நாம் இதற்கு மேல் பேசிக்கொள்ளவேண்டாம்
மௌனங்கள் தேரும் இசைக்கு நம்மை விட்டுவிடுவோம்
எதைக் காரணமாக்கியும் பறவைகளை
அதன் பறத்தலான இயல்பை முறிக்கவேண்டாம்
தன் தன் போக்கில்தான் உலகின்
நதியெல்லாம் கடல் சேர்கிறது
இத்தனை செய்த கரங்களக்கு
ஒரு சுடரை ஏற்றத் தெரியாதா என்ன?
அணுவுக்கு ஒரு கரு உண்டு தெரியும்தானே?
கிரங்ககளின் மையமான சூரியனுக்கு ஒரு கருமையம் உண்டு தெரியும்தானே?
பால்வெளிக்கு ஒரு மையம் உண்டு தெரியும்தானே?
அண்டங்களுக்கு ஒரு மையம் உண்டு தெரியும்தானே?
இம்மையங்களுக்கெல்லாம் ஒரு மையமுண்டு தெரியும்தானே?
இத்தனை செய்த கரங்களுக்கு
ஒரு சுடரை ஏற்றத் தெரியாதா என்ன?
சுடர் ஒளிரும்
நாம் மேலும் மேலும் மௌனம் சூடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக