Saturday, February 8, 2020

சிறுபொழுது

அந்தியும்
புலரியும்
இரவும்
தன் வண்ணங்களை
பரிமாறிக்கொண்டிருக்கும்
இப்பெரும்பொழுதுகளில்
என் சிறுபொழுதினை
என் சிற்றில்லத்தில்
சிறு தோட்டம் செய்து
மலர் கொண்டு
மலர் தொடுத்து
விண்ணின் வண்ணங்களே
மலராகி வந்ததாய்
கதைத்து
மலர்கள்
கண்ணீர் விடுகையிலும்
மணம் வீசுவதை
ஒரு மகத்தான உண்மையாய்க்
கண்டு
மலர்கள் தேன் கொள்வது
மலர்களின் விழைவாலல்ல
அவை விண்ணுக்கு
ஒப்புக் கொடுத்ததன் விளைவென்று
உணர்ந்து
மலர் அசைய
மலரோடு அசைந்து
ஒரு மலராவதிலேயே
கழித்துவிடப்போகிறேன்
என் சிறுபொழுதினை

Sunday, February 2, 2020

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம். (மொழிபெயர்ப்பு)

"கொடுத்தல் பற்றி"

பின் ஒரு செல்வந்தன் கொடுத்தல் பற்றி எங்களிடம் பேசுங்கள் என்றான். அவன் பதிலுறுத்தான்:

உங்கள் உடமைகளிலிருந்த்து கொடுக்கையில் மிகக் கொஞ்சமே கொடுக்கிறீர்கள்.
எப்பொழுது உங்களையே கொடுக்குறீர்களோ அப்பொழுதே உண்மையாகக் கொடுக்கிறீர்கள்.
ஏனெனில் உங்கள் உடமையானது, நாளைக்கான தேவை பற்றிய பயத்தால் பாதுகாக்கப்படுவதன்றி பிறிதென்ன?
நாளை, நாளையானது புனித நகரத்தின் பயணிகளை பின்தொடர்ந்துகொண்டு தன் எலும்புகளை தடமற்ற வழிகளில் புதைத்துவைக்கும் அதி எச்சரிக்கை கொண்ட நாய்க்கு கொண்டுவரப்போவது என்ன?
மேலும் தேவையின் பயம் என்பதென்ன? தேவையே பயம் அல்லவா?
உங்கள் கிணறு நிறைந்திருக்கையிலும் தாகித்திருக்கிறீர்களெனில், அந்த அஞ்சத்தக்க தாகம் தணியப்போவதேயில்லை அல்லவா?
இருப்பவற்றிலிருந்து மிகக்கொஞ்சம் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அங்கீகாரத்திற்காகக் கொடுக்கிறார்கள், அவர்கள் கரந்திருக்கும் விழைவு அவர்கள் பரிசுகளை முழுமையற்றதாக்குகிறது.
இருப்பவை சிறிதெனினும் முழுவதையும் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்களே வாழ்வின் மீது நம்பிக்கையுடையவர்கள், வாழ்வின் புதையல், இவர்களின் கலன் குறைவதேயில்லை.
மகிழ்ச்சியாக கொடுப்பவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கு மகிழ்ச்சியே வெகுமதியாகிறது.
வலியிலும் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்,அவர்களுக்கு  அவ்வலியே முழுக்காட்டு.
கொடுக்கையில் வலியறியாது , இன்பம் விழையாது, நன்மைசெய்வதான பிரக்ஞையற்று கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் பல்லத்தாக்கின் மலர்கள் தன் மணத்தை பெருவெளியில் பரப்புவது போல் கொடுக்கிறார்கள்.
இவர்களின் கரம் வழியே கடவுள் பேசுகிறார், இவர்கள் கண்களின் பின்னிருந்து அவர் பூமியின் மீது புன்னகைக்கிறார்.

கேட்கையில் கொடுத்தல் நன்று, கேட்கப்படாதபோது புரிதலால் கொடுத்தல் சிறந்தது.
கொடையாளனின் கரங்களுக்கு இரப்பவனைக் கண்டடைவதில் இன்பம், கொடுப்பதைக்காட்டிலும்.
நீங்கள் எதனையாவது தக்கவைத்துக்கொள்ளவேண்டுமா என்ன?
உங்களிடம் இருக்கும் அனைத்தும் ஒருநாள் கொடுக்கப்பட்டுவிடும்.
ஆக இக்கணமே கொடுங்கள், கொடையின் பருவம் உங்களுடையதாகட்டும், உங்கள் சந்ததியினருடையதாகாமல்.

நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள் "நான் கொடுப்பேன், தகுதியானவனுக்கு மட்டும்" என்று.
உங்கள் தோட்டத்தின் மலர்கள் அப்படிச் சொல்வதில்லை, உங்கள் கொட்டிலின் ஆவினங்கள் அப்படிச் சொல்வதில்லை.
அவை வாழ்வதற்காக கொடுக்கின்றன, ஏனெனில் தக்கவைத்தல் அழிவாகும்.
இரவையும் பகலையும் பெறத் தகுதியுள்ள எவ்வொருவனும் உங்களிடமிருக்கும் அனைத்திற்கும் தகுதிபடைத்தவனே.
வாழ்வெனும் கடலிலிருந்து குடிக்கும் தகுதி பெற்ற ஒருவன் உங்கள் சிற்றோடையிலிருந்துப் பருகத் தகுதிபெற்றவனே.
பெற்றுக்கொள்வதான தொண்டில் இருக்கும் தைரியத்தை தன்னம்பிக்கையைக் காட்டிலும் பெரிய விரிநிலம் உண்டா என்ன?
அவர்கள் உங்கள் முன் தங்கள் அகம் திறந்து, மானஅவமானங்களின் திரை அகற்றி நின்றிருக்க, அவர்களின் தகுதியை வெட்கமின்றி எடைபோட நீங்கள்
யார்?
முதலில் நீங்கள் கொடையாளனாக, கொடுத்தலின் கருவியாக தகுதியானவரா எனப் பாருங்கள்.
உண்மை யாதெனில், வாழ்கை வாழ்க்கைக்கு கொடுத்துக்கொள்கிறது, கொடையாளனாக கனவு கண்டுகொண்டிருக்கும் நீங்கள் வெறும் சாட்சி மட்டுமே.

பெறுவர்களே - நீங்கள் எல்லோரும் பெறுபவர்கள்தான் - நன்றியறிதலின் சிறு பலுவையும் கருதாதீர்கள், ஏனெனில் கொடையாளன் மீதும் உங்கள் மீதும் நுகத்தடியின் பலுவை சுமத்துபவராவீர்கள்.
மாறாக கொடையாளனோடு சேர்ந்து மேலெழுங்கள், பரிசுகளே சிறகுகளாக.
உங்கள் கடன்களின் மீது அதிகவனம் கொள்வதென்பது, பூமியைத் தாயாகவும் இறைவனைத் தந்தையாகவும் விரித்த கட்டற்ற மனதின் கருணையை சந்தேகிப்பதாகும்.



கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம் (மொழிபெயர்ப்பு)

"குழந்தைகள் பற்றி"

குழந்தையொன்றை தன் மார்போடு ஏந்தியிருந்த பெண் கூறினாள், எங்களிடம் குழந்தைகளைப் பற்றிப் பேசுங்கள்.
அவர் சொன்னார்:
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.
வாழ்வு தன் மீதே கொண்ட பிரியத்தின் குழந்தைகள் அவர்கள்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறர்கள். உங்களிலிருந்தல்ல.
அவர்கள் உங்களோடு இருக்கலாம், ஆனால் உங்கள் உடமையல்ல.

அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள் உங்கள் எண்ணங்களை அல்ல,
ஏனெனில் அவர்களுக்கு சுயமான எண்ணங்கள் உண்டு,
அவர்கள் உடலை குடிவைத்திருக்கலாம் ஆனால் அவர்கள் ஆன்மாவை அல்ல,
ஏனெனில் அவர்கள் ஆன்மா உங்களால் கனவிலும் அணுக முடியாத நாளையில் குடிகொண்டுள்ளது
குழந்தைகள் போலாக பிரயத்தனப்படுங்கள் ஆனால் அவர்களை உங்களைப் போலாக்கிவிடாதீர்கள்
ஏனெனில் வாழ்வின் ஒழுக்கு பின்னோக்கியதல்ல, நேற்றில் நிலைத்திருப்பதல்ல,
உங்கள் குழந்தைகள் உயிருள்ள அம்புகளாக முன்செலுத்தப்படுகின்றன, நீங்க்கள் வில்லாகிறீர்கள்
வில்லாளன் இலக்காக முடிவின்மையை நோக்குகிறான், உங்களை தன் வலிகொண்டமட்டும் வளைக்கிறான், தன் அம்புகள் வேகமாகவும் தொலைவும் செல்லட்டுமென்று
வில்லாளியின் கைகளில் வளைக்கப்படுவது இன்பமென்றாகுக
ஏனெனில் பறக்கும் அன்புகளை காதலிப்பது போலவே, நிலையான வில்லினையும் காதலிக்கிறான் அவன்

