலரச்செய்தார்
அந்தியை
மாபெரும் மலராக
அவர் கண் கண்டுவந்தது
உரைக்காவிடினும் கொண்டேன்
மலராதலே
அத்ம வாக்கியமென்று

Saturday, December 14, 2024

குழல்

 1

சித்தம் பிறழ்ந்த
இப்பறவை
ஓயாச் சிறகடிக்கிறது
வான் பெருகும் இசை
கூண்டினுள் இழைந்துவர
..............

2

விதைவிட்டு
அலரும்
முதல் இலையில்
பரவிற்று
இசை வரிகளாய்
உன் கீதம்
............

3

புள்ளினம்
கலைந்தெழுகிறது
ஏதுமற்ற வான்
கனிந்துவிட்டது
வசந்தத்தின் முதல் மலர்
அலரக் காத்துள்ளது
குழலில் இதழ் பதித்து
அண்டப் பெருமூச்சை
இசையாக்கு
................

4

விழு நட்சத்திரத்தை
மீட்டுகிறது
காற்றில் அலையாடும்
உதிர்ந்த இறகை
மீட்டுகிறது
உன்
இசை
...............

5

இசையின்
சிறு ஓடைகள்
நாதப் பெருவெள்ளமானது
இந்நிலத்தின்
நதியெல்லாம் பெருகி
கடலானது
................

6

கடலைக் கடக்கும்
வலசைப்புள்
எழுதிச் செல்கிறது
நீண்டதொரு
இசைக்குறிப்பை
.................

7

மேகத்தின்
கலைதலும் இணைதலும்
இசையாலென்றால்
மழைப் பெருவது
குழல்நாதத்தால் என்றால்
பித்தன் என்றனர்
என்னை
.................

8

வான் அளக்கும்
புள்ளினை
விழுந்துடைந்து
எழுந்தமர்ந்து
தொடர்கிறது
நிழல்
..................

9

விருட்சங்கள்
வான் நோக்கி
கைநீட்டுவது
ஏனென்றறிவாயா?
................

10

வனம்
மதுரக் கிறக்கத்தில்
மோனித்திருப்பது
ஏனென்றறிவாயா?
................

11

மேனியெல்லாம்
விரவிக் கிடந்தும்
கடலாழம் செல்ல
இயலா
நிலவொளியின்
அழல் அறிவாயா?
................

12

வண்ணமாய்ப்
பெருகினர்
மானிடர்
அவர் ஆழத்துறையும்
கண்ணீரின் தழல்
அறிவாயா?
..................

13

வானம் பெருகிச்
சாக நிற்கிறது
கடல் தன்னை
அணைத்துக்கொள்ள
வேண்டி நிற்கிறது
நிலவு
துளிக் கணணீராய்
உதிரக் காத்துள்ளது
ஏனென்றறிவாயா?
..............

14

இலையின் மேல் வரிகளாய்
அணில் முதுகின் கோடுகளாய்
சிறகின் வண்ணங்களாய்
அலகின் அடர்நிறமாய்
கழுத்தின் மயில் நிறமாய்
ஆதி இசையில் பிறந்து
காலத்தின் கிளைபிடித்து
தாவித் தாவி வருகின்றன
உன் படிமங்கள்
................

15

இலையோடும்
மேல்வரிகள் கண்டபின்
முகம் நேரிட்டு
உள்ளங்கை ரேகை
நோக்கினேன்
கண் சொருகிற்று
நாளங்களில்
வெடித்துப் பெருகிற்று
இசை
..................

16

மௌனத்திலும்
இசையுண்டு
இசையின்மை
என்ற ஒன்றில்லை
..................

17

வெளி நிறைத்திருக்கும்
உன் இசையில்
ஏன் இத்தனை
மௌனம்?
...............

18

உன் இசையில்
ஆழ்வதையே
ஊழ்கமென்றனர்
உன்‌ இசையை
அறிவதையே
ஞானமென்றனர்
உன் இசையைப்
பாடுவதையே
கவிதை என்றனர்
உன் இசைக்கு
நடனம் புரிவதையே
கர்மம் என்றனர்
.................

19

வாழ்ந்தார்
நீத்தார்
பின் நீத்தார்
வாழ்ந்தார்
என்ன மாதிரி
இசைச்சுழலிது?
..................

