பயணமே வாழ்வாய்
பாஷோ ஜென் கவிஞர். வாழ்நாளின் பெரும்பான்மையை பயணத்திலேயே கழித்தவர். தன் மரணம் ஒரு பயணத்திலேயே நிகழ வேண்டும் என ஆசை கொண்டவர். அவரது பயணக் குறிப்பு "Narrow Road to the interiors" என்ற பெயரில் Sam Hill என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பயணக் குறிப்பு என்பதே சரியான பெயராக அமையும், பயண நூல் அல்ல. இக்காலத்தில் நாம் வாசிக்கும் பயண நூல்கள், பயணக் கட்டுரைகள் போன்றதல்ல இந்நூல். செல்லும் இடத்தின் சிறப்பு, விரிவான் வரலாறு போன்றவை அரவே கிடையாது. கவிதைக்கு நெருக்கமான ஒரு நூல் இது. பயணத்தின் வழி பாஷோ கவிதைகளையே கண்டடைந்துள்ளார் அல்லது பயணம் அவரில் கவிதையாக மலர்ந்தது எனலாம். சிறு சிறு குறிப்புகளாக செல்லும் இந்நூலின் ஒவொரு குறிப்பும் ஒரு கவிதையுடன் முடிவடைகிறது. இப்பயணக் குறிப்புகளை ஒரு இலக்கிய வடிவமாகக் கொள்ளலாம். குறிப்புகளிலேயே கவித்துவமான வரிகள் இருக்கின்றன. மனம் ஓயாமல் அழகில் திளைத்தபடி கவிதையின் துடிப்புகளை ஓயாமல் பின் தொடர்ந்தன் விளைவே இக்குறிப்புகள். இக்குறிப்புகளின் வழி நாம் அடையப்போவது ஜப்பான் நிலவமைப்பு பற்றிய அறிவோ, அதன் முக்கிய இடங்கள் பற்றிய அறிவோ அல்ல. மாறாக நாம் அடைவது கவிதைகளையே. கவிதையின் வழி ஒரு ஜப்பானை அறிகிறோம்.
இதன் ஒவ்வொரு குறிப்பாய் மொழிபெயர்க்கலாம் என்றிருக்கிறேன்
1
நிலவும் சூரியனும் நித்யபயணத்தில் உள்ளன. காலங்கள் அலைந்து திரிகின்றன. ஒரு வாழ்காலம் சிறு படகில், முதுமை களைத்த குதிரையை வருடங்களுக்குள் இட்டுச் செல்கிறது, ஒவ்வொரு நாளும் யாத்திரை, பயணமே இல்லம். பழங்காலம் தொட்டு பயணத்தின் போதே உயிர் நீத்தவர்கள் இருந்து வருகிறார்கள். இருந்தும் காற்று அலைக்கும் மேகங்கள் வாழ்நாள் முழுமைக்கும் நாடோடியாகும் கனவுக்குள் என்னை சேர்க்கிறது.கடற்கரை ஒட்டிய நடை பயணம் முடித்து சென்ற இலையுதிர் காலத்தில் இல் திரும்பினேன், Sumida நதிக்கரையில் அமைந்த என் குடிலின் சிலந்தி வலைகளை சுத்தம் செய்தேன். வசந்தம் பனிமூட்டத்திலிருந்து எழுந்த போது Shirakawa Barrier கடந்து வடக்கே செல்ல ஏங்கினேன். அலைந்து திரியும் அகம் என்னை எச்செயலிலும் மனம் செலுத்த விடவில்லை. என் ஆடைகளை சரி செய்த படி, தொப்பியை தைத்தபடி கனவில் திளைத்தேன். கால்களை உறுதிப்படுத்த தைலம் இட்டபடி, மட்ஸுஷிமா மலைகளின் மீது நிலவெழுவதை கனவு கண்டேன். ஆக என் இல்லத்தை இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு, பயணத்திற்கு தயாராக என் புரவலரின் கோடை இல்லம் சென்றேன். என் இல்லத்தின் கதவுகளில் சில வரிகளை விட்டுச்சென்றேன்:
