சனி, 9 மே, 2026

அறியா அருள்

இன்று நீ
அருளாத நாள்

இந்நாளில்
நான் அதிகம் நடந்தேன்
பெரும் மரங்களை
அதன் கிளை அமைப்பை
பட்டைகளின் வெடிப்புமுறையை
பார்த்தேன்
யானைக்கூட்டமொன்றுடன்
சற்று தூரம்‌ உடன் சென்றேன்
வானத்தின் நிறமாற்றங்களை
துள்ளியமாய் அவதானித்தேன்
ஒரு மலரை அதன் ரேகையோட்டத்தை
அதன் நிற ஒழுக்கை
வடிவ வழிவுகளை
முழுமையாய் உள்வாங்கினேன்
பதினாறு பட்டாம்பூச்சிகளை நாளின்
வெவ்வேறு பொழுதுகளில்
பின்தொடர்ந்து வழி தொலைந்தேன்
ஓடையின் ஒலியை
உடலெல்லாம் நிறையவிட்டேன்
இருபத்தியிரண்டு
சிலந்தி வலைகளை நகலெடுத்துக்கொண்டேன்
அந்தி வானின்
மிக மெல்லிய தழலாட்டத்தை
கண்டு கண்டு அறிந்தேன்
மீளக்குடிலடைந்து சிற்றகல் ஏற்றி
சுடரால் அகம் நிறைத்தமர்ந்தேன்

இருள்சூழ்பெருங்கானகத்தில்
சுடராடும் இவ்வகம்
காத்திருக்கும்
உன் சித்தம் என்னவானாலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறியா அருள்

இன்று நீ அருளாத நாள் இந்நாளில் நான் அதிகம் நடந்தேன் பெரும் மரங்களை அதன் கிளை அமைப்பை பட்டைகளின் வெடிப்புமுறையை பார்த்தேன் யானைக்கூட்...