Friday, March 11, 2022

கிளையமர்ந்த புள்ளொன்று
உதிர்த்தது
அந்நாளின்
முதற்சொல்லை

பின் காடெனப்
பெருகிற்று
சொல்
மழையென
கொட்டிற்று
சொல்
கடலெனத் தேங்கியும்
நதியென ஓடியும்
முயங்கி
சேர்ந்து
பிரிந்து
கைமீறிப்
பெருகிற்று
சொல் எனும் விதை

பின்
இரவின்
கடைசி உயிர்
ஓயாது உழட்டிற்று
ஒற்றை சொல்லை
மந்திர உச்சாடனமென
கடலும் நதியும் மழையும்
எஞ்சிற்று
ஒரு துளி நீராக

அவ்வொரு சொல்
ஓய்வதைக் காண
அங்கு யாருமில்லை
காலம் அந்நாளை
முதுகுப் பையில்
சுமந்து
அடுத்த யுகம்
சென்றுவிட்டது

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...