ஒரு படி கூடுதலாக உண்மையை நோக்கி நம்மை உந்தும் எந்த ஒரு படைப்பும் சிறந்ததே. இப்புத்தகத்தை மெச்சுவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்று. வரலாற்றை ஒரு நாவலுக்கு நிகாராண சுவாரஸ்யத்துடன் ஆவணப்படுத்த முடியும். உதாரணம் இப்புத்தகமே. பல உணர்வுநிலைகளின் ஊடே நம்மை இழுத்துச் செல்கிறது இந்த வரலாறு. உலகின் மாபெரும் பிரிவினையை கண்முன் நிறுத்துகிறது.
பல சரடுகளின் வழி வரலாற்றை கூறுகிறது நூல். மவுன்ட்பேட்டன் கடைசி வைசிராயாக நிர்ணயிக்க ப் படு வது ம் அதற்கான காரணிகளும். பின் மவுன்ட்பேட்டன் எதிர்கொண்ட இந்தியாவும் அதன் தலைவர்களும். ஒரு நீண்ட அத்யாயத்தில் மவுன்ட்பேட்டன் நேரு, காந்தி, பட்டேல்,ஜின்னா ஆகியோரை சந்திக்கிறார். இந்நான்கு தலைவர்கள் பற்றியும் ஒரு சிறு வரைபடம். அவர்கள் பிரதிநித்துவப் படுத்தும் அரசியல் விசைகள். கடைசியில் வேறு வழியின்றி பிரிவினை.
ஒரு அத்யாயம் முழுக்க நம் சமஸ்தான மன்னர்களின் அபத்தங்கள். வர்ஜின் வேட்டை, இன்னதென்றில்லாத செக்ஷுவல் பான்டஸீஸ், வடிகட்டிய சு த் தீ கரி க் கப் பட்ட முட்டாள்தனம், அதிகமான வெட்லான்ட் பறவைகளை சுட்டு ஒரு ராஜா உலக சாதனை படைக்கிறார், ஒருவர் அதிகமான புலிகளை கொன்று குவிக்கிறார்...இப்படியான வெற்று அபத்தங்கள் பல. இவர்களின் கையில் இந்தியா சிக்காமல் போனது ஆண்டவன் கிருபை.
இந்தியாவிற்கு சுதந்திரம் என்பது உலக அரசியலில் ஒரு திருப்புமுனை. டீகாலனியலைஸேஷனின் துவக்கப்புள்ளி. இந்தியாவை இழப்பதற்கு முழுக்க எதிரான சர்ச்சிலின் வழி தெரிகிறது, இந்தியா எவ்வளவு முக்கியமான சொத்து பிரிட்டனுக்கு என. ஆனால் அவர்களின் அட்டூழியங்களை புத்தகம் நியாயப் படுத்தவில்லை. வெகு அரிதாக பிரிட்டிஷ் ஆட்சியின் கருமை பக்ககங்கள் சுட்ட ப் படுகின்றன. ஏனெனில் புத்தகம் பேசுவது சுதந்திரம் தருவது உறுதியான பின்னான காலகட்டத்தை. இருந்த நிலமையை ஆன வரையில் சிறப்பாக மவுன்ட்பேட்டன் சமாளிதுள்ளார் என்கிறது நூல். பிரிட்டனின் நிர்வாகத்திறமை பாராட்டப்படுகிறது. ஆம், சரியென்றே படுகிறது.
இதன் முக்கியமான அம்சங்களாக நான் கருதுவது இரண்டு. ஒன்று, பிரிவினையின் போதான வெறியாட்டம். இதற்கு ஒரு முழு அத்யாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. பதற்றத்துடன் இதனை வாசித்தேன். இப்படியொரு வெறியாட்டமா? இத்தனை நாட்கள் ஒன்றாக வாழ முடிந்தவர்களை ஒரு சிலரின் சுயநலம் சார்ந்த அரசியல் பிரித்துவிட முடியுமா? கொலை, பிறப்புறுப்பை சிதைத்தல், பலாத்காராம், பிணங்களை தாங்கி வரும் ரயில்கள்....
"ஆனை வெம்போரில் குருந்தூரென" என்கிறார் மாணிக்கவாசகர். அரசியல் யானைகள் நடத்தும் போருக்கு சிறு புல் என்ன செய்யும். இயக்கப்படுகிறார்கள் மக்கள். விளைவு, எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளில் எந்தப் பங்கும் இல்லாத மக்கள் வெட்டிக்கொண்டு சாகிறார்கள். மானுடம் தோற்கும் இக்கனங்கள் முழு வீரியத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக காந்தியைப் பற்றிய ஒரு பரவலான சித்திரத்தை அளிக்கிறது நூல். நூலின் முக்கிய அம்சம் இது என்வரையில். "என் இறந்த உடலை கிழித்து இந்தியாவைப் பிரியுங்கள்" என்கிறார் காந்தி. யாரும் கேட்க முன் வரவில்லை. குறிப்பாக ஜின்னா. "டரக்ட் ஆக்ஷன் டே" என்று ஏற்கனவே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டயிற்று. ஆயினும் சொல்கிறார் காந்தி "இந்தியாவைப் பிரித்தால் இதைவிட பல உயிர்களை நாம் இழக்க வேண்டி வரும்" என்று. ஆனாலும் நடந்தது பிரிவினை.
தன் ஆன்மாவின் ஆணைப்படி நடக்க தன் உடலையும் மனதையும் முழுவதுமாக தயார் நிலையில் வைத்திருந்த செயல்வீரர் காந்தி. மஹாத்மாவை முடிந்த வரை எதிர்த்து, ஒன்றும் பலிக்காமல் போக கொண்றே போட்டது இந்தியா... சிலுவையில் அறைந்தது என்பதே சரி. நவ்காளியில் மதக் கலவரம் நடப்பது அறிந்து, தடுப்பதற்காக அதனை சுற்றி அமைந்திருக்கும் கிராமம் கிராமமாகப் போகிறார் காந்தி. போகிற வழியில் மலம் கழித்து வைக்கப்படுகிறது. க்ளாஸ் சில்லுகள் பரப்பப்படுகின்றன. அனைத்துயும் சுத்தம் செய்துவிட்டு முன் நகர்கிறார். கலகம் ஓய்கிறது. சுத்ந்திர கொண்ட்டாட்டத்திற்குப் பிறகு, பிரிவினை அறிவிக்கப்படுகிறது. கலகம் வெடிக்கும் என்று அறிந்து, மவுன்ட்பேட்டன் பஞ்சாபிற்கு 50000 சோல்ஜர்களை அனுப்புகிறார். கல்கட்டாவிற்கு காந்தி செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறார். அன்பையும், அஹிம்சையையும் போதித்த ஒரு தனி மனிதனால் எவ்வளவு சாத்தியமாகிறது! ஆயுதமில்லாத ஒருவருக்குப் பணிந்து கல்கத்தா அமைதியாக உள்ளது.
காந்தியின் கடைசி உண்ணாவிரதம் பற்றிய நீள் பதிவு உள்ளது. காந்தியின் ஆன்மபலம் கண்டு வியப்பு உருவாகிறது. "காந்தி சாகட்டும்" என்ற மக்கள், மெல்ல முழுமையாக ஒரு மனதாக திறள்கிறது. ஒரு மனிதனின் சாவை நோக்கிய பயணம் எவ்வளவு உயிர்களைக் காத்துள்ளது.
மாஹாத்மா கடைசி நாட்கள், தோல்வியுற்ற முதல் கொலை முயற்சி, பின் வெற்றிகரமான இரண்டாவது முயற்சி ஆகியவை நுணுக்கமான விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும் உணர்ச்சி நிலைக்கு நம்மை இட்டுச் செல்வதாக "the second crucifixion" அத்யாயம் அமைந்துள்ளது. ஒரு இலக்கியப் படைப்புக்கு நிகரான உணர்வு நிலை.
போதும் நீண்டு கொண்டே போகிறது.... முடித்து விடுகிறேன். பல நூல்களும் அனுபவங்களும் வாசித்து முடித்து நாள் சென்றபின் ஒற்றைப் படிமமாக நம்முள் எஞ்சும். இப்புத்தகம் காட்டும் இத்தனை கோரங்களைத்தாண்டி நான் மீண்டும் மீண்டும் உருபோடும் ஒரு படிமம் ஒன்று. இந்நூல் காந்தி வட்ட மேஜை மாநாட்டிற்காக மேற்கொண்ட யுரோப் பயணத்தை கூறுகையில்...."Gandhi wept at the site of the statue of christ on the cross in sistine chapel" ... இன்னும் பத்து வருடம் கழித்து, இப்புத்தகத்தை பற்றி யோசித்தால் என்முன் வந்து விழப்போகும் படிமம் இதுதான். சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்த்துவின் முன் நின்று அழும் மஹாத்மா.
(பின் குறிப்பு: அமேஸான்.இன் னில் ஆங்கிலத்திலும் , தமிழ் மொழிபெயர்ப்பு உடுமலை போன்ற தளங்களிலும் கிடைக்கிறது)
No comments:
Post a Comment