வியாழன், 8 மே, 2025

உதிர்தல்

 1


மரணத்தின் பறவை
கூவி அழைக்க
அதற்கொரு பறவை
பதிலுறுகிறது
ஒவ்வொரு பறவைக்குரலையும்
கேட்டுக்கொண்டே இருக்கிறது
இம்மாபெரும் காடு

...........
2

இலைகள் உதிர்வதைப்
பார்த்தபின்
அத்தனை ஆசையாய்
மலர்களை‌ நோக்கிக்கொள்கிறேன்
அத்தனை‌‌ ஆசையாய்
மலர்களைப் பார்த்தபின்
ஒரு கணம்
அத்தனை முழுமையாய்
வானத்தைப்பார்த்துக்கொள்கிறேன்

...........
3

இது காரணங்களின்
காலம்
கரை மணலின் ஒவ்வொரு
பாதத் தடத்துக்கும் ஒரு காரணமுண்டு
ஏரியின் ஒவ்வொரு அலைக்கும்
காரணமுண்டு
பாறைகள் மெல்ல மிக மெல்ல
அசைவதற்கு காரணமுண்டு
போன வருடம் அலர்ந்து
பின் உதிர்ந்தவைதான்
இவ்வருடம் மலர்ந்து செரிந்துள்ளன
என்பதைத்தாண்டி
உதிர்தலுக்கான காரணம்
வேறென்ன?
மலர்தலுக்குத்தான்
காரணம் என்ன?

................
4

தென்னையோலைகள்
ஒலிக்கும்
இம்மதியத்தில்
தோட்டமெல்லாம் கீரிச்சிடும்
அணிலொன்றை தொடர்ந்து
சென்ற போது
காட்சியானது மயில்
அந்நிறத்தின் கொழுந்தை
யார் மறைப்பது
பின்
வானமேயென எழுந்த கழுகின்
அழைப்பொன்று
அழைத்தவை அனைத்தையும்
கண்டுகொண்டானபின்
இருப்பை துளியும் அறிவிக்காமல்
நெளியாய்க் கிடந்ததை
கண்டு கொண்டது எது?
நஞ்சின் அமுது துடிக்கும் நா
எழுப்பும்‌ சப்தம் அத்தனை
அமைதியாய்
காலத்தின் குகைக்குள்
ஒளிர்கிறது

.........
5

பல்லாயிரமாண்டுகளாய்
கடலொலிக்கும்
பெருமீனின் ஏக்கக் குரலின்
த்வனி என்ன?
இன்மையும் இருப்புமாய்
ஜாலமிடும் வானம்
கடல் மேல் ஏன் விழுந்து கிடக்கிறது?
மலர்வும் உதிர்வும்
அலையலைமேல் ஆரோகணிக்கிறது
இதற்கு மேல் கேள்வி என்ன?

.........
6

அது முத்தமிட
நெருங்கும் போது
அதை அள்ளிப்பற்றி
முத்தமிடுவேன்

.........
7

மறுகரை தெரியாத
ஆதி நதியின் கரை
இதுவரைக் கேட்டிராத
பறவைக்குரல்
இதுவரைப் பார்த்திராத
வான் நிறம்
இதுவரைப் பார்த்திராத
நதிச் சுழிப்புகள்
பிறந்தவை அனைத்தையும்
கரைசேர்க்கும் படகோட்டியே
இன்னும் சற்றுக்கெல்லாம்
மறுகரை வந்துவிடும்
ஆயிரமாயிரம் கேள்விகளின் மௌனத்துடன்
மலர்களை இனிக்காண
வாய்க்குமா அறியேன்
ஒன்று சொல்
ஜனனம் கொண்டவை அனைத்தும்
குறுக்காகக் கடந்து மறு கரை
சேரும் இந்நதி,
அது எக்கடல் சேர்கிறது?

.........
8

எந்த சூத்திரமும்
வரையறுக்க முடியாது
எந்த தர்க்கமும்
விளக்க முடியாது
பித்தனின் தூரிகை
வரைந்து காட்டியது
கடைசி சுவாசத்தை
அத்தனை கனிவாய் நோக்கும்
அதன் நிழலை

..........
9

தனக்குவமை
இல்லாதான்
தாள் சேர்ந்தார் சேராதார்
அனைவரின் பறவைகளுக்காகவும்
காத்துள்ளது வானம்

..........
10

முடிவுகளின் அலை வீசும்
கரைக்கு
வந்துகொண்டே இருக்கிறார்கள்
ஒரு கணம் ஒரே கணம்
பிரயத்தனப்படுங்கள்
செவி கூருங்கள்
மெல்லிய மிக மெல்லிய
இசையொன்று ஒலித்துக்கொண்டே
இருக்கிறது
யுகங்கள் துமியாக
பறக்கும் கரையில்

..........
11

காலம் மகா சர்ப்பம்
காலம் வானம்
காலம் அடிமுடியற்ற கடல்
காலம் பேரலை நிரை
காலம் சுழல்
காலம் ஒரு‌ சுழி
காலம் ஓயா கீதம்
காலம் ஆழ் மௌனம்
முடிவிலியின் பெருக்கில்
ஒரு முற்றுப்புள்ளிதான்
எத்தனை ஆசுவாசமளிப்பது

...........
12

இப்புள்ளிக்கு அப்பால்
என்ன படகோட்டியே
எல்லாம் உதிர்ந்துவிடுமா
என் அன்புகள்
என் கனவுகள்
என் உறவுகள்
என் சாதனைகள்
என் ஒரு வாழ்க்கை
என் நான்
நான்
உதிரப்போவது எதுவென்று
அறியாமல்
அதனுடன் ஒரு வாழ்வு
இந்நீர்த்திரைக்கு
அப்பால் என்ன படகோட்டியே?
காலத்தின் அரூபமா?
..............
13

இசைத்துக்கொண்டிருக்கிறான்
நாதம் துடியெழுந்தாடுகிறது
வானம் சரிந்து மழையாய்
பொழியும் இந்நிலத்தில்
சுமையின் பாரமில்லை
வாழ்வென அருளப்பட்டதில்
ஒரு கணமேனும் அதன் இசையை
கேட்டவெரெனில்
நாதத்தின் பெருநடனம் மட்டும்
திகழும் இவ்விடத்தில்
மௌனத்தின் ஆசுவாசம்
கூடப்பெரும்

...,.........
14

தொட்டவுடன்
பதறி உதருகிறாய்
ஆம் தீ சுடும்
தீ சுடும்
ஒரு நாள்
தீ சுடும்

............
15

அகலில் நின்றெரிவது யார்?
ஊர்வலப் பந்தங்களில் நடனமிடுவது?
எல்லாத் துவக்கங்ளிலும் அத்தனை
மௌனமாய் ஒளிர்வது?
தினம் தினம் தினம்
உதயமாய் அந்தியாய்
பெருக்கெடுப்பது?
அடுக்கிய விறகுகளில்
எரிந்தெழுவது?
கடைசி நெருப்பே
பூமிக்கு எப்படி வந்தாய்
காலத்தின் ஒரு புள்ளியில்
வெடித்ததே பெருவெடிப்பு
அப்போழ்திலா?
..........
16

அந்த அதிசயம் மீண்டும்
நிகழ்நத்து
ஒரு மலரிதழ் என்
தோளில் விழுந்தது
பத்து வருடம் முன்
விழுந்ததே
அதே மலர்தான்
பத்து வருடம் முன் உதிர்ந்ததே
அதே மலர்தான்

..........
17

மலைக்கு
மரணமில்லை
நாம் அறிந்தவாறு

..........
18

திட்டவட்டமாக எதையும்
சொல்வதற்கில்லை
இந்த மான் எத்தனை
காலடிகளை வாழ்நாளில்
எடுத்து‌வைக்கும்
இதன் கொம்புகள் எப்படி
இப்படி கிளைத்தது
அதன் புள்ளிகள்
விழுந்த பாங்கு
என்னைப்போல்
எத்தனை மனிதர்களை
நோக்கிற்று
அம்மனிதர்கள் இப்போது
எங்கே
நான் இப்போது எங்கே
ஒன்று மட்டும் உறுதி
அது அடுத்து ஒரு அடி
வைத்தால்
யுகத்தின் சருகுகள்
சப்திக்கும்
மாகாலத்தின் சுள்ளி
ஒன்று உடையும்
அதன் ஒலி பெருவனத்துள்
சற்று ஓடிக்கரையும்

.........
19

உற்று நோக்குவேன்
அக்கணம்
ரொம்பவும் முக்கியம்
ஒரே கணத்தில்
துலங்கிவிடக்கூடும்
உதிர்வதென்பது
உதிர்தலா என்று

..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...