Sunday, September 10, 2017

போய்க்கொண்டிருப்பவள் (நாவல் விமர்சனம்)

A NOVEL BY KHALED HOSSEINI

நான் வாசிக்கும் கலீத் ஹுஸெய்னியின் முதல் படைப்பு இது. ஒரு தேர்ந்த கதைசொல்லியை காண்கிறேன். உணர்வுகளை வாசகர்களுக்கு கடத்தும் வித்தை முழுவதும் கூடப்பெற்றுள்ளது எழுத்தில். உணர்ச்சி நாடகம் என்று இந்நாவலைச் சொல்லலாம். சமூகத்தின் விதிகள், அதனால் இயக்கப்படும் மனிதர்கள், அதனால் வரும் தடைகள், அதனுடனான தனிமனித சுதந்திரத்திற்கான போராட்டம், பிழையான கட்டமைப்பை உடைத்து மீறி வெளிப்படும் அன்பு இப்படியாக நீள்கீறது நாவல்.

இரண்டு பெண்களின் வாழ்க்கைதான் இந்நாவல். இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் அடையும் துன்பங்களின் வழி புலனாவது ஒரு பாழடைந்த சமூக அமைப்பும் அதன் விதிகளுமே. வசதிபடைத்த ஜலீலிக்கும் அவர் விட்டின் பணிப்பெண்ணுக்கும் பிறக்கிறாள் மரியம். ஹராமி (பாஸ்டர்ட்) என்று முத்திரை குத்தப்படுகிறது. ஒரு குழந்தையின் மீது சுமத்தப்படும் கண்மூடித்தனமான சமூக வன்முறையில் துவங்குகிறது, கடைசியில் அவள் முடிவு வரை சமூகமும் அதன் விதிகளும் அதனால் உருவாகும் ஏற்கப்பட்ட வன்முறையுமே அவள் வாழ்க்கையும் நாவலின் மையமும். இதே சமூக விதிகளால், போர்ச்சூழலின் அவலத்தால் தவிக்கும் மற்றொரு பெண் லாய்லா. மரியத்தின் லாய்லாவின் வாழ்க்கை சந்திப்பதும் சென்றடையும் இடமும் திடீர் திருப்பங்களுடன் கூறப்படுகிறது. 

சமூகவிதிகள் இரு பெண்களின் வாழ்வை அவலமாக்குவதன் சித்திரம் நாவலின் ஒரு சரடு. மற்றொரு சரடு போர். ஒரு பழமைவாத விதிகளால் இயக்கப்படும் சமூகம் போரினால் துன்புறுவது இயல்பே. வீட்டிற்குள் மனைவிமேல் அவிழ்க்கப்படும் கட்டற்ற வன்முறையை ஏற்கும் சமூகம் கையில் துப்பாக்கியுடன் யாருக்கும் எதையும் செய்யும் மனிதக்கூட்டத்தையே உருவாக்கும்.  மரியம் பிறக்கும் போது தாவுத் கானின் மன்னராட்சி, மரியத்திற்கு மணமாகும் போது தாவுத்கானின் உறவினன் ஆட்சியை கைப்பற்றுகிறான். லாய்லா பிறக்கும் போது கம்யூனிஸ ஆட்சி. பின் "வார்லார்ட்ஸ்"  (WARLORDS) இடையிலான மோதல். டாலிபானின் வருகை. இப்படியாக அரசியல் சூழல் ஒரு பின்னணியாக (வெறும் செய்திகளாக) அமைகிறது. சரி, போர்... இதன் பங்கு நாவலில் என்ன? உயிரிழப்புகள் அதனால் வரும் சோகம், அவ்வளவே. ஆக போரினை நாவலின் தனிச் சரடாக கொள்ள இயலவில்லை. நாவலின் திடீர்த் திருப்ப உத்தி என்றளவில் நிற்கிறது. போர் பற்றிய தர்க்க ரீதியான ஆராய்ச்சியோ அது சென்றடைய வேண்டிய பதில்களற்ற கவித்துவ உச்சமோ நாவலில் இல்லை. வெறும் உணர்ச்சி மோத்லகள், தவிப்புகள் என நின்றுவிடுகிறது நாவல். ஒரு பழமைவாத சமூகம் (குறிப்பாக தாலிபான் ஆட்சியின் கீழ்) பெண்களுக்கு இழைக்கும் அநீதியை, அடிப்படை உரிமைகளைக் கூட பரிக்கும் விதத்தை நாவல் வெற்றிகரமாக பதிவு செய்கிறது. (டாலிபான் ஆட்சியின் கீழ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி மருத்துவமனை. ஒட்டு மொத்த காபூலுக்கும் ஒரே பெண்கள் மருத்துவமனைதான். சந்தக்கடையாக கிடக்கும் அங்க்கு அனஸ்தட்டிக் இல்லாமல் லாய்லாவுக்கு ஸிஸேரியன் நடக்கும் இடம் பெரும் அதிர்வை அளிக்கிறது). 

