Tuesday, April 4, 2017

மானுடத்தின் தோல்வி - 18வது அட்சக்கோடு


சுதந்திர காலகட்டத்தை ஒட்டி முன்னும் பின்னுமாக , இந்திய யூனியனுடன் இன்னும் இணைந்திராத ஹைதரமாத் சமஸ்தானத்தில் செக்கந்திரபாத்தில் வசிக்கும் ஒரு தமிழ் இளைஞனின் அனுபவத்தின் வழி மானுடம் தோல்வியுறும் கணத்தை முழு வீர்யத்துடன் கூறுகிறது  18வது அட்சக்கோடு. இப்படி சம்பிரதாயமான வரிகளுடன் இக்கட்டுரையை தொடங்குவது நாவலுக்கு நியாயம் செய்யவில்லை. சம்பிரதாயமான நாவலல்ல இது. நான் வாசித்த படைப்புகளில் ஆகச் சிறந்த ஒன்று. 

நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்நாவலை படிக்கமுடியாமல் ஒதுக்கிவைத்தேன். இந்நாவலே தோழி ஒருத்தியால் 'போர்' என்று என்னிடம் இலவசமாக வந்தது. என்னால் 'போர்' என்று ஸ்திரமாக முடிவு கட்ட இயலவில்லை. புலிக் கலைஞனையும், தண்ணீர்  போன்ற படைப்புகள் வேண்டுமென்றளவு பாதிப்பை விட்டுச் சென்றதே காரணம். படைப்பை நான் அடைய இன்னும் பயணிக்க வேண்டியுள்ளது என முடிவு கட்டினேன். இன்று அடைந்துவிட்டேன்.

அசோகமித்ரனைப்போல் கதை கூறல்முறையைக் கையாளும் எழுத்தாளர்களை நானறியவில்லை. எதையும் அசைக்காமல், சிகையைக் கூட கலைக்காமல் வீசும் தென்றல். ஆனால் நம்மை கடந்த பின் பார்த்தால் மரங்களை வீசி எரிந்திருக்கும். பெருங்கணங்களை எப்படிச் சொல்வது? வெண்முரசில் ஒரு மென்கணத்தை தொட்டு தொட்டு விரிக்கிறார். நீலம் நாவலின் முதல் சில அத்யாயங்கள் அப்படியானவை. எழுதுபவனில் கூடும் தவிப்பை செறிவான ஒரு பெறும் சொற்வெள்ளமாக அவிழ்ப்பது. இதற்கு நேரெதிரான ஒரு கூறல் முறை அசோகமித்திரனுடையது. எளிமை. மிகையின்மை. ஆனால் இவ்வெளிமை வழி அ.மி தொடுவதும் ஒரு பெருங்கணத்தையே!

அசோகமித்ரனால் பகீர்க் கணங்கள் யாவும் மிகச் சாதரணமாகச் சொல்லப்படுகிறது. எந்த அலட்டலுமில்லாமல் கூறும் போது அக்கணம் தரவேண்டிய சலிப்பு வாசகனில் பல்மடங்காகிவிடுகிறது. சாருவின் ராஸ லீலா, திவ்யா எனும் பாத்திரத்தை "அவள் நான்காவது தற்கொலை முயற்சி தோல்வியடைவில்லை" என போகிற போக்கில் சொல்லிச் செல்லும். இச்சொல்முறை அ.மியிடமிருந்து பெற்றதாக இருக்கலாம். அ.மியுடன் ஒப்பிடுகையில் சாருவின் எழுத்து மிகையான எள்ளலும், வாசகனை ஈர்ப்பதற்கான அழகான நடையும் கொண்டது. அ.மியின் படைப்புகள் அடக்கமான குசும்பும், தட்டையான கூறலாலும் ஆனது. இந்த தட்டையான கூறலுக்குத்தான் எவ்வளவு ஈர்ப்பு.

