Sunday, January 5, 2025

என் சிறு கைகளால்
பற்ற‌வொண்ணாப்
பெரும் கருணைப்பாதம்
நின்னது
மத்து மிதக்கிறது
கடலில்
ஒப்புக்கொடுத்தது
வானக்கா
கடலுக்கா
என்றறியாமல்
........

குருதிச்சோரல்
முடிந்து
புனித தீர்த்தமெல்லாம்
கழுவித்தீரா
நிலத்தின் மீது
நீங்கா திட்டாய்
உன் முன் நிற்கிறேன்
புறமல்ல
உளம் எனும்
தன்வெளி நின்னது
வானத்தை நிறைத்தது
போல் நிறைத்துவிடு
இவ்வெளியெலாம்
.............

சிறு அசைவுமின்றி
காற்றா திரவமா திடமா
என்றறியவொண்ணா
ஓயாமல் உள்நின்று உடற்றும்
உளம் எனும் ஒன்றை
உடைத்தெரிய
தர்க்கமில்லை
ஞானமில்லை
கண்ணீர் வேட்கிறது
ஓயா வெள்ளமாய்
நிறைத்து அழிக்கக்கோரி
............

இன்றைய நாள்
என்பது
துரதிஷ்டங்கள்
மழையெனப் பொழிந்த தினம்
இப்பெருக்கின் குரூரங்கள்
ஒரு சுழியாய்த் திரண்டு
உள்ளிழுத்து
கோரமுகம்காட்டி
ஓய்ந்த நாள்
உடைந்த பொம்மையை
கண்ணீருடன்
அன்னையிடம் நீட்டும்
குழந்தையென கொடுக்கிறேன்
இவ்வுளம் எனும்‌ ஒன்றில்
வற்றாமல் ஊரச் செய்
அன்பெனும் நரவத்தை
...........

கற்பூரத்திற்கு
சுடரின் ஒழுங்கில்லை
அது புரிவது
தியானமில்லை
உள்ளை
புறத்தை
எரித்து
காற்றாகிக்
கரைந்தழியும்
தொல்நடனம்
...........

இதற்குமேல் வேடமற்றோர்
செல்வர்
இப்புள்ளியோடு
என் பயணம்
முடிகிறது
எல்லாமாகி நிறைந்துள்ள
வானம் காட்சியாகும்போது
ஒரு சொல்லை வேட்கிறேன்
அருளப்பட்டால்
சொற்பிரகாசத்தில்
தன்வெளி ஒளிரத்
திரும்பச் செல்வேன்
இப்படியான ஊடாட்டம்
இப்பிறவிக்கானது
...........

வந்துவிடுவேன்
வேட்கைகள் ஓய்ந்து
சொல்லாட்டம் முடித்துக்கொண்டு
மலரின் முழுமை கூடப்பெற்று
தன் வெளி எல்லாம் நின்வெளியாய்
சுடர்கொள்ள
எத்தனைப் பிறவித்தூரமோ
அத்தனையும் கடந்து
.............

No comments:

Post a Comment

கான் நின்ற மரமொன்று தூணாகி நிற்கும் முற்றத்தில் பல்லாங்குழியாடுகிறாய் வலையொளிக்க நீ இட்ட அரிசி உலை கொதிக்கிறது எத்தனை வளைக்கரம் வழி ...