இந்த புற்குடில்கூட
கொலு அமைந்த வீடாக
மாறக்கூடும்
(Hina Matsuri என்பது ஒரு பண்டிகை. நாம் கொலு வைப்பது போல் பொம்மைகள் அழகாக அமைக்கப்பட்டு பெண்பிள்ளைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற வேண்டுதலுடன் கொண்டடப்படுகிறது. Doll's house என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பயணம் கிளம்பும் பாஷோ இல்லம் எனக் குறிப்பது தன் அகத்தையே என்பது என் வாசிப்பு. )
2
மூன்றாம் நிலவின் இருபத்து ஏழாம் காலை, புலரி, மேகங்களிடையே சற்றே தெரியும் நிலவு, Fuji மலை வெறும் நிழலாக, செர்ரி மலர்களின் மலர்தலுக்கிடையே நான் கிளம்பினேன். மீண்டும் அவற்றை எப்போது காண்பேன? சில பழைய நண்பர்கள வழியனுப்ப இந்த புலரியில் வந்திருந்தார்கள். படகில் சற்று தூரம் உடன் வந்து இரக்கிவிட்டார்கள். படகிலிருந்த்து இரங்கியபோது மூவாயிரம் மைல்கள்என் இதயத்தில் ஓடிக்கடந்தது, மொத்த உலகும் ஒரு கனவாக. வழியனுப்புதலின் கண்ணீரூடே அதை நான் கண்டேன்.
வசந்தம் கடக்கிறது
பறவைகளின் ஏக்கக்குரல்
கண்ணீர்
மீன் கண்களில்
இவ்வரிகளுடன் என் பயணத்தை துவங்கினேன். பின் இருந்தவர்கள் பயணியின் நிழல் மெல்ல சென்று மறைவதைக் கண்டிருந்தனர்.
3
Genrokuவின் இரண்டாம் ஆண்டு. கருமையும் வெண்மையுமான மேகங்களின் கீழ் அமைந்திருக்கும் வடக்குப் பிரதேசங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிக்கிறேன். என் தலை நரைத்துவிடக்கூடும் நான் திரும்புகையில், திரும்பாமலேக்கூட போகலாம். இரவு கவிகிறது, Soka வந்தடைந்தோம், எலும்பு துருத்திய தோள்கள் பயணப்பையின் கணத்தால் சோர்ந்திருந்தன, கதக்தப்பான போர்வைக்கு நன்றியுடையவனாவேன், எழுது கருவி, மை, அத்யாவசங்கள். நண்பர்களின் வழியனுப்புதலின் பரிசுகளால் கணத்துவிட்டது பயணப்பை . என்னால் அவற்றை விட்டுச் செல்ல முடியாது.
4
மூன்றாம் நிலவின் கடைசி இரவு, Nikko மலையின் அடிவாரத்தில் ஒரு விடுதி. விடுதி காப்பாளர் ஜோ புத்தா (Joe Buddha) என்றழைக்கப்படுகிறார். அவர் நேர்மை அவருக்கு இப்பயரை ஈட்டித்தந்ததாக சொல்லி விடுதியை தன் இல்லம்போல் நினைக்கவேண்டும் என்றார். ஒரு பயணிக்கு உதவ கருணாமூர்த்தியான புத்தன் ஒரு சாதாரண மனிதனாக தோன்றியிருப்பது , அவர் எளிமை ஒரு பெரும் வரம், அவர் கடமையுணர்வு சலனமற்றது. கன்ஃயூஸிய நெறியின் மாதிரி. நான் இன்று போதிசத்வரின் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்.
