Saturday, February 1, 2020

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம்.

"காதல் பற்றி"

பின் அல்மித்ரா கூறினான்,"எங்களிடம் காதலைப் பற்றி பேசுங்கள்."
அவன் தலையை உயர்த்தினான். மக்களை நோக்கினான். அசைவின்மை அவர்கள் மேல் படர்ந்தது. உன்னதமான குரலில் அவன் கூறினான்:

காதல் உங்களை அழைக்கையில் அவனை பின்தொடருங்கள்.
அவன் வழிகள் கடினமானதாக மேடானதாக இருப்பினும்.
அவனுடைய சிறகுகள் உங்களை அணைக்கையில் உங்களை ஒப்புக்கொடுங்கள்.
அவன் சிறகுகளில் கரந்திருக்கும் வாள் உங்களை காயப்படுத்தினாலும்.
மேலும் அவன் உங்களோடு பேசுகையில் அவனை நம்புங்கள்.
வடக்குக் காற்று தோட்டத்தை அழித்துப்போடுவது போல், அவன் குரல் உங்களை குலைத்துப்போட்டாலும்.

அவன் கிரீடம் சூட்டும் அதே neram உங்களை சிலுவையில்அரையக்கூடும். உங்களை வளர்த்துவிடும் செயலில் உங்கள் கிளைகளை கழித்துவிடக்கூடும்.

உங்கள் உயரத்திற்கு படர்ந்து சூரியனில் திளைக்கும் மென்கிளைகளை வருடக்கூடும்,
அவனே உங்கள் வேர்நோக்கி ஆழ்ந்து, மண்ணினுடான பிணைப்பை உலுக்கக்கூடும்.

சோளக்க்திர்களை திரட்டி எடுப்பது போல் அவன் உங்களை தன்னோடு திரட்டி எடுக்கிறான்.
கதிரடித்து உங்களை நிர்வானமாக்கட்டும்.
உங்களை சலித்து உங்களை உமியிலிருந்து பிரித்தெடுக்கட்டும்.
உங்களை அரைத்து மேலும் மென்மையாக்கட்டும்.
உங்களை அரைக்கட்டும், நீங்கள் வளையும் மென்மையடையும்வரை.
பின் உங்களை தன் புனித நெருப்பில் அவியாக்குவான், கடவுளின் புனித விருந்தில் புனித உணவாவீர்கள்.

இவையனைத்தையும் காதல் உங்களுக்கு செய்விக்கும். அதனால் உங்கள் இதயத்தின் இரகசியங்களை அறிவீர்கள். அதன் ஒளியில் வாழ்வின் இதயத்தில் ஒரு சிறுபகுதியாவீர்கள்.

ஆனால் பயத்தினால் காதலின் அமைதியையும் இன்பத்தையும் மட்டும் நாடுபவராக இருந்தால்,
உங்கள் நிர்வானத்தை மறைத்துக்கொண்டு கதிரடிக்கும் களத்தை விட்டு நீங்குங்கள்,
பருவங்களில்லா உலகத்துக்குள். அங்கு நீங்கள் சிரிக்கலாம் முழுமையின்றி, அழலாம் கண்ணீரின் முழுமையறியாமல்.

காதல் தன்னையன்றி பிறிதொன்றை கொடுப்பதில்லை. தன்னிடமின்றி பிறிதொன்றிடம் எடுத்துக்கொள்வதுமில்லை.
காதல் உடைமைப்படுத்துவதில்லை, உடையாக்கப்படுவதுமில்லை.
காதல் காதலால் நிறைவுறுகிறது.

நீங்கள் காதலிக்கையில் "கடவுள் என் இதயத்தில் இருக்கிறார்" என்று கூறாதீர்கள். மாறாக "நான் கடவுளின் இதயத்தில் இருக்கிறேன்" என்று உரையுங்கள்.
உங்களால் காதலின் தடத்தை மாற்றமுடியும் என்று எண்ணாதீர்கள், காதலுக்கு நீங்கள் தகுதியானவராக இருப்பின் அது உங்கள் தடத்தை நிர்னயிக்கும்.

காதல் விழைவுகளற்றது தன்னில் தான் நிறைவதைத்தவிர.
ஆனால் நீங்கள் காதலித்தால் உங்களுக்கு விழைவுகள் இருக்குமானால் அவை இவையாக இருக்கட்டும்:

உருகவும், இரவின் கீதத்தை பாடும் சிற்றோடை போலாகவும்.
அதிமென்மையின் வலியை உணரவும்.
காதல் பற்றிய உங்கள் புரிதலால் புண்படவும்.
விழைந்து சந்தோஷமாக இரத்தம் சிந்தவும்.
புலரியில் சிறகுமுளைத்த இதயத்துடன் எழுந்து, காதலால் ஆன மற்றோரு தினத்திற்கு நன்றி செலுத்தவும்..
மதியப்பொழுதில் ஓய்வெடுத்து காதலின் உன்மத்தத்தை தியானிக்கவும்.
அந்தியில் நன்றியுடன் இல்லம் திரும்பவும்.
பின் இதயத்தில் அன்பானவர்களுக்கான வேண்டுதலோடு, உதடுகளில் வாழ்த்தின் கீதத்தோடு உறங்கச்செல்லவும்.

No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...