Friday, March 11, 2022

கிளையமர்ந்த புள்ளொன்று
உதிர்த்தது
அந்நாளின்
முதற்சொல்லை

பின் காடெனப்
பெருகிற்று
சொல்
மழையென
கொட்டிற்று
சொல்
கடலெனத் தேங்கியும்
நதியென ஓடியும்
முயங்கி
சேர்ந்து
பிரிந்து
கைமீறிப்
பெருகிற்று
சொல் எனும் விதை

பின்
இரவின்
கடைசி உயிர்
ஓயாது உழட்டிற்று
ஒற்றை சொல்லை
மந்திர உச்சாடனமென
கடலும் நதியும் மழையும்
எஞ்சிற்று
ஒரு துளி நீராக

அவ்வொரு சொல்
ஓய்வதைக் காண
அங்கு யாருமில்லை
காலம் அந்நாளை
முதுகுப் பையில்
சுமந்து
அடுத்த யுகம்
சென்றுவிட்டது

Wednesday, March 9, 2022

இந்த வானத்தின்
கீழ் இருக்கும் 
கோடானகோடிகளில்
உனக்குக் கொடுக்க
என்னிடமிருக்கும்
ஒரு சிறு மின்மினிப்பூச்சியை
உச்சிவெயில் பொழுதில்
உன்னிடம் நீட்டுகிறேன்

பூமியின் மறுபாதியின்
பேரிரவில்
ஆயிரம் மின்மினிகள்
சிறகடிக்கும் சிறு எல்லையின்
ஆயிரம் சொற்களாய்
ஆயிரம்‌ சூரியன்களாய்
ஒளிர்வதை
உனக்குக் காட்டும்
மந்திரச் சொல்லை
உன் கையிலிருக்கும்
ஒளியற்ற மின்மினி
உரைக்கட்டும்
அமைதியில் விழுந்து
வழியும் மழை

எச்சொல்லுமின்றி
மெல்லப் படியும்
இரவுப் பனி

மோனத்துடன்
விழுந்து உடையும்
வெயில்

சுவடின்றி
உயிர்ன்றி
உடலின்றி
அலையும் காற்று

யுகங்களாய்ப் பிறந்த
கோடிச் சொற்களில்
ஒன்றையும்
கேளா உரைக்கா
மலைகள்

இவற்றினூடே
ஒழுகிச் செல்கிறது
பெருங்காலம்
பல
பல சிறுவாழ்க்கை
பல சிறுவாழ்க்கைகள்

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...