நிலவொளி
இலைகளின் வழி உடைந்து சிதறிக் கிடக்கிறது
இலையசைந்தால்
நிலவு அசையும் மாயம்
நிகழ்கிறது
இந்த இரவின் ஆன்மம்
பறவைக்குரலில் ஏறி வந்தது
எங்ஙனம்?
எதன் தனிமை இங்கு
கிடப்பது
எதன் முழுமை இங்கு
பெருகிக்கொண்டிருக்கிறது
கடல் மேலும்
மலை மேலும்
இச்சிறு இலைமேலும்
கிடக்கும் நிலவே
யாரும் தொடாத
பள்ளத்தாக்கின் ஆழத்தை
நீ மட்டும் தீண்டுகிறாய்
எதன் தனிமையின் மீது
விழுகிறது முழுமை
எதன் ஆழத்தில்
மிதக்கிறது வான்
நிலவு ஒளியை வீசி
கட்டியிழுத்துச் செல்கிறது
பூமியை
கலங்கரை விளக்கின் ஒளி
எக்கடலின் மீது விழுகிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக