Sunday, December 10, 2017

அலைக்கழிக்கும் கேள்வி



தன் வாழ்வின் முக்கியமான தருணத்தை சொல்லச்சொன்னால் ஒவ்வொரு மனிதனும் விடையற்ற கேள்வியை எதிர்கொண்ட ஒரு தருணத்தைச் சொல்வான் எனப்படுகிறது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அனுபவத்தின் வழியாக நம்க்கான பதிலற்ற ஒரு கேள்வியை உருவாக்கிக்கொள்கிறோம். அக்கேள்வி நம்மில் உண்டாக்கும் அலைக்கழிப்பு நம்முடன் ஓயாத இருப்பாகிறது. ஒவ்வொரு மானுடனும் இக்கேள்வியை எதிர்கொள்ளும் விதம் வேரென்றாலும் இக்கேள்விகள் யாவும் ஒரு சொல்லில் குவிகிறது. விதி.. ஏன்? என்ற கேள்விக்கு விதி எனும் சொல் போதிய பதிலாக ஆகாததால் அல்லது விதி எனும் சொல்லை  போதிய அர்த்த கணத்துடன் நாம் உணராததால் நம்மை ஏன் எனும் கேள்வி தொடர்கிறது. இந்த விதிப் பெருக்கில் நாமும் நம் அகமும் கருவியாகி நம் கட்டுமீறிச் செல்வதை அறிகையில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் ஆணவமும் தவிடுபொடியாகிறது. நாம் மாறுகிறோம்....


நம் சிறு வாழ்வில் நாம் இக்கேள்வியை (கண் திறந்து பார்க்கும் திராணி உள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில்) அடைகிறோம். நாம் நம் கேள்வியைக் கண்டு எழுப்பும் களமாகிய நம் வாழ்க்கை நதியென்றால், பாரதம் தன் கேள்விக்கு களமாகக் கொள்வது கடலை. பாரதம் போன்ற பெறும் படைப்பு அத்தனை கதாமாந்தர்களுடம் அவர்கள் அகங்களுடன் இந்த விதி என்னும் சொல்லை அர்த்த கணத்துடன் நம்மிடன் விட்டுச் செல்கிறது... ஏன்? என்ற கேள்வி யை யும் தான்.



இந்த ஏன்? எனும் கேள்வியில் துவங்கி காலத்தில் பின்சென்று ஒரு ஆய்வை நிகழ்த்துகிறது இனி நான் உறங்கட்டும் நாவல். மலையாள எழுத்தாளரான பி.கே.பாலகிருஷ்ணனால் 1970களில் எழுதப்பட்ட இந்நாவல் அவர் வாழ்நாளுக்கும் பொருளாதார ரீதியாக அவரை நிறைவாக வைத்திருந்தது.  பெரும்பாலும் வரலாறு குறித்த நூல்களும், இலக்கிய விமர்சனமும் எழுதிய பி.கே.பாலகிருஷ்ணனின் படைப்பிலக்கிய பங்களிப்பு இந்நாவல் மட்டுமே. ஒற்றை நாவலென்றாலும் இந்தியாவின் முக்கியமான நாவல்களின் வரிசையில் வைக்கத்தகுந்தது இந்நாவல்.



துரியோதனன் சாகக் கிடக்கிறான் குளக்கரையில். ஓநாய்களும் கழுகுகளும் புசிக்கக் காத்திருக்கின்றன அந்த மகராஜன் சாவதற்காக. இருட்டில் அஸ்வத்தாமன் வந்து சொல்கிறான், பாண்டவர் படைவீடுகளில் தீயிட்டதாக. திரௌபதி மைந்தர்களும் அவள் தமையனும் தீயில் இறந்தார்களென்று. துரியன் மனம் நிறைந்தவனாக இதோ நான் மகிழ்ச்சியாக சாகிறேன் எனக்கூறி மறிக்கிறான். க்ரோத்தில் துவங்குகிறது குருஷேத்ரம். ஏன்? என்ற கேள்விக்கு க்ரோதம் தன் கூர்ப்பல்காட்டி நகைக்கிறது. க்ரோதத்தின் ஜ்வாலை உள்ளிருந்து எரித்து விதிக்கு அவியாக்குகிறது வாழ்வை. இவ்விடத்தில் துவங்குகிறது நாவல். குருஷேத்ரம் தந்த பேரழிவையும் பெருந்துயரையும் அதூடே எழும் ஏனென்ற கேள்வியுடன் துவங்கிறது நாவல்.



குருச்ஷேத்ரம் இருண்மையை, கசப்பை, அதீத துக்கத்தை விதைத்துச் செல்கிறது. அழுகையின் கண்ணீரின் நடுவே ஏன் எனும் கேள்வி. நீத்தார்கடன் செலுத்துகையில் குந்தி கர்ணனுக்கும் நீத்தார்கடன் செலுத்தச் சொல்கிறாள் தர்மனிடம். நிலைகுலைகிறான் தர்மன். காடேகப்போவதாகச் சொல்கிறான்... வென்று வந்த பாதை உண்மையின் கோர ஒளியில் சகிக்கவொண்ணாததாக ஆகிறது. அவன் ஆழத்திலிருந்து எழுகிறது அக்கேள்வி... ஏன்?



உபநிடதம், கீதை, கன்பூஸியஸின் லுன் யூ எனும் நூல் போன்றவை கேள்வி பதில்களாகவே அமைந்துள்ளன.‌ கேள்விகளும் பதில்களுமான வடிவமே பதில்களற்ற கேள்விக்கு விடை காண ஏதானவை. மேல் சொன்னவை தத்துவ நூல்கள் என்பதால் நாவலின் கலைத்தன்மை மேல் சந்தேகம் கொள்ள வேண்டாம். உணர்வெழுச்சிகள் நம்மை ஆட்கொள்ளும் தருணங்கள் நாவலில் உண்டு. தர்மனும் திரௌபதியும் எழுப்பிக்கொள்ளும் கேள்விகள் வழி பயணிக்கிறது நாவல்.



தர்மன் நாரதரிடம் தன் வேதனை மிக்க மனதை காட்டி தொடர்ந்து ஏன் இதெல்லாம் எனும் கேள்வியை முன் வைக்கிறான். பின்பொரு நெரத்தில், திரௌபது கிருஷ்ணனிடம் கேட்கிறாள் இதெல்லாம் ஏன் என. அவர்களது பதில் பதிலற்ற கேள்வியின் பதிலற்ற தன்மையை விளக்குவதாக, அந்த பதில்லற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை அடையுமாறும் கூறுவதாக அமைகிறது. ஆயினும் நிகழ்வுகள் சுழட்டிவிடும் மனதின் கோர சுழற்சி மீண்டும் மீண்டும் 'ஏன்' எனும் கேள்விக்கே தள்ளுகிறது.



இப்படியாக கேள்விகளும் பதில்களும், எண்ண ஓட்டங்களுமாக நாவல் நவீன இலக்கியம் ஓயாது சென்று தொடும் வெறுமையைத் தொடுகிறது...



"நிகழ்ந்து முடிவுற்ற விபத்துக்களின் அடிப்படையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது , கேவலம் - நைந்து, இற்றுப்போன ஒரு சுயாபிமான பிரச்சனை மட்டுமே என்ற உண்மை நிதர்சனமாகிறது! அது குரு வம்சத்தை ஷத்ரிய குலத்தை முழுவதுமாக வினாசப் பாதையில் தள்ளியே விட்டுவிட்டது! காப்பாற்றப்பட்ட அந்த தன்மானம் என்னவாயிற்றென்றால், ஆரவாரத்துடன் மண்தரையில் விழுந்து உடைந்து போயிற்று! அதன் நச்சுச் சிதறல்கள் உயிரோடிருக்கும் அனைத்து இதயங்களிலும் தறைத்து உள்வாங்கி சீழ் கட்டி நிற்கிறது. ஆம், துர்க்கந்தம் மிக்க சீழ்."


இதோ நாவல் அந்த வெறுமையை வெரித்து நிற்கிறது. இருத்தலியம் காட்டும் வெறுமை. அதீத கசப்பை, அறியாமையின் பலவீனத்தை, மனிதனை சிறுகச் செய்து அர்த்தமற்ற சதைப்பிண்டமாக ஆக்குகிறது நாவல். 



