மலருலகு 1
அந்த சிறுமலருக்குள்
ஆயிரம்
பறவைகள்
சிறகு கொண்டன
மலருலகு 2
ஒரு நதி
ஓடி க் கொண்டிருந்தது
ஆயிரம்
உயிர்கள்
திளைத்தன
மலரிதழ் நுனி
விண்துளி பகர்ந்தது
ஆழத்திற்கு
மலருலகு 3
ஆயிரம் மலர்கள்
எதற்கு?
உன் இல்லத்தின்
வாசலில்
சாலையோரமாகக்
காத்திருக்கிறது
ஒரு பிரபஞ்ச
ரகசியம்
மலருலகு 4
நீ
ஏந்திக்கொள்
ஒரு மலரை
நிறைவாகட்டும்
ஒரு கவிதை
மலருலகு 5
வாடும் பொழுதுகளில்
உளம் அழியாதே
வேறு மலர்
சூல் கொண்டுள்ளது
நாமறியா ஆழத்தில்
உதிர்ந்ததும்
மலர்வதும்
வேறல்ல
மலருலகு 6
புலரியின் ஆயிரம்
வண்ணங்கள்
அந்தியின் கோடி
மாயங்கள்
ஒரு மலரை
காண்கையில்
புன்னகைக்கிறாள்
மலர்
மலருலகு 7
செடி தன்
தியானத்தில்
காண்கிறது
மலராகிறது
அமிர்தம்
மலருலகு 8
உன் இல்லத்தில் அருகில்
நீ செல்லும் சாலையில்
நீ செல்லாத
மலைகளில்
காணாத நதியோரங்களில்
நீரற்ற சமவெளிகளில்
வாய்திறந்த பள்ளத்தாக்குளில்
கடலின் ஆழத்தில்
உள்ளது
மலர்
மலருலகு 9
முதல் இசை
மலரின் மென்மை
முதல் ஓவியம்
மலரின் அலையாடல்
முதல் கவிதை
மலரின் சொல்
முதல் காவியம்
மலரின் ஒரு வாழ்க்கை
முதல் மழை
ஒரு மலரின் துளி
முதல் உயிர்
ஒரு மலர்
மலருலகு 10
மானுடத்
தடமற்ற
தூரத்துப் பிரபஞ்சத்தில்
மலர்ந்து
உதிர்ந்து
வாழ்கின்றன
மலர்கள்
மலருலகு 11
காதலை சொல்ல
மலரைக் கைக்கொண்டவன்
அறிந்திருக்கிறான்
உலகின் நீர்மையை
மலருலகு 12
நிலவொளி
கதிரொளி
இரு மலர்களிடையே
ஏகாந்தமாய்
சுழல்கிறது
உலகம்
மலருலகு 13
வெடித்தபின்
விரிகிறது
பிரபஞ்சம்
இல்லை மலர்கிறதா?
மலருலகு 14
ஒன்பது
கிரகங்களும்
கோடி சூரியன்களும்
நாமறியா தூரங்களும்
ஒளியாண்டு ஆழங்களும்
இன்னும் இன்னும்
எல்லாம் எல்லாம்
ஒரு மலருக்குள்
மலருலகு 15
மலர்வதுக்கும்
உதிர்வதுக்குமான
தூரம்
ஒரு வாழ்க்கை
எனப்படுகிறது
மலருலகு 16
தியானி த் திரு க்கும்
மலர்கள்
மானுடரைக்
காண்பதில்லை
மலருலகு 17
நதியனைத்தையும்
கடல் அனைத்தையும்
மலை அனைத்தையும்
நிலமனைத்தையும்
எக்கோணத்தில்
கண்டால்
அது மலரென
புலனாகும்?
மலருலகு 18
வான்
மண்
நீர்
ஒளி
உயிர்
விதை
செடி
இலை
பின் அறியாமல்
ஒரு மலர்
ஒரு வாழ்க்கை
அலையாடிற்று
காற்றில்
பின்
அறியாமல்
உதிர்ந்தது