Friday, April 3, 2020

பேரெழில் முன்

கடல்முன் நிற்பது எல்லோரையும்போல் எனக்கும் பிடித்த ஒன்று. நீர்ப்பெருவிரிவு மெல்ல உள்நுழைந்து ஏதோ ஒன்றை இலகச் செய்யும். மலைகளும் அப்படித்தான். பல்லத்தாக்குள், பெரும்பசுமை, பேருந்து ஜன்னல் வழி காட்சியாகும் தூரத்து அருவி எல்லாம் நம்மை திகைக்க வைக்கிறது. சங்க இலக்கியம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது இயற்கை வர்ணனைகள். கம்பன் கார்கால வருகையை ஐம்பதற்கும் மேலான பாடல்களில் சித்தரிக்கிறான். சினிமாவில் நீங்கள் பார்த்த ஏதோ ஒரு இயற்கை காட்சி உங்கள் மனம் நீங்காமல் இப்பொழுதும் இருக்கும். எதற்கு இயற்கை மீண்டும் மீண்டும் பாடப்படுகிற்து? அது நம்மை சிறியதாக்குகிறது என்பதே பதிலாகப் படுகிறது. அல்லது நம் சிறு வாழ்க்கையை மீறி நிற்கும் பிரம்மாண்டம் இயற்கை.

டெரென்ஸ் மாலிக்கின் "தி ஹிட்டட் லைப்" உண்மை நிகழ்வை ஒற்றி உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த Franz என்ற ஒரு மனிதன் மட்டும் போருக்கு செல்வதில்லை, போருக்கு நிதி உதவி செய்வதில்லை என முடிவெடுக்கிறான்.  ஊர் அவனை விலக்குகிறது. உடன் வாழும் மனைவியும் குழந்தைகளும் அம்மாவும் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனாலும் உறுதியாய் நிற்கிறான் franz. தன் தொழிலான விவசாயத்தை தன் குடும்பத்துடன் செய்து கொண்டு இக்காலகட்டத்தை கடந்து விட எண்ணுகிறான். ஆனால் போருக்கு அவனை அழைத்து ஆணை வருகிறது. முதலில் தடுமாற்றம். பின் அவனாக சிறை தேடி சென்றுவிடுகிறான். "Hail Hitler" என்ற வாக்கியத்தை சொல்ல மறுக்கிறான். பின் பெர்லினில் உள்ள சிறைக்கு அனுப்பப்படுகிறான். அவனுக்கென்று அமர்த்தப்பட்ட லாயர் சொல்கிறார் " நீ போருக்குச்  செல்ல வேண்டாம். மருத்துவமனையில் வார்ட் பாயாக செயல்படு போதும்". Franz கேட்கிறான் "நான் ஹிட்லருக்கு பணிய வேண்டுமா. என் விசுவாசத்தை ஹிட்லருக்கு அளிப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டுமா?". "ஆம்" அப்படியெனில் முடியாது என மறுத்துவிடுகிறான்.

FRANZக்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது "நீ ஒருவன் இப்படி செய்வதால் போர் நின்றுவிடாது. உன்னைப்பற்றி யாருக்கும் தெரியாது. யாரும் உன்னை ஏரிட்டு நோக்கப்பபோவதில்லை" .. இப்படி ஆயிரம் சொன்னாலும் FRANZ உறுதியாய் இருந்துவிடுகிறான். ஒரு சாமனியனின் மன உறுதி அவன் நம்பிக்கை. உலகின் தீமைக்கு எதிராய் தன் எதிர்ப்பை சற்றும் தளர்த்திகொள்ள முடியாத அவன் உறுதி அவன் குடும்பத்தை பெறும் இடருக்குள்ளாக்குகிறது. ஆனாலும் மறுத்துவிடுகிறான். அவனுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீள்கிறது. சுருக்கி காட்சிகளை அடக்கினால் ஒன்றரை மணிநேரத்தில் சொல்லிவிடக்கூடிய கதைதான். அப்படியெனில் கூடுதலாக டெரென்ஸ் மாலிக் செய்வதென்ன?
இயற்கையை காட்சிப்படுத்துகிறார். முதல் 45 நிமிடங்க்கள்  ப்ரான்ஸும் அவன் குடும்பமும் அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதும் காட்சிப்படுத்தப்படுகிறது. அது ஒரு மலைக்கிராமம். இவ்வளவு எழிலுக்கு மத்தியில் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதே எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. பைன்மரங்க்கள் அடர்ந்த மலைகள். ஆயிரம் நெளிவுகளுடன் ஓடும் நதி. விரிந்த்து கிடக்கும் புல்வெளி. FRANZ உம் அவன் மனைவி  FANY  உம் ஒரு காட்சியில் புல் வெளியில் அணைத்துகொண்டு படுத்திருப்பார்கள். பின்புலத்தில் மலை. அவர்கள் லேசாக சரிய கேமிரா அவர்களுடன் சரியவும் அவர்கள் கைகள் கோர்த்திருப்பது வானமும் மலையும் பின்புலமாக அமைய காட்சிப்படுதப்பட்டிருக்கும். அத்தனை அழகான காட்சி. அதே நேரம் அவர்கள் உறவின் அழகையும் ஆழத்தையும் சொல்லிவிடுகிறது.

