Monday, September 28, 2020

மலருலகு

மலருலகு 1

அந்த சிறுமலருக்குள்
ஆயிரம்
பறவைகள்
சிறகு கொண்டன

மலருலகு 2

ஒரு நதி
ஓடி க் கொண்டிருந்தது
ஆயிரம்
உயிர்கள்
திளைத்தன
மலரிதழ் நுனி
விண்துளி பகர்ந்தது
ஆழத்திற்கு

மலருலகு 3

ஆயிரம் மலர்கள்
எதற்கு?
உன் இல்லத்தின்
வாசலில்
சாலையோரமாகக்
காத்திருக்கிறது
ஒரு பிரபஞ்ச
ரகசியம்

மலருலகு 4

நீ
ஏந்திக்கொள்
ஒரு மலரை
நிறைவாகட்டும்
ஒரு கவிதை

மலருலகு 5

வாடும் பொழுதுகளில்
உளம் அழியாதே
வேறு மலர்
சூல் கொண்டுள்ளது
நாமறியா ஆழத்தில்
உதிர்ந்ததும்
மலர்வதும்
வேறல்ல

மலருலகு 6

புலரியின் ஆயிரம்
வண்ணங்கள்
அந்தியின் கோடி
மாயங்கள்
ஒரு மலரை
காண்கையில்
புன்னகைக்கிறாள்
மலர்

மலருலகு 7

செடி தன்
தியானத்தில்
காண்கிறது
மலராகிறது
அமிர்தம்

மலருலகு 8

உன் இல்லத்தில் அருகில்
நீ செல்லும் சாலையில்
நீ செல்லாத
மலைகளில்
காணாத நதியோரங்களில்
நீரற்ற சமவெளிகளில்
வாய்திறந்த பள்ளத்தாக்குளில்
கடலின் ஆழத்தில்
உள்ளது
மலர்

மலருலகு 9

முதல் இசை
மலரின் மென்மை

முதல் ஓவியம்
மலரின் அலையாடல்

முதல் கவிதை
மலரின் சொல்

முதல் காவியம்
மலரின் ஒரு வாழ்க்கை

முதல் மழை
ஒரு மலரின் துளி

முதல்‌‌ உயிர்
ஒரு மலர்

மலருலகு 10

மானுடத்
தடமற்ற
தூரத்துப் பிரபஞ்சத்தில்
மலர்ந்து
உதிர்ந்து
வாழ்கின்றன
மலர்கள்

மலருலகு 11

காதலை சொல்ல
மலரைக் கைக்கொண்டவன்
அறிந்திருக்கிறான்
உலகின் நீர்மையை

மலருலகு 12

நிலவொளி
கதிரொளி
இரு மலர்களிடையே
ஏகாந்தமாய்
சுழல்கிறது
உலகம்

மலருலகு 13

வெடித்தபின்
விரிகிறது
பிரபஞ்சம்
இல்லை மலர்கிறதா?

மலருலகு 14

ஒன்பது
கிரகங்களும்
கோடி சூரியன்களும்
நாமறியா தூரங்களும்
ஒளியாண்டு ஆழங்களும்
இன்னும் இன்னும்
எல்லாம் எல்லாம்
ஒரு மலருக்குள்

மலருலகு 15

மலர்வதுக்கும்
உதிர்வதுக்குமான
தூரம்
ஒரு வாழ்க்கை
எனப்படுகிறது

மலருலகு 16

தியானி த் திரு க்கும்
மலர்கள்
மானுடரைக்
காண்பதில்லை

மலருலகு 17

நதியனைத்தையும்
கடல் அனைத்தையும்
மலை அனைத்தையும்
நிலமனைத்தையும்
எக்கோணத்தில்
கண்டால்
அது மலரென
புலனாகும்?

மலருலகு 18
வான்
மண்
நீர்
ஒளி
உயிர்
விதை
செடி
இலை
பின் அறியாமல்
ஒரு மலர்

ஒரு வாழ்க்கை
அலையாடிற்று
காற்றில்

பின்
அறியாமல்
உதிர்ந்தது







































Sunday, September 27, 2020

வெளி

இந்தச் சிறுவானின் கீழ்
சிற்றில்லத்தில்
நமக்காக நாம்
சிருஷ்டித்த
உலகு
சிறியது
மிகச் சிறியது
மிக மிகச் சிறியது
உலகளெவே
சிறியது
இப்பெருநீலத் திமிங்கிலம்
மிதக்கிறது
ஏந்தியுள்ளது
கடல்

கடல்
மிதக்கிறது
ஏந்தியுள்ளது
மற்றொரு
கடல்

Tuesday, September 22, 2020

என் செல்லப்பெயரை
உனக்கு இட்டேன்

உன் செல்லப் பெயரை

எனக்கு இட்டாய்

உன்னை அழைக்கையில்
என்னையும்

என்னை அழைக்கையில்
உன்னையும்
நாம்
சொல்லிக்கொண்டிருந்தோம்

பின் இரண்டும் கலந்து
பிறந்தது
பெயரொன்று
அதற்கு நிழலில்லை
வெறும்
ஒளி
 மரங்களை வேரிழுத்து
விழுங்கும்
நெடுஞ்சாலையில்
அதிவேக
வாகனங்களை
மட்டுப்படுத்தி
குறுக்காக
கடக்கிறது
எருதுகளின் நிரை
கருஞ்சாலையில்
பசுமையாய் சாணம்
ஒரு நிமிட
அமைதிக்குப்பின்
முழங்கிற்று
சாலை பெருந்தூரமாய்
 உலகம் யாவும்
ஆழ்ந்தடங்கி உறங்குகையில்
வானம் விழித்துக்கொண்டது
மின்னல் துடித்து விழ
கண்டது விண்
மண் பேருயிரை
சிறு துகலெனக் கிடந்த
கண் வழி அறிந்தது
மண்
விண் எனும் விரிவை
மாமழை வந்தும்
அலையும் காற்றுக்கும்
உயிர் எரிகிறது
பெருமரமொன்றின்
வேரணைப்பில்
சிறு சுடர்
கசப்பின்
முதல் துளி
சென்று தொடுகிறது
பரிசுத்தமான ஒன்றை

அக்கணம் முதல்
அது கசப்பென்றும்
அறியப்பட்டது

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...