ஆக போர்ச்சூழல் ஓரளவிற்கும், பாழ்பட்ட சமூக விதிகள் முழுமைக்கும் இரு பெண்களின் வாழ்வினை பாதித்து அதன் வழி பிறக்கும் துன்பியல் நாடகமே இந்நாவல் எனத் தொகுக்கலாம்.

வடிவ அளவில் வழக்காமான நேர்க்கோட்டு உத்தியைக் கையாண்டுள்ளது. எளிமையான சிக்கலற்ற நடை பெரும் பலம். அங்கங்கு வரும், 'ஆணின் குற்றம்சாட்டும் விரல்கள் , வடக்கையே காட்டும் திசைமானியைப் போல பெண்ணையே சுட்டுகிறது'  போன்ற வரிகள், உணர்ச்சிகரமான இடங்களில் கதாபாத்திரங்களின் நுண்சித்தரிப்பு, "மரியம் தன் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கும் முதல் முடிவினை எடுத்தாள்" போன்ற நாவல் வெளிப்படுத்த விரும்புவதை மேலும் கூராக்கும் வரிகள் ஆகியவை வாசிப்பை சுவாரஸ்யமாக்குக்கிறது. நாஸ்டால்ஜிக் கனங்களை வெற்றிகரமாக உருவாக்குகிறார் ஹுசெய்னி.  உணர்ச்சி நாடகத்தை மீறி கவித்துவக் கணங்களுக்கு நாவலில் அவ்வளவு சாத்தியமிருந்தும், ஓரிரு இடங்களைத் தவிர் வெளிப்படவில்லை.

"எண்ண இயலாது
அவள் கூரைகளின் ஆயிரம் மெல்லொளி கூடிய நிலவுகளை
மேலும் அவள் சுவர்களில் ஒளிந்திருக்கும்
சூரியன்களை
ஆயிரம் அற்புதச் சூரியன்களை"
இவ்வரிகள் காபுல் நகரத்தைப் பற்றியதாக இடம் பெறுகிறது. ஒரு நகரத்தின் கதை என்பது அவ்வளவு எளிமையானதா? அதன் கதை அதன் எண்ணற்ற மனிதர்களின், உணர்வுகளின், மரணங்களின், மரங்களின், மிருகங்களின், காற்றின் , மண்ணின் இன்னும் எண்ணற்றவற்றின் கதையல்லவா? அதை எண்ணிவிட முடியுமா என்ன? இதுவும் பின் ஆயிரம் சூரியன்கள் மரியத்திற்குள் ஒளிர்வதாக சொல்லும் இடமும் நான் ரசித்த கவித்துவ இடங்கள். பெண்ணுக்குள் இருக்கும் ஆயிரம் சூரியன் எனும்போது கண்ணகியையும் திரௌபதியையும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

என் அப்பா ஒரு சீனப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பெண் அழும் காட்சி. "சச... எந்நாட்டுக்காரனா இருந்தா என்னடா தம்பி அழுகையும் சோகமும் ஒன்னுதான?" என்றார். வெறு நாடு வேறு மனிதர்கள் எனும் ஆர்வத்தில் நாவலை எடுத்தேன். ஆனால் அங்கு கண்டது என் வாழ்வில் நானறிந்த சில பெண்களை. அங்கிருக்கும் அளவு மோசமல்ல ஆனால் சமூகத்தின் அழுத்தம் என்றளவில் அங்கும் இங்கும் இருப்பது உரிமை மீரல்தான். என் சமூகத்தின்   பாழடைந்த போக்குகள் அங்கு மேலும் பூதாகராமாய் நிற்கிறது. ஆனால் இவ்வளவு நெருக்கடிகள், கணவன் மட்டுமல்ல அரசும் ஒட்டுமொத்த சமூகமும் நசுக்கும் போது மரியம் ஜோவும், லாய்லா ஜோவும் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.  என் விமர்சனங்களைக் கடந்து ஒரு லகுவான வாசிப்புக்கு உரிய துன்பியல் நாடகம் "A THOUSAND SPLENDID SUNS".


அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...