Saturday, January 16, 2016

இயல்பெனும் காமம் (NYMPHOMANIAC)

தான் உண்மை என உணர்ந்ததை எந்த வித சமரசமும் இல்லாமல் முன் வைப்பவன் படைப்பாளி. கலையை பொழுதுபோக்காக இல்லாமல், உண்மை தேடலுக்கான கருவியாக கொள்ளும் ஒரு ரசிகன் அவ்வுண்மைக்கு முன் பணிபவனாக இருக்கிறான். அப்படியாக நான் லார்ஸ் வான் டையரின் முன் ரசிகனாக பணிகிறேன்.
                                               

நிம்போமேனியாக் என்ற சொல்லின் அர்த்தம் அதீத காம உணர்வுடைய பெண், காமப் பைத்தியம் என்பது தான் சரி. அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையே படமாகிறது. இரண்டு வால்யூம்களாக (பாகங்கள்) படம் வந்துள்ளது. இரண்டு வால்யூம்களும் சேர்த்து படம் ஐந்து மணி நேரம் நீளம் வருகிறது. ரோட்டில் அடிப்பட்டுக் கிடப்பவளை ஒரு ஐம்பதுவயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டுக்கழைத்துச் சென்று படுத்துக் கொள்ள இடமளிக்கிறார். அவரிடம் இப்பெண் தான் ஒரு நிம்போமேனியாக் என்று ஆரம்பித்து தன் வாழ்க்கையைச் சொல்லுகிறாள். இதுவே கதையாக விரிகிறது- இரு வால்யூம்களுக்கும். 

படத்தை பார்க்கும் பெரும்பாலானோர் இப்படத்தை PORN FILM எனக் கொள்ள வாய்ப்புண்டு. இது போர்ன் மூவியா? இல்லை. போர்ன் படங்கள் காமத்தை காட்சிப்பொருளாக்குவது. கலை காமத்தை ஆராய்வது. மனிதன் தன்னுள் இருக்கும் பிரதான இயற்கை விசை இரண்டு- ஒன்று பசி, மற்றொன்று காமம். ஒருவனுள் இருக்கும் காமம் , அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின் விதிகள்- இவ்விரண்டும் முரண்படுகையில் உண்டாகும் கேள்வி, திகைப்பு முக்கியமானவை. அக்கேள்வியைத் தொடர்ந்து மேலும் மேலும் கேள்விகளை அடுக்கினால் பொத்தம் பொதுவான, மானுடம் ஓயாது எழுப்பும்அடிப்படைக் கேள்வியான "இதெல்லாம் என்ன?" வரை ஒருவனால் பயணிக்க முடியும், இக்காரணத்தாலேயே காமம் இலக்கியம் , கலை இவற்றின் நிலையான ஒரு பேசுபொருளாக நீடிக்கிறது. நிம்போமேனியாக் அறிவியல் ரீதியாக தத்துவ ரீதியாக ஒரு நிம்போமேனியாக்கை ஆய்கிறது. என்னற்ற கூறூகளால் நல்ல கலைப்படைப்பாகவும் திகழ்கிறது. ஒரு நிம்போமேனியாக்கின் மனநிலையை ஆய்ந்து செல்கையில் நிர்வாணமும் பிறப்புருப்புகளையும் காட்சிப்படுதுவதில் பிழையில்லை. ஆனால் இப்படம்,  காமத்தை இசையுடன் இயற்கையுடன் என்று ஒப்பிட்டுச் செல்கிறது. நிர்வாணக் காட்சிகளின் வழி படம் சென்றடைவது முற்றிலும் வேறான ஒரு தளத்தை. ஜோ மூவகை ஆண்களுடன் புணர்வதை விவரிக்கையில், வெண்முகில் நகரம் (வெண்முரசு) நாவலில் பாண்டவர்கள் உடனான திரௌபதியின் முதல் இரவுகள் நினைவுக்கு வந்தது.

படத்தின் நாயகி ஜோ (joe). அதீத உடல் இச்சை கொண்டாவளாக இருக்கிறாள். தோழியுடன் ஜெம்ஸ் போற மிட்டய்க்காக, போட்டியிட்டு அதிக ஆண்களைப் புணர்கிறாள். இது குறித்த குற்ற உணர்வுமில்லை. அவளின் இயல்பு இயற்கை அப்படி. அவள் தந்தை மரணப்படுக்கையில் கிடக்கிறார். இவளதான் அவரருகில் இருக்கிறாள். தந்தை மலத்தில் புரள்வதை காணுமிவள், மருத்துவமனியிலேயே ஒருவனைக் தேடிக் கண்டு அவனுடன் புணர்கிறாள். தன் தந்தையின் நிலை பரிதாபமாக ஆக ஆக அவள் உடல் புணர்ச்சியை நாடுகிறது. மரணத்தை மனமும் உடலும் ஏர்ப்பதில்லை. தான் காண உறுதியாய் நின்ற தன் தந்தை மலத்தில் புரள்வதை, மகளாக அல்ல, ஒரு சக உயிர் ஏற்க மறுக்கிறது. முழு வீரியத்துடன் இயங்கத் துடிக்கிறது. தந்தை இறக்கையில், அவளுக்கு காம நீர் சுரக்கிறது. இப்படியாக அதீத மனநிலைகளை அவற்றிற்கான காரணங்களை உள்ளடக்கியபடி முன் செல்கிறது படம். Bachக்கினுடைய இசைக்கு, காமத்தை ஒப்புமையாக்குமிடம் அழகு.
                                 

பாகமிரண்டும் நிம்போமேனியாக்கின் அனுபவங்களாகவே தொடர்கிறது. காதல் எனும் ஒரு உணர்வு அவ்வப்போது வந்து போவதாக இருக்கிறது அவளுக்கு. Love is the key to sex இவளுக்கு பொருந்தாது போகிறது. இவள் காம் உணர்வை இழக்கிறாள். பின் அவள் காதலன் காம உணர்வை இழக்கிறான். குழந்தைப் பாசமும் அவளுக்கு உண்டு.  ஆனால் காதல் குழந்தைப் பாசம் யாவற்றையும் கடந்து அவள் காமத்தால் இயக்கப்படுகிறாள்ஜோ தனக்துத்தானே கருகலைப்பு செய்து கொள்ளும் காட்சி - கருவிலிருந்த குழந்தை சிறு சதையைப்போல் வெளிவந்து விழுகிறது. தலைமுடியை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அய் அய் என்று விநோத ஒலிகள் எழுப்பிய படி பார்த்தேன் இக்காட்சியை. 

ஒரு புள்ளியில் க்ரிமினல் கூட்டத்தோடு இணைந்துகொள்கிறாள். பணம் படைத்த மனிதர்களிடம் உள்ள காமம் சர்ந்த முறைபிறழ்வுகளை அறிந்து கொண்டு மிரட்டி பணம் பரிக்கிறாள். அப்படியாக பணம் பரிக்கையில், ஒரு Paedophileஐ(குழந்தைகள் மீது காம உணர்வு கொண்டவர்கள்) சந்திக்க நேர்கிறது. அவன் மீது இரக்கம் கொள்கிறாள். தன்னையும் அவனையும் Sexual outcasts என்று கூறுகிறாள். காம உணர்வுகளை வெளிப்படுத்த இடமில்லாமல் வெளிப்படுத்தினால் குற்றமாகிவிடும் நிலையில் கடினமான ஒரு வாழ்க்கை வாழ்பவர்கள் மீது உண்டாகும் இரக்கமே அவன் மீது தனக்கு உண்டானதாகக் கூறுகிறாள். 

படத்தின் முக்கியமான ஆழமான காட்சியாக நான் கருதுவது ஒரு மலையின் உச்சியில் நிற்கும் அவளோடு சேர்த்து மலையுச்சிப்பாறையில் வளர்ந்த தனித்து நிற்கும் மரத்தையும் காட்சிப்படுத்தியிருக்குமிடம். இயற்கையில் விநோதங்கள் இயல்பு, அந்த மலையுச்சிப்பறையில் வளர்ந்து நிறகும் மரத்தைப் போல. அவளும் அப்படியே. இயற்கையின் விநோதம்.  அவ்வளவே. விநோதத்தின் இன்னொரு துருவமாக அவளிடம் கதை கேட்பவரான ஸெலிக்மன் காம உணர்வில்லாதவர். இயற்கை! அவ்வளவே!

படத்தின் இறுதியில்,  மலையுச்சிப்பாறையின் மரத்திடமிருந்து ஒரு பாடம் கொண்டதாகச் சொல்கிறாள். வேறெந்த மரமும் போலல்லாமல் அது மலையுச்சியில் போராடி வளர்ந்து நிற்பது போல், தானும் வாழ்வை நிலைநிறுத்தப்போவதாகச் சொல்கிறாள். இயற்கையை எதிர்த்துப் போராடுவதான மானுட இயல்பைக் கொள்கிறாள். பின்பு ஒரு எதிர்பாராத நிகழ்வுடன் கதை முடிகிறது.  அவளிடம் அவ்வளவு நேரம் கதை கேட்ட ஸெலிக்மன் அவளுடன் சேர்க்கையில் ஈடுவட முயல்கிறார். ஜோ தடுக்கிறாள். "But you fucked tonnes of men" என்கிறார். பின்பு அவரை தன்னிடமிருக்கும் பிஸ்டலால் சுட்டுவிட்டு தப்புக்கிறாள் ஜோ. அவளுக்கு துப்பாக்கியை இயக்கச் சொல்லிகொடுத்ததே அவர்தான். வேண்டுமென்றெ புகுத்தப்பட்ட காட்சியாக கருதலாம் ஒரு சிலர். என் வரையில் அப்படி இல்லை. மனதின் உச்சமான விநோதத் தன்மை வெளிப்படுமிடமாக இதை நான் கொள்கிறேன். மேலும் லார்ஸ் வான் டையர் ஒரு நேர்காணலில் "எனக்கு வாழ்க்கையில் எதைக் கண்டாலும் பயம். படம் எடுப்பதைத் தவிர" எனச் சொல்லியிருக்கிறார். வாழ்க்கை மீதான அவருடைய நம்பிக்கையிமையே இக்காட்சியில் வெளிப்பட்டுள்ளது. ஜோ தன் வாழ்க்கையை ஒழுங்கு பட அமைத்துக் கொள்ள முனைகிறாள். தன் மகனை சந்தித்தாலும் சந்திபேன் என்கிறாள். ஆனால் வாழ்க்கை குழப்பக் கிடங்கு. அது அவளை விடவில்லை.

என்னைப் பொறுத்து வரையில் இயற்கையின் விநோத இயல்புகளின் வழி ஒரு நிறைவான பயணம் நிம்போமேனியாக்.






No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...