5
மூன்றாம் நிலவின் கடைசி இரவு, Nikko மலையின் அடிவாரத்தில் ஒரு விடுதி. விடுதி காப்பாளர் ஜோ புத்தா (Joe Buddha) என்றழைக்கப்படுகிறார். அவர் நேர்மை அவருக்கு இப்பயரை ஈட்டித்தந்ததாக சொல்லி விடுதியை தன் இல்லம்போல் நினைக்கவேண்டும் என்றார். ஒரு பயணிக்கு உதவ கருணாமூர்த்தியான புத்தன் ஒரு சாதாரண மனிதனாக தோன்றியிருப்பது , அவர் எளிமை ஒரு பெரும் வரம், அவர் கடமையுணர்வு சலனமற்றது. கன்ஃயூஸிய நெறியின் மாதிரி. நான் இன்று போதிசத்வரின் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்.
6
kurokami மலை இன்னும் பனி மூடியதாய், பனித்திரையில் தெளிவில்லா உருவாய் நிற்க, சோரா எழுதினான்:
தலை மழிக்கப்பட்டு
கரு முடி மலையில்
நாங்கள் கோடை ஆடைகளுக்கு
மாறிக்கொண்டோம்
சோராவின் (Sora) உண்மையான பெயர் Kawai Sogoro. சோரா என்பது புனைப்பெயர். என் பழைய குடிலில் அவன் நீரும் விறகும் சேகரித்தான். மட்ஸுஷிமா மற்றும் கிஸகாட்டாவைக் காணும் இன்ப விருப்பில் நாங்கள் ஒன்றாக பயணிக்க, பயணத்தின் இன்ப துன்பங்களை ஒன்றென பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தோம். நாங்கள் பயணத்தை துவங்கிய காலையில், புத்த துறவாடை உடுத்தினான், தலை மழித்துக்கொண்டான், தன் பெயரையும் ஸோகோ (மோட்சமடைந்தவன்) என மாற்றிக்கொண்டான். ஆக அவன் கவிதைகளில் வரும் "ஆடை மாற்றுதல்" எனபது அழுத்தமான அர்த்தமுடையதாகும்.
மலைமேல் நூறு மீட்டர் ஏறியபின், ஒரு நீர்வீழ்ச்சி நூறு அடி உயரத்திலிருந்து ஒரு பெரும் குகையிலிருந்து, ஆயிரம் கற்களாலான புலமொன்றில் வீழ்ந்தது. நீர்விழ்ச்சிக்கு உட்பக்கமாய் அமைந்த குகையில் அமர்ந்து நோக்கிய போது புரிந்தது ஏன் அதனை "Urami no Taki"(அருவியின் நோக்கு) என்கிறார்கள் என்று.
சற்று நின்றோம்
நீர்வீழ்ச்சியின் உட்பக்கம்
கோடை பின்வாங்கத் துவங்கிற்று.
7
Kurobaneல் ஒரு நண்பர் வசிக்கிறார். குறுக்காக செல்லும் எளிய வழியொன்றை முயன்றோம், ஆனால் சாயும் காலத்திற்கு முன்பே மழை பெய்யத் துவங்கிவிட்டது. ஆக கிராமத்துக் குடிலொன்றில் இரவைக் கழித்துவிட்டு, புலரியில் கிளம்பினோம். வயல்வெளியில் ஒரு குதிரை, புல்லருக்கும் ஒரு மனிதன். அவரிடம் நான் வழி கேட்டேன். யோசித்துவிட்டு தன்மையாக கூறினார் "குறுக்கும் நெடுக்குமான பல சாலைகளாலானது இவ்வழி. வழி தவறுவது எளிது. இந்த வயதான குதிரையை அழைத்துச்செல்லுங்கள். இவன் இப்பாதைகளை அறிந்தவன். இவன் நிற்கும் இடத்தில் இரங்கிக் கொள்ளுங்கள், அவன் தனியாக திரும்பிவிடுவான்".
நாங்கள் புறப்பட்டோம், இரு குழந்தைகள் நடனமிட்டபடி வழியனுப்பின, ஒரு குழந்தையின் பெயர் Kasane - பிங்க் நிற மலரின் பெயர். சோரா எழுதினான்:
kasane - இப்பெயருடன்
மேலும் வண்ணமாகிறாள்
பொருத்தமான பெயர்
8
kurobane சென்றடைந்த பிறகு, ஜோபோஜி சாமுராயை சென்று சந்தித்தேன், ஒரு ஜில்லாவின் மேற்பார்பையாளர். என் வருகையால் இன்ப அதிர்ச்சியுற்று பல இரவுகளும் பகலும் என்னுடன் பேசியவண்ணமிருந்தார், பெரும்பாலும் அவர் தமையன் இல்லத்தில் அமர்ந்து. நாங்கள் சொந்தங்களையும் நண்பர்களையும் சென்று சந்தித்தோம். ஒரு நாள் நாய்கள் வேட்டை நடக்கும் இடம் சென்று பார்த்தோம். கல்லாக சமைந்து விட்ட லேடி டொமானோவின் கல்லறை சென்று கண்டுவந்தோம். அதன் பின் Hachiman ஆலயம் சென்று வணங்கி வந்தோம். புலரியில் இல்லம் திரும்பினோம்.
Shugen Komyo கொவிலின் மலைத்துறவிகள் தங்கும் இடத்திற்கு அழைக்கப்பட்டேன்:
இந்த கோடை மலைகளில்
உயரமைந்த நீர் தேக்கங்களுக்கு வணக்கம்
இந்தப் பயணம் வாழ்த்தப்படுவதாகுக
9
Ungan கோயில் அருகே இருக்கும் மலைக் குடில், என் தம்ம குருவான புட்ச்சோ எழுதினார்:
ஐந்து அடி உயரக் குடில்
இதைக்கூட அமைத்திருக்கமாட்டேன்
இம்மழை இல்லையெனில்
அவர் இக்கவிதையை ஒரு பாறையில் கரியால் எழுதியதாய் வெகு முன்பு என்னிடம் சொன்னார். ஆர்மமுள்ள சில யுவன்கள் Ungan ஆலயம் நோக்கிய பயணத்தில் இணைந்து கொண்டனர். மும்முரமாக பேசிக்கொண்டிருந்தமையால் ஆலயம் எதிர்பாரா கணமொன்றில் தோன்றியது. நீண்ட பல்லத்தாக்கின் ஊடே, அடர்ந்த சிடார் மற்றும் பாசி பனிநீரில் சொட்டும் பைன் மரங்கள், வசந்தத்தின் குளிர் வானின் கீழ்,. தோட்டமொன்றின் வழியாக, பாலம் கடந்து, ஆலய வாயிலடைந்தோம்.
புட்ச்சோவின் குடிலை தேடி ஒரு சிறு குன்றின் மேல் ஒரு குகையருகே கண்டடைந்தேன் - Myozenji பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்த குகை போல, ஜென் மாஸ்டர் Hounன் பின்வாங்குதல்* போல.
மரங்கொத்திகக்கூட
தனிமையில் விட்டுச் சென்றது
கோடை மலையின் துறவிக் குடிலை
ஒரு சிறு கவிதை, சுருக்கமாக எழுதி, ஒரு கம்பத்தில் பதித்தேன்.
(Retreat என்பது ஜென் தியானத்தில் ஒரு வழியாக சொல்லப்படுகிற்து. "இயல்பான நிலையே உன்னத நிலை" என்பது ஜென் உடைய மையமான தரிசனமாகும். இங்கு RETREAT என்பது அந்நிலை நோக்கிய பயணமே, அகங்காரத்தின் கற்பிதங்களின் வெளியிலிருந்து இயல்பான அகம் நோக்கி பின்னடைதல் என்னும் பொருள் கொள்ளலாம்)
10
கொலை கல்லினைக் - SESSHO SEKI, MURDER STONE- காண கிளம்பினோம், ஒரு குதிரையை அமர்த்திக்கொண்டோம், குதிரையோட்டி ஒரு கவிதை சொல்லுமாறு கேட்டான் "அழகான ஒரு கவிதை, தயவுசெய்து".