அதே தட்டையான கூறல்தான் 18வது அட்சக்கோட்டில் செக்கந்திராபாத்தை மெல்ல நம்முன் உருவாக்குகிறது. சந்திரசேகர் சிறுவனாக, இளைஞனாக வாழ்வது ஒரு முக்கியான வரலாற்றுத் தருணத்தில். இந்தியா சுதந்திரம் அடைந்துவிடுகிறது. கூடவே பிரிவிணை. மதம். வெறி. இரத்தம். இடையே ஐநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் (ப்ரின்ஸ்லி ஸ்டேட்ஸ்- பெயரளவில் மன்னராட்சி. ஆனால் ப்ரிடீஷ் கட்டுப்பாடு), இந்தியாவுடனோ பாக்கிஸ்தானுடனோ இணைந்துகொள்ளலாம். பெரும்பாண்மை சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்துவிட்டது. ஜூனாகத், காஷ்மீர், ஹைதரபாத் ஆகிய அமஸ்தானங்கள் இழுவையில். ஜூனாகத் போலீஸ் உதவியால் இந்திய யூனியனோடு இணைகிறது. ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய ராணுவத்தால்... ஆனால் வேண்டுமென்ற அளவு வெறிஆட்டங்களோடு. இந்த வரலாறு நடந்தேறும் காலகட்டத்தில், சாமானியனாக வருகிறான் சந்திரசேகர். க்ரிக்கெட் ஆடுகிறான். சிறுவர்களுக்கிடையே கூட பிரிவு. அவனின் காமம் விழித்தெழுவதும் இக்காலத்தில். இவ்வளவு கமுக்கமாக அவன் தவிப்பை சொல்லமுடிந்துள்ளது அ.மியால். ஒரு சரடு இவன் வாழ்க்கை.மற்றொன்று வரலாறு. இரண்டும் ஒன்றை ஒன்று அரிதாக சந்தித்துக் கொள்கிறது. இவன் தமிழ் நண்பர்கள் கலவரத்திற்கு பயந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அரசியலின் கைகள் மெதுவாக இவர்கள் வீட்டுக்குள்ளும் வருகிறது. சந்திரசேகர் 'ரஜாக்கர்களால்' (ஹைதராபாத் நிஜாமால் உருவாக்கப்பட்ட படை) தாக்கப்படுகிறான். அவன் பக்கத்துவீட்டு காஸீம் ஒரு புள்ளியில் குரலுயர்த்துபவனாக உள்ளான். காங்கிரஸில் இணைந்து கல்லூரியை புரக்கணிப்பதென்று, இரத்தத்தால் கையெழுத்து இடுகிறான் சந்திரசேகரன். கையெழுத்து வாங்கியவன் வீட்டுக்குள் இருந்துகொண்டே இல்லையென்று சொல்லி அனுப்புகிறான். நிகழும் அரசியல் அரிசி தட்டுப்பட்டை கொணர்கிறது. சோள ரொட்டிதான் சாப்பிடுகிறார்கள். சர்க்கரை கிடைக்கவில்லை. பிரிவிணையின் போதான ரெப்யூஜீஸ் வந்த வண்ணமுள்ளார்கள். நாவல் மெல்ல ஒரு பெறும் சித்திரத்தை நம்முள் வரைந்து விடுகிறது. பின் ஒரு மாலையில் காந்தி சுடப்பட்ட செய்தி வருகிறது. சந்திரசேகர் 'காந்தீ காந்தீ' என கத்தி ஓடுகிறான். காந்தி ஒருமுறைக் கூட நேரில் காணாத ஒருவனை காந்தி முழுவது ஆக்ரமித்துள்ளார். காந்தியின் மரணத்திலும் கடைசி அத்யாயத்திலும் அ.மியின் வழக்கமான சாந்தக் கூரல் சற்றே உணர்ச்சியுடன் ஒலிக்கிறது.

கடைசி அத்யாயமும் கடைசி காட்சியும் பேரிலக்கியம் தரும் உணர்வினை அளிக்கிறது. அதனை கட்டுரையில் விவரிப்பது சரியல்ல.  இந்நாவல் இந்தியனால் அதிலும் ஒரு நகரத்தில் தன் காலத்தை கழித்த ஒருவனுக்கு மேலும் நெருக்கமாக வாய்ப்புள்ளது. ஆனால், கடைசி அத்யாயம் யாவருக்குமானது.   இதைத்தான் கட்டுரையின் தொடக்கத்தில் மானுடம் தோல்வியுறும் கணம் என்றேன். எந்த ஒரு தேசத்தவனாலும் உள்வாங்க முடியும்.  அரசியல், தத்துவம், கடவுள், இலக்கியம், கலை, அறம் இன்னும் பலவும் எதற்காகவோ அது தோலிவியுறுவது சந்திரசேகரனையும் வாசகனையும் நிலைகுலையவைக்கிறது.  மானுடத்தின் தோல்வியை ஒரு இளைஞனின் கண்களின் வழி மிகச் சாதாரணமாக சொல்லிவிடுகிறது 18வது அட்சக்கோடு.

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...