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம்

"திருமணம் பற்றி"

பின் அல்மித்ரா பேசினான், குருவே திருணம் பற்றி?

அவர் பதிலலித்தார்:

நீங்கள் ஒன்றாகவே பிறந்தீர்கள், நீங்கள் மேலும் மேலும் ஒன்றாகவே இருங்கள்.
மரணத்தின் வெண்மையான சிறகுகள் உங்கள் நாட்களை சிதறடிக்கையிலும் ஒன்றாகவே இருங்கள்.
ஆம், கடவுளின் மௌனமான நினைவிலும் ஒன்றாகவே இருபீர்களாகுக.
ஆனால் உங்களிடையே இடைவெளி இருக்கட்டும்.
அதனில் சுவர்க்கத்தின் காற்று நடனம் புரியட்டும்.

ஒருவரை ஒருவர் காதலியுங்கள், காதலால் ஒருவரை ஒருவர் பிணைத்துக்கொள்ளாதீர்கள்:
உங்கள் ஆன்மாவின் கரைகளினிடையே அசையும் கடல்  இருக்கட்டும்.
ஒருவரின் கோப்பையை மற்றோருவர் நிரப்புங்கள் ஆனால் ஒரு கோப்பையில் அருந்தாதீர்கள்.
உங்கள் பண்டங்களை ஒருவருக்கொருவர் கொடுங்கள், ஆனால் உண்ணாதிருங்கள் ஒரே பண்டத்தை.
ஒன்றாக  ஆடுங்கள் பாடுங்கள் மகிழ்ந்திருங்கள், ஆனால் விடுங்கள் ஒருவரை ஒருவர் தனிமையிலும்.
கிட்டாரின் தந்திகள் தனித்திருந்தாலும் அவை ஒரே இசையில் அதிர்கின்றன.
உங்கள் இதயத்தை கொடுங்கள், மற்றவர் பிணைத்துவைப்பதற்காக அல்ல.
ஏனெனில் வாழ்வின் கரங்கள் மட்டுமே உங்கள் இதயங்களை ஏந்தலாம்.
ஒன்றாக நில்லுங்கள், ஆனால் ரொம்பவும் நெருக்கமாக அல்ல.
ஏனெனில் கோபுரங்கள் தனித்தனியாகவே நிற்கின்றன,
மேலும் பெருவிருட்சங்கள் ஒன்றன் நிழலில் மற்றொன்று வளர்வதில்லை. 

Saturday, February 1, 2020

கலீல் கிப்ரானின் "The Prophet" நூலின் ஒரு அத்யாயம்.

"காதல் பற்றி"

பின் அல்மித்ரா கூறினான்,"எங்களிடம் காதலைப் பற்றி பேசுங்கள்."
அவன் தலையை உயர்த்தினான். மக்களை நோக்கினான். அசைவின்மை அவர்கள் மேல் படர்ந்தது. உன்னதமான குரலில் அவன் கூறினான்:

காதல் உங்களை அழைக்கையில் அவனை பின்தொடருங்கள்.
அவன் வழிகள் கடினமானதாக மேடானதாக இருப்பினும்.
அவனுடைய சிறகுகள் உங்களை அணைக்கையில் உங்களை ஒப்புக்கொடுங்கள்.
அவன் சிறகுகளில் கரந்திருக்கும் வாள் உங்களை காயப்படுத்தினாலும்.
மேலும் அவன் உங்களோடு பேசுகையில் அவனை நம்புங்கள்.
வடக்குக் காற்று தோட்டத்தை அழித்துப்போடுவது போல், அவன் குரல் உங்களை குலைத்துப்போட்டாலும்.

அவன் கிரீடம் சூட்டும் அதே neram உங்களை சிலுவையில்அரையக்கூடும். உங்களை வளர்த்துவிடும் செயலில் உங்கள் கிளைகளை கழித்துவிடக்கூடும்.

உங்கள் உயரத்திற்கு படர்ந்து சூரியனில் திளைக்கும் மென்கிளைகளை வருடக்கூடும்,
அவனே உங்கள் வேர்நோக்கி ஆழ்ந்து, மண்ணினுடான பிணைப்பை உலுக்கக்கூடும்.

சோளக்க்திர்களை திரட்டி எடுப்பது போல் அவன் உங்களை தன்னோடு திரட்டி எடுக்கிறான்.
கதிரடித்து உங்களை நிர்வானமாக்கட்டும்.
உங்களை சலித்து உங்களை உமியிலிருந்து பிரித்தெடுக்கட்டும்.
உங்களை அரைத்து மேலும் மென்மையாக்கட்டும்.
உங்களை அரைக்கட்டும், நீங்கள் வளையும் மென்மையடையும்வரை.
பின் உங்களை தன் புனித நெருப்பில் அவியாக்குவான், கடவுளின் புனித விருந்தில் புனித உணவாவீர்கள்.

இவையனைத்தையும் காதல் உங்களுக்கு செய்விக்கும். அதனால் உங்கள் இதயத்தின் இரகசியங்களை அறிவீர்கள். அதன் ஒளியில் வாழ்வின் இதயத்தில் ஒரு சிறுபகுதியாவீர்கள்.

ஆனால் பயத்தினால் காதலின் அமைதியையும் இன்பத்தையும் மட்டும் நாடுபவராக இருந்தால்,
உங்கள் நிர்வானத்தை மறைத்துக்கொண்டு கதிரடிக்கும் களத்தை விட்டு நீங்குங்கள்,
பருவங்களில்லா உலகத்துக்குள். அங்கு நீங்கள் சிரிக்கலாம் முழுமையின்றி, அழலாம் கண்ணீரின் முழுமையறியாமல்.

காதல் தன்னையன்றி பிறிதொன்றை கொடுப்பதில்லை. தன்னிடமின்றி பிறிதொன்றிடம் எடுத்துக்கொள்வதுமில்லை.
காதல் உடைமைப்படுத்துவதில்லை, உடையாக்கப்படுவதுமில்லை.
காதல் காதலால் நிறைவுறுகிறது.

நீங்கள் காதலிக்கையில் "கடவுள் என் இதயத்தில் இருக்கிறார்" என்று கூறாதீர்கள். மாறாக "நான் கடவுளின் இதயத்தில் இருக்கிறேன்" என்று உரையுங்கள்.
உங்களால் காதலின் தடத்தை மாற்றமுடியும் என்று எண்ணாதீர்கள், காதலுக்கு நீங்கள் தகுதியானவராக இருப்பின் அது உங்கள் தடத்தை நிர்னயிக்கும்.

காதல் விழைவுகளற்றது தன்னில் தான் நிறைவதைத்தவிர.
ஆனால் நீங்கள் காதலித்தால் உங்களுக்கு விழைவுகள் இருக்குமானால் அவை இவையாக இருக்கட்டும்:

உருகவும், இரவின் கீதத்தை பாடும் சிற்றோடை போலாகவும்.
அதிமென்மையின் வலியை உணரவும்.
காதல் பற்றிய உங்கள் புரிதலால் புண்படவும்.
விழைந்து சந்தோஷமாக இரத்தம் சிந்தவும்.
புலரியில் சிறகுமுளைத்த இதயத்துடன் எழுந்து, காதலால் ஆன மற்றோரு தினத்திற்கு நன்றி செலுத்தவும்..
மதியப்பொழுதில் ஓய்வெடுத்து காதலின் உன்மத்தத்தை தியானிக்கவும்.
அந்தியில் நன்றியுடன் இல்லம் திரும்பவும்.
பின் இதயத்தில் அன்பானவர்களுக்கான வேண்டுதலோடு, உதடுகளில் வாழ்த்தின் கீதத்தோடு உறங்கச்செல்லவும்.

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...