வேறோரு கடிகாரத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறது
நகரம் பெருகிக்கொண்டிருக்கும்
காலையில் நான்
பால்கனியில் வசிக்கும்
புறாக்களை நலம் உசாவிக்கொண்டிருக்கிறேன்
வெயில் கலைந்த எறும்களைப்போல்
திரியும் திரள் மீது
முழு எடையுடன் விழும் பொழுதில்
நான் தெரு நாய்க்குட்டிகளை
கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்
எது நிறைந்தால் ஆசுவாசமடையுமோ
யாரால் ஆற்றுப்படுத்தமுடியுமோ
அவருக்கு ஒரு நீண்ட
கடிதம் வனைகிறேன்
ஒன்றுப் பலவாகி
பலது இக்கதியாகிப்
பெருகும் சூட்சுமத்தை எழுதும்போது
அறிகிறேன்
அகமெல்லாம் ஒலிக்கும்
அத்தனை மெல்லிய அழைப்பினை
அதனை செவி மடுக்காமல்
ஓடச்செய்யும் புறத்தின் பெருங்குரலை
நூறு மலைகளுக்கு அப்பால்
பதைக்க பதைக்க திசை தவறிய
மந்தையை
அழைக்கிறேன்
சங்கேத மொழி ஒன்றால்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக