Saturday, April 25, 2020

SHOSHA - ISSAC B SINGER


வாழ்க்கை துயரமானது அர்த்தமற்றது எனப் புலம்ப யாருக்கேனும் நியாயம் இருக்கிறதென்றால் அது ஐசக் பாஷவிஸ் சிங்கரின் ஷோஷா நாவலின் கதாபாத்திரங்களுக்கே. இரண்டு உலகப் போருக்கு இடையே நிகழும் கதை. போலந்தில் வாழும் யூதர்களே பெரும்பான்மை கதாபாத்திரங்கள். ஹிட்லரின் நாஜிப் படை வரப்போகிறது கொன்று குவிக்க. இதற்கிடையே கட்டற்ற உறவுகள், தற்கொலை பற்றிய சிந்தனைகள், தற்கொலை அனைத்தும் வந்து போகிறது. இவர்களுக்கு இருத்தலியல் சிக்கல் வருவதில் ஆச்சர்யமில்லைதான். இப்போது காப்காவின் 'அந்நியன்' நாவலின் பாத்திரம் பால்கனியில் அமர்ந்துகொண்டு வாழ்க்கையை வெறுப்பதும்,  என்னைக் காதலிப்பாயா என உருகும் காதலியிடம் 'அதெல்லாம் கேட்காதே உன்னோடு இருப்பேன் அவ்வளவுதான்' என்பதும் ஏன் எனும் கேள்வியை எழுப்புகிறது.

நாவல் ஒரு காலகட்டத்தை அதன் பல சிக்கல்களைச் சொல்லிச் செல்கிறது. யூதர்களின் பழமைவாதிகளும் நவீன சிந்தனையுடன் எழும் ஒரு புது கூட்டாமுமாய் வாழும் காலம். ஹிட்லர் மெல்ல வளர்ந்து வரும் காலம், சோவியத் ரஷ்யாவில் அகோவென்றெழுந்த யுகப் புரட்சி, தன் காம்ரேடுக்களையே கொன்று குவிக்கத்துவங்கிவிட்ட காலம். இப்படியான ஒரு காலகட்டமே நாவலுக்கு இருண்மையைத் தந்துவிடுகிறது. மேலும் இருண்மையோடு கதாபாத்திரங்கள்.

"அரேல்"தான் Protagonist. அவன்தான் கதைசொல்லியும். அரேல் ஒரு மரபான  போலந்தில் வாழும் யூத குடும்பத்தைச் சார்ந்த சிறுவன். அவன் அப்பா ஒரு Rabbi (மதகுரு). இவர்கள் பக்கத்துவீட்டுப்பெண் ஷோஷா. அரேல் தன் வயது சிறூவர்களுடன் ஒட்டாமல் போகிறான், அவர்களும் இவனை சேர்த்துக்கொள்வதில்லை. அரேல் ஷோஷாவிடம் வருகிறான். அவன் கதைசொல்ல சொல்ல ஷோஷா தன் விழிகள் விரிய கேட்டுக்கொண்டிருக்கிறாள். இருவரும் நண்பர்கள். அரேலுக்கு ஷோஷாவை விட்டால் கதை சொல்லவோ, ஷோஷாவிற்கு அரேலை விட்டால் கதை கேட்கவோ ஆளில்லை. ஆனால் குடும்பங்கள் வேறு வேறு இடங்களுக்கு நகர தொடர்பற்று போகிறார்கள் அரேலும் ஷோஷாவும்.

அரேல் வார்ஷாவிலேயே வசித்திருந்தாலும் ஷோஷாவை அடுத்து ஒரு பதினைந்து வருடங்களுக்கு சந்திகவேயில்லை. இதற்கிடையில் அரேல் மரபு சார்கல்வியுடையவனாக இருப்பினும் நவீன சிந்தனைகளுடன் உருவாகிறான். எழுத்தாளனகும் முயற்சியுடன் ட்ராமாக்கள் எழுதுகிறான். அரேலின் காதல் மேலும் சில உறவுகள் என கதை நீள்கிறது. வாசிப்பின் போது சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இடமொன்று. அரேல் ஒரு நாடகம் எழுதி இயக்க பெரும்பணம் பெருகிறான். நல்ல வசிப்பிடமும் உணவுமாய் வாழ்கையில் அரேல் வாழ்க்கை பற்றிய பெருந்துயரோ, தற்கொலை உணர்வோ இல்லதவனாய் இருக்கிறான். ஆனால் நாவலின் பின்பகுதியில் கையில் காசு இல்லாமல் போகும் நேரத்தில் அரேல் தற்கொலைச் சிந்தனைகளைச் சென்றடைகிறான். ஏன் ஒருவன் வாழ்க்கையை வெறுக்கிறான் எனும் கேள்வி எழுகிறது நம்மில்.

 நாஜிப் படை வந்துகொண்டிருக்கிறது. உறவுகள் தன் வழக்கமான பாதையிலிருந்து சிதறுகின்றன. கணவனுக்குத் தெரிந்து தெரியாமலும் மனைவிக்குத் தெரிந்தும் தெரியாமலும் உடலுறவுகள். நிறைய கதாபாத்திரங்கள் தற்கொலைப் பற்றிப் பேசுகிறார்கள். மனிதவரலாற்றின் இருண்ட நிகழ்வான யூதப் படுகொலை ராட்சத மிருகமாய் மெல்ல ஊர்ந்து வருகையில் இப்பாத்திரங்கள் கொள்ளும் பிறழ்வு எல்லாமே நியாயமாகப் படுகிறது. இப்படியான ஒரு நேரத்தில் அரேல் மீண்டும் ஷோஷாவைச் சந்திக்கிறான். அதே தெருவில் வேறொரு வீட்டில் தன் அம்மவுடன் வசித்து வருகிறாள் ஷோஷா. ஷோஷா உடல் வளர்த்தி குன்றியவளாய் இன்னும் ஒரு பத்து வயதுச் சிறுமியின் தோற்றத்துடன் இருக்கிறாள். அரேல் ஷோஷாவைப் பார்த்ததுமே தன்னுள் என்றுமிருந்துவந்த அவள்மீதான காதலை உணர்ந்துகொள்கிறான். 

