Sunday, February 2, 2020

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம். (மொழிபெயர்ப்பு)

"கொடுத்தல் பற்றி"

பின் ஒரு செல்வந்தன் கொடுத்தல் பற்றி எங்களிடம் பேசுங்கள் என்றான். அவன் பதிலுறுத்தான்:

உங்கள் உடமைகளிலிருந்த்து கொடுக்கையில் மிகக் கொஞ்சமே கொடுக்கிறீர்கள்.
எப்பொழுது உங்களையே கொடுக்குறீர்களோ அப்பொழுதே உண்மையாகக் கொடுக்கிறீர்கள்.
ஏனெனில் உங்கள் உடமையானது, நாளைக்கான தேவை பற்றிய பயத்தால் பாதுகாக்கப்படுவதன்றி பிறிதென்ன?
நாளை, நாளையானது புனித நகரத்தின் பயணிகளை பின்தொடர்ந்துகொண்டு தன் எலும்புகளை தடமற்ற வழிகளில் புதைத்துவைக்கும் அதி எச்சரிக்கை கொண்ட நாய்க்கு கொண்டுவரப்போவது என்ன?
மேலும் தேவையின் பயம் என்பதென்ன? தேவையே பயம் அல்லவா?
உங்கள் கிணறு நிறைந்திருக்கையிலும் தாகித்திருக்கிறீர்களெனில், அந்த அஞ்சத்தக்க தாகம் தணியப்போவதேயில்லை அல்லவா?
இருப்பவற்றிலிருந்து மிகக்கொஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அங்கீகாரத்திற்காகக் கொடுக்கிறார்கள், அவர்கள் கரந்திருக்கும் விழைவு அவர்கள் பரிசுகளை முழுமையற்றதாக்குகிறது.
இருப்பவை சிறிதெனினும் முழுவதையும் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்களே வாழ்வின் மீது நம்பிக்கையுடையவர்கள், வாழ்வின் புதையல், இவர்களின் கலன் குறைவதேயில்லை.
மகிழ்ச்சியாக கொடுப்பவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு மகிழ்ச்சியே வெகுமதியாகிறது.
வலியிலும் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்,அவர்களுக்கு  அவ்வலியே முழுக்காட்டு.
கொடுக்கையில் வலியறியாது , இன்பம் விழையாது, நன்மைசெய்வதான பிரக்ஞையற்று கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் பல்லத்தாக்கின் மலர்கள் தன் மணத்தை பெருவெளியில் பரப்புவது போல் கொடுக்கிறார்கள்.
இவர்களின் கரம் வழியே கடவுள் பேசுகிறார், இவர்கள் கண்களின் பின்னிருந்து அவர் பூமியின் மீது புன்னகைக்கிறார்.

கேட்கையில் கொடுத்தல் நன்று, கேட்கப்படாதபோது புரிதலால் கொடுத்தல் சிறந்தது.
கொடையாளனின் கரங்களுக்கு இரப்பவனைக் கண்டடைவதில் இன்பம், கொடுப்பதைக்காட்டிலும்.
நீங்கள் எதனையாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டுமா என்ன?
உங்களிடம் இருக்கும் அனைத்தும் ஒருநாள் கொடுக்கப்பட்டுவிடும்.
ஆக இக்கணமே கொடுங்கள், கொடையின் பருவம் உங்களுடையதாகட்டும், உங்கள் சந்ததியினருடையதாகாமல்.

நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள் "நான் கொடுப்பேன், தகுதியானவனுக்கு மட்டும்" என்று.
உங்கள் தோட்டத்தின் மலர்கள் அப்படிச் சொல்வதில்லை, உங்கள் கொட்டிலின் ஆவினங்கள் அப்படிச் சொல்வதில்லை.
அவை வாழ்வதற்காக கொடுக்கின்றன, ஏனெனில் தக்கவைத்தல் அழிவாகும்.
இரவையும் பகலையும் பெறத் தகுதியுள்ள எவ்வொருவனும் உங்களிடமிருக்கும் அனைத்திற்கும் தகுதிபடைத்தவனே.
வாழ்வெனும் கடலிலிருந்து குடிக்கும் தகுதி பெற்ற ஒருவன் உங்கள் சிற்றோடையிலிருந்துப் பருகத் தகுதிபெற்றவனே.
பெற்றுக்கொள்வதான தொண்டில் இருக்கும் தைரியத்தை தன்னம்பிக்கையைக் காட்டிலும் பெரிய விரிநிலம் உண்டா என்ன?
அவர்கள் உங்கள் முன் தங்கள் அகம் திறந்து, மானஅவமானங்களின் திரை அகற்றி நின்றிருக்க, அவர்களின் தகுதியை வெட்கமின்றி எடைபோட நீங்கள்
யார்?
முதலில் நீங்கள் கொடையாளனாக, கொடுத்தலின் கருவியாக தகுதியானவரா எனப் பாருங்கள்.
உண்மை யாதெனில், வாழ்கை வாழ்க்கைக்கு கொடுத்துக்கொள்கிறது, கொடையாளனாக கனவு கண்டுகொண்டிருக்கும் நீங்கள் வெறும் சாட்சி மட்டுமே.

பெறுவர்களே - நீங்கள் எல்லோரும் பெறுபவர்கள்தான் - நன்றியறிதலின் சிறு பலுவையும் கருதாதீர்கள், ஏனெனில் கொடையாளன் மீதும் உங்கள் மீதும் நுகத்தடியின் பலுவை சுமத்துபவராவீர்கள்.
மாறாக கொடையாளனோடு சேர்ந்து மேலெழுங்கள், பரிசுகளே சிறகுகளாக.
உங்கள் கடன்களின் மீது அதிகவனம் கொள்வதென்பது, பூமியைத் தாயாகவும் இறைவனைத் தந்தையாகவும் விரித்த கட்டற்ற மனதின் கருணையை சந்தேகிப்பதாகும்.



No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...