Sunday, October 27, 2024

பசுகொண்டது
மந்திகள் கொண்டன
கிளி கொண்டது
பார்வையில் விழும்
மரமெல்லாம் கொண்டது
சன்னதிக்கூரையில்
முட்டைக்குள் உறங்கும்
பறவைக்குஞ்சு கொண்டது
சன்னதியின் மணமறிந்த
உயிரெலாம்‌‌ கொண்டது
இருகால் கொண்டலையும்
ஒன்பது வாயில்
கண்ணீர்ப்பிண்டம்
காத்துள்ளது
பிச்சைக்காக

.........

கடைசியில்
ஏந்தியிருந்த
பிட்சைப்பாத்திரத்தையும்
ஒழிந்தேன்
எஞ்சியது உடல்
ஏந்தியிருப்பது
மனம்

........

உன்னைக் கண்டபின்
எல்லாம் ஒழிந்தேன்
என்னிடம்
பிச்சைக்கேந்துகிறாய்
கொடுக்க
உடலுண்டு
மும்மலமுண்டு
உயிருண்டு
மனமுண்டு
கொண்டபின்
விட்டுச்சென்றாய்
எஞ்சியதை

.......

இதோ எஞ்சிய உறவு
உலகுடன் கடைசி
பந்தமென்று
விட்டேன்

இதோ கடைசி நாணயம்
உலகுடன் கடைசி
பற்றென்று
விட்டேன்

இதோ கடைசி ஆடை
உலகுடன் கடைசி
வேடமென்று
விட்டேன்

இதோ கடைசி மூச்சு
உலகுடன் கடைசி
சொல்லென்று
விட்டேன்

இதோ கடைசிப் புத்தகம்
உலகுடன்‌ எஞ்சிய
அறிவென்று
விட்டேன்

ஏந்தினேன் பிட்சைக்கு
பிச்சைக்காரனிடம்

எது விதைக்குள்
காடென்றுரைகிறதே
எது பூத்தும்பியின்
சிறகில்
வண்ணமென்றாகியதோ
எது துளியை
நதியாக்கியதோ
எது அசைவற்றதோ
எது அசைவின்மை கொள்ளாததோ
எது எஞ்சுவதோ
எது நிறைந்திருப்பதோ
எது ஒளியோ
எது இருளோ
எது கருவுரைவதோ
எது கருவோ
எது பிட்சைப்பாத்திரமோ
எது பிட்சைப்பொருளோ
எது ஏந்திய கைகளோ

அதுவே விழுந்தது

......


No comments:

Post a Comment

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...