Friday, January 27, 2017

இருளாழத்தின் ஒளி


படைப்பாக மலர்பவை யாவும் உணர்வுகளே. ஏதோ ஒரு உணர்வே ஒரு படைப்பின் மையம்.  அதீத உணர்வு என்றால் மேலும் பொருந்தும். தட்டையான இயல்பு மீறாத ஒரு உணர்வை கலை கண்டுகொள்வதில்லை. அதீதங்களில் பரவசிக்கிறது கலை. உன்னதத்தின் உச்சம் வேண்டும் கம்பனில் போல. அல்லது கீழ்மையின் உச்சம். இருளின் உச்சம். மனதின் இருள், இவ்வார்த்தை உடனடியாக ஆண்ட்டிக்ரைஸ்ட் எனும் படத்தை என் நினைவின் முன் கொணர்கிறது. காம சேர்க்கையில் ஈடுபடும் பெண், தன் குழந்தை திறந்த ஜன்னல் வழி ஏறி முதல் தளத்திலிருந்து கீழே விழுவதை பார்த்தபடி இருக்கிறாள். எதுவும் அவள் செய்யவில்லை. காமம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்ட ஒரு கணம் அவள் தாயால்ல, பெண் அல்ல, நம் நாகரீகம் வரையறுத்த வைத்த எதுவுமல்ல. குழந்தை இறந்துவிடுகிறது. காமம் ஓயவும் அவள் பேதலிக்கிறாள். குழந்தை தன் கண்முன்னே விழுந்ததைக் கண்டும், காப்பாற்ற வாய்ப்பிருந்தும் காமச் சிடுக்குக்குள் சிக்கியிருந்ததை அவளால் ஏற்க முடியவில்லை. மனதின் இருள் ஆழம் நோக்கி திகைக்கிறாள்.  தன் கணவனை கொடூரமான முறையில் வதைக்கிறாள். லார்ஸ் வான் டையரின் படமிது. வெகு சில சினிமாக்கள் நாம் பயணிக்க ஒட்டாத ஆள் அரவமற்ற மனதின்தெருக்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. என்ன முரண் எனில் அந்த இருளும் நம் மனமே. இப்படியான மனதின் இருளுக்குள்ளான ஒரு பயணமே "ஆடிஷன்". 1999ல் வெளியான "டக்காஷி மீக்கி" எனும் ஜப்பானிய இயக்குநரின் படமிது.

கூகுளில் "extremely disturbing sick movies" என்று தேடியபோது நான் கண்டுகொண்ட படமிது. மனைவியை இழந்த ஒருவன் பல வருடம் சென்று  மற்றொரு பெண்ணை மணக்க முடிவெடுக்கிறான். அவனுடைய இளம் மகனும் அதற்கு சம்மதிக்கிறான். அழகிய பெண்ணை மணக்க வேண்டும். ஆக தன் நண்பன் தந்த யோசனையின் படி, ஒரு புதுப்படத்திற்கு நாயகி தேவையெனக் கூறி ஆடிஷன் ஒன்றை நடத்துவது. தனக்கு விருப்பமான பெண்ணை கண்டுகொள்வது அதன் வழி. ஆடிஷன் நடக்கிறது. ஒரு பெண் இவனை ஈர்க்கிறாள். அவளை சந்தித்துப் பேசுகிறான். காதல் மலர்கிறது. ஆனால் அவளைப் பற்றி எதுவும் இவனுக்குத் தெரியவில்லை. நமக்குத் தெரிந்துவிடுகிறது. அவ்வப்போது ஒரு ப்ரேம் வந்து செல்கிறது.. இவள் மடங்கி தலைவிறி கோலமாய் அமர்ந்திருக்க, அவளருகில் ஒரு மூட்டை. முட்டைக்குள் ஒரு மனித உடல் முண்டுகிறது. இந்த ப்ரேம் அடிக்கடி வருகிறது. அந்த பெண்ணின் அழகுக்கும் இந்த ப்ரேமின் குரூரத்திற்கும் சம்மந்தமே இல்லாததால்தான் திகிலுணர்வைத் தருகிறதா இந்த ப்ரேம்? அல்லது ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாலா?

இது எதையும் அவன் அறியவில்லை. அவளுடன் உடலுறவு கொள்கிறான். அவள் 'நீ என்னை மட்டுமே காதலிக்க வேண்டும் என்கிறாள். என்னை மட்டும்தான்' என் மீண்டும் மீண்டும் சொல்கிறாள். பின் பெரிய குழப்பாமான ஒரு திரைக்கதை. முத்தாய்ப்பாக அப்பெண் மனத்திரிபுடையவள் என்பதை நாம் அறிகிறோம். சிறு வயதில் உடல் ரீதியான வதைக்கு உள்ளானவள். ஆனால் அவன் உண்மையாகக் காதலிக்கிறான். அவளை மணக்கவும் முடிவெடுக்கிறான்.இந்நேரம் அப்பெண் அறிந்து கொள்கிறாள், படத்திற்கான ஆடிஷன் என்பது வெறும் கண்துடைப்பென்று. தன்னை உடல் ரீதியாக சுகிக்கவே இந்த நாடகம் என்று நினைத்துவிடுகிறாள்‌.


அவனறியாமல் அவன் வீட்டுக்குள் காத்திருக்கிறாள். அவன் மகன் எங்கோ வெளி சென்றுவிட, இவன் மட்டும் வீட்டுக்குள் நுழைகிறான். ஒரு ஊசியை சொறுகி அவனது உடலை செயலிழக்கவைக்கிறாள். பின் ஒரு கம்பியை எடுத்துக் கொள்கிறாள்... "இந்த கம்பி சதை எலும்பு என யாவற்றையும் ஊடறுக்கும்" என்கிறாள்‌. பின் அவனது கனுக்காலுக்கு மேல் அந்த கம்பியை சுறுக்கு போட்டு, கம்பியின் முனைகளை  பக்கவாட்டில் இழுத்திழுத்து அவனது பாதத்தை துண்டித்தெறிகிறாள். பின் அவனது கண்கள் முழுவதும் குண்டூசிகளை செருகுகிறாள். "எல்லா ஆண்களும் இப்படித்தான்" என்கிறாள். இந்நேரம் அவனுடைய மகன் வந்து விடுகிறான். அவன் மீது பாயும் இவளை படியிலிருந்து உதைத்துத் தள்ளவும் மண்டையில் அடிபட்டு செயலற்று விழுகிறாள். இவ்விடம் வரை படம் சாதாரணப் படமாகவே இருந்தது. ஆனால் அவள் கீழே விழுந்த பின் கண்ணெல்லாம் குண்டூசி சொறுகப்பட்டுக் கிடக்கும் அவனைப் பார்க்கிறாள். அவன் சிரமப்பட்டு  கண்ணை  திறந்து இவளைப் பார்க்கிறான். அவர்களிடையே  ஒலியல்லாத காதலின் உரையாடல் நிகழ்கிறது. நம் மனம் நெகிழ்வதை உணர முடியும் இவ்விடத்தில். அப்பெண்ணை பார்க்கும்போது "Humans are fucking helpless" எனும் வரிகளைச் சென்றடைந்தேன். கண்ணுக்குப் புலப்படாத நம்மை மீறிய ஏதோ ஒன்றால இயக்கப்படும் நாம். ஒரு பாவப்பட்ட கைவிடப்பட்ட பெண்ணாகத் தெரிகிறாள். அவளை நொக்கும் அவனது கண்களில் பயமோ வெறுப்போ இல்லை, மாறாக கருணைதான் உள்ளது. பேரும் சண்டையாகிவிட்ட ஊடலுக்குப் பின் காதலியை நோக்கும் காதலனின் பார்வை.

இப்படத்தை ரொம்பவும் தற்செயலாகச் சென்றடைந்தேன். படம் உணடாக்கிய பாதிப்பு ஒரு மாதம் நீண்டுவிட்டது. என் நுண்ணுணர்வு காண்பித்ததுக் கொடுக்கிறது இது அரிதான படைப்பென்று. படைப்பு பயணிப்பது மனதின் இருள் ஆழங்களுக்குள் தான். ஆனால் இருள் ஆழத்தின் ஒளியை அப்பெண்ணின் கண்களில் காண்பித்துவிட்டு படம் நிறைவுறுகிறது. சுபம்.

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...