Monday, January 15, 2018

மலர்தலின் மௌனம்


விசுவாசமான ஏழு வருடங்களாக தன் பாஸுக்கு உழைக்கும் ஒரு மேனேஜர், அடியாள். பாஸ் தன் இளம் காதலி மீது சந்தேகமுற்று தன் அடியாளை கண்கானிக்க அனுப்புகிறார். தவறிருப்பின் இருவரையும் முடித்துவ்டும்படி கூறுகிறார். ஆனால் அடியாள் காதல் கொள்கிறான். பின் என்ன, அடி தடி... வழக்கமான ஒரு கதை "A bittersweet life" எனும் கொரியன் திரைப்படம். இது போல் பல படங்களின், நாவல்களின் கதையை ஒற்றை வரியாக சுருக்கமுடியும். சுருக்கிப்பார்த்தால் ரொம்ப சாதாரணமாத் தோன்றும். பின் எது சதாரணமான ஒன் லைனரை  நல்ல படைப்பாக மாற்றி நம்மை வெகு நாள் தொடர வைக்கிறது?

காற்றிலாடும் மூங்கில் இலைகளைக் காண்பிக்கிறது முதல் காட்சி. சீடன் குருவைக் கேட்கிறான் "அசைவது காற்றா மூங்கிலா?" என்று. சற்றும் அசையாமல் "அசைவது உன் மனமும் மூளையுமே" என்கிறார். கவித்துவமான துவக்கம். கதையை பார்த்து முடிக்கையில் மேலும் பொருள் தருவதாக மையும் இவ்வரிகள். மையக் கதாபாத்திரம் "கிம்". சற்றும் சதைப்பிடிப்பில்லாத உறுதியான உடல். தனியனாக துணிவாக தன் வாழ்வை எதிர்கொள்கிறான். சொன்னது போல் பாஸின் காதலியை கண்கானிக்கும் பணி இவனிடம் விடப்படுகிறது. பாஸ் கேட்கிறார் "யாரையாவது காதலிக்கிறாயா?" என்று. "இல்லை" எங்கிறான்."நீதான் சரியான ஆள்". 

அப்பெண்ணை சந்திக்கிறான். பாஸ் கொடுத்தனுப்பியதாக ஒரு கிப்ட். பின் அவளை கண்கானிக்கிறான். அடுத்த நாள் தன்னை இசை வகுப்புக்கு கொண்டுவிடும்படி இவனை அழைக்கிறாள் "ஹன்ஸூ" - பாஸின் காதலி பெயர். இசை வகுப்பில் விட்டுவிட்டு அவள் செல்லோ வாசிப்பதை இவன் பார்க்குமிடம் அழகானது. பின்னணியில் வயலின் இசை. மெல்ல சிரிக்கிறான். படத்தில் அவன் முதன்முதலில் சிரித்துப்பார்ப்பது இக்காட்சியில்தான். இவ்விடம் சொல்ல விரும்பும் ஒன்று வலுவான மௌனத்திற்கு விடப்பட்டுள்ளது.  அமைதியான பார்வை, அப்பெண்ணிலிருந்து கசியும் இசை..."அசைவது இலையோ காற்றோ அல்ல..உன் மனம்தான்". வெகு நிதானமான முரடனான கொலைகளுக்கு அஞ்சாத அவன் மனம் முதன் முதலில் மலர்கிறது. செம்புலப் பெயல் நீரெனும் வரிக்கு  பாலையில் விழும் மழை என்றும் அர்த்தம் சொல்கிறார்கள்.நிகழும் புரிபடாத ஒன்று நமக்கு புலனாகிறது, அவ்வளவு அமைதியாக. 

பின் ஒரு இரவில் பாஸின் காதலியை அவள் இளம் காதலுடன் காண்கிறான் கிம். கதலனை அடித்துப்போட்டுவிட்டு போனை எடுத்து எண்களை அழுத்துகிறான். அது பாஸின் எண். கட்டைவிரல் பச்சை நிற டயல் பட்டன் முன் தயங்குகிறது. அழுதுகொண்டு அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்கிறான். "அசைவது இலையோ காற்றோ அல்ல, உன் மனம்தான்". போனை அணைத்துவிடுகிறான். இனி இருவரும் சந்திக்கவே கூடாது என்று காதலனை அனுப்பிவைக்கிறான். ஹன்ஸூ அழுகிறாள்.  அவளை பிடித்து நிறுத்துகிறான்... "this is the best thing that can be done" என்கிறான். அவள் "This is not how it is" என்கிறாள். 

பின் பாஸ் அறிந்து விடுகிறார். கிம் ரனக்கொடூரமாக தாக்கப்படுகிறான்.  பேசப்படாத வார்தைகளாக்கப்படாத ஒன்றை சுற்றியும் அதனை சுட்டியும் பாஸுக்கும் கிம்மிற்கும் இடையே    நிகழும் உரையாடல் அழகானது. மரணத்தை நெருங்கிவிட்டு கிம் தப்பிக்கிறான். கடைசி வரை இதனை எதிர்கொள்ளத் தயாராகிறான். வயிரெல்லாம் கிழிக்கப்பட்டு ஒருவழியாக பாஸை கொல்கிறான் கிம். உடலெல்லாம் குண்டுக் காயம். சாகக் காத்திருக்கிறான் கிம். ஒருவன் கிம்மை சுட தயாராக நிற்கிறான். கிம் தன் போனை எடுக்கிறான். ஹன்ஸூவை அழைக்கிறான். இதற்கு முன் பலமுறை அவன் அழைப்பை ஏற்காதவள். இப்பொழுது ஏற்கிறாள். "ஹலோ" என்கிறது அவள் குரல்.போன் நழுவி விழுகிறது. அவனால் அசைய முடியவில்லை. "ஹலோ ஹலோ" மட்டும் இவனுக்கு கேட்கிறது. அசைகிறது அவன் மனம். பாலைக்கு ஒரு துளி நீரே போதும். உலகில் தன் இடத்தை வன்முறையால் மட்டுமே நிறுவுக்கொண்டிருக்கும் அவனுக்கு முழு காதலின் இனிமையை அந்த ஹலோ அவனுக்கு தருகிறது. அவளது  முகம் அவன் மனக்கண்ணில் விரிகிறது. துப்பாக்கி வெடிக்கிறது.

சீடன் ஓரிரவு கதறி அழுகிறான். குரு கேட்கிறார் "ஏன் அழுகிறாய்.ஏதும் கெட்ட கனவா?" என்று. "இல்லை.ஒரு இனிமையான கனவு" என்கிறான். "பின் ஏன் அழுகிறாய்?".  "அக்கனவு இவ்வாழ்வில் எனக்கு சாத்தியமில்லாதது."

நம் உறவுகள் யாவும் வார்த்தைகளற்ற ஒரு வெளியில்தான் நடந்தேறுகின்றன. வார்த்தைகள் வலுவற்றவை. ஆகவேதான் கவிதையும் கலையும் அமைதியை நாடுகிறது. ஒரு சாதாரண ஒன்லைனர் அழகான படமாக நிற்பதற்கு காரணம் அமைதியின் கணங்களை மேலும் கணமான அமைதிக்கு விட்டதால் தான்.

No comments:

Post a Comment

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...