புதன், 22 ஜனவரி, 2025

வானத்திலிருந்து வெகு தூரத்தில்

 அன்பே

வானம் அழைக்கிறது

அதன் ஸ்படிக உண்மைகள் ஒளிர்கிறது

நாம் எழுதிய பொய்களின் புத்தகத்தை பூமியிலேயே
விட்டுவிடச் சொல்கிறது

மேலும் நான் எனும் சொல்லுக்கு அங்கு அனுமதி இல்லையாம்

தர்மம் அறம் ஆகியவற்றிற்கு பொருளில்லை

பொய் கீழமை கயமை ஆகியவற்றிற்கும் அதே கதிதானாம்

முக்கியமாக கண்ணீரில்லை

சொல்லில்லா வெளியை ஓங்காரம் நிறைத்துள்ளது

ஆனால் நான் இப்போது உன்னைப் பிரிந்தாக வேண்டும்

இப்பிரிவுக்கு நீயோ நானோ காரணமாக வேண்டும்

நாம் என்ற பொதுமை பேப்பரில் எழுத்தாவதற்கு மட்டும்

இப்பிரிவு பூமியில் அல்லவா நிகழ்கிறது

வானத்திலிருந்து வெகு தூரமல்லவா பூமி

கண்ணீர் பெருக்கு

நாம் அழுவோம்

எஞ்சும் வஞ்சங்களை நம் கைக்குட்டைகளில் 

சிறு மலராய் பின்னி வைப்போம்

என்றோ ஒரு நாள் அதைக் கண்டு ரசிக்கலாம்

நம் 'நான்'களுக்கு மத்தியில்

தர்மம் அறம் பாவம் புண்ணியம் என

எல்லாவற்றையும் இழுத்து வருவோம்

நம் சிக்கலான கணக்குகளின் மேல்

கடவுள் நர்த்தனம் புரியட்டும்

எந்த இரு எண்களை கூட்டினாலும் இன்ஃபினிட்டிதான் விடை வானத்தில்

நம் எண்களுக்கு உலகெலாம் ஒப்புக்கொண்ட வரையறைகள் உண்டு

ஆனால் எந்த இரண்டு எண்களைக் கூட்டுவதென்பதில்

நாம் பெரும் பெரும் போர்களை நிகழ்த்திவிட்டிருக்கிறோம் 

இப்பூமியின் மாபெரும் போர் கூட

சிறு பிசிரலையும் உண்டு பண்ணவில்லை

வானத்தின் ஓங்காரத்தில்

ஆனால் சொன்னதுபோல்

நாம் இப்போது பூமியில் இருக்கிறோம்

வானத்திலிருந்து வெகு தூரத்தில்

மேலும் சிலர் மரணத்தை விடவும் கொடிதாய்

ஒன்றைச் சொல்கிறார்கள்

வானம் என ஒன்றில்லை என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...