வியாழன், 28 நவம்பர், 2024

இன்று என் கடைசி நாள்
இத்துடன் என்
அரிதாரங்களை
நிரந்தரமாகக் கலைந்தாக வேண்டும்
ஏற்று நடித்த
வேடங்களுக்கு
தொகை தீர்க்கப்பட்டுவிட்டது
உடன் நடித்த
காதலி தாய் நண்பன்
தந்தை
யாரும் இப்போது இல்லை
இதற்குமேல் இம்மேடையில்
எனக்கு இடமில்லை
கடைசி நாள் அணிந்த
ராஜ வேடம் கலைந்து
என் பழம்துணிகள் அணிந்து
உன்னிடம் திரும்புகிறேன்
ஒரு சிறு சுடரேற்றி
எனக்காக நீ காத்திருப்பதாய்
நினைத்து
என் கண்களில்
உண்மையான கண்ணீர்த்துளியொன்று
திரள்கிறது
இல்லம்சேர்கிறேன்
எவ்வளவு துடைத்தும் போகாத
தீற்றலாக எஞ்சிய
அரிதார வண்ணங்களுடன்
உயிர்த்தின்னும்
சுடலைப்பேயொன்று
பசி பசி என
வந்தது
பசி‌‌யடக்கு பசியடக்கு
என என்னை நான்
திண்ணக்கொடுத்தபோது
ஒரு கணம் பேய்க்கண்ணால்
திகைத்து நோக்கி
அதிரச் சிரித்து
ஆதிச்சலனம் பிறப்பித்தவை
சலனமோய்வதேயில்லை என்றது
மேலும் சிரித்து
சலனத்தின்
கனவுகளில் பிறந்துகொண்டேயிருக்கிறது
ஆதிக்கும் முன்னான
சலனமின்மை என்றது
இந்நிலத்தை
இவ்வொளியில்
கண்டதேயில்லை
இத்தனைக் காலம்
உருதிரண்டு அது வந்து
இத்தனைத் தூரம்
பயணித்து நான்வந்து
ஒரு‌ பாறையிடுக்கில்
தேங்கிய நீரில்
கண்டுகொண்டேன்
மிகச்சிறியதாய்
என்னை நான்
காற்சிலம்பொலி
கேட்கிறது
உடுக்கையில் எழுகிறது
வனத்தின் உருமல்
இருள் ஏர் கானிருட்டில்
எழுந்துவிட்டது
இதோ
சங்கின் ஒலியில் யுகம் புரள்கிறது
தர்க்கத்தை தூர வையுங்கள்
பித்தின் வெளிக்கு
சித்தமாகட்டும் நம் படைகள்
மழையே
இதோ இந்தக்கூட்டை
உடைத்து நுழை
இதனுள்தான்
ஆதிச்சுடரொன்று சரிந்து
சருகு பற்றி
வனமே நெருப்பாய் எரிகிறது
வானத்தின் மூர்க்கமாய்
நீ விழுந்துச் சிதற
தீ சுடராக்கட்டும்
இந்நாளில் விழு
இந்நிலமெங்கும் நீ
ஒரு மாயமழையாய்
உடலால்
ஆனவரை
ஒருவரையொருவர்
தழுவிக்கொள்கிறோம்
சொற்கள் எப்போதாவது
சந்தித்துக்கொள்கின்றன
சொற்கள்
பிறந்து வரும்
பிலமொன்றின்
இடம்விட்டுப் பெயரா
எதிரெதிர்ப் பாறைகள்
அசைவதேயில்லை
அவற்றிடையே காற்று
விக்கித்து நிற்கிறது
விசிறிப்பறவும்
சிறு‌புள்ளைத் தொடர்ந்து
தேங்கிய
இப்பெரும் சதுப்பின்
ஓரிரு துளிகள்
துள்ளிப்பார்க்கின்றன

இப்படித்தான் என
பறந்து காட்டுகிறது
விழு நட்சத்திரம்

புதன், 27 நவம்பர், 2024

நாள் குறித்தாயிற்று
கணம் நொடிக்கூட
ஃபீட் செய்யப்பட்டுவிட்டது
இந்த பிரம்மாண்டமான
கட்டிடத்தின்
பெதினெட்டாம் தளத்தில்
மூவாயிரம் என
இலக்கமிட்ட அறையில்
ஒரு சின்ன மடிக்கண்ணியில்
ஒரு சொடுக்கு போதும்
தேக்கி வைத்த வன்மம்போல்
கிளம்பிவிடும்
இந்த மிஸைல்
சில மனிதர்களால்
எடுக்கப்பட்ட முடிவுதான்
சரியாக
இந்த நாள்
இந்நொடி
இக்கணத்தில்
உறங்கிக்கொண்டிருக்கும்
ஒரு நகரின் மீது
கருணைவெள்ளமோ
என‌ பார்ப்பரை திகைக்கச்செல்லும்
ஒளியுடன்
ஆதரவற்று சென்று விழும்
பின்
காலம் எல்லாவற்றையும்
துடைத்துத் துப்புறவாக்கி
மீண்டும் அங்கு
ஒரு மலரை மலரச்செய்யும்
குருதி நிற மலர்
ஏன்
இத்தனை
ஆயுதங்களை
பதுக்கிவைத்துள்ளாய்

ஒரு கணத்தில்
நீ இவ்வாயுதங்களால்
ஒருவனை வீழ்த்தி
குருவிகள் தானியம் தேடும்
வயல்களில்
வீழ்த்தப்போகிறாயா

இதென்ன
இருவது பேர்
இசைக்கும் பெரும்
இசைக்கருவிபோல் ஒரு ஆயுதம்
உன் வெறுப்பின் தீ
பற்றி எரியும் வனங்களை
தேடிச்சென்று அழிக்குமா

உயிர்களின் ஓலங்களை
கனவுகளாய்
விரித்தபடி
ஒலிவேக குண்டொன்று
திமிறிக்கிடக்கிறது

இடிபாடுகாலுக்கிடையில்
உடலெல்லாம் குருதிக்காயங்களுடன்
மூவாயிரம்
வருடமாய்
ஒருவன் தன் குழந்தையைத்
தேடிக்கொண்டே இருக்கிறான்

ஆயுதங்கள்
இல்லாவிடில் அழிந்துபொவோம்
ஆயுதங்கள் இருப்பின்
அழிப்போம்
எப்படியோ
பூமியில் எங்காவது
எதோ ஓர் நிலத்தில்
எல்லாக் கணத்திலும்
அச்சமும் வெறுப்பும்
தன் பணியை ஆற்றிக்கொண்டே இருக்கிறது
ஒரு மலரைப்போலவே
அதென்ன
அவ்வளவு கனிவு
பேரங்கள் அணைஉடைத்து
பெருகும் தெருவில்
கனிவை வைத்து
என்ன செய்வது?
நாய்கள் முன்கால்நீட்டிப்பணிந்து
எஜமானனாய் ஏற்கும்
குழந்தைகள் கண்டு
புன்னகைக்கும்
பாக்கெட்டிலிருந்து
இரண்டு நாணயம் கூடுதல்
இன்னொருவன்‌ பாக்கெடிற்கு போகும்
ஒரு கடைத்தெரு
நிர்மாணிம்கப்படுவது
லாபம் பெருலாபம்
நஷ்டம்
ஏமாறுதல் ஏமாற்றப்படுதல்
சாமர்த்யம் சாதூர்யம்
அறம்‌ பாவம்
இவற்றுடன்
கொஞ்சம் கனிவிற்கும்
இடம் வைத்துத்தான்
கூட்டிக் கழித்துப் பார்க்கையில்
பூமியின் பேரேட்டில்
வரவும் செலவும் சரியாகத்தான்
உள்ளது

செவ்வாய், 26 நவம்பர், 2024

பெருவிருட்சம் அடர்ந்த
இவ்வனாந்திரத் தனிமையில்
இடறி விழ நழுவி
மேலெல்லாம்
நிலவு வழிந்து கிடக்கும்
இப்பொழுதில்
உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்

வனத்தின் ஏதாந்தத்தின் மேல்
ஒரு சொல்கூட துணையில்லா வானம்
கடலின் ஆழத்தில் எழுகிறது
அழுந்திய காலங்களின் குரலொன்று
நான் என் சின்ன பிரிவை
அவ்வளவு‌ கண்ணீருடன்
அணைத்து இன்புறுகிறேன்
சற்றே‌‌‌ விலகியிரு
இவ்வளவு
நெருக்கத்தில்
என்‌ ஆழத்துச் சொற்களை
நீ கேட்டுவிடக்கூடும்
நஞ்சின்‌‌ கம்பீரத்தோடு
பத்திகாட்டி நிற்கும்
நாகத்தை அடைக்க
ஒரு மூங்கில் பெட்டியை
தயார்செய்யக்கூடும்
வானவில்லின் வெளிர்
வண்ணங்களை அடர்நிறமாக்கக்கூடும்
சொல்லன்றி பிறந்தழியும்
வெறுமைகளின் முன்
கண்ணீர் சிந்தக்கூடும்
என் வனங்களை வேகமாக
அழித்துக்கொண்டிருப்பது கண்டு
விரக்தியாககூடும்
ஆக
சற்றே‌ விலகியிரு
சென்றதடவைப்போலவே
முற்றம் வரை வரலாம்
நீ இட்டுச் சென்ற கோலத்தை
நாகங்கள் ஊர்ந்து
தடமற்று ஆக்கியுள்ளது பார்
ஏற்றிச் செல் தீபத்தை
இருளுடன் சமர் புரிந்து
நலுங்கும் மஞ்சள் ஒளி
நாகத்தின் மூச்சுக்காற்றில்
அழிந்தபின்
என் வனங்களுடன்
நான் தனித்திருப்பேன்
எஞ்சிய
கோலத்தின் பிசிறுகளை
ஒரு இசையாக தேக்கிக்கொண்டு
சொல்தான்
அழைத்துச்சென்று
நதியைக் காட்டியது
மலரைக் காட்டியது
யானைகளைக் காட்டியது
இலைகளைக் காட்டியது
வனங்களை
கடலை
வானத்தைக் காட்டியது
பின்
அளப்பரியது என்றது
சொல்லில் அடங்காது என்றது
பொருள் நேரானதல்ல என்றது
இரவின் ஓசைகளைக் கேள் என்றது
விழு நட்சத்திரம்தான் ஆதிச்சொல் என்றது
சொல்லுக்கு அப்பால் பார் என்றது
புலன்களால் அல்ல என்றது
ஆத்மம் என்றது
சொல்லின்மையில் ஆழ்ந்து போ என்றது
சிலருக்கு
சொல் தேவையில்லை
ஒரு மலரைக் கண்டால் போதுமென்றது

சொல் எனும்‌ தெய்வம்

சொல்லின் சமிக்ஞைகள்
வான்நீலம் பாவிய விரல்களால்
அழைத்துக்கொண்டே இருக்கிறது
எழுந்து செல்வதற்கான
ஆணை ஆழத்திலிருந்து
ஒரு சொடுக்கலாக எழுந்தது
வானமே அலையென
விழுந்து அள்ளிச் சென்றது
ஆயிரம் வண்ணங்கள் காட்டி
ஓராயிரம் இருள் சொரிந்து
கசடுகளோடு அனைத்துமென்றது
இசையின் பறவைகளால் ஆன 
ஒரு அந்தியை வரைந்து காட்டி
துயரத்தின் ஆழத்தில் உரையும்‌ 
இன்பத்தைக் காண் என்றது
அதனதன் தன்மைக்கு முன் எத்தன்மையதென
அதனதன் தன்மை
எத்தன்மை நோக்கி
எழுகிறதெனக் காணச்செய்து
வனத்தீ எரிந்தடங்குகையில்
என்னை
சொல்லின்மையின் சமிக்ஞைகள்
கேட்கும் வெளியில்
விட்டுச் சென்றது

ஞாயிறு, 24 நவம்பர், 2024

கவிதைகள்

சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் என் கவிதைகள் சில, அதன் சுட்டி கீழே

அன்பு


சனி, 23 நவம்பர், 2024

மொய்க்கும்  இருள்கூட்டம்
அத்தனை வேகத்தில் விலகுவதில்லை
அவ்வப்போது கடக்கும்
மின்மினி ஒன்றின் ஒளியில்
காட்சியாகிறது
அடர் இருள்
நெடும்பிறவி தவம்கொண்டு
இழுத்து வந்துள்ளேன்
சுடரும்‌‌ தீபமொன்றை
சுடரொளி கவரும்
சிறு வட்டத்திற்குள்
இப்பிறவி நலுங்குகிறது
இவ்வளவு
நிகழ்ந்துவிட்ட
இந்த நாளை எதுவும்
செய்வதாயில்லை
மைதீர்ந்த பேனாவை
மேஜையில் வைப்பதுப்போல்
வைத்துவிடுகிறேன்
மெல்ல இடம்மாறி
மீண்டும் எழுத எடுக்கப்பட்டு
உதறப்பட்டு
ரீஃபில்‌ வெளிச்சத்தில்‌‌ பார்க்கப்பட்டு
சில நேரங்களில்‌‌ பாக்கெட் அமர்ந்து
அலுவல் சென்று கூடத் திரும்பிவிடும்
மீண்டும் எழுத எடுக்கப்பட்டு
எரிச்சலுடன் உதறப்பட்டு
பின்பொருநாள் இந்நாள்
இல்லாமல் ஆகும்

வெள்ளி, 22 நவம்பர், 2024

பாலையின் வெயில்
வாட்டும்போது
உடனிருந்த மழைகுளிரை
நினைத்துக்கொள்கிறேன்
நீர் வெயிலாகிவிடும் பாலையில்
மணற்புயலாய்
என்னைச் சூழ்கிறாய்
கடலென இகம்
சிறு மத்தென அலைப்புறு‌மனம்
எல்லாம் சலித்தமரும்
நெஞ்சத்தின் பதற்றச் சொடுக்குகள்
இசைக்கின்றன
நின் நாமத்தை
இத்தனை தூரம்
வீணாகப்
பயணித்துவிட்டேன்
குதிரைகளின்
களைப்பொலி
வனமெங்கும் ஒலிக்கிறது
இனி திரும்பிச் செல்ல வேண்டும்
எத்தனை பிறவித்தூரமோ
அத்துனைக்கும்
ஆணவத்தின் மனம்‌‌கமழும்
சிற்றகல்களை
உன் சன்னதியில்
ஏற்றி ஒழிகிறேன்

என்னை பூதகணங்களுள்
ஒன்றாக்கு
உன் ஆயிரம்கால் மண்டபத்தின்
ஒற்றைத்தூணை
அழகுறச் சமைக்கிறேன்
வேறொன்றும்
வேண்டேன்
அருளினும் கொள்ளேன்
என் வானங்கள்
தெளிவடைவதேயில்லை
வனங்கள் பற்றியுள்ளன
அணையா நெருப்புகளை
வெடித்துக்கிடக்கும்
பிலங்கள் நீருக்குக்
காத்துள்ளன
ஓயாப்பசியொன்று
கூர்திட்டிப் பதுங்கியுள்ளது
புலனெல்லாம்
பற்றிச்செல்கின்றன
தன் தன் வேட்கைகளை
பெருங்காற்று
அள்ளிவருகிறது
ஓயா இச்சைகளை
எல்லாம் கண்டிருக்கும்
நெஞ்சத்தின் ஆழச்சதுப்புகளில்
சிறு குமிழென வெடிக்கிறது
நிம் நாமம்
'காலத்தை
ஏன் சர்ப்பமென்கிறாய்?'

'இத்தனை
கொடியதும் அச்சம் தருவதும்
இதுதான்'

'காலத்தை
ஏன் காற்றென்கிறாய்?'

'காண முடியாததும்
ஆனால் நம்முள்
புகுந்கு ஓடிக்கொண்டிருபதும்
இதுதான்'

'காலத்தை
ஏன் வானென்கிறாய்?'

'நீலம் மட்டுமே எங்கும்
உண்மையில் வானென்பது
எது?'

'காலத்தை
காலமின்மையில்
காண்கிறாயா?'

'ஆம்
காலம் பிறந்தது
காலமின்மையில்'
இம்மாஞாலத்தில்
காலமென்பது
எல்லாம் உள்ளடக்கி
பெருகிக்கொண்டே இருக்கும்
மகாநதி

இம்மாஞாலத்தில்
இக்கணமென்பது
சில காரணங்களாலும்
சில காரியங்களாலும் ஆன
மெல்லிய நீரொழுக்கு
நீ வாங்கிய
முதல் மூச்சு
எப்போதென்றறிவாயா?

கடைசி மூச்சு
எப்போதென்றேனும்
தெரியுமா?

இந்தக் கல்
எப்படி உருவாகி
வந்தது?

இதோ
உன்‌ தோளில்
மலரொன்று உதிரப்போகிறதென்று
அறிவாயா?

மழையின் முதல்துளியை
கண்டவர் உளரா?

மழையின் கடைசித் துளியை
கண்டுகொள்ளமுடியுமா?

அறியாமையின் துளியொன்று
அண்டமெனத் தளும்கிறது
நம் வானங்களில்

செவ்வாய், 19 நவம்பர், 2024

லூப்

சரியாக
இதே கணத்தில்
மூவாயிரம் வருடம்
முன் என்ன செய்துகொண்டிருந்தாய்?

இப்போது
இக்கணம்
என்ன செய்துகொண்டிருக்கிறாயோ
அதேதான்
காலத்தையும் நேரத்தையும்
யாரய்யா இணைத்தது?

காலம் ஆதிசேஷணைப்போல்
பள்ளிகொண்டு பார்த்திருக்க
நேரம் தத்துபித்தென்று
தடுக்கிவிழுந்து
பதறி சிதறி
ஆண்டு வெல்ல
ஆபிஸுக்கு செல்கிறது
படித்த கவிதையை
மீண்டும் வாசித்தேன்
அன்புக்காக ஏங்கும்
ஒரு சொல்லை சுமந்தபடி
வானம் பார்த்தபோது
இதே போலொரு பால்கனியில்
பத்து வருடம் முன்
இதே போலொரு
அன்புசொல் வாசித்து
வானம் பார்த்தது
அகமெழுந்தது
லேசான திகைப்பின் கணத்தில்
காலம் எனும்‌ சொல்
என் கபாலமுடைத்து உள்நுழைந்தது
ஆயிரம் வருடம் முன்பு
இதே போலொரு காதற்சொல்லை
வாசித்து
இதே வானத்தை பார்த்ததை நினைவுடுத்தியது
காலம் கபாலத்திற்குள் சுழித்தது
பல லட்சம் வருடம் முன்
மாக்கடலில்
ஒலிக்கும் பெருமீனின்
ஏக்கத்தை
வலசைப்பறவையாக
கேட்டுக்கொண்டிருந்தேன்
வானத்தை விட
எல்லாம் சிறியதுதான்
அல்லவா?
இமையம் கூட
கடல் கூட
நாம்‌‌ கண்டறிந்தவை
கண்டறிய உள்ளவை
யாவும்
என் வயல்களைக்
கடந்து வலசை செல்லும்
பறவைக்கூட்டமொன்றைக்
கண்டிருந்தேன்
ஒரு பறவை
'வருடா வருடம் இவ்வழிதான்
வலசை செல்கிறோம்' என்றது
'எத்தனை வருடமாக' என்றேன்
'அது தெரியாது
ஆனால் முதல்வலசையில்
பூமியில்
மனிதர்களே இல்லை' என்றது
நான் தாகூரைப்போல்
மூர்ச்சையடித்து
விழுந்தேன்
நெகிழ்ந்து வந்தது
போக
உடைத்து எடுத்தது
போக
இன்னும் எஞ்சியுள்ளது
முழுதும் தீர்ந்துபோக
ஒரு ஏக்கம்
குடிலின் கதவைத்
திறந்தேன்
சூரிய ஒளி
என் மேலெல்லாம் விழுந்தது
ஒரு பெருங்கடலைக் கடந்து
குடிலைக்‌ கடக்கும்
வலசைப் பறவையின்
குரல் கேட்டது
இத்தனை எளிய பிரம்மாண்டங்களுக்கு
முன் ஒருகணம்
திகைத்தபின் திரும்பினேன்
என் சின்ன‌ சின்ன சிடுக்குகளுக்கு

ஞாயிறு, 17 நவம்பர், 2024

மாகாலம்

இந்த சிவன்கோயில்
மட்டும் மூவாயிரம்
வருடம் பழையதல்ல
கூப்பிய கரங்களும்தான்
பட்டரும்தான்
மணிநாதமும் தான்
வாயிலில் இருக்கும்
பூக்கடையும்தான்
பூக்கட்டும் அம்மாளும்தான்
பூவை நாரில் கட்டும் விரல்களும்தான்
ஆனால்
அதன் நடனபாவத்தினிடையே
விழும் உதிர்ப்பூக்கள்
சென்று விழுவது மட்டும்
மாகாலசிவத்தில்

காலநேரம்

காலத்துள் துறதலையும்
பிச்சைக்காரர்கள்
சிரிக்கிறார்கள்
நேரத்தை வைத்தாடும்
நம் பகடையாட்டங்களை

சனி, 16 நவம்பர், 2024

எவ்வளவு தூரம்

இன்னும்
எவ்வளவு தூரம்?