20

ஒரு உயிர்நிரையின்
கடைசி
உயிர் அழிகையில்
கனிந்து நோக்குமா
உன் இசை
..................

21

காலம் காலமாய்
உதிரும்
சருகுகளுக்கு
எக்கீதம்
இசைக்கிறாய்?
.................

22

அந்தி இந்நிலத்தின் மேல்
வண்ணப்பேரலையாய்
பாய்ந்து விழுகிறது
உன் கன்றுகள்
குழல் நாதத்தில்
கண் சொருகி
நிற்கின்றன
..................

23

யாரோ ஏறறிய சுடர்
சுடர் மஞ்சள் அமர்திருக்கும்
சுடர் நீலத்தில்
நலுங்குகிறது
இசை
..................

24

வன தெய்வமொன்றின்
சுடுமண் சிற்பம்
வெறித்துப் பார்க்கிறது
இம்மண்ணின்
தர்ம அதர்மங்களுக்கு
உன் இசை
என்ன சொல்கிறது?
................

25

உன் இசையால்
இலை உதிர்ந்தது
உன் இசையால்
பசுமை துளிர்த்தது
மலர் பெருகியது
வனமாய் வெடித்தெழுந்தது
பின்
சரிந்து மட்கி அழிந்தது
உன் இசையால்
..................

26

நம் வாசல்களில்
இசை‌ காத்துள்ளது
வெள்ளமெனப் பெருகி
அகமெல்லாம்
நிறைக்க
...................

27

வெளியெங்கும்
ஓங்காரமாய்
நின்ற இசை
மானுடப் பெருநடனத்துக்கு
வண்ணப்பேரிசையாய்
முழங்கிற்று
..................

28

இசை சொல்கிறது
மகிழ்ந்திரு
இசை சொல்கிறது
ஏகாந்திரு
இசை சொல்கிறது
உன் ஒவ்வொரு
துளியும் நானென்று
..................

29

கடலின் ஆழத்தில்
உன் இசையின் த்வனி என்ன?
பில்லியன் ஒளியாண்டுகளுக்கு
அப்பால்
உன் இசை எப்படி ஒலிக்கும்?
இதோ என் நாளங்களில்
ஓடுகிற அதே லயம் அல்லவா?
................

30

வானிலிருந்து
வழிந்த
உன் இசைதான்
இலைமேல்
வரிகளானது
அல்லவா?
..................

31

வனம்
வெண்மை சூடிற்று
குளிரில்
இசைக்கலையும்
பித்தனின் தடங்கள்
பனிக்கோளங்களில்
..............

32

ஒரு நாதம்
மற்றொன்றில்
இழைந்தது
ஒரு பட்டாம்பூச்சி
மலர் மேல்
அமர்ந்தது
...............

33

எங்கு தொடங்கிற்று
எதை நோக்கிச் செல்கிறது
இசையின் சமிக்ஞைகளை
பின் தொடர்வதன்றி
செய்வதற்கொன்றுமில்லை
..................

34

ஆயிரமாயிரமாண்டுகளாய்
ஆயிரம்‌முறை சொல்லியானபின்
மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்
உன் இசை ஆதியற்றது
அந்தமிலாதது
மேலும்
என்னுள்ளிருப்பதும்
அதே இசையென்றும்
...................

35

அதனால் சொல்கிறேன்
இசையற்ற ஏதுமில்லை
என்று
..................

Friday, December 13, 2024

ஜினன்

1

பேருடல்
இடம்விட்டுப்
பெயராமல் நிற்கிறது
உடலெல்லாம்
உயிர்ப்பெருக
காலம் தியானிக்கிறது
................

2

அகண்ட தோள்
இடுங்கிய மென் உந்தி
ஊன்றிய கால்கள்
வழிந்து சிலைத்த கைகள்
சுருண்ட குறி
பின் கண்களை திறந்துவைத்தான்
அகாலம் நோக்கி
உளி பெயர்த்தது
ஆழத்துரையும் பாறையை
படைத்ததில் வந்தேறியதை
விழுந்தி வணங்கினான்
..................

3

மீனின்
பெருங்கூட்டமொன்று
குமிழியடித்து
ஆழம் சென்றது
கடல்
வெறும்
வானமானது
.................

