Sunday, April 5, 2020

திசையறிதல்


ஒரு கலை வடிவம் ஆன்மீகமான அல்லது அடிப்படை தத்துவக் கேள்விகளை கையாள்கையில் அதன் உச்சமான சாத்தியத்தை எட்டுகிறது. ஏனெனில் இக்கேள்விகளை ஒட்டியே வாழ்வின் ஒரு உச்சமான சாத்தியம் நிகழ்கிறது. ஒரு நிறைவான வாழ்விற்கு இக்கேள்விகளைக் கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. 

டெரென்ஸ் மாலிக் இசையையும், வழிந்தோடும் காட்சிகளையும், தியான நிலையில் ஒலிக்கும் மோனக்குரல் நரேஷனையும் கொண்டு "நீ எங்கிருக்கிறாய்?" "இதெல்லாம் என்ன?" எனும் கேள்விக்குள் நுழைந்து விடுகிறார். 

கதை ஒரு மரணத்தில் துவங்குகிறது. தத்துவார்தமான வாழ்வின் அர்த்தம் குறித்த கேள்விகளும் மரணத்தில்தான் துவங்குகிறது. கணவன் மனைவி மூன்று பிள்ளைகள். மிஸ்டர் ஓ ப்ரயன் மிஸஸ் ஓ ப்ரயன் குடும்பம். மிஸஸ் ஓ ப்ரயனின் குரல் சொல்கிறது, இரண்டு பாதைகள் உள்ளன வாழ்வில். இயற்கையின் வழி, அருளின் வழி. இயற்கையின் வழியில் போட்டிகள் உண்டு, காயங்கள் உண்டு, வெற்றிகளும் மகிழ்வும் தோல்வியும் உளைச்சலும் உண்டு. அருளின் பாதையில் அன்பு பிரதானமாகிறது மன்னிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நம்மைச் சூழ்ந்துள்ள பெரெழிலுக்காக மனம் நன்றியால் நிறைந்துள்ளது.  மனதில் காட்சிப்படுதிக்கொள்ளுங்கள் ஏறுமுகமான பிசிரில்லாத இசையுடன், தியானிக்கும் குரலில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன. அக்குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை தன் பத்தொன்பதாவது வயதில் இறந்து விடுகிறான். இசையும் நடிப்பும் பிரிவின் வலி நோக்கிச் செல்கிறது. மிஸஸ் ஓ ப்ரயனின் குரலில் "இறைவா நீ எங்கிருக்கிறாய்?" என்பதோடு சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத மாறியான ஒரு இருவது நிமிடம் வருகிறது. பிரபஞ்சத்தின் தோற்றத்தை காட்டுகிறார்,  நெருப்புப் பிழம்பாயிருந்து மெல்லக் கனிந்து பூமி உருவாகிறது, முதல் உயிர் தோன்றுகிறது, டைனோஸ்ர்கள் காண்பிக்கப்படுகின்றன, அதிலும் ஒரு டைனோஸர் அடிபட்டுக்கிடக்கும் குட்டி டைனோஸார் ஒன்றை வேட்டையாடும் நோக்குடன் வந்துவிட்டு அதன் தலையை காலால் தரையோடு இருமுறை அழுத்திவிட்டு செல்லும் காட்சி உயிரின் பரிணாமத்தோடு கருணையின் பரிணாமத்தையும் காண்பிக்கிறார். இந்த இசையுடன் கூடிய இருவது நிமிடங்கள் திகைப்பில் நம்மை ஆழ்த்திச் செல்கிறது. ஒரு மரணத்தின் பின் அது எழுப்பிய ஒரு கேள்வியிலிருந்து பிரபஞ்சத்தின் உருவாக்கம் அதன் பரிணாமம் நோக்கிச் செல்கிறார். கார்ல் ஸெகனின் "தி காஸ்மோஸ்" இவ்வரிகளுடன் துவங்குகிறது "The Universe is all that is ever was ever will be". நாமும் பிரபஞ்ச்சத்தின் துளிதான் இங்கிருக்கும் அனைத்தும் பிரபஞ்சம்தான் எனில், இவ்வேதனை மரணம் தரும் வேதனையின் வேர் என்ன, நம் உறவுகளின் அதன் சிக்கல்களின் நம் ஆணவங்களின் அது புண்படும் வலிகளின் தீர்வுதான் என்ன? 