தினமும் ஷோஷாவைச் சந்திக்கிறான் அரேல். இதற்கிடையில் அரேலை தன்னுடன் அமெரிக்கா வந்துவிடும்படியும் தன்னை மணந்துகொள்ளும் படியும் அழைக்கிறாள் BETTY. அரேள் மறுத்துவிடுகிறான். ஷோஷாவை மணந்துகொள்கிறான். இவளை மணந்த்துகொண்டாள் உன் எழுத்துக்கனவு பாழாகும், நாடகங்கள் இயக்க முடியாது உன்னைப் பிடித்த பீடையாக இருப்பாள் இவள், மேலும் ஜெர்ன்மன் படை வருகிறது, இவளுக்காக இங்கிருந்து சாகப்போகிறாயா? இப்படியான பல கேள்விகள் அரேலுக்கு முன் வைக்கப்படுகின்றன.  ஆனால் அரேலுக்கு தான் ஷோஷாவைக் காதலிப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது,

ஷோஷா  நோய்மையால் சோர்ந்து கண் இடுங்கி நம் உள்ளங்கைகளில் ஒண்டிக்கொள்ளும் ஒரு பறவைக் குஞ்சு. ஷோஷா உடலளவில் பத்து வயது சிறுமி என்றாலும் , மனதளவில் மேலும் குழந்தை. அரேலும் ஷோஷாவும் செல்லும் ஒரு மாலை நடையில், ஷோஷா கேட்கிறாள்

"அரேல் நீ என்னை காதலிக்கிறாயா?"

"ஆம் ஷோஷா.. ரொம்பவும்"

"நீ இத்தனை நாள் இல்லாத போது இல்லாமலிருந்தாய். இப்போது நீ வந்துவிட்டாய், இனி என்னை நீங்கினால் நான் ஆயிரம் முறைச் சாவேன்"

"உன்னை நீங்கவே மாட்டேன் ஷோஷா"

"பார் அரேல், வானம் சிவப்பாக இருக்கிறது, நெருப்பைப் போல. இந்த கட்டிடங்களில் யார் வாழ்கிறார்கள் அரேல்?"

"பணக்காரர்கள்"

"யூதர்களா?"

"இல்லை"

"அரேல் எனக்கு பயமாக இருக்கிறது, என்னை வீட்டு அழைத்துச் செல்"

"பயப்படாதே. இறந்து போவதென்றானால் நாம் ஒன்றாக இறந்து போவோம்"

"ஒரு பையனையும் பெண்ணையும் ஒன்றாக புதைக்க அனுமதிப்பார்களா"

நான் பதில் சொல்லவில்லை. ஷோஷா என்  தோள்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு நடந்தாள்.

நாஜிப்படை உள்நுழைய இன்னும் ஓரிரவே இருக்கிறது. அரேல் வார்ஷாவின் கடைத்தெரு ஒன்று உயிர்ப்போடு இயங்குவதை மலைத்துப் போய் பார்க்கிறான். அவ்விடம் ஒரு பிணக்காடாக மாறயிருக்கும் இடம். நாஜிப் படை உள்நுழைந்த மறுநாள், அரேல் ஷோஷா நடந்தே ரஷ்யா நோக்கிப் புறப்படுகிறார்கள். இரண்டாவது நாளில் ஷோஷா அரேலிடம் "அரேல் என்னால் முடியவில்லை" என்றபடி தரையில் அமர்கிறாள். பின் இறந்து போகிறாள். வார் அன்ட் பீஸ் நாவலில் லிட்டில் ப்ரின்ஸஸ் எனும் பாத்திரம் குழந்தையை பிரசவித்த பின் இறந்து போகும். "நான் என்ன செய்தேன்.. ஏனிப்படி" எனும் கேள்வியாக அவள் முகம் உரைந்திருப்பதாக தல்ஸ்தோய் எழுதியிருப்பார். ஷோஷா அதே போலொரு கேள்வியை எழுப்புகிறாள்.

அரேல் ஏன் ஷோஷாவிற்காக போலாந்திலேயே இருந்தான். BETTYஐ மணந்துகொண்டு அமெரிக்கா போயிருக்கலாமே? ஏன்? வாழ்வின் இருட்பெருக்கினிடையே சிறு ஒளிக்கிற்றாக இருப்பது உறவுகள்தானா?

இத்தனை நிகழ்ந்த பின்னும் வாழ்க்கை நகர்கிறது. அரேல் ரஷ்யா சென்று பின் சீனா சென்று, அமெரிக்க ஜெனரல் ஒருவரை மணந்து கொண்டுவிட்ட bettyயின் உதவியுடன் அமெரிக்கா செல்கிறான். BETTY ஏதோ ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அந்நாளில் தற்கொலை செய்து கொண்டுவிடுகிறாள். நாவலில் இன்னும் சில பாத்திரங்கள் தற்கொலை செய்து கொண்டுவிடுகிறார்கள். தற்கொலைக்கு முன் அனைவரும் தன் அன்பானவர்களிடம் உதவிக்கு ஆதரவுக்கு கரம் நீட்டுகிறார்கள். அன்றாடத்தின் சராசரிப் பெருக்கில் அக்கரங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

அரேல் ஷோஷாவால் மீண்டுவிடுகிறான். 


No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...