Tuesday, June 30, 2020

மொழிபெயர்ப்பு- குளிர் மலைக்கவிதைகள்

சிவந்த மேகங்களில் அமுது படைக்கும் ஒருவன்;
அவன் இல்லத்தில்
கூச்சல்கள் இல்லை

காலங்கள் வெவ்வேறல்ல
கோடையைப்போலவே இலையுதிரும்

இருண்ட பள்ளத்தாக்கின் நீர்த்தடம் காலத்தை அளக்கிறது

பைன் மரங்களின் பெருமூச்சு

அங்கு அரை நாள் தியானத்தில் அமர்ந்துவிடு
நீங்கி மறையும்
நூறு இலையுதிர் காலத்தின் சோகம்

- ஹான் ஷான்

Friday, June 26, 2020

ஆழம்

வான் நீந்தும்
வலசைப்
புற்கூட்டம்

உயிர் உயிர்
எனத் ததும்பும்
ஆழி

பெருநீலமும் விட்டு
விரிநீலம் தொட எழுந்த
கடலின்
பேருயிரொன்று
மீண்டும்
ஆழமைந்தது

நீலம் தோற்றம்
ஆழங்கள்
எல்லையற்றவை
என
சிறகசைத்தன
மீன்கள்

Wednesday, June 24, 2020

உச்சி மரத்தின்
நுனியில்
தளிரென
ஒரு புள்
அலகேந்திய
பழமென
நிலவு

கிரகங்களை
அலகேந்திப்
பறக்கும்
சிறகுகளின்
காற்று மோத
தாவிற்று
கிரகங்கள்
மிதக்கும் கடலில்

Sunday, June 21, 2020

நீ இல்லாத தூரம்
இப்புல்வெளியின் விரிவு
ஏரிக் கனவுகளின் தவிப்பு
மாட்டின் மணிச்சத்தம்
வெகு தூரம் உலவும் அந்தியின் மௌனம்
காற்று தவித்தலையும் ஓசை
மரங்களின் பெருமூச்சில் விழியமையும் இலைகளின் விண்நோக்கு
இருளிலாழும் மலைகளின் நிழல்
அந்தியின் இறுதி இசையாய்
புள் ஒன்று

Saturday, June 20, 2020

சொல்லின்
அர்த்தம்

சொல்லின்
கோபம்

சொல்லின்
கீழ்மை

சொல்லின்
மகிழ்வு

சொல்லின்
அழகு

சொல்லின்
எரி

சொல்லின்
ஏகாந்தம்

எல்லாமறுத்து

சொல்லின்
சலனம்

சொல்லின்
மௌனம்

சொல்லின்
சொல்லின்மை

எஞ்சியது
சொல்

Wednesday, June 17, 2020

வேர்கள்
அவ்வளவு
உறுதியாய்
நிலம் பற்றியிழுத்தும்
மலையுச்சி
மரங்கள்
விண்ணோக்கியே
கைநீட்டுகின்றன

அலையும்
காற்று அறியும்
மரநுனிவிரலின்
ஓயா
தாகத்தை

Tuesday, June 16, 2020

வேர்
கொள்ளும்
அமுதுமெல்லாம்
விண்ணோக்கியே
ஏக
தென்னை
ஏனோ
தன் பார்வையை
பூமியிலேயே
நாட்டியுள்ளது
அருகமைந்த
குளத்தில்
ஒளிர்கிறது
நட்சத்திரங்கள்

Monday, June 15, 2020

துவங்கிய
கோலத்தை
புள்ளிகளுடன்
நிறுத்திவிட்டு
உள்சென்றாய்

கோலப்புள்ளிகளும்
புல்நுனி அமர்ந்த
பனிப்புள்ளிகளும்
ஒன்றையொன்று
உசாவியறிந்தன

பின் கதைத்தன
தன்னைப்
படைத்த
கரங்களைப்பற்றி

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...