4

உதிர்ந்த சொல்
வன ஆழத்தில்
விதையாய் விழுந்தது
சொல்லோய்ந்த
நிலமெழுந்த விருட்சங்கள்
வானுடன் பேசின
ஊழ்க லயத்தில்
...................

5

சொல் வென்று
பசி வென்று
புலன் வென்று
காலத்தைக் கண்கொண்டு
நோக்கினான்
வீரன்
...................

6

வெயில் எழுந்தது
இலை அலுங்கிற்று
காறறெழ
சிற்றலை பரப்பிற்று
ஏரி
ஏகாந்திருக்கும் நிலவெளி
குனறின் மேல்
ஏறிக்கொண்டிருக்கிறான்
ஜினன்
................

7

மெய்யெழுந்து
உடல் நிறைக்க
மெய் ஓய்ந்தது
வான் தன் விரிந்த சிறகால்
அழைக்கிறது
மெய் விரவிய புள்ளினை
................

8

ஊழ்கத்தின் மதுரம்
வழிந்த தடமென
மழைநீர்த் தடம் கிடக்கும்
குன்று
வானம் விழுந்து கிடக்கிறது
யுகம் யுகமாய்
..................

9

புலன் துளைவழி
காற்று மட்டும்
ஆடுகிறது
வளி சுழலும்
பெரும்பாறைக் குன்றின்மேல்
உயிரோடும் ஜினன்
தனித்துள்ளான்‌ வானுடன்
...................

10

பெரும்புற்கூட்டம்
குன்றின் மேல்
இளைப்பாறிற்று
புள்ளின் ஆன்மமறியும்
உயிரெலாம் அணைத்துப் பெருகும்
காருண்யத்தை
.....................

11


துளிநீரின்றி
வெயில் காயும்
குன்றின்
ஆழத்துப் பிலத்தில்
பெருக்கெடுக்கிறது
ஓயாக்கருணையூற்று
.................

12

சொல்லெடுக்காமல்
சொல் மறந்தது
சொல்லாகா
அகத்தின் அழல்
கனன்று ஓய்ந்தது
வெளியின் மொழி
அகம் நிறைந்தபின்
கண்கள் அசையவில்லை
தொடுவான்‌விட்டு
..............
...............

13

நீரின்றி விட்டபின்
இலைகள் சருகாய் விழுந்தன
மரம் பட்டது
மண் வரண்டது
மாவிருட்சங்கள் விழுந்து மட்கின
சொற்பெருங்கானகம்
ஒரு சொல்லின்றி ஆனபின்
நிறைத்தது லயம்
வனமெங்கும்
வானமெங்கும்
..................

14

வானத்தில்
சொல் ஏதுமில்லை
நாதத்தின்
பெருவெளி அது
..................

15

ஜினனின்
அகத்தில்
சொல் ஏதுமில்லை
மோனத்தின்
பெருவெளி அது
..............

Thursday, December 12, 2024

அது

 1

சிட்டுக்குருவிக்கு
நீர் வைத்தேன்
சிறு கின்னத்தில்
எந்நீர் எழுந்து
இம்மேகமானது?
இம்மேகத்தை இழுத்து
வந்தது எக்காற்று?
ஆயிரமாயிரம்
மழைப்பறவை
விழுந்தது சிறுகின்னத்தில்

பறவையை நீராக்கும்
மாயத்தை நிகழ்த்துவது
அது
...............

2

அறியா நிலம்நோக்கிய
பயணம் காத்திருந்தது
கடல் நோக்கிய
கடலோடி கண்டான்
அறியா நிலம்நோக்கி
மிதக்கும் கடலை
................

3

மலர் சொன்னது
வண்டின் முரழ்வில்
வானத்தின் லயம்
த்வனிப்பதாகவும்
தேன் திரட்டி அளிப்பது
வானத்திற்கே என்றும்

..................

4

திமிறி எழுந்து விழுந்த
பேருடல் மச்சத்தின்
வாலரைவில்
கடலின் துளி சென்று
வலசைப்புள் சிறகமர்ந்தது
இப்படித்தான்
கடல் பனிக்காடுகளுக்குச்
சென்றது
................

5

அணு‌ வெடித்துத்தான்
இச்சிறு பிரளயம்
அணுவுள்ளுரைந்து
அணுக்களுக்குள் பரவி
பிரளயமானது
அது
................

6

அணுவைப்
பிளக்கும்
முன்னும்
அணுவுள்ளரைந்தது அது
................

7

உன் நாமத்தின்
கதவுகளை தாழிட்ட நாளில்
தூணிலில்லை
துரும்பிலில்லை
விண்ணில்
மண்ணில்
என்னில் இல்லை
நின் நாமத்தின்
சிறுவாயிலுக்கப்பால்
உள்ளது
என்னையும்
அடக்கிப்பெருகிய
தனிப்பெருங்கடலொன்று
................

8

துளியொன்றுப்பெருகி
கடலானது
துளியின் ஆன்மம்
உரைகிறது
இக்கடலெங்கும்
.................

9

எண்ணமிட்டதும்
எண்ணமும்
அதுவெனில்
என்‌ சுழிப்புகளும்
இருள் எழும் நஞ்சும்
இருளும்
அம்மூன்றும்கூட
அதுவல்லவா?
................

10

பெருக்கிவிட்டுள்ளாய்
சுமந்து அலைகிறேன்
என்றுணர்வது
நீயுமாய்
நானுமாய்
உருக்கொண்ட ஆதியை
...................

11

விண்ணின் தீ
ஆக்கியது
உயிர்ப்பெருக்கை
சுடலைத் தீ
கொண்டது ஒவ்வொன்றாய்
இருதகைக்கொல்லியில்
உரைகிறது
அது
...................

12

அதனால்
ஆதியில்
கார்வை மட்டுமிருந்தது
அதனினின்று பிறந்தது
ஒலி
அகமெல்லாம் விரவிய
ஒழுங்கு
ஒலியை இசையாக்கியது
பின் இசை
ஓயா இசைப்பெருநடனமானது
....................

13

முதலில் எழுந்தது
விடம்
பின் வந்தது
அமிர்தம்
விடமலர்
என்பதா உன்னை?
....................

14

ப்ரியங்களற்ற
சூன்யவெளி
நின்னதென்றறிந்தேன்
இருட்புள்ளிகளை
கோத்தெடுத்து
மலராக்கினேன்
உன்னில் நான் வந்து
என்னில் சொல் வந்தது
சூன்யத்தை மலர்வெளியாக்கவே
....................

15

இருள்வெளியில்
ஒளிப்புள்ளியா?
ஒளிப்பெருக்கில்
இருட்புள்ளியா?
தோன்றா அழியா
உன் இருப்பு
எங்ஙனம்?
அந்தியின் ஒளிப்பிழம்பில்
நிழலுருவாய் விருட்சம்
இருட்புற்கூட்டம் கலைந்தெழுந்து
அமைகிறது
.....................

16

படைப்பின்
காருண்யம்தான்
ஆக்கியது அனைத்தையும்
................

17

படைப்பின்
அழல் பற்றி
எரிந்துருமாறியது
அனைத்தும்
.................

18

உன் மூச்சின் ஓட்டம் எது?
உன் நாளங்களில் ஓடுவது?
பூமிக்கு வெளியில்
ஆகாச வெளி
எங்கு முடிகிறது?
அண்டத்தை படைத்தது
எங்ஙனம்?
ஒரு மலரை ஆக்கியது
எப்படி?
முழநீளக் கைக்கொண்டு
முடிவிலி அளக்கநினைக்கும்
முட்டாளென்று
கூத்தாடினான் பித்தன்
....................

19

ஆனதெல்லாம்
அழிந்தது
அழிந்ததெல்லாம்
ஆனது
ஆதிக்கும் முன்னிருந்தது
எஞ்சியது
அழிவுக்கும் அப்பால்
.................

20

தியானித்தலே
இருப்பாய்
கொண்டது
அது
.................

21

ஊழ்கத்தின் வானில்
மேகம் உருமாறுகிறது
புற்கூட்டம் சிறகுவிரித்துள்ளது
ஊழ்கமின்றி உழலும்
உயிர்க்கூட்டமும்
தோன்றியழிவது
முதல்முடிவில்லா
ஊழ்கத்தில்
................

22

எல்லாம் நீ
என்றல்ல
என்னுள்
சொல் கனிந்தது
மலர் நீ
என்றுரைக்க
...............

23

ஒலி
நீ
என்றல்ல
என்னுள்
சொல் பிறந்தது
இசை நீ
என்று பாட
................

24

சூன்யம் நீ
என்றல்ல
என்னுள்
சொல் எழுந்தது
இருளில் இருளாய்
நடந்தேறும்
உன் நடனம் சுட்ட
...............

25

அன்பற்ற பிலம்
நீ
அன்பின் பெருவெள்ளம்
நீ
...............

26

மலரின்மை நீ
மலர் நீ
..............

27

உழல்தல் நீ
ஊழ்கமும் நீ
.............

28

விதை நீ
விருட்சம் நீ
மட்கியதுண்ணும்
நுண்ணியிர் நீ
.............

29

நான் நீ
நானல்லா
அனைத்தும்
நீ
............

30

பொய் உண்மை
எல்லாம் அடங்கிய
மெய்மை
நீ
..............

31

உன்னை அறிவேன்
உன்னை உணர்வேன்
உன்னைத் தொழுவேன்
...............

32

இருளிலும்
ஒளியிலும்
நீரே மழை
..............

33

அறியேன்
சூன்யத்திகிருந்து
மலர் வந்த
சூட்சுமம்
............

34

ஆறியேன்
உயிர் வந்த
சூட்சுமத்தை
.............

35

அறியேன்
விதை
வனமாகும்
சூட்சுமத்தை
............

36

அறியேன்
ஆதியை
அந்தத்தை
...........

37

அறியேன்
ஜனனம் மரணமாகும்
மரணம் ஜனனமாகும்
சூட்சுமத்தை
...........

38

அறியேன்
நட்சத்திரங்களை
அறியேன்
கிரகங்களை
அறியேன்
ஒளியாண்டு தூரங்களை
.............

39

அறியேன்
இதிலெல்லாம்
சிவமுரையும்
சூட்சுமத்தை
............

40

அறியேன்
இதுவல்ல
இதுவல்ல என்று நீக்கி
நிறைத்து எஞ்சுவதை
அறியும்
சூட்சுமத்தை
.............

41

அறியேன்
அருள்வாய்
அது
நான் ஆன
சூட்சுமத்தை
...............

Wednesday, December 11, 2024

அகம்

 1

விதையை மெல்ல
மலராக்கிக்கொண்டேன்
ஆதியிலிருந்து
வந்து செல்லும்
நாகம்
அதன் பாதையில்
முளைத்துவிட்டது குடில்
அதே பாதையில்
தினம் விழுந்தெழுகிறது
வானம்
................

2

உதிர்ந்த மலரை
ஏந்திக்கொண்டது
ஏரி வான்
வானில் கிடக்கும்
ஏரியில்
சிற்றலை கூட
எழுவதில்லை
.................

3

பெருமீன்கள் உலவும்
நடுக்கடலில்
தினம் தினம்
வானெழுந்து
விழுகிறது
பேருடல் மச்சம்
கடலின்‌ பெருங்குரல்
வானத்திற்கு
வெகுதூரம் முன்னரே
கரைந்தழிகிறது
............

4

வானம் வருட
நதிச்சுருக்கமெல்லாம்
ஒளிர் எழுந்தது
சுழிப்பின் நிழலில்
நதி நதியில் விழுகிறது
கடல் வேட்கிறது
மலைப்பிறந்து
பிலம் விழுந்து
நகரும் நதியை
..............

5

வான் கனிந்து
மண் தியானித்து
ஆக்கும்
ஒரு மலர்
அகவான் கனிந்து
அகநிலம் தியானித்து
ஆனது
ஒரு மலர்
...............

6

அக இருளில்
கோர்த்தெடுக்கிறேன்
ஒரு கணம்
புலனாகிறது உன் நடனம்
மறுகணம்
இருளானது
நின் நடனம்
..............

7

வான் கிடக்கிறது
மலை ஊழ்கிக்கிறது
காலத்தின் நதியில்
ஓசையேதுமில்லை
ஒரு சிறுமலர்
ஆனது
இருந்தது
உதிர்ந்தது
...........

8

இலை அலுங்கலில்
அலையெழலில்
விழு விண்மீனில்
தேன்சிட்டின் படபடப்பில்
வண்டின் முரழ்ச்சியில்
அகமெழும் மலரில்
காலத்தின் லயம்
............

9

நெளியுடல்
எவ்வழிப் புகுந்தது?
ஆதிதொட்டு
வாழ்கிறதா இந்நிலத்தில்?
இன்று ஏன்
மலர்வெளிநடுவில்
மலரோடு மலராக
விடம் மலர நிற்கிறது?
.............

10

நிலத்தின் நீரெலாம்
வற்றச் செய்தேன்
நாவறண்டு மறித்த கோரங்களுடன்
மலர்களும் சருகானது
வான் கிடக்கும்
நிலம்
தன்னைத் தொடுத்துக்கொள்கிறது
ஆதியில்
.............

11

காலம் மலரின் பரிமளம்
கடல் மலரிதழ்
மலை மையச் செறிவு
மலர் தாங்கவே நிலம்
மலர்வெளியின் மோனத்தினூடே
சுவாசம் ஓடிக்கொண்டிருக்கிறது
.............

12

விடம் முறிக்க
ஆகும்
மலர் பூத்த
துளி மதுரத்தால்
..............

13

கூரையில்
அதுவாகப் படர்ந்தது
ஒரு நாள்
அதுவாக மலர்ந்தது
அகத்தில் சுடர்
ஒளிர்ந்தது
அதுவாய்
.................

14

ஒரு மலரை
மலரச்செய்யாத
வானமும்‌ நிலமும்
விட்டேன்
சுடலையெங்கும்
மலர் பூத்ததறிந்து
வந்தேன் சாம்பல் வெளிக்கு
.................

15

ஒரு மலர் உதிர்வதற்கும்
மறுமலர் உதிப்பதற்கும்
இடைப்பட்ட காலங்களில்
மலரின்மையை
தியானிக்கிறது
அகம்
...............

16

மலர்தான்
கனவிலெழுந்து
சொன்னது
அகத்தை
இசைமயமாக்கென்று
................

17

அகமெழுந்த
இசைதான்
சொன்னது
மலர்கள் லயித்திருக்கும்
நாதத்தைக் கேள் என்று
...............

18

மலரிதழ் வழியும்
நாதம்தான்
கிரகம் உலவும்
வெளியெங்கும்
..............

19

வனத்தில்
ஒரு சுள்ளி உடைகையில்
சில புள் கலைந்தமைகின்றன
மற்றபடி
வனம் ஏகித்திருக்கிறது
...............

20

வனம்
உயிர்களால் பெருகியது
உயிராய்ப் பெருகியதும்
வனம்தான்
.................

21

ஒன்றுதான்
அகம் எரியும்
சுடரும்
வான் ஒளிரும்
சுடரும்
.................

22

பறவைகள் நீங்கும்
விருட்சங்கள் மட்கி அழியும்
எரியொன்று உண்டு செரிக்கும்
மலைகள் சரிந்து உடையும்
வனமெனும் எல்லாம் அழியும்
வனத்தை ஆக்கிய
அகத்திற்கு அழிவில்லை
.................

23

யாதெனின்
யாதெனின்
தேர்ந்து நீக்கியானபின்
எஞ்சுவது
வானம்
.................

24

அணையாச்சுடர்
ஒளிர்கிறது
ஒவ்வொரு
அகத்திலும்
..................

Tuesday, December 10, 2024

இப்பிறவி

 1

ஆள் விழுங்கும்
பெரும் சதுப்பு
உயிர்ப்பசி கரந்து
நாணலை காற்றில்
அலையவிட்டு
அகோவென்றிருக்கிறது
............

2

வீடு சுத்தமானது
பரணில் ஒன்றிரண்டு
நாகம் நாமறியாமல்
ஒளிப்புகா நிலவறையில்
ஆட்கொல்லும் ஆயுதங்களின்
இருப்பு
நாமறிந்து
.............

3

முள்வேலி
தாவிக் கடக்கும்
வனமிருகம்
ஆதியில் உதித்தனவாம்
சில தாகங்கள்
..............

4

உடைமை கொள்
என்றது
ஆதி அச்சம்
அதன் கூண்டிலிருந்து
காணத் தெரிகிறது
மலை மேல் விழும்
சுடரின் நிழல்
..........

5

ஆதி அச்சங்களின்
ஆதி இச்சைகளின்
நடுவில்
இச்சிறுகாலம்
...........