ஆச்சு,
மூன்றுகோடி கிலோமீட்டர்
வந்தாயிற்று
இன்னும்‌ செல்லவேண்டும்
பில்லியன் ஒளியாண்டுகள்

இதெல்லாம்

இதெல்லாம்
எப்படி ஆனது?

வெடித்துப்பெருகி
அணைந்துஅடங்கி
பொழிந்துப்பெருகி
அலைப்பெருகிஓய்ந்து
வண்ணங்கள் குழைந்து
முதல்‌ சுடர் அசைந்து
பெருவெள்ளமாகி
குலம்தழைத்து
வாளேந்தி நின்று
அன்பின் சொல்பரப்பி
பிறந்தழிந்து
அழிந்து பிறந்து
நீர்வழிப்பட்டு
புனைபோல் அலைந்து

வேறெப்படி?
அகாலத்தின்
ஒரு துளி‌ விழித்து
காலமென்றானபோது

வேறெப்படி?
நித்யத்தின் கனவில்
உதித்ததொரு மலரில்
அநித்யத்தின் மகரந்தம்
சேர்ந்தபோது

வெள்ளி, 15 நவம்பர், 2024

சிவநாமக்கிளியிடன்
எதைச்சொன்னாலும்
சிவ சிவ எனும்
உங்கள் மகிழ்ச்சிக்கும்
பேருவகைக்கும்
உங்கள் துன்பத்துக்கும்
மீளாத் துயரங்களுக்கும்
ஆச்சர்யங்களுக்கும்
சராசரியான சலிப்புகளுக்கும்
உருளும் பந்துக்கும்
விழுநட்சத்திரத்துக்கும்
சிவ சிவ சிவ சிவ

அதனிடம் சென்று
சிவ சிவ
என்றேன்
வெடுக்கென முகம் திருப்பி
நோக்கிற்று
ஜ்வாலையென உக்கிரத்துடன்
கூண்டுடைத்து எழுந்து
நெஞ்சக்கூட்டை உடைத்து
உள்நுழைந்தது
எது கிளி? எது நான்?
கிளி எது? நான் எது?
உள்ளொடுங்கி என் உள்ளமைந்தபின்
எதிரொலித்தது
சிவ சிவ என்று
கிளிக்குள்ளிருக்கும் நான்
சிவ சிவ என்றேன்
என்னுள்ளிருக்கும் கிளி
சிவ சிவ என்றது
இப்படித்தான் ஆனது
எல்லாம் சிவமாக
கிணற்றுத்துலா
துடிக்க துடிக்க
எத்தனை அடிக் கயிறு
இரக்கினேன் தெரியவில்லை
இழுக்கத் தெம்பில்லாமல்
கயிறுவிடவும் சக்தியின்றி
விட்டேன் கயிற்றினை
துலா கதறி சிலிர்த்தது
கயறு தீர்ந்து நுனி
சாட்டைச்சொடுக்குடன்
கிணறுள் குதித்தது
காதுகளை கூராகினேன்
மிக மெல்லிதாய் கேட்டது
வாலி சென்று தொட்ட
பாதரசம் தட்டிப்போன
ஆழ் உரையும்
இன்மையின் பிலம்
கிருதாவை
எவ்வளவு நீளம்
வைக்கலாம்?
நீளமாய் வைத்தால்
ரௌடி
கூராக வைத்தால்
அதையே சாரும்
ஒட்ட எடுத்தால்
ஆர்மி களை
நடுவில் பக்குவமாய்
நிறுத்து
இத்தனை அகலநீளம்
டாக்டர்
இவ்வளவு என்றால்
ஒரு ஆபிஸர்
எழுத்தருக்கு வேறு அளவீடுகள்
கூலித் தொழில்களிலும்
மேல்கீழ் அளவுகளுண்டு
ஏழையெனில்
பணக்கிருதா
பணமிருந்தால் ஏழ்மைக்கிருதா
கண்டுகொள்ளாதவனின் கிருதா
ஆணவக் கிருதா
வெற்றிகளின் கிருதா
அடக்குபவர் அடங்கும்‌போது
ஒரு கிருதா
அடிபணிபவர் அடக்கும்போது
ஒரு கிருதா
மயிர்நீட்சியில் இத்தனை
கணக்குகளா

நான் மண்டவிட்டேன்
காடாக
தலைமயிரை
தாடியுடன் மீசையுடன்
இணைக்கும்‌ பாலமானது
தலைமயிர்வழி நீண்டு முதுகில் ஆடியது
தாடிவழி நீண்டு நெஞ்சைத் தொட்டது
கிருதாவை அளந்து
பின் அளந்து பார்ப்பவர்
எவ்வளவு முயன்றாலும்
காண முடியாது
இவ்வளவு பெரிய வனத்துள்
வந்துபோவது
இயல்பாய் அரும்பும்
ஒரு சிரிப்பு மட்டும்

நிரந்தர அடிமை

தற்காலீகம்
கோலோச்சும்
காலமிது

இக்காலத்தில்தான்
என்னை நிரந்தர அடிமையாக்கிகொண்டேன்
ஒரு மலருக்கு

நிரந்தர அடிமை

அடிமையாக்கப்படுதல் வெறு
அடிமையாதல் வேறு
ஒன்றில் ஆணவம் வெல்கிறது
மற்றொன்றில்
அழிகிறது
ஒன்று இரத்தம்
மற்றொன்று
கண்ணீர்
ஒன்று சுமை
மற்றொன்று
ஏகாந்தம்
ஒன்று அச்சம்
மற்றொன்று
சரனாகதி
ஒன்று முறிவு
மற்றொன்று
பறத்தல்
ஒன்று எஜமானனது
மற்றொன்று
தந்தையினது

மழைவில்

அறையெல்லாம் மழை
சொட்ட சொட்ட
அமர்ந்திருக்கும் என்னிடம்
ஒரு கோடையைப் பற்றிப் பேச
ஒரு கோடையை சுமந்துகொண்டு
வருகிறீர்கள்
வெயிலின் சிறகு
மழைத்திரையை கிழித்துக்கொண்டு
என்னை வந்தடைவதற்குள்
கோடையின் பறவைகள்
மழைக்குள் சென்றுமறைந்தன
மழை
நீங்கள்‌‌ போனபின்
எஞ்சிய துளி வெயிலைப்பருகி
வண்ணவில் ஒன்றை
செய்துகொண்டது