குதிரை கழுத்தொசித்தது
பரந்த நிலவெளியின் அப்பாலிருந்து
குயிலொன்றின் ஏக்கக்குரல்
கொலை கல் கருமையான மலைநிழலில் அமைந்துள்ளது, விஷவாயுவை வெளியிடும் ஒரு வெந்நீர் ஊற்றருகே. இறந்த தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மணல்வெளியை நிறைத்தபடி.
11
Ashinoவில், Saigyoவால் "தெளிந்த ஓடையின் அருகே"எனும் கவிதையில் பாடப்பட்ட வில்லோ மரம் இன்னும் அரிசி வயல்களின் இடையே உள்ளது. ஒரு அதிகாரி எனக்கு வழிகாட்டினார், நான் அது எங்கு உள்ளது அல்லது இருக்கிறதா என வியந்தபடி சென்றேன். இன்று , இக்கணம், அதே வில்லோ மரம்:
விதைப்பு முடிந்து, அவர்கள்
கிள்மபிவிட்டார்கள்
வில்லோமர நிழலிலிருந்து
நான் தோன்றுவதற்குள்
12
ஆர்வத்துடன், Shirakawa Barrier பற்றி நாளும் யோசித்திருந்தேன். "Somehow sending word home" எனும் பழங்கவிதையை நினைத்து மனதை ஆற்றுப்படுத்திக்கொண்டேன். அடர்ந்த பசும் கோடைக் காடுகள் வழி நடந்தேன். பல கவிஞர்கள் தங்கள் கவிதை வரிகளை இங்குள்ள மூன்று எல்லைகளில் பொறித்துள்ளாகள் - "இலையுதிர்கால காற்று" 'சிவந்த மேப்பிள் மர இலைகள்" நினைவில் எழுகின்றன. பனியாலான வயல் போல், எண்ணற்ற Unohana -வெள்ளைப் பூக்கள் கோண்ட புதர்கள், சாலையின் இருபுறமும். இங்குதான் Kiyosuke எழுதினார், மக்கள் சிறந்த உடைகளுடன் மலைப்பாதையைக் கடக்கிறார்கள். ஆண்கள் சின்ன கரிய நிறத் தொப்பிகளுடன் பெரும் அவைகளுக்கு செல்வதுபோல்.
Unohana
என் தலை அணியாய்
தொல் சடங்கிற்கு தயாராய்
(சோராவின் வரிகள்)
13
பெரும் செஸ்ட்நட் மரத்தின் கீழ் நகரத்தின் எல்லையில் ஒரு துறவி தன் குடிலை அமைத்துக்கொண்டுள்ளார் உலகினின்றும் தன்னை காத்தவண்ணம் . ஆழ்ந்த மலைக்காடுகளில் செஸ்நட் சேமிப்பது பற்றியான ஸாய்கோவின் கவிதையில் வரும் இடம் அப்படியானது. சீன மொழியில் "CHESTNUT" என்றால் "மேற்கு மரம்" என்று பொருள் - இது அமித புத்தாவை குறிக்கிறது. துறவி GYOKI, தன் வாழ்நாள் முழுவதும் செஸ்ட்நட் மரங்களையே தன் கைத்தடியாக பயன்படுத்தினார், தன் இல்லத்தின் சிறு தூண்களுக்கும் கூட.
பெரிதும்
யாரும் நோக்குவதேயில்லை
தாழ்வாரங்களின் கீழ்
செஸ்ட்நட் மலர்களை
14
Tokyuவின் இல்லத்திலிருந்து சில மைல்கள் நடந்து, Asaka மலைகளின் அடிவாரத்தில் அமைந்த Hiwada எனும் சிறு நகரை அடைந்தோம். நகர் எல்லை சதுப்பு நிலங்களால் ஒளிர்ந்துகொண்டிருந்தது. கோடை பாதி கடந்துவிட்டது, Iris பரிக்கும் காலம். நான் Katsumi மலர்களைப் பற்றிக் கேட்டேன், ஆனால் யாருக்கும் தெரியவில்லை. ஒரு நாள் முழுவதும் தேடி அலைந்தேன் "katsumi katsumi" எனும் உச்சாடனத்துடன், மலையில் சூரியன் அமிழும் வரை.
Nihonmatasuவிலிருந்து வலது பக்க சாலையில் திரும்பி, குருகோஸா குகை அடைந்தோம். இரவை Fukushimaவில் கழித்தோம்.
15
விடியலில் ஷினோபுவிற்கு கிளம்பினோம், சாயத் துணிகளுக்கு பிரசித்திபெற்ற ஊர்- பெயரே கூட Shinobu zuri- ஒரு பாறையின் பெயர் இடப்பட்டிருந்தது, மலையில் பாதி புதையுண்டு கிடக்கும் அப்பாறையை கண்டோம். கிராமத்தின் குழந்தைகள் எங்களோடு சேர்ந்துகொண்டு கதை கூறின "பழங்காலத்தில், இப்பாறை மலையின் உச்சியிலிருந்ததாம், வழிப்போக்கர்கள் பயிர்களை அழித்து விவியசாயிகளுக்கு தொல்லை கொடுத்தார்களாம், அதனால் முதியவர் சிலர் அப்பாறையை உருட்டி விட்டார்கள்". பொருத்தமான கதை.
வயலில் விதைக்கின்றன
யுவதிகளின் பரபரக்கும் கரங்கள்
தொல்காலத்தின் கைகள்
சாயம் செய்தது போலவே
16
தோணியில் Tsukinowaவில் கடந்து Se-no-ue எனும் சிறு ஊரை அடைந்தோம். ஊருக்கு வெளியே மலைகளுக்கு அருகில் இன்று சிதிலமாகக் கிடக்கும் Sato-Shoji யின் இல்லத்தை காண. Izikuவாவில் Saba Moor பார்க்கும் படி அறிவுருத்தப்பட்டிருந்தோம், கடைசியாக கோட்டையின் சித்லங்கள் இருக்கும் maru hill வந்தடைந்த்தோம். பிளந்து கிடக்கும் கதவுகள், அருகில் ஒரு தொல் ஆலயம், அங்க்கிருந்த குடும்பங்களின் கல்லறைகளைக் கண்டோம், என் கண்கள் கண்ணீரின் பனித்தது. குறிப்பாக இரு விதவைகளின் சமாதியில் - இறந்த தம் கணவர்களின் கவச உடையை அணிந்தபின் உயிர் நீத்தவர்கள். நான் என் கண்ணீரை துடைத்துக்கொண்டேன். ஆலயத்தினு உள்ளெ, தேநீரை ரசித்தபடி, YOSHITSUNEவின் வாளையும், துறவி BENKEIயின் கூடையொன்றையும் கண்டோம், இரண்டுமே பொறிக்கப்படிருந்தது:
எல்லாம் கம்பீரமாய்
வாள், கூடை, பட்டம்
குழந்தைகள் தினமான இன்று
இன்று Satsukiயின் முதல் நாள், அரிசி விதைப்பின் மாதம்.
17
இரவை Iizukaவில் கழித்தோம், சுடுநீர் ஊற்றில் குளித்துவிட்டு வெறுந்தரையில் விரிக்கப்பட்ட பாய்களுக்கு உறங்கச் சென்றோம் - ஒரு கிராமத்து அறை. ஒரு வெளிச்சமும் இல்லை, சிறு அகல் விளக்கொளியில்,நலுங்கும் நிழல்களோடு எங்கள் படுக்கைகளை அமைத்தோம், அயர்ந்த கண்களை மூடிக்கொண்டோம். திடீரென பேரிடியுடன் உடைந்து விழும் மழை, ஒழுகும் கூரை தூக்கம் கலைத்தது, எங்கும் கொசுக்களும் பூச்சிகளும். முதுமையின் சோர்வு என்னை இரவு முழுவதும் படுத்தியது, துயில் இல்லா இரவு.
