இதுவரை திரைப்படமெனெ எடுக்கப்பட்ட அனைத்தும் "மானுட நாடகம்" எனும் வகைமைக்குள் அடங்கிவிடும் அல்லவா? காதல் துயரம், உறவுகளின் அழகு, முறிவு, அழகு, ஆணவம், அடைதல், வெற்றி, சரிவு, கருணை, அறம், வீரம், வீழ்ச்சி மீண்டும் மீண்டும் மானுடமும் அதன் உணர்வுகளும். வெறும் மானுடம் எனும் ஒரு வார்த்தைக்குள் அனைத்தையும் அடக்குவதில் சிறு அநீதி இருப்பதாய் தோன்றினாலும்..... மானுடத்தின் அடிப்படைக் கேள்விகள் மானுடம் மீறிய ஒன்ற்னை நோக்கியதுதான் அல்லவா? காலம், ஒட்டுமொத்தமாய் மானுடம் எனும் உயிர்த்திரளின் நோக்கம், எல்லையற்ற வானம் நம்முள் எழுப்புவது ஒரு கேள்வியையும் தான்.
Terrence Malickக்கின் படங்கள் மானுட நாடகத்திலிருந்து பிரபஞ்ச நாடகம் நோக்கி ஊசலாடுபவை. Tree of Life அப்படியான ஒரு படம். ஒரு மரணத்திலிருந்து எழும் "God Where are you?" எனும் கேள்வியிலிருந்து திரை ஒரு பெரும் மாயவெளியாய் பிரபஞ்ச்சத்தின் தோற்றம் நோக்கிச் செல்லும். பின் மெல்ல ஒரு பறவை தரையிரங்குவது போல மீண்டும் மானுட நாடகத்திற்குள் வரும். ஆனால் இப்போது நாம் காண்பது வெறும் மானுட நாடகமாய் இருக்காது. பிரபஞ்சத்தின் பெருந்திரை பின்புலமென அதற்கு அமைந்து விட்டிருக்கும். இந்த ஊசலாட்டம் எந்த ஒரு கலையின் உச்சபட்ச சாத்தியம் என்றே கருதுகிறேன்.
"Voyage of Time" - பெயரே கவித்துவமானது , காலம் பயணிக்கிறது. காலத்தின் பயணத்தினூடே சிறு குமிழிகள்தான் அல்லவா கலாச்சாரங்களும் ஒட்டு மொத்த மானுட நாடகமுமே. காலம் நிகழ்த்தும் அதிபிரம்மாண்டமான ஒரு நாடகத்திற்கும், பின் நாம் மானுடர்கள் மானுட மைய நோக்கினால் காண விரும்பும் கால நாடகத்தின் சிறு தெரிப்பான மானுட நாடகத்திற்கும் ஊசலாடுகிறது Voyage of time".
எண்ணற்ற இதுவரை நாம் கண்டிராத உயிர்கள், பல கலாச்சரங்களினூடாக எடுத்துக் கோர்க்கப்பட்ட துணுக்குகள், திகைக்கச் செய்யும் அழகுடன் இயற்கை, ஆதி மானுடர் கொண்டு சிறு மானுட நாடகம், இசை என ஒரு மாயமான நிகழ்வை விட்டுச் செல்கிறது Voyage of Time.
இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமானது, குறிப்பாக நிலம் சார்ந்த இயற்கைக் காட்சிகளும், விண்வெளிக் காட்சிகளும். பின்னணியில் வரும் பெண் குரல் சொல்கிறது ஒரு இடத்தில் "We know nothing". ஆம் ஏதுமறியவில்லை நாம் ஏதும் அறியப்போவதுமில்லை. ஆனால் இயற்கை நம்முடன் தொடர்புருத்தும் ஒரு மொழி உள்ளது - அழகு. இந்த பிரம்மாண்ட காட்சிகள் அறியமுடியாமையின் திகைப்பை விட்டுச்செல்லும் அதே கணம் அழகென நம்முன் எழுகிறது. தோன்றுகிறது, அர்த்தத்தை அறியமுடியாது, அழகை உணர்ந்துகொள்ளலாம்.
Voyage of Time அடிப்படையான கேள்வியை மையமிட்டுக்கொண்டு நம்முன் இயற்கையென விண் என விரிந்திருக்கும் பிரம்மாணடத்தின் முன் நாம் உணரும் அறியமுடியாமையை, அது கணமும் காட்டிச்செல்லும் அழகை பேசும் ஒரு Classic படைப்பு.
No comments:
Post a Comment