Sunday, October 27, 2019

ஒதுங்க
நிலமற்ற
பெரு மழை ச் சாலை யில்
உங்கள்
பிரயத்தனங்களை
உத்தரவுகளை
ஜாலங்களை
இதுவரையிலான
உங்கள்
பயணத்தை
அப்படியே விட்டுவிட்டு
இருபுறமும் கரை கட்டி யி ரு க்கும்
சிலிர்க்கும் பசும் கடலில்
மரணத்தின் ஏக்கத்துடன்
விழுந்து மடியுங்கள்
வீழும்
கோடித் துளிகளில்
ஒன்று
உங்களுக்கு
என்றன்றைக்குமான
மரணத்தை
அருளக் கூடும்

Thursday, October 24, 2019

பால்கனியில்
நிலைவை வெறித்துக்
கொண்டிருக்கையில்
தூரத்தில்
நீ வருவதைக்
கண்டேன்

இந்த இல்லத்தை
இந்த என்னை
வைத்துக்கொண்டு
உன்னை எப்படி
எதிர்கொள்வது?

இந்தக்
கரும்புகையின்
வெளியாய்
எப்படியோ
ஆக்கிவிட்டிருக்கிறேன்
இல்லத்தை

சுவர் மூலைகளில்
வௌவால்கள்
அசைவின்றி
தவம் கிடக்கின்றன

இத்தனை
காலம் விட்டு
நீ திடீரெனெ
வருகையில்
இந்த இல்லத்தை
இந்த என்னை
நீ எப்படி
எதிர்கொள்வாய்?

ஆடைகளைக்
கலைந்துவிட்டு
நிர்வாணமாய்
திறந்த என்
பாழும்
இல்லத்தின்
வாசலில்
மண்டியிட்டு
உன்னை
எதிர்நோக்குகிறேன்
நிலவை
மேகம் மறைக்க
மேலும்
பிரகாசமாய்
நீ
வந்துகொண்டிருக்கிறாய்
கண்ணீர் துளி
ஒன்றினை நோக்கி...

Wednesday, October 23, 2019

காதல்
படங்கள் பார்த்து
காதல்
கதைகள் படித்து
காதல்
பாடல்கள் கேட்டு
காதல் கவிதைகளை
ஸ்டேட்டஸாய் வைத்துத்
திரியும்
சுட்டிப்பெண்ணே
காதலால் கசிந்துருகி
வந்திருக்கிறேன்
உன்னை அன்பின்
வதைமுகாமுக்கு
அழைத்துச்செல்ல

Tuesday, October 22, 2019

தூரத்து கருவானில்
புள்ளொன்று
பறந்து
தீட்டிச் செல்கிறது
முதல் கீற்றை

உலகம் கொள்ளும்
ஆகச் சிறந்த மௌனம்
தொடர
லேசான
கொலுசின் சிணுங்கல்
உன் குதிங்காலின்
தூய்மையைச்
சொல்கிறது

உனக்காகத்தான்
காத்திருக்கிறது
வான்நிலம்
வெறுங்கருமையை
உலையச்செய்யும்
வண்ணங்களாக்கிவிட்டு
செல்
உன்னைத் தொடர்வதில்
துவங்கட்டும்
ஒரு நாள்

Monday, October 21, 2019

இவ்வளவு வேகம்
வேண்டாமே

அன்று பிறந்த
நாய்க்குட்டிகளை
நீங்கள்
இடறிவிடக்கூடும்

சிறு கண்களென
பூத்திருக்கும்
மலர்களை
பார்க்காமல்
கடந்து விட க் கூடு ம்

பாரமெல்லாம்
மறந்து
சற்று நாணும்
சாலையோரப்
பெண்ணை
பார்க்காமலே
போய்விட்டால்?

வானம்
ஆசையாய்
மழையால்
பூமியை அள்ள வர
நீங்கள்
குடையுடன்
வேகமாய் நடையைப்போட்டால்
அவை
கோபிக்காதா?

Sunday, October 20, 2019

இவ்வளவு
அழகாய்
நீ வந்து விட்ட போதும்

இவ்வளவு
நேர்த்தியாய்
நீ என்னை
நோக்கிக் கொண்டிருக்கும் போதும்

ஸ்தூலமற்ற
தவிப்பின்
பெருவலிகளை
பொய்யாக்கி
நீ இவ்வளவு
ஸ்தூலமாய்
என் முன்
என் கண்முன்
நிற்கும் போதும்

என் அறைக்குள்
நான் வளர்த்துவரும்
அந்த ஆயிரமாண்டுப்
பறவை
அமர்வது போல்
அமர்ந்துவிட்டு
மீண்டும்
பாட த் து வங்கிவிட்டது
பெருவலிகளின்
பாடலொன்றை

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...