படம் நேராக அன்றாடத்தின் சிக்கல்களுக்குள் இறங்குகிறது. மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஓ ப்ரனுயனுக்கு முதல் குழந்தை பிறக்கிறது. எத்தனை அழகான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மிஸ்டர் ப்ரயன் சிசுவின் பாதங்களை தன் கைகளுக்குள் ஏந்தியிருக்கும் காட்சி எவ்வளவு அழகானது கவித்துவமானது. 
மிஸ்டர் ப்ரயன் வாழ்வை அதன் சிக்கல்களை அதன் தோல்விகளை, புற உலகின் நிதர்சனமற்ற கோரிக்கைகளை எதிர்கொண்டு தோற்று வென்று சென்று, அவமானங்களை சுமந்து பிறருக்கு அவமானங்களை கொடுத்து.... இம்மதிரியான ஒரு வாழ்க்கைக்கு தன் பிள்ளைகளை தயார் செய்கிறார். மிஸஸ் ப்ரயன் அன்பின் பாதையை முன் வைப்பவள். அவள் சொற்களில்தான் தீர்வு இருக்கும் திசையை காட்டும் வெளிச்சம் இருக்கிறது. 

                                                      

பிரபஞ்ச உருவாக்கத்தின் வியப்பிலிருந்த்து அன்றாட சிக்கலின் தளத்திற்கு வெகு லகுவாக படம் பயணித்து வருகிறது. அக்குடும்பத்தின் மூத்த குழந்தை ஷியான் பென். ஒரு நாற்பது வயது மனிதனாய் தான் வேலை பார்க்கும் வானுயர் கட்டிடங்களிலும் அலைகழிக்கும் கேள்விகளுடன் சுற்றித்திரிகிறான்.

ஒரு பாறைக்குன்றில் ஒரு நிலை (கதவு நிலை) மட்டும் நிற்கிறது. ஒரு பெண் வழிநடத்தி முன் செல்கிறாள். அவன் அந்நிலையைக் கடக்கவும் அவன் (ஷியான் பென் கதாபாத்திரம்) ஒரு கடற்கரையில் நிற்கிறான். அங்கு மனிதர்கள் ஆசுமாசமாய் நடந்தலைகிறார்கள். அங்கு தன் இறந்த தம்பியைப் பார்க்கிறது ஷியான் பென் கதாபாத்திரம். மிஸ்டர் ப்ரயன் இருக்கிறார். மிஸஸ் ப்ரையன் இறந்த தன் குழந்தையை அள்ளி அணைத்து கண்ணீராகிறாள். எல்லோரிலும் மாறாத புன்னகை. அது அன்பின் நிலம். அந்நிலத்தில் அப்பெருங்கடல் முன் மண்டியிடுகிறது அக்கதாபாத்திரம். மிஸ்டர் ப்ரையன் தன் முதல் குழந்தையின் பாதத்தை தன் கைகளில் ஏந்தும் போது ஒரு நெகிழ்வு தோன்றூமே அப்படியான நெகிழ்வால் மட்டும் ஆன அன்பின் நிலம் அது என்பது என் பார்வை. நம் அன்றாடத்தின் அத்தனை சிக்கலுக்கும் அங்குதான் தீர்வு. 

                                   

படத்தின் முதல் காட்சியாக வருவது வெறும் கருப்புத் திரை. அதில் மெல்ல ஒரு சிவப்பு நிற ஒளிப்பிழம்பு தோன்றுகிறது. படத்தில் நான்கைந்து இடங்களிலும் படத்தின் இறுதிக் காட்சியாகவும் தோன்றும்  இச்சிவப்பு ஒளிப்பிழம்பு படைப்புச் சக்தியின் உருவகம். இதைப் பொலொரு கற்பனை திரையில் காட்டப்படுவது இதுவே முதல்முறை என நினைக்கிறேன்.

                                 

பிரபஞ்சத்தின் பரிணாமத்தை உயிர்களின் பரிணாமத்தை காட்சியாக்கி, அவற்றின் மாயத்தை சொல்லும் வகையில் படைப்புச்சக்தியை ஒரு சுடர் போன்ற சிவப்பு நிற படிமமாக்கி, அங்கிருந்து நம் அன்றாடத்தின் உறவின் சிக்கல்களுக்குள் நுழைந்து, அதற்கு அன்பினை இயற்கையை வியக்கும் ஒரு தரிசனத்தை தீர்வாக முன்வைத்து இப்படியான ஒரு பயணத்தை நிகழ்த்தும் படத்தை நான் திரையில் பார்ப்பது இதுவே முதல்முறை. திரையில் நிகழ்வதும் இதுவே முதல்முறை.

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...