காலமகாலம் 1

காலத்திற்கு
உயிரில்லை
மூச்சுண்டு

அகாலத்திற்கு
மூச்சில்லை
உயிருண்டு
இன்று
ஏன் என்னை கைவிட்டாய்
இம்மாபெரும் பிரபஞ்சத்தில்
ஒரு மலர்கூடவா
இல்லை எனக்குத்தர
மலரின் சுகந்தத்தை
வீசக்கூடவா
உனக்கு மனமில்லை
நீ அளித்த
வெறுமையை அல்ல
என் அறைமுழுதும்
இருக்கும் மலர்களுக்கு
மத்தியில்
ஒரு மலரின்மையை
வைக்கிறேன்
ஜன்னல் வழி விழும்
உதயத்தின் கிரணங்கள்
மலர்கிறது மலரின்மையில்

காலமகாலம் 2

 காலம்

இப்பறவை
எங்கும்
பறப்பதேயில்லை
பார்ப்பவர் மனதில்
பறப்பதாய்
ஒரு கனவை
தோன்றச்செய்கிறது

அகாலம்

இப்பறவை
அபாரமாய்
சிறகடிக்கிறது
பார்ப்பவர் கண்களுக்கு
கிளைநீங்கா
தோற்றம் தருகிறது

எங்கு போகிறார் மன்னர்

இத்தனையும்
ஏன் வழிநெடுக
நிற்கவேண்டும்
கன்றுகள்
நாற்றுகள்
சிறு கூம்பு காட்டும் ராகி வயல்
வரிசையாய் நின்று
ஆவல் முகம் காட்டும் தென்னை
இருப்பே தெரியாமல் சில மலர்
பெருங்கூட்டமாய் ஒரே திசைநோக்கி
முகம் காட்டும் மஞ்சள் மலர்க்கூட்டம்
தேமேனென்று குட்டையிலிருந்தி
தலை தூக்கி ஒலி திசை நோக்கும்
எறுமை
எங்கும் எங்குமென
வானம்
வானத்தை கூவி அழைக்கும்
மண்ணின் அகவல்
இத்தனையும்
வழிநெடுக இருக்க
எதையும்‌ நோக்காமல்
அப்படியென்ன வேகம்
மன்னருக்கு
சற்று பொறு
சற்றே பொறு
இம்மாகாலத்திற்கு
ஆயிரயாமாயிரம் பணிகள்
விதையை முளைக்கச் செய்வதிலிருந்து
நிலவை உதிக்கச் செய்வது வரை
விடத்தெரியாமல் பற்றிக்கொண்டே இருந்தாயெனில்
போகிறபோக்கில்
உன்னையும் எற்றிவிடும்
வெயில் பெருமூச்சுகளை
அறிவதே இல்லை
அது அறிந்தது
வேகத்தை மட்டுமே
இரவு
அள்ளிப் பருகுகிறது
ஒரு நாளின் தாகத்தை
பின் அதன் பெருமூச்சில்
உச்சி சிலிக்கின்றன
வெயில் அலைவதை
வேடிக்கை பார்த்த மரங்கள்
அங்கங்கு நின்று
மேயும்
இந்த ஆட்டின்
பின்‌‌ சென்றாலும்
போய்ச்சேரலாம்தான்

கழுத்து மணி
சினுங்க சினுங்க
ஓடும்‌ குட்டியின்
பின் ஓடுங்கள்
சற்றே மூச்சிளைத்தாலும்
குட்டி தூரம் சென்றுவிட்டாலும்
வாரி அள்ளும்
ஒளிக்கரங்களை
கண்டுவிடலாம்

காலமகாலம் 3

காலம்
இல்லை
இருப்பது போலொரு
தோற்றம்

அகாலம்
இருக்கிறது
இல்லை போலொரு
தோற்றம்
லட்சம் வருடங்கள்
இருக்குமா
உன் விதையின்
பரம்பரை
என்றேன்
ஆலமரத்திடம்

கண் விழித்துப்பார்த்து
கண் மூடி ஆழ்ந்தது
ஒரே ஒரு நொடி
கேட்டது
அது லயித்திருக்கும்
அகாலத்தின்
மணிநாதம்

ஒளிச்சொல்

இருளின் பாசுரங்களை
ஒற்றைக்குரலாய்
ஒலிக்கிறது
ஊரெல்லாம் ஏற்றப்பட்ட
அகல் சுடர்

ஊருக்கு
வெளியே
இருளுக்குள் அமர்ந்திருக்கும்
தெய்வத்தின்
முன் எரிகிறது
ஒற்றை தீபம்
இருளின்
நாம உச்சாடனமென

திங்கள், 11 நவம்பர், 2024

இன்றுடன்
நூறாவது நிலவு
இந்த நூறு
நிலவுகளில்
ஆயிரம் கொலைகளும்
பல்லாயிரம்‌ வஞ்சங்களும்
தோன்றி அழிந்துவிட்டன
நஞ்சின் சொற்களை
விழுங்கி செரித்தாயிற்று
வேலி‌ தாண்டி வந்த
பிரியத்தின் கால்களை
உடைத்தாயிற்று
ஒடுக்கப்பட்டன
அடக்கப்பட்டன
வெல்லப்பட்டன
பறிக்கப்பட்டன
இழந்து நிற்பன
யாவற்றின்
உள்ளும் அணைக்கப்பட்ட தீ
உயிரிழக்கும் மிருகத்தின்
கண்களென ஒளிர்கின்றன
ஆணவங்களின் ஒளித்தோரணங்களால்
நூறாவது நிலவின்
வனமெங்கும்‌ பற்றிஎரிகிறது
நூற்றிஓராம் நிலவு
அழைத்து வருகிறது
இவ்வனத்தை நோக்கி
எவ்வித ஒலியுமின்றி
அன்பி‌ன் எரிகல் ஒன்றை
காலம்
சிதறுண்டுகிடக்கிறது
ஒவ்வொரு துளியிலும்
அர்த்தமிலாதவை
நின்றாடுகின்றன
கீழ்மைகளின் பெருக்கில்
காலம் அடித்துச்செல்கிறது
உதயமும்
அந்தியுமான
இவ்வெடைவெளிக்குள்
உதிக்கும் ஆயிரமும்
குருடானவை
அந்தியும்
உதயமுமான
இவ்வெடைவெளிக்குள்
உதிக்கும் ஆயிரம்
மேலும் குருடானவ
இம்மாஞாலத்துள்
இச்சின்னஞ்சிறுகாலம்
வேண்டுவதெல்லாம்
உன் கிரணங்களால்
ஆன ஒரே ஒரு உதயம்
உன் அருளால்
ஆன ஒரே ஒரு அந்தி
உன் அன்பினால்
பெருகும் ஒற்றை ஒரு இரவு
இந்த‌‌ ஒரு நாளின் சுடருக்குள்
விழுந்து அணையும்
இச்சின்னஞ்சிறுகாலம்
ஒளியைத் தேடிக்கொண்டிருக்கும்
நான்
விட்டில் அல்ல
இருள்
இதோ
என் உடலைத்
திண்கிறது ஒளி
என் உடலும்
திண்கிறது ஒளியை
என் மனமெல்லாம் நிறைகிறது
பெருகிப் பெருகி
பெருகிப்‌‌ பெருகி
உயிர்பெருகிச் சாவேன்
ஒளியால்
போதும்
சொற்கள்
என்றது ஒரு குரல்
கூட்டுக்குள்ளிருந்து

கூடொழிந்தது
பறவை
வானத்தின் கீழ்
கோடிச் சொற்கள்
காத்திருந்தன

ஒற்றை‌ஒரு சொல்தேடி
சிறகிசைத்தது புள்
துளியாய் ஆதியில்
நதி கிடந்தபோது
அது தியானித்ததொரு
சொல்

ஞாயிறு, 10 நவம்பர், 2024

பிரகாசித்தல்

சுயம்பிரகாசம்
மகள்‌ இறக்கவும்
ஆளே மாறிப்போனார்
கசங்கிய உடையும்
வைன் ஷாப்களில் தஞ்சமும்
வழக்கமாகிவிட்டது
சற்று முயன்று
நண்பர்கள் விட்டனர்
இன்னும் சற்று முயன்று
குடும்பமும் விட்டது
இலக்கில் துளி சந்தேகமில்லா
மனிதனை யார் என்ன செய்ய?
பின்பொரு நாள் காலம்தான்
'அடடா இந்த ஜீவனை
இப்படி விட்டயிற்றே'
என‌ பிழைக்கு வருந்தி
திசைத்திருப்பிவிட்டது
கோயிலை நோக்கி
தெளிந்தார்
சிரித்தார்
சிறு கசங்கலுமில்லா
ஆடைகளில் பவனி
மகிழ்ந்தது நட்பும் குடும்பமும்
சில நாட்களிலேயே
காலம் 'டைம் ஆய்டுச்சே,
எல்லாம்‌ வயித்துல வாய்ல
அடிச்சுட்டு அழுமே'
என்று யோசித்து,
'ம்ச்.. அடுத்த ரவுன்டில்
பார்த்துக்கொள்ளட்டும்'
அன்று மாலை
ஹாஸ்பிடல் ஃபார்மாலிட்டீஸ்
எல்லாம் முடித்து
ட்ரெஸ்ஸிங் எல்லாம் ஆகி
வந்த போது
இவ்வளவு பிரகாசித்ததேயில்லை
சுயம்பிரகாசம்
காலத்திற்கு ஆச்சர்யம்
'கடைசி நொடியில் எப்படி?
அடுத்த ரவுன்ட் இல்லை..
ஆச்சர்யம்தான்'
இலக்கில்‌‌ துளி பிசகில்லாத
காலத்தை என்ன‌ செய்ய?
காலத்தை மீறிப்
பிராசிப்பவர்களை
என்னவென்று சொல்ல?

சனி, 9 நவம்பர், 2024

காலக் குழப்பம்

உடனிருப்பாய்
எனும்‌‌ வாக்குறுதியால்
மட்டும்
காலத்தின்
அந்த ஒரு பகுதியை
வாழ்ந்து கடந்தேன்

பூனையின் தடங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அதோ வால் மறைகிறது
இட்டுச்சென்றுவிடும்
வாக்குறுதியால்
உறுதியாய் நின்றிருந்த
பருவத்தின் பந்தலுக்கு

நீரெலாம்

இதோ
குடுவையைக் ஒட்டக்
குடித்து
டொக் என்று வைக்கிறேன்
எனக்கு பல வேலைகள் இருக்கிறது
அவசராமய் சென்றுவிடுவேன்
குடுவையின் தாகத்தை
வானம் பார்த்துக்கொள்ளும்
நீரெலாம் வான்கனிந்துதான்
அல்லவா

வெள்ளி, 8 நவம்பர், 2024

வேறொன்றுமல்ல
பார்த்த ஷணத்தில்
முழுமையை வாரி வீசும்
மலரொன்றை காணத்தான்
இவ்வாழ்க்கை

நித்யம்
கனிந்து
ஆக்கும்
ஒரு‌ மலர்
ஏரி வானத்தை
அருந்துவதை
சற்று முன்தான்
கண்டேன்
ஒரு திவளை நீர்
சிந்தியபோது
விழு நட்சத்திரமாக

வியாழன், 7 நவம்பர், 2024

திரும்புதல்

இதோ
நடிப்புகள் முடிந்துவிட்டன
அலங்காரங்களை
கலைத்தெரிந்தாயிற்று
என் அன்றாடம்
என்னை அழைக்கிறது
சிறு தலையசைப்புடன்
வரவேற்பை ஏற்று
நுழைகிறேன் 

அரிதாரங்களை
பத்திராமாக வைத்திருங்கள்
தூக்கம்
என்னை ஆழ்த்துகிறது
எங்கும் சலனமின்மை கூடியபின்னும்
ஒரு துளி மட்டும்
ஓயாமல்
நடுங்குகிறது
ஒருமுறை அணைத்துக்கொண்டுவிடு
துளி
கடலில் பரவி
சலனமழியட்டும்
இதோ
இப்பொழுதுதான்
இங்குதான்
கண்டேன்
வானத்தை
நம்பமாட்டீர்கள்
அவ்வளவு பெரிய
ஒன்றை
கண்டதேயில்லை
என் குடிலுக்குள்
கிடக்கும் ஏரி
இருளைடைந்துபோய்த்தான்
கிடக்கிறது
ஏதோ ஒரு புலரியில்
பறவையொன்று மேனியுரசி
எழுப்பும்
விடியலின் பேராயிரம் கதிர்விழ
வானத்தை குடித்து
வானமேயென அகம்மாறிக்
கிடக்கும்
என் குடிலுக்குள்
சிறு செடியை நட்டேன்
அது
நீரைக் கொணர்ந்தது
சூரியனைக் கொணர்ந்தது
இரவையும்‌‌‌ பகலையும்‌
கொணர்ந்தது
சில நட்சத்திரங்களையும்
கொணர்ந்தது
விருட்சமானபின்
வான் வேண்டுமென்றது
கிளைவாழ்ப்புள்ளொன்று
இழுத்தும்‌ வந்தது
பின்
ஆனது என் குடில்
வானம்‌ வாழும் குடிலாக
இதோ இதுதான்‌ வழி
நேராகச் சென்று
சடலமெனக் கிடக்கும்
ஏரியைக் கடந்தால்
என் வீட்டின் வாசல் வரும்
அதன் வழி வெளியேறிச்
செல்லலாம்
மற்றபடி
பிரிவு
ஏக்கம்
என எதையும் போட்டு
மனதைக் குழப்பிக்கொள்ளாதே
நம் தத்தமது வானங்களில்
விழும் நட்சத்திரங்கள் அறியும்
அவை நொடிக்கணத்தில்
கோடிச் சொல் உதிர்க்கும்
எனக்குத் தேவை
ஒரு தோளாக மட்டும்தான்
இருந்தது
என் வானில்
ஓயாமல்‌விழுந்துகொண்டிருந்த
நட்சத்திரங்களின் கீழ் நின்று
உள்ளம் கரைய அழுதுவிட
எனக்குத் தேவை
முழுமையான துளிக்கண்ணிராக
மட்டும்தான் உள்ளது
காற்றைப்
போல ஒரு சொல்லை
உருவாக்கி
உன்னைச்
சுற்றி போர்வையென
இட்டு அனுப்பினேன்
அணிந்திருக்கும் நீயோ
உன்னைக் காணும்
யாருமோ
காணவேயில்லை
உலகெங்கும் செல்
இச்சொல் உன்னுடன்
இருக்கும்
எதை
வரையப்போகிறாய்