முதல் ஒளியில், விடியலுக்கு வெகு முன்பே, எங்கள் மூட்டைகளை தயார் செய்துகொண்டு கிளம்பிவிட்டோம், சஞ்சலம், சோர்வு ஆனாலும் தொடர்ந்து முன்சென்றோம். உடல் பலவீனம் கவலையில் ஆழ்த்தியது, ஒரு குதிரையை kori town வரை அமர்த்திக்கொண்டோம். என் திட்டங்களைப் பற்றி நான் கவலையுற்றேன். ஒவ்வொரு யாத்திரையும் வாழ்வின் நிலையாமையை சிந்திக்கச் செய்கிறது. சாலையிலேயே பயணத்திலேயே உயிர் துறப்பதுதான் இலக்கு. அல்லது அப்படியக எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என் மனதை உறுதிப்படுத்திக் கொண்டு, மனம் உறுதிகொண்டபின், OKIDO BARRIERஐ கடந்தேன்.
18
குறுகிய ABUMIZURI மலைப்பாதையின் வழி SHIROSHI கோட்டையைக் கடந்து KASASHIMA மாகாணத்திற்குள் நுழைந்தோம். LORD SANEKATAவின் சமாதிக்கு வழி கேட்டோம், SEI SHONAGON எனும் பெண் கவிஞரின் நாடுகடத்தப்பட்ட கவிக் காதலர் அவர். குன்றருகே அமைந்த DOSOJIN ஆலயத்தில் மினோவா கஸஷிமா கிராமங்களைக் கடந்த பின் வலது புறம் திரும்பும் படி சொல்லப்பட்டோம். SAIGYOவின் கவிதையில் சொல்லப்பட்டது போலவே சேற்றுப் புல்லில் மறைந்த்திருந்தது. மே மாத மழை தடத்தை சேறாக்கிவிட்டிருந்தது. நாங்கள் நின்றுவிட்டோம், உடல்சோர்வில், களைத்துப்போய், தூரத்தில் பொருத்தமான பெயரிடப்பட்ட இரு கிராம்ங்களைக் கண்டபடி : மழையாடைக் கிராமம், குடைத்தீவு.
கஸஷிமா எங்கே?
மழைக்காலத்தில் தொலைந்து
சேறாகிக் கிடக்கும் சாலையில்
IWANUMAவில் இரவைக் கழித்தோம்.
19
Takekumaவில் அமைந்த பிரசித்தி பெற்ற பைன் மரங்களால் பெரிதும் கவரப்பட்டேன், அதன் இரு பிறவுற்ற தண்டுகளும் வெகு காலம் முன் போலவே இக்கணமும். கவித்துறவி Noin நினைவிலெழுந்தார். அவர் வந்து காணும் முன்பே, LORD FUJIWARANOL TAKAYOSHI ஒரு பாலம் அமைக்க இம்மரங்களை வெட்டி அகற்றினார். Noin அவ்விடம் அடைந்த போது எழுதினார் "பிரசித்தி பெற்ற அப்பைன் மரங்களின் ஒரு தடமுமில்லை". பலமுறை வெட்டப்பட்டு மீண்டும் வளர்ந்து நிற்கும் இம்மரங்கள், ஆயிரமாண்டுகளின் நினைவுச்சின்னமாக நின்றிருக்கிறது, கற்பனைக்கெட்டாத முழுமையுடன். கவிஞர் Kyohaku நான் கிளம்பும்போது ஒரு கவிதை எழுதி என்னிடம் கொடுத்தார்:
நினைவில்கொள்
என் குருவிடம் காண்பித்துவிடு
பிரசித்தமான Takekuma பைன் மரங்களை
ஓ.. வடக்கின் செர்ரி மலர்களே!
அதற்கு இப்போது நான் பதிலளிக்கிறேன்:
செர்ரி மலர்ந்த காலத்திலிருந்து
பிளந்த பைன் மரம் காண ஏக்கமுற்றேன்
மூன்று நெடும் மாதங்கள்
கடந்துவிட்டது