டெரென்ஸ் மாலிக்கின் காட்சி மொழி  இசை, மொழி, காட்சி இவற்றை பினைத்து உருவாக்கும் கனவு போன்ற ஓட்டத்தை உடையது.  சினிமா என்ற கலைவடிவின் பெரும்பலம் அது மற்ற எல்லா கலைவடிவங்களையும்  பயன்படுத்திகொள்ளலாம் என்பதுதான். அதனை முழுமையாக செய்கிறார் டெரென்ஸ் மாலிக். படம் முழுவதும் தொடர் இருப்பாக் இசை ஒழுகிச்செல்கிரது. பின்னணிக்குரல்வழி உணர்வை வெளிப்படுத்தும் பாணி தொடர்ந்து டெரென்ஸ் மாலிக் பயன்படுத்துவது. கவித்துவமான வரிகள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. படம் துவங்குவதே "நான் நினைத்திருந்தேன் நம் கூட்டை ஓர் மரத்தின் உச்சியில் கட்டிக்கொள்ளலாம் என. அங்கிருந்து நாம் மலைகளை நோக்கி பறந்து செல்லலாம் என", இவ்வழகான வரிகளுடன். ஒழுகிச் செல்லும் இசை, கவித்துவமான வரிகள், இயற்கை இவையெல்லாம் பிணைந்துகொள்கையில் டெரென்ஸ் மாலிக்கின் படங்கள் க்ளாசிக் அனுபத்தை எட்டுகின்றன.

கதை, மானுடம் இருள் நோக்கிச் செல்ல அதனை எதிர்த்து நிற்கும் தனி மனித  உறுதி பற்றியது. ஆனால் இயற்கை படம் முழுதும் காட்சிப்படுத்தப்பட்டு படம் முடிவடைகையில் இவ்வளவு ஆட்டத்தினையும் மௌன சாட்சியாக இயற்கை பார்த்திருப்பதாக தோன்றிவிடுகிறது. படம் முடிவை  எட்டும் போது "எத்தனை சிறிய ஆட்டம் நம்முடையது" எனும் வரி மனதில் ஓடிகொண்டே இருந்தது. ஒட்டு மொத்த மானுடத்தின் ஆட்டத்தினை சிறியதாக்கும் இயற்கையும், மானுடத்தின் சிறு ஆட்டத்தில் ஒளியை தொடர்ந்த்து செல்லும் ஒருவனின் உறுதியும், ஒருவர் ஆழத்தை மற்றவர் புரிந்துகொண்ட அன்பும் டெரென்ஸ் மாலிக்கின் "THE HIDDEN Life"  என தொகுத்துக்கொள்கிறேன்.

(பின் குறிப்பு : இரண்டு வகை படங்கள். ஒன்று, பார்வையாளனின் எந்தப் பிரயத்தனத்தையும் கோராமல் அவனை உள்ளிழுத்துக்கொள்பவை. இரண்டு, படைப்பாளி தன் போக்கில் தான் கண்ட உண்மையை முன்வைப்பதையே நோக்கமாகக் கொண்டு பார்வையாளனை ஈர்ப்பதை இரண்டாம் பட்சமாகக் கொண்டவை. THE HIDDEN LIFE இரண்டாம் வகை. )

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...