திரௌபதியும், அவளும் பாண்டவர்களும் ஜன்ம சத்ருவாகக் கருதும் கர்ணனும்தான் மையப் பாத்திரங்கள். கிருஷ்ணன் கர்ணனை பாண்டவர் பக்கம் சேறுமாறு கூறுகையில் 'கீரீடம் தரித்து திரௌபதி பட்டமகிஷியாகக் கொண்டு கர்ணனே நீ ஆட்சி செய்வாய்' எனக் கூறுகிறான். இதனைக் கேட்கும் அவள் மனம் உலைகிறது. தன்னை வேசியென அழைத்து துகிலுரிக்கப்படுகையில் கைகொட்டி நகைத்த அவன் மேல் தான் கொண்ட பகைமை உணர்வின் மதிப்பு , புலனாகாத விதியின் முன் என்ன ஆயிற்று? கர்ணன் இட்ட உயிர்ப்பிச்சையே தன் கணவர்களின் உயிர்களென அறியும் போது அவள் மேலும் உலைகிறாள். விதியின் பகடைக்காயான குந்தியைக் காண்கிறாள். உண்மையை பல்லாண்டு சுமந்து அவள் அடைந்ததென்ன என பேதலிக்கிறாள் திரௌபதி. தர்மன் சகோதரனைக் கொன்ற பழியில் காடேக நிற்க, பெற்ற குழந்தைகளை இழந்து நிற்கும் திரௌபதிக்கு மொத்த குருஷேத்ரமும், அவள் மொத்த வாழ்வும் ஓர் அபத்தமான நிகழ்வாகப் படுகிறது. 



மொத்ததில் நாவல் ஒரு பெருந்தோல்வியைக் காண்பிக்கிறது. குருஷேத்ரத்தை தடுக்க இயலாத தன் வாழ்க்கை ஒரு படுதோல்வி என்கிறார். கர்ணன் திரௌபதி துகிலுரியக் கண்டு நகைக்கையில் தோற்கிறான். தர்மன் பதிமூன்று வருடங்களாக யாரைக் கொல்ல யாரைக் கண்டு அஞ்சினானோ அவன் தன் தமையன் என அறிந்த்ப்போது அவன் வாழ்க்கையும் தோல்வியுறுகிறது. குருஷேத்ரம் எனும் பெருந்தோல்வி    விட்டுச்செல்லும் வெறுமை நாவல் முழுவதும் கிடக்கிறது.



நாவலின் மற்றுமொரு சிறப்பு அதன் சித்தரிப்பு. நாகங்களால் பிணைக்கப்பட்டு விண்னை நோக்கி கைநீட்டி நிற்கும் சாத்தான்களாக மரங்கள் சித்தரிக்கப்படுகின்றன. இரத்தம் நிரம்பக் கிடக்கும் குருஷேத்ரபூமியில் கிடக்கும் யானையின் மரண ஓலங்கள், புரண்டவாரு உறங்கும் கங்கை, அதன் மேல் மானுடனைக் கண்டு கண்சிமிட்டி நகைக்கும் வானம் என நாவல் நம்மை இட்டுச்செல்லும் சோர்வு மன நிலை யின், விதியின் கோர முகத்தின் குறியீடாக அமைகின்றன சித்தரிப்புகள். 



ஆ.மாதவனின் மொழிப்யர்ப்பு பற்றி நிறைவின்மையை மற்ற வாசகர்கள்‌ வெளிப்படுத்தக் கேட்டதுண்டு. வாசிக்கும்போது அதையே நானும் உணர்கிறேன். சுத்தமாக அர்த்தமாகாத வரிகள் அங்கங்கு வருகின்றன. ததுவார்த்தாமன பல இடங்களில் மோழிபெயர்ப்பு தோல்வியுறுகிறது. சித்தரிப்புகளில் ரொம்பவும். மூல நூலைப்பற்றி அதன் ஓட்டம் பற்றி நண்பர்கள் கூறக் கேட்டதால் கூறுகிறேன் இதனை. ஆனால் இவ்வளவு இடறல் மீறியும் நாவல் ஒரு பெரும் படைப்பாக என்முன் நிற்கிறது. 



அன்பு, க்ரோதம், தர்மம், அதர்மம் என பலவாறாக விதி சூல் கொள்ளுகிறது. விதியை அதன் முழு அகோரத்துடன் காண நேரும் திரௌபதி குலைந்து சருகுகள் நிறைந்த காய்ந்த நிலமாகிறாள். இத்தனை நிகழ்வுகளின் காரணத்தை ஆய்கையில் அது ஒரு சுயாபிமானப் பிரச்சனையாகவே தோன்றுகிறது அவளுக்கு. அவளது கடைசி வரிகளாக வெளிவருவது "யுதிஷ்ட்ரா இனி நான் உறங்கப்போகிறேன்....இனி நான் உறங்கட்டும்". மரணத்தோடு மட்டும்தான் 'நான்' உறங்கச்செல்கிறது. 

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...