6

சுடர் மேற்கில் எழுந்தது
பதைக்க பதைக்க
கிழக்கில் ஓடியது
சுடர் கிழக்கில் தோன்ற
மேற்கில் திரும்பின
பயணம்
............

7

கோடையின் இச்சைகள்
ஓய்கின்றன
அடிவாரம் சென்றாகவேண்டும்
குளிரின் இச்சைப்பெருக்கு
எலும்பின் பாய்பவை
.............

8

ஒன்றில்
அவ்வொன்று மட்டும்
ஓய்ந்திருக்கும்
கணம் வாய்க்கவேயில்லை
சாட்டையின் சொடுக்குல்
தனதல்லா பாரமிழுக்கின்றன
எருதும் குதிரையும்
கோவேறும் யானையும்
...............

9

நெஞ்சின்
அகாதப் பெருக்கில்
ஒரு இழை தவழ் ஒளி
விரல் வழி
சுடராகியுள்ளது
நம் அகமெல்லாம்
...............

10

குருதிச்சொட்டும்
குருவாட்கள்
நம்முடையது
,.............

11

புல் பறவை
விருட்சம்
பெருகும்
பல்லாயிரமுயிர் உச்சாடனம்
வனத்தை நெஞ்செலாம்
சுமந்து குடில் திரும்பி
அகல் ஏற்றினேன்
கூரை சுவரை முட்டும்
ஒரு மூலையில்
கூரையின் அதே நிறத்தில்
வால் தெரிகிறது
................

12

முரண் உழட்டுகிறது
சுடர்
இருளை
நலுங்கச்செய்கிறது
.............

13

ஓராயிரமாண்டுகளாய்
சுற்றி சுற்றி
சுழல்கிறது பாதை
எவ்வடியில் உன்னை
இடறுவேன்
எச்சுழலில்
எழுந்தருள்வாய்
நஞ்சின் மோட்சத்தை

............

14

நகுதல்
உருக்கி ஓர் அழுகை
மோனம்
மூன்றின் அலையாடலில்
இப்படகு
..............

15

விஷத்தின் அமிலம்
அரித்து விட்டது
காண்ணாடிக் குடுவையை
அள்ள அள்ளத்
தெள்ளுநீரெலாம்
நஞ்சானது
இக்குடுவை
நஞ்சினது
...............

16

வடிகட்டி
வடிகட்டி
கசடு நீக்கினேன் நீரில்
விந்தினுள் உயிரணுவென
உரைகிறது
நெளியிழை நஞ்சின் துளி
..................

17

இவ்வூஞ்சல்
என்னை அப்பால்
எறியவில்லை
பறக்கும்
காற்றின் போதம் காட்டி
மீண்டும் மீண்டும்
உழட்டுகிறது
சிறுகாலவெளிக்குள்
...................

18

மேலும் கீழும்
அலைப்புண்டேன்
எண்ணிலாக் கோடிமுறை
இது
வீழ்ச்சியின் போது
எதிர்த்து உந்தும்
சிறுகாலம்
...................

19

இப்போழ்தில்தான்
உள்ளுரைக் கண்ணொன்று
திறந்து நோக்குகிறது
நடந்தேறும் நடிப்பினை
...................

20

களையக் களைய
பெருகும் அரிதாரம்
ஆம்
இச்சிறுகாலம்
நடனத்துக்கானது
..................

21

மலங்கள் மூன்றல்ல
ஒன்று
ஒன்றேயொன்று
பொய்யெனும்
ஒன்று
...................

22

புரிந்தது
தெய்வமென்பது
ஒன்று
ஒன்றேயொன்று
மெய்யெனும்
ஒன்று
..................

23

நாதம் கேட்கவில்லை
வானில் நதியென
ஓடுவதை
காணமட்டும் முடிகிறது
அகத்தில் நாதமொன்று
முரள்கிறது
.....................

24

எத்தனை
மலர் கண்டும்
எத்தனை
மலர்ச்சொல் தொடுத்தும்
வாய்க்கவில்லை
அகமெல்லாம்
மலராடும் வெளி
....................

25

இப்பெருஞ்சதுப்பை
அடைந்துள்ளேன்
இன்னும் எத்தனை
மரண தூரம்
உன் மலர்வெளி?
..................

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...