இத்தனை நீண்டு
நீண்டு நீண்டு
செல்லத் தேவையில்லை
ஒரு இசைத்துணுக்கைப்போல்
வெடித்து கரைந்திருக்கலாம்
மலரில்லை
மௌனமில்லை
மழையில்லை
எனும் புகார்கள் என்னிடம் இல்லை
நொடிகள் இத்தனை
கனமாய் இருந்திருக்கவேண்டாம்
உபயோகத்திலில்லா தண்டவாளங்களில்
நிற்கும் செடி மண்டிய
ரயில் பெட்டிகளை
பெரியவர்களுக்குப் பயந்து
குழந்தைகளும் தவிர்த்து விடுகின்றன
பெருகும் கனவுகளை
ஓவியமாக்கிக் கொண்டிருக்கிறேன்
ச்சோவெனப் பொழிகிறது மழை
ஒரு அறிவிப்புமில்லை
ஒரு சில்காற்றுமில்லை
இந்தத் தீடீர் மழையில்
என் ஓவியங்கள் கரைவதைப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
உருவங்கள் கரைந்து
உரு சிதைந்து
வெறும் நிறத்தின் வழிவாகும்போது
உண்மைக்கு அருகில் வருகிறது
உண்மையை வானம் மட்டுமே அறியும்
உண்மையை வான் மட்டுமே வரையும்
மற்றபடிக்கு
மிகச்சிறிய உடலிது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக