Saturday, August 12, 2017

எளிமைப்படுத்துதலின் சாபம் (பேகம் ஜான்)

வரலாறும் கலையும் சந்திக்கும் கணம் தனித்துவமானது. உண்மையும் , கற்பனை தரும் தரிசனமும் அதில் வெளிப்படுகையில் அழியாததாக அக்கணம் நீடித்துவிடுகிறது. நம் சினிமா நம் வரலாற்றை லேசாக ஒரு பார்வை பார்த்துள்ளது என்பது மீறி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஹே ராம் தவிர நானறிந்தவரையில் வேறெந்த படமும் குறிப்பிட்டு சொல்லும் தகுதியற்றவை.



"பேகம் ஜான்" இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் அமைக்கப்படவும் வெகு ஆர்வமாக பார்க்கத் துவங்கினேன். வெறும் பின்னணி மட்டும்தான். பிரிவினையின் கோர முகமேதும் தலைகாட்டவில்லை. புகைப்படத்தில் சம்மந்தமில்லாத ஒருவர் பதிவாகியிருப்பது போல் வரலாறு பாட்டுக்கு ஓரமாய் நிற்கிறது பேகம் ஜான் படத்தில்.

ஆம் நிறையும் குறையும் உள்ளன. சொல்லிவிடுகிறேன். ஸர் ஸிரில் ராட்க்லிப் இந்தியா பாகிஸ்தானை பிரிக்கிறார். இந்தக் கூத்து பற்றி "இந்தியா ஆப்டர் காந்தியில்" விரிவாக பதிவாகியுள்ளது. இந்திய பாக்கிஸ்தான் எல்லை ஒரு வீட்டை ரெண்டு பாகமாக பிரிப்பது பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதுபோல் படத்தில் எல்லைக்கோடு ஒரு வேசை விடுதியை இரண்டாகப் பிரித்துப் போகிறது. அரசு அதிகாரிகள் வேசை விடுதியை நடத்தும் பேகம் ஜானிடம் தெரிவிக்கிறார்கள். பேகம் ஜான் மறுக்கிறாள். ஒரு லோக்கல் ரௌடியை அணுகுகிறார்கள் அதிகாரிகள். பேகம் ஜானும், மற்ற பெண்களும் சண்டையிடுகிறார்கள். பின், முடிவு.

அற்புதமான சில கணங்களை கடந்து செல்கிறது படம். ஆனால் இந்திய சினிமாவின் அடிப்படைத் தேவையாக நிலைப்பெற்றுவிட்ட எளிமைப்படுத்துதல் மற்றும் மிகைப் படுத்துதல் அக்கணங்களை கெடுக்கின்றன. உதாரணமாக பிரசித்தி பெற்ற  நேருவின் "long before we made a tryst with destiny..." எனத் தொடங்கும் சுதந்திர உரை ரேடியோவில் ஒலிபரப்பாகிறது. சுற்றி அமர்ந்து பேகம் ஜான் விடுதியின் பெண்கள் அதை ஒன்றும் புரியாமல் கேட்கிறார்கள். சாதாரண மக்கள் வரலாற்றின் ஒழுக்கில், அவ்வொழுக்கினைப் பற்றிய எந்தவிதப் பிரக்ஞையுமின்றி அமர்ந்துள்ளார்கள். அழகாகத் தெரிகிறது அக்காட்சியில். இதுவே போதுமானது.  ஆனால், தொடர்ந்து பேகம் ஜான் பெண்ணுக்கும் சுதந்திரம் கிட்டாதது பற்றி பேசுகிறாள். என் வரையில் அனாவசியம். கலை ஓவராக பேசக்கூடாது. அதிலும் பிரசங்கம் கூடவே கூடாது. இரண்டும் நிகழ்கிறது படத்தில்.

மற்றொரு இடம். பேகம் ஜானும் மற்ற பெண்களும் துப்பாக்கி பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டு ரௌடிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடுகிறார்கள். விடுதியிலேயே பிறந்து வளரும் ஒரு சிறுமியையும் , அவள் தாயையும் தப்பிக்கச் செய்கிறார்கள். அச்சிறுமியும் தாயையும் போலீஸ் வலைத்துக் கொள்கிறது. அதிகாரமும் காமமும் இன்ஸ்பெக்ட்டரை தன் பேண்ட்டை கழட்டச்ச் செய்கிறது. மனதின் இருள் வியாபிக்கும் கணத்தில் அச்சிறுமி தன் ஆடையைக் கலைகிறாள்‌. இன்ஸ்பெக்ட்டர் அலறிக் கெஞ்சுகிறான் அணிந்து கொள்ளும்படி. 18 வது அட்சக்கோடு நாவலின் முடிவும்  (புறவடிவில் மட்டும்) இது போன்றதோர் காட்சியே.  ஆனால் இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்! வெகு ஜனம் எனும் இலக்கில் சிக்கி நிற்கும் சினிமாவுக்கும், சமரசமற்ற கண்டடைதலை இலக்காக்கும் இலக்கியத்திற்குமான வித்தியாசம்தான்...வேறென்ன!

படத்தின் கடைசி காட்சி நெகிழ்ச்சியானது. கவித்துவமானதும் கூட.  காட்சியை இங்கு சித்தரிப்பதாயில்லை. என் கவித்துவத்தை கட்டுக்குள் வைக்கிறேன். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

நடிப்பு, ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது. நம்பகத்தன்மையையும், இயல்பையும் சேர்க்கிறது படத்திற்கு. ஆனால் முரணாக , தேவையில்லாத மிகைப்படுத்துதல் கதையில் உள்ளது. சண்டைக்கு துப்பாக்கிப் பயிற்சி எடுப்பது, துப்பாக்கிச் சண்டை, வழக்கமான வில்லனாக ஒரு டீச்சர் கதாபாத்திரம்‌, பெண்ணின் நிலை பற்றிய இயல்பற்ற வசனங்கள் என சறுக்கல்கள் பல. ஆனாலும், பிரிவினையைப் பின்புலமாகக் கொண்டது, அவ்வேசை இல்லத்தைச் சுற்றி இந்துக்களும் முஸ்லீம்களும் இடம் மாறும் காட்சி, ஒளிப்பதிவு என  கவனிக்கப்பட வேண்டிய படமாக மட்டும் நிற்கிறது பேகம் ஜான். அழகிய மலராகும் சாத்தியமிருந்தும் செடி நீங்கி மண்ணில் கிடக்கும் மொட்டாக பேகம் ஜான்.

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...