சிறு சிதைவும்
அசைவுமின்றி
அகால அகாலமாய்
வியாபிக்கும்
காலத்தையா

இன்ன நிறமென
யாரும் வரையறுக்க
முடியா வண்ணம்
பெருகும்
அந்தியின்‌
சாந்தமான பிறழ்வையா

இரவின் ஆன்மாவை
உச்சாடனம்
செய்யும்
கிருட்டியின் நாதத்தையா

ஆழ்ந்து அகன்று
பரவிய நுண்ணிய ஒன்று
விதைக்குள்
தன்னைப் பொதிந்துள்ள
மாயத்தையா

எத்தனை வடித்தும்
இவற்றின்
பூரணத்தின் ஒரு துளி
இல்லாதாகிறது

தூரிகை
ஏந்தும் மனம்
ஒரு கணம்
மட்டும் காண்கிறது
ஒரு துளி பூரணத்தை
அந்தியை
தீட்டி முடிந்தபாடில்லை
உளத்தை பிறழச்செய்யும்
உண்மையின்
அழியாவண்ணங்கள்
முயங்கி நொடிக்குநொடி
மாறும் வானின்
மாக்கோலத்தை
தீட்ட
அந்தியின் ஆன்மாவை
ஒலிக்கும்
தனிப்பறவைக்குரலொன்றால்
மட்டும்தான் ஆகும்

மற்றபடி
கித்தானில் கூடுவதெல்லாம்
வெறும் ஏக்கம்
மலையை
குருவெனக்‌கொண்டு
அதன்
ஒற்றைச் சொல்
நீண்டு செல்லும்
தடத்தில் திரிகையில்
இருளைவீசும் ஒளிவாளும்
ஒளிவாளை வீசும் இருளும்
அந்தியை விழுங்கும் இரவும்
இரவை உண்ணும் புலரியும்
தவித்தலைந்து
மலைச்சொல்லின்
பெருவாள்வீச்சில்
எல்லாம் துண்டுபட்டு
அழிந்தொழிந்தபின்
அமைந்த போது
எஞ்சியது
இருளல்ல
ஒளியல்ல
பொழுதல்ல
காலமல்ல
நித்யமாய் வீற்றிருக்கும்
மலைத்துளி ஒன்று
காலம் விழுங்கி
அமர்ந்திருக்கும்
மலைக்கோயிலைக்
கண்டபோது
கட்டுவித்த வீரனையும்
அவன் வாளையும்
கண்டேன்
பின் பிம்பம்
காட்டும் மெழுகுடன்
கூடிய நந்தியைச்
செய்த உளிதான்
கட்டுவித்தது
எனக் கொண்டேன்
கூனுடன் கைங்கர்யம்
செய்யும் பட்டரின்
கொடிவழி என ஊகித்தேன்
சொல்லின்றி ஒளிரும்
கருவறை தீபம்தான்
என நினைத்துக்கொண்டேன்
பின் வழியிறங்கி
கோயில் கண்மறைந்தபோது
சிரித்தது
கட்டுவித்தது
மலையினூடே

புதன், 6 நவம்பர், 2024

உலுக்குமய்யா
உலுக்கிக்கொண்டேயிரும்
கனிந்தழுகியது போக
அணில் கடித்தது போக
தரைபட்டுச் சிதறியதுபோக
கிட்டும்
சிறு‌ பிசிறும் இல்லாத
ஒரு கனியாவது
எழுதியானபின்
கசக்கி
எறியத்தானிருந்தேன்
அவ்வளவு
இறுக்கமாய்
பற்றிக்கொண்டது
உதற உதற
விடாத உடும்பு
என்னோடு பிறந்து
என்னுடனேயே வாழும்
எளிய 
நான்
என நானுணர்ந்துகொண்டிருக்குமொன்று
ஒரு வருடம்
பன்னிரெண்டு மாதம்
மீண்டும் முதல் மாதம்
தொடர்ந்து வரும்
பதினொன்று
பின் மீண்டும்
இப்படியாக
வாங்கிய முதல்மூச்சிலிருந்து
போன மூச்சு திரும்பாதவரை
ஒரு எளிய
கணக்குண்டு
இக்கணக்கை
அவிழ்ப்பவருக்குக்
காட்சியாகும்
வாங்கிய முதல்மூச்சிலிருந்து
போன மூச்சு திரும்பாதவரை
காலக்கணக்கின்
முதல் எண்ணான
இன்ஃபினிட்டி
எளிமையான
நாளுக்குள்
செல்கிறேன்

மௌனமாய்
பின்வருகிறது
சொல்
இம்மாபெரும்
கூண்டுக்குள்
சுற்றிச்
சுற்றி
பட்டுப்பூச்சியே
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்தமர்ந்தாய்
தூரிகை நுனியில்

இறகு வழி
ஒழுகி
இக்கணங்களுள்
இக்கணம்தான்
என எப்படித்தேர்ந்து
வந்துபரவியது
உன் வண்ணம்
நெஞ்சமெலாம்

உயிர் உய்ய
விண்
நீரானது
நீர்
உயிர் நிறைத்தது

தாகமொன்று காத்திருக்கிறது
யுகம் யுகமாய்

மானுடம்
இருத்தலில்
உள்ளது

காலம்
இன்மையில்


புல்
மரம்
மண்
மலர்
மலை
உயிர்
இவையுடன் காடு
காட்டின் பகல்
பின் வந்தது
பகலுக்குள்
மாபெரும் இரவை
இழுத்துக்கொண்டு
காலத்தினூடே
வலசை செல்லும்
வேழம்
எண்கள்
தெளிவானவை
வரையறுக்கத் தக்கவை
குழப்பங்களற்றவை
கூட்டக்‌‌கழிக்க
பெறுக்க வகுக்க
ஏதானவை

வரிசைக்கட்டி
நிற்கச்சொன்னால் மட்டும்
கண்ணாடி அறைக்குள்
பிம்பமென
செல்கிறது
ஒன்றிலிருந்து
இன்ஃபினிட்டி வரை
டிசெம்பரும்
செப்டம்பரும்
ஒரு பூவுடன்
தன்னை
இணைத்துக்கொண்டுவிட்டன

நவம்பர் ரெய்ன் என்று
நடுவில் நிற்பது
மழையுடன்
ஒரு ஆங்கிலப் பாடல்
வழி இணைத்துக்கொண்டது

மீதம் ஒன்பது
மாதம்
தேவை
ஒன்பது
இன்சொல்

பன்னிரெண்டு
இன்சொல்
சேர்ந்து ஒரு
வரியானது
பின்‌ எப்படியோ
ஒரு இன்மையின்
சொல்சேற
காலமானது முடிவற்று
என் சொற்கள்
சென்றுவிட்டன

அன்பின் கதையை
சொல்லப்போவதில்லை

வெறுப்பின் கதையோ
இல்லவே இல்லை

வெற்றித் தோல்விகள்
இம்மியும் கிடையாது

அழல்
மோகம்
காமம்
இன்னும்
இன்னும்
கீழ்மைகள்
இருக்கும்
திசைக்கூட திரும்பப்போவதில்லை

அறத்திற்கும்
நியாய நேர்மைகளுக்கும்
இதே கதிதான்

என் சொற்கள்
சென்றுவிட்டன
அணைந்தபின்
சுடர் எங்கு
சென்றதோ
அங்கு
காலம்
தள்ளியிருக்கலாம்

சிலரது
சூழ்ச்சியாக்கூட இருக்கலாம்

தனித்துவமான
தனிமனிதனாகக்கூட
நான் வந்தடைந்திருக்கலாம்

தேனெடுத்து வருவதற்குள்
காடு பற்றியெறிந்ததால்
வழிதறிய
பட்டாம்பூச்சியபைப்போலும்
இருக்கலாம்

இங்கு முட்டி
அங்கு முட்டி
நீர்வழிப்படூவும் புனைபோலிருக்கலாம்

எல்லாம் வல்லது அலைக்க
அலையும்‌ நீர் போல்
இருக்கலாம்

ஆனால்
எப்படியோ
போதும் என்று
அமர்ந்திருக்கிறேன்
இக்கணமெனும்
மாபெரும்‌‌ நிகழ்வில்

.........

பதறவேண்டாம்
உன்‌
இன்பங்களை
காலம்‌ பிடுங்கும் முன்

உன் சூழல்
பிடுங்கும் முன்

உன் எதிரிகள்
பிடுங்கும் முன்

உன் நிர்பந்தங்கள்
பிடுங்கும் முன்

உன்னைச்சார்ந்த
நீயல்லாத
வேறேதோ ஒன்று
பிடுங்கும் முன்

நீ சற்று பிடுங்காதிரு

நீயல்லாது 
எது பிடுங்கினாலும்
அது அப்படியே
நீடிக்கும்
என
வகுத்துள்ளது அது

நம்பு

.......
உன் கரம்
பற்றித்தான்
இங்கு வந்தேன்

கிளம்பவேண்டும்

உன் சொல்லின்
சுண்டுவிரலில்
என்னைக் கோத்துக்கொள்கிறேன்
அழைத்துச்செல்
காலத்தின்
விநோத வண்ணங்களுக்கு

........

இழப்பது எதுவானாலும்
கொள்வதும் வெல்வதும்
எதுவானாலும்
இத்துடன்
இக்கணத்தில்
என் பயணம்
முடிகிறது
என்னை சூடி
அமர்ந்திருக்கும்
இந்நிலம் நோக்கி
மலைவராது
கடல் வராது
வானம் வராது
கான் வராது
வழிதவறிய‌ பட்டுப்பூச்சி
ஒன்று வரக்கூடும்
பிரபஞ்சத்தின்
மௌனமான நிறங்களை
வண்ணமொன்றின்  பிசிறில்
விழுநட்சத்திரம் ஒன்றை
சிறகடிப்பின் இடையே
யுகங்களை
சுமந்தபடி

.......

இந்த இன்பங்கள்
சலித்துவிட்டன
பெருமழைநோக்கி
நெஞ்சு விரித்து
நிற்கிறேன்
என் மௌனத்தின்
காலங்களை
ஊடறுக்க
ஒரு பெருந்துன்பம்
ஒன்றை
அவிழ்க்கிறாய்

.......

நாணயம்
பணம்
மதிப்பு
பொருள்
வெற்றி
பாதுகாப்பு
கடமை
தொழில்
ஈட்டல்
இழத்தல்
வெற்றி
தோல்வி
அடக்குதல்
அடங்குதல்
பழி கேலி
பாவம்
புண்ணியம்
பொய்
உண்மைப்பொய்
பொய்யுண்மை
இவையும்
இவை சார்ந்து
விரியும் பெரும்பாலையின்
சொற்களை
ஏதும் பேசுவதாயின்,
மன்னிக்கவும்

என்னோடு
நீங்கள்
பேசவேண்டாம்

.......

அவள்
போர்வை
மட்டும்‌ உள்ளது

நேற்று
இதுனுள் அவளிருக்கிறாள்
என்பது
போதுமாயிருந்தது

மறுநாள்
இதனுள்‌ அவளிருந்தாள்
என்பது
போதுமாயிருந்தது

மறுநாள்
இதனுள் சற்றுமுன் வரை
அவளிருந்தாள்
என்பது
போதுமாயிருந்தது

மறுநாள்
அதனுள்
ஒரு நட்சத்திரம்
விழுந்தது
போதுமாயிருந்தது

மறுநாள்
அது
ஒரு‌ போர்வையாக
எஞ்சியது

மறுநாள்
போர்வைக்கும்
என்
போதும் போதாமைகளுக்கும்
எவ்வுறவுமில்லாமல் போனது

மறுநாள்
நான் இல்லை
அழிந்த நினைவின்
கறையொன்று
எஞ்சியது
சலவைநாள் வரை

........

நண்பனே
நாளை நாளைக்குத்தான்
வரும் அல்லாவா
நேற்று மீண்டும்
வரவே வராதல்லவா

நாளையையும் நேற்றையும்
பார்த்து பார்த்து
இக்கணத்தை
ஓரளவு சரிசெய்யலாம்தான்

ஆனால் இக்கணம்
என்பது
யாரின் உதவியின்றி
எவ்வித பிரயத்தனமுமின்றி
அவ்வளவு பூரணமாய்
ஆதியிலிருந்து
அந்தம் வரை நீண்டு
அதன் புகைமூச்சுக்காற்றாய்
வீற்றிருக்கிறது
நண்பா
கடலில் சிறுமீன்
விடும் மூச்சுக்குமிழுபோல்
அழிகிறது
நம் சஞ்சலங்களின் இன்று

........

நாடி கண்டுகொண்டேன்
ஸ்தூலங்களை
மீறிய
உண்மைகளை

சொற்களைக்
கடந்து நிற்கும்
அறிவை

மௌனத்தால்
நிறைந்திருக்கும்
இருப்பினை

உயிர்நிலத்திற்கப்பால்
எங்கோ செல்லும்
நதியை

.......

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?