Sunday, October 27, 2024

பசுகொண்டது
மந்திகள் கொண்டன
கிளி கொண்டது
பார்வையில் விழும்
மரமெல்லாம் கொண்டது
சன்னதிக்கூரையில்
முட்டைக்குள் உறங்கும்
பறவைக்குஞ்சு கொண்டது
சன்னதியின் மணமறிந்த
உயிரெலாம்‌‌ கொண்டது
இருகால் கொண்டலையும்
ஒன்பது வாயில்
கண்ணீர்ப்பிண்டம்
காத்துள்ளது
பிச்சைக்காக

.........

கடைசியில்
ஏந்தியிருந்த
பிட்சைப்பாத்திரத்தையும்
ஒழிந்தேன்
எஞ்சியது உடல்
ஏந்தியிருப்பது
மனம்

........

உன்னைக் கண்டபின்
எல்லாம் ஒழிந்தேன்
என்னிடம்
பிச்சைக்கேந்துகிறாய்
கொடுக்க
உடலுண்டு
மும்மலமுண்டு
உயிருண்டு
மனமுண்டு
கொண்டபின்
விட்டுச்சென்றாய்
எஞ்சியதை

.......

இதோ எஞ்சிய உறவு
உலகுடன் கடைசி
பந்தமென்று
விட்டேன்

இதோ கடைசி நாணயம்
உலகுடன் கடைசி
பற்றென்று
விட்டேன்

இதோ கடைசி ஆடை
உலகுடன் கடைசி
வேடமென்று
விட்டேன்

இதோ கடைசி மூச்சு
உலகுடன் கடைசி
சொல்லென்று
விட்டேன்

இதோ கடைசிப் புத்தகம்
உலகுடன்‌ எஞ்சிய
அறிவென்று
விட்டேன்

ஏந்தினேன் பிட்சைக்கு
பிச்சைக்காரனிடம்

எது விதைக்குள்
காடென்றுரைகிறதே
எது பூத்தும்பியின்
சிறகில்
வண்ணமென்றாகியதோ
எது துளியை
நதியாக்கியதோ
எது அசைவற்றதோ
எது அசைவின்மை கொள்ளாததோ
எது எஞ்சுவதோ
எது நிறைந்திருப்பதோ
எது ஒளியோ
எது இருளோ
எது கருவுரைவதோ
எது கருவோ
எது பிட்சைப்பாத்திரமோ
எது பிட்சைப்பொருளோ
எது ஏந்திய கைகளோ

அதுவே விழுந்தது

......


கருவினுள்
சஞ்சலமில்லை

கருவினுள்
சந்தேகமில்லை

கருவினுள்
துக்கமேதுமில்லை

இருப்பது
உயிர்ப்பும்
இருப்பும்
மட்டும்

........

சூரியன்
காயும்
இப்பொழுதிலும்
சந்தேகத்தின்
துளிநீர்
சொட்டிக்கொண்டே இருக்கிறது

துளியை தூர்க்க
ஆகும்
ஒளியால்
மட்டும்

.........

செய்வதற்கொன்றுமில்லை
என ஆனபின்
உன் மலையை
அடைந்தேன்
வனமெது
மலையெது
மரமெது
வானெது
மண்ணெது
நீயெது
நானெது
என அறியமுடியாவண்ணம்
விற்றிருந்தது
உன் மலை

.........

நோய்மையின்
திரளொன்று
ஆறென
ஒழுகிச் செல்கிறது
உன் மலை
நோக்கி
பிறழ்வுகள்
துறத்த
உய்யும் வழியறியா
உயிர்ப்பெருக்கு
மூம்மலம்
சுமந்தலையும்
முழுமையறியா
மூடர்க்கூட்டம்
அண்டத்தை
அடக்கிக்கொள்ளும்
கருவுக்குள்
இச்சிற்றுயிர்களும்
ஒடுங்கட்டும்

........

யாசித்தவையெல்லாம்
வீணென்று
கண்டு
கையேந்துகிறேன்
பிச்சைக்காரனிடம்
ஈயும் கரங்கள் உன்னது
பிட்சைக்கேந்திய கரம்
என்னது
என்னையே பிட்சைப்பொருளாய்
ஈந்தாய்
இப்பேரண்டப் பிட்சைப்பாத்திரத்தில்

..........

எத்தனை
ஜென்மங்களோ

எத்தனை
பிறப்புகளோ

எத்தனை
உயிர்களோ

எத்தனை
வாழ்வுகளோ

எத்தனை
யுகங்களோ

எத்தனை
உலகங்களோ

காலம்காலமாய்
காத்திருக்கின்றன
அழிந்துபோவதற்காக
தடமின்றி கரைவதற்காக
ஒப்புக்கொடுத்தபின் நிகழும்
மரணத்திற்காக

காலம்காலமாய்
காத்திருக்கின்றன
நித்யத்தின் சன்னதியில்

........

Monday, October 14, 2024

திராத்தின் பொம்மை

 திராத்தின் பொம்மை


திராத்திற்கு வயது ஏழு மாதம். அவனுக்கு ஒரு பொம்மை வாங்க வேண்டும் என ஒரு‌ பொம்மைக் கடைக்குள் நுழைந்தேன். பெரும் பெரும் கரடி பொம்மைகள். கரடி எப்பொழுது செல்லத்தின் குழந்தமையின் சின்னமானது தெரியவில்லை. பொசு பொசுவென சின்னதும் பெரியதுமாய் அத்தனை டெடி பொம்மைகள்.

'குழந்தை வாயால் கடிக்கையில் வாய்க்குள் முடி சென்றுவிடும்' என்றாள். சரிதான். பன்றிக்குட்டிகள், குரங்கு பொம்மைகள், பரியதும் கூர்ங்கோட்டதுமான யானை செல்லபுஜ்ஜி என கொஞ்சத்தக்க ரூபம் கொண்டிருந்தது. புலி சாந்தமாய் அமர்ந்திருந்தது. பெங்குயின் பொம்மையைப் பார்த்த போது, அதனை வாங்க வேண்டும் என ஆவலானேன். அன்டார்டிக்கவில் ஆளற்ற வெறுமை நோக்கி நடந்து செல்லும் பெங்குயின் பற்றிய ஒரு இமேஜ் மனதில் எழுந்தது‌. பின் அது எனக்கான பொம்மை, திராத்துக்கானதல்ல என விட்டேன். இத்தனை சிறு குழந்தைக்கு கடிப்பது போல் பொம்மை சாங்க வேண்டும் எனத் தேடினோம், கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் கரடி பொம்மைகளையும் அவை அளிக்கும் கதகதப்பையும் 'நான் இருக்கிறேன்' என நம்மை உரசிக்கொள்ளும்‌ இதத்தையுமே பார்த்துக்கொண்டு நின்றேன்.

திராத்தை கையில் வாங்கிக்கொண்ட போது இயல்பாக வந்தான் என்னிடம். மடியில் அமர்த்திக்கொண்டேன். அந்த கணத்திற்கு நான் தயாராகவே இல்லை. பாடவேண்டும்‌ போலிருந்தது. தெரிந்த இரண்டு ரைம்ஸை பாடினேன். திராத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்தது அந்த ரைம்ஸ். இவனுக்காக ஒரு புதிய பாடலை இதுவரை எழுதப்படாத ஒரு வரியை எழுதவேண்டும் என்றிருந்தது. இப்படி பாட வேண்டும் என இதற்குமுன் தோண்றியது, ஒரு சிறு குன்றின் உச்சியில் அமர்ந்து பெரும் ஏரியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது. அத்தனை அழகு.

திராத்தின் அம்மா ஒரு பொம்மையைக் கொண்டு வந்தார். அது ஒரு பைக்கை ஓட்டும் சிறுவனின் பொம்மை. சிறு பட்டனை அழுத்தினால், வீல்களில் வண்ண வண்ணமாய் ஒளிற சற்று ஓடிச்செல்கிறது பைக். திடீரென முன் வீலை தூக்கி வீலிங் செய்கிறது. வீலிங் செய்தவண்ணம் வட்டமிடுகிறது. வண்ணங்களும் வட்டமிட ஒளியில் சிறு நடனம் நடக்கிறது. பின் புலத்தில் ஒரு இசையுடன் இவ்வளவும் நடக்கிறது. ஒரு சிறு இசை, ஓட்டம் மட்டுமில்லாமல் வீலிங் வேறு, அத்துடன் வண்ணங்களின் எழில்நடம்‌.  அந்த சிறு பொம்மை நம்பிக்கையளித்தது. மானுடம் வெல்லும் எனும் நம்பிக்கையை. அன்பின் நீர்மை நிறைந்த வெறுப்பின் சுவடில்லாத ஆயிரம் பௌர்ணமிகளின் வெளிச்சம் நிறைந்த ஒரு நிலத்திற்கு   திராத்தின் பைக் அழைத்துச் செல்லும